Mar 22, 2016

தேசம்


1997 ஆம் ஆண்டு எங்கள் பள்ளியில் சுதந்திர தின பொன்விழாவைக் கொண்டாடினோம். இரவு முழுக்கவும் பள்ளியிலேயே இருந்தோம். மேடையில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருந்தது. பாடினார்கள். ஆடினார்கள். கவிதைகள் வாசித்தார்கள். அப்பொழுது திருப்பூர் குமரனின் மனைவி உயிரோடிருந்தார். அவரிடம் சுதந்திர ஜோதியை வாங்கிக் கொண்டு மாணவர்கள் தொடர் ஓட்டமாக வந்தார்கள். இரவு முழுவதும் ஓடி அடுத்த நாள் காலையில் கொடியேற்றும் நிகழ்வுக்கு முன்னால் பள்ளிக்கு வந்து சேