Mar 2, 2016

வெள்ளத்தால் இழந்தோரின் மறுவாழ்வுத் தொடக்கவிழா

கடலூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருட்களை வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இட்லி சட்டியிலிருந்து இஸ்திரி பெட்டி வரை அனைத்துமே ஒவ்வொரு குடும்பமும் தொழில் தொடங்குவதற்கான பொருளாகத் தேர்ந்தெடுத்து வழங்கவிருக்கிறோம். ஒட்டுமொத்த மாவட்டத்துக்கும் நம்மால் உதவ முடியாதுதான். ஆனால் நாம் உதவுகிறவர்களில் எண்பது சதவீதம் பேராவது பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் ஒரு படியேனும் மேலேற வேண்டும் என்கிற நோக்கத்தில் இதைச் செய்கிறோம். நம்பிக்கை.



மார்ச் 12 ஆம் தேதியன்று காலை பத்து மணிக்கு கடலூர் டவுன்ஹாலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மிக எளிமையான நிகழ்வாக இது இருக்கும். பதினெட்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் மற்றும் கிட்டத்தட்ட முந்நூறு பயனாளிகள் என்பதால் ஓர் அரங்கு தேவையானதாக இருக்கிறது. அதனால்தான் இந்த ஏற்பாடுகளும் கூட.

சிறப்பு விருந்தினராக கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்து கொள்கிறார். அவருக்கு அன்பு.

உதவி வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயர் வேண்டாம் என்று தோன்றியது. ‘மழையால் இழந்தோரின் மறுவாழ்வுத் தொடக்கவிழா’ என்ற பெயரைக் கவிஞர் மகுடேசுவரன் பரிந்துரைத்தார். சற்றே மாற்றிக் கொண்டேன். பரிந்துரைத்த கவிஞருக்கு நன்றி.

நிசப்தம் அறக்கட்டளைக்கு இதுவொரு மைல்கல். எதிர்பார்த்தபடியே நிகழ்ச்சி நடக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த படிகளை இன்னமும் தன்னம்பிக்கையுடன் வைக்க முடியும். 

நிசப்தம் வாசகர்கள், நன்கொடையாளர்கள், அக்கம்பக்கத்து மாவட்டத்துக்காரர்கள், பத்திரிக்கை நண்பர்கள் என அனைவரையும் எதிர்பார்க்கிறேன். கூட நான்கு பேர் இருந்தால் தெம்பு கிடைத்த மாதிரி.

நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத வெகுதூரவாசிகளுக்கும், நன்கொடை அனுப்பியும், ஆதரவான சொற்களைப் பேசியும் ஊக்கப்படுத்தியும் வழிகாட்டியும் வரும் அத்தனை நண்பர்களுக்கும், சக்தி சரவணன் உள்ளிட்ட கடலூர் தன்னார்வலர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.

விழாவில் சந்திப்போம்.

1 எதிர் சப்தங்கள்:

வெங்கட் நாகராஜ் said...

விழா சிறக்க வாழ்த்துகள்.