Mar 28, 2016

வேகம்

அனீஸ் கேரளாக்காரர். பழைய அலுவலக நண்பரின் நண்பர். இரண்டொரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். எப்பொழுதாவது ஃபோனில் பேசுவதுண்டு. பெங்களூரில் ஜன்னல் திரைகள் விற்கும் தொழிலைச் செய்கிறார். வீட்டிற்கு வந்து ஜன்னல்களை அளவெடுத்துச் சென்று துணிகளை வாங்கி அளவுக்கு ஏற்ப தைத்து அவரே வந்து மாட்டிவிடுவார். பெரிய வருமானம் இல்லை என்றாலும் மோசம் என்று சொல்ல முடியாது. வாடகை வீட்டில் இருக்கிறார். போக்குவரத்துக்கு கார் வைத்திருக்கிறார். 

பெங்களூரில் மலையாளிகளுக்கு மலையாளிகள் உதவுவதைப் பார்க்க முடியும். அப்படித்தான் அனீஸூக்கும் யாரோ பெங்களூரைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். தொழிலுக்கென வந்து திருமணமாகி இரண்டு குழந்தைகள். ‘நாலஞ்சு வருஷத்துல சம்பாதிச்சுட்டு போய்டலாம்ன்னுதான் வந்தேன்’ என்று சொல்லியிருக்கிறார். தம்முடைய சொந்த ஊரை விட்டு வருகிற பெரும்பாலான மனிதர்களுக்குள் இருக்கும் ஆசைதான். இப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் நடைபெறும் கிடாவிருந்து, அக்கம்பக்கத்து மாரியம்மன் பண்டிகை, பூப்பு நன்னீராட்டு விழா, காது குத்து, மொட்டையடித்தல் உள்ளிட்ட சிறு சிறு கொண்டாட்டங்கள் எதற்கும் அழைப்பு வருவதில்லை. திருமண அழைப்புகள் கூட மிக நெருங்கியவர்களிடமிருந்துதான் வருகிறது. மற்றவர்கள் அழைப்பிதழ்களை கதவுச் சந்தில் செருகி வைத்துவிட்டுச் செல்கிறார்கள். நேரில் பார்க்கும் போது ‘உங்களை வரச் சொன்னா..அங்கிருந்து வரணும்..உங்களுக்கும் சிரமம்...அதான் சொல்லலை’ என்கிறார்கள். நம்முடைய நல்லதுக்காகத்தானே சொல்கிறார்கள் என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

உள்ளூரில் எங்கள் அப்பாவுக்குத் தெரிந்த உறவு முறையின் எண்ணிக்கையில் முப்பது சதவீதம்தான் எனக்கும் தம்பிக்கும் தெரியும். இப்படியே போனால் அடுத்த தலைமுறையில் ஐந்து சதவீதத்தினரைக் கூட தெரியாமல் போய்விடும். அனீஸூக்கும் அதே வருத்தம்தான். ‘நம்ம ஊர்தான் நமக்கு வேர்’ என்று அவர் சொன்ன வாக்கியத்தை மறக்கவே முடியாது. அனீஸூக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவளுக்கு ஆறு வயது. சிறியவனுக்கு நான்கு வயது. ‘ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் கூட்டிட்டு போய் ஊரைக் காட்டிட்டு வந்துடுறேன்...இப்படியே எவ்வளவு நாளைக்கு முடியும்ன்னு தெரியல..ஆனா முடியற வரைக்கும் இதைச் செஞ்சுடணும்’ என்றார். குழந்தைகளுக்கு தமது சொந்த ஊர் மீது பிடிப்பு வரும் என்கிற நம்பிக்கையில் இதைச் செய்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் ஊருக்குச் செல்லும் போது கார்தான். சேலம், கோவை வழியாக கேரளாவுக்குள் நுழைந்துவிடுவார்கள். பேருந்தில் சென்று வருவதைவிடவும் காரில் சென்று வருவதில் வசதி அதிகம். கூட ஒன்றிரண்டு பேர் சேர்ந்து கொண்டால் செலவும் குறைவு. கடந்த வாரம் ஈஸ்டர் விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். நேற்று மாலை மூன்று மணிக்கு கோபியிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தேன். ஆறரை மணிக்கு தொப்பூரைத் தாண்டி பேருந்து சென்று கொண்டிருந்தது. நண்பர் சாம் அழைத்தார். அனீஸீன் நண்பர். உறங்கியிருந்ததால் அலைபேசி அழைப்பை எடுக்காமல் தவற விட்டிருந்தேன். அடுத்தவர்கள் அழைக்கும் போது அலைபேசி அழைப்பைத் தவறவிடுவதைப் போன்ற கொடுஞ்செயல் எதுவுமில்லை. அவர்களுக்கு ஏதாவதொரு அவசரச் செய்தியாக இருக்கக் கூடும். குறைந்தபட்சம் எடுத்து ‘என்ன’ என்றாவது கேட்டுவிட வேண்டும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான அழைப்புகளைத் தவற விட்டுவிடுகிறேன். நம் தலைமுறையில் பெரும்பாலானோரும் அப்படித்தான். ஆயிரம்தான் சாக்குப் போக்கு சொன்னாலும் அது அயோக்கியத் தனம்.

தர்மபுரியை நெருங்கிய போது அலைபேசியைப் பார்த்துவிட்டு மீண்டும் சாம்மை அழைத்தேன். அவர் குரலில் பதற்றம் இருந்தது. ‘வண்டி ஓட்டிட்டு இருக்கீங்களா?’ என்றேன். அவர் தர்மபுரியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்றார். பெங்களூரில் இருந்திருந்தால் என்னையும் தனது காரில் ஏறச் சொல்லியிருக்கக் கூடும்.

