Mar 4, 2016

முக்காலே மூணு வீசம்

முக்காலே மூணு வீசம் என்றால் என்ன? - இப்படி யாராவது கேட்பார்கள் என்று எதிர்பார்த்ததுதான். நான்கைந்து பேர்கள் கேட்டுவிட்டார்கள். ஊரில் இந்தச் வாக்கியப் பிரயோகத்தை அடிக்கடி கேட்டிருக்கிறேன். வீசம் என்றால் பதினாறில் ஒரு பங்கு (1/16). மூணு வீசம் என்றால் பதினாறில் மூன்று பங்கு (3/16). ‘முக்காலே மூணு வீசம்’ என்றால் முக்காலை பதினாறாக பிரித்து அதில் மூன்று பாகத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது முக்கால் (3/4) + மூணு வீசமா (3/16) என்று சரியாகத் தெரியவில்லை. யாராவது பழங்காலத்து கணக்கு வாத்தியார்களைக் கேட்டால் சரியாகச் சொல்வார்கள்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பாக வரையிலும் கூட இத்தகைய அளவை முறைகள் வழக்கத்தில் இருந்திருக்கக் கூடும். மீட்டர், கிராம் என்று மெட்ரிக் அளவை முறைகளை படிக்க ஆரம்பித்த பிறகு நமது முன்னோர்களின் அளவை முறைகளை முற்றாக இழந்திருக்கிறோம். வழக்கத்தில் இல்லையென்றாலும் பல அளவை முறைகள் இன்னமும் நம்முடைய பேச்சு வழக்கில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக காணி நிலம் என்ற சொல் இன்னமும் இருக்கிறது. ஆனால் ஒரு காணி என்றால் எவ்வளவு என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இம்மி பிசகக் கூடாது என்பதில் இம்மி என்பது எதைக் குறிக்கிறது? ‘குன்றிமணி தங்கம் கூட உனக்குத் தரமாட்டேன்’ என்றால் குன்றிமணி அளவுடைய தங்கம் என்று தெரியும். ஆனால் துல்லியமான அளவு எவ்வளவு? இவை அத்தனையும் அளவை முறைகள். இப்படி வரிசையாக அடுக்கலாம். படி, வல்லம், மொடா, பொதி என்று நாம் மறந்து போன அளவை முறைகள் நூற்றுக் கணக்கில் இருக்கக் கூடும்.

எல்லாவற்றையும் இழந்து போனதைச் சரி, தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. 

காலப்போக்கில் வழக்கங்களும் முறைகளும் அழிந்தும் மறைந்தும் உருமாறியும் போவது இயல்பானதுதான். எல்லாவற்றிலும் மேற்கத்திய முறைகள் புகுந்துவிட்ட பிறகு அளவு முறைகளில் மட்டும் பாரம்பரிய அளவைகளை வைத்துக் கொண்டு ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதுவது கூட வெகு சிரமமானதாக இருக்கும். ஆனால் குறைந்தபட்சமாக நம்முடைய பழங்கால அளவை முறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.  ‘கல் தோன்றி மண் தோன்றா..’ என்று வெறும் பல்லவியைத்தான் பாடிக் கொண்டிருக்கிறோமே தவிர இத்தகைய பாரம்பரியமான அறிவை இழந்துவிட்டது பற்றியெல்லாம் எந்த அக்கறையும் சலனமும் நம்மிடமில்லை என்பதுதான் துக்கம். நம்மிடம் என்றால் நம்மை ஆள்பவர்களிடம்; நம் பாடத்திட்டங்களை வரையறை செய்பவர்களிடம். அளவை முறைகளில் என்றில்லை- வேளாண்மை, அறிவியல், மருத்துவம் என எல்லாவற்றிலும் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த அறிவை இழந்து விட்டோம். இயற்கை உணவு குறித்தான ஒரு புத்தகம் கிடைத்தது. அரிசி வகைகள் மட்டும் நூற்றுக் கணக்கில் இருந்தன. சீரகச் சம்பா தெரியும்.  கைவரை சம்பா தெரியுமா? கிச்சிலி சம்பா? மணிச் சம்பா? கோரைச் சம்பா, ஈர்க்குச் சம்பா? அடுக்கியிருந்தார்கள். 

அதே போல எத்தனை மூலிகைகளை இழந்திருக்கிறோம்? இட்டேரிகளிலும் புதர்களிலும் முளைத்துக் கிடக்கும் எந்தச் செடியின் பெயரும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. இந்தத் தலைமுறை என்பதை எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்களிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். சித்தகத்தி பூவை தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்துத் தலைக்குப் பூசினால் ஒற்றைத் தலைவலி போய்விடும் என்று பறித்துக் கொண்டிருந்த யாரோ சொன்னார்கள். அந்தச் செடி சாக்கடையோரமாக இருந்தது. விதையை பெங்களூரில் முளைக்கச் செய்யலாம் என்று காகிதத்தில் சுற்றி வைத்திருந்தேன். யதேச்சையாகப் காகிதத்தைப் பிரித்துப் பார்த்த அப்பா ‘சித்தகத்தி விதை எதுக்கு?’ என்றார். விதையைப் பார்த்து செடியின் பெயரைச் சொல்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. எத்தனை விதைகளை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால். வேம்பு, மா, பலா, புளி உட்பட ஐந்தாறுக்கு மேல் தேறாது. இத்தனைக்கும் பிறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்தில். பேரு பெத்த பேரு தாக நீலு லேது!.

பாரம்பரியமான வேளாண்மை முறைகளையும், இயற்கை வைத்தியங்களையும் அன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே ஒழித்துக் கட்டினார்கள் என்று குருட்டுவாக்கில் பேச வேண்டியதில்லை. பஞ்சமும் வறுமையும் நோய்மையும் மிஞ்சிக் கிடந்த காலகட்டத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற எண்ணத்தில் கூட மாற்று மருத்துவ முறையும் விவசாய முறைகளும் தங்களுக்கான இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அழிந்தது அப்படியே நாசமாகப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டியதில்லை. தூசி தட்டலாம். பாரம்பரிய முறைகளில் இருந்த நல்லனவற்றையும் அனுகூலங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்கலாம். 

எப்படிச் செய்வது? 

இப்படியான அளவை முறைகள் இருந்தன என்பதையும், பாரம்பரியமான பயிர்கள், மருத்துவம் உள்ளிட்டவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் அவை பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டால் மட்டும்தான் சாத்தியமாகும். மூன்று அல்லது நான்காம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு வருடமும் கணிதத்திலும், தாவரவியலிலும், சமூக அறிவியலும் இத்தகைய அம்சங்களைச் சேர்ப்பதனால் நமது கல்வி முறை எந்தவிதத்திலும் தரம் தாழ்ந்து போய்விடாது. ஹைபிஸ்கஸ் ரோஸா சைனஸிஸ் முக்கியம்தான் அதே சமயம் கரிசலாங்கண்ணி எப்படி இருக்கும் என்கிற அளவிலாவது தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம் இல்லையா? இவற்றைத்தான் முழுமையாகப் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வருடம் ஒரு பாடம் கூட போதுமானதாக இருக்கும். எவையெல்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கணித்து சரியான பாடத்திட்டம் வரையறைக்கப்பட்டு அவை அதிகார வர்க்கத்தின் ஒப்புதலோடு படிப்புகளில் சேர்க்கப்படுமாயின் இருபது வருடங்களுக்கு பின்னால் வரக் கூடிய இளைஞர்களுக்கு முன்னோர்கள் விட்டுச் சென்றவற்றில் ஒரு பகுதியையாவது சொல்லிக் கொடுத்துவிட முடியும். 

ஓர் இனத்தையும் அதன் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் வெறும் உடைகளாலும் வெற்றுப் பெருமைகளாலும் மட்டும் காத்துவிட முடியாது. முந்தைய தலைமுறையினரிடமிருந்த அறிவார்ந்த தகவல்களை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் வழியாகவும் அந்த அறிவார்ந்த விஷயங்களில் எதிர்வரும் தலைமுறையினர் மென்மேலும் ஆராய்ச்சிகளைச் செய்தும் புதியனவற்றைக் கண்டறிந்து சேர்ப்பதாலுமே அந்த இனம் கட்டுக்குலையாமல் இருக்கும். அறிவார்ந்த முன்னெடுப்புகளை விட்டுவிட்டு வேட்டியில் பாக்கெட் வைப்பது குறித்து உணர்ச்சிப் பூர்வமாக யாரோ பேசுவதை நம்பியபடி ‘கல் தோன்றி மண் தோன்றா’ என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.