‘ஊரிலிருந்து வந்துட்டு இருக்கேன்....இப்போ தர்மபுரி பக்கமா இருக்கேன்...என்ன விஷயம்?’ 

‘தொப்பூர்ல அனீஸ் ஃபேமிலிக்கு ஆக்ஸிடெண்ட்..வேற விவரம் தெரியலை....தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருக்காங்க..நீங்க தர்மபுரியில் இறங்க முடியுமா?’ என்றார். திக்கென்றிருந்தது. பேருந்து தர்மபுரியைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. 

நடத்துநரிடம் ‘சார் இறங்கணும்...முக்கியமான வேலை’ என்றேன். நடத்துநர் எதுவும் சொல்லவில்லை. விசிலடித்தார். அந்தச் சாலையில் நிறைய முறை பயணித்திருக்கிறேன். பழக்கமான சாலைதான். தர்மபுரியில் நண்பர்களும் உண்டு. பிரசாத்தை அழைத்தேன். விவரங்களைச் சொன்ன பதினைந்தாவது நிமிடம் வந்து சேர்ந்தார். இருளுமில்லாத வெளிச்சமுமில்லாத மாலை வேலை அது. அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அப்பொழுதும் அவசர ஊர்தி வந்து சேர்ந்திருக்கவில்லை. சந்தேகமாக இருந்தது. சாம்மின் அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தது. என்ன செய்வதென்று குழப்பம் தீரவில்லை.

தேசிய நெடுஞ்சாலைகள் வந்த பிறகு நம்முடைய வேகம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பயணித்துக் கொண்டிருக்கும் போது எந்த பயமுமில்லை. வண்டிக்குள் இருக்கும் போது வேகத்தை உணர முடிவதில்லை. இறங்கி ஐந்து நிமிடங்கள் சாலையோரமாக நின்று விரையும் வாகனங்களைப் பார்க்க வேண்டுமே! நூறு, நூற்றியிருபது கிலோமீட்டர் வேகம் என்பதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. கீழே நின்று அந்த வேகத்தைப் பார்க்கும் போது வயிற்றுக்குள் பல உருண்டைகள் உருளுகின்றன. பட்டால் சிதறுகாய்தான்.

சில நிமிடங்களில் சாம் அழைத்தார். 

‘குழந்தைக்கு மட்டும்தான் அடி பலம். மத்தவங்களுக்கு அப்படியொண்ணும் பிரச்சினையில்லை போலிருக்கு...பெங்களூர் நிமான்ஸூக்கு கொண்டு போறதா சொல்லுறாங்க’ என்றார். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டு வருவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. அவரை அதே இடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு பிரசாத்தின் வண்டியிலேயே சென்று சாம்மின் வண்டியில் ஏறிக் கொண்டேன். அவரது கார் வேகமமெடுத்தது. ‘சாம் மெதுவா போங்க’ என்று சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

‘அனீஸ் தனியா என்ன பண்ணுவான்?’ என்றார்.

அதுசரிதான். ஆனால் அவருடைய வேகம் திகிலூட்டுவதாக இருந்தது. பெங்களூரை அடையும் போது ஒன்பதரை மணி ஆகியிருந்தது. மற்றவர்கள் சிறு சிராய்ப்புகளுடன் இருந்தார்கள். விபத்து மூன்று மணியளவில் நடந்திருக்கிறது. பக்கத்திலேயே ஒரு மருத்துவமனையில் முதலுதவி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். சாம்முடன் உருவான தகவல் தொடர்பு குழப்பம் காரணமாக சரியான நேரத்துக்கு எங்களால் போய்ச் சேர முடியவில்லை. அனீஸ் எதுவும் பேசவில்லை தனது பிரார்த்தனையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அனீஸீன் மனைவி சாம்முடன் மலையாளத்தில் பேசினார். ‘இவரோட தப்புதான்...ரெட்டைப் பாலத்தில் வரும் போது ஓவர் ஸ்பீட்...தடுப்பில் மோதிவிட்டார்’ என்றார். மகளுக்கு மண்டையில் அடிபட்டிருந்தது. கட்டுப் போட்டு உறங்க வைத்திருந்தார்கள். 

‘பையன் ஐசியூவில் இருக்கான்..பயமா இருக்கு’ என்றார்.

என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ‘எதுவும் ஆகாது’ என்றேன். தேம்பத் தொடங்கினார். உறவினர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டதாகவும் அவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். யாரும் சாப்பிட்டிருக்கவில்லை. அரை மணி நேரம் கழித்து மருத்துவர் வந்தார். ‘இன்னும் ஒரு நாள் மானிட்டர் பண்ணனும்’ என்றார். குழந்தை- அதுவும் தலையில் அடி என்பதுதான் சிக்கல். தினசரி எவ்வளவோ விபத்துச் செய்திகளைக் கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். ஆனால் அருகில் இருந்து பார்க்கும் போதுதான் விபத்தின் வீரியம் புரிகிறது. 

கடவுளை வேண்டிக் கொண்டேன். சாம் தனது கையில் கற்றையாக பணத்தை வைத்திருந்தார். அதை அனீஸிடம் கொடுத்தார்.  அங்கு யாரும் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரும் ரத்தக் கறையோடு இருந்தார்கள். அதில் அந்தக் குழந்தையின் ரத்தமும் கலந்திருக்கக் கூடும் என்று நினைக்கும் போதே விரல்கள் நடுங்கத் தொடங்கின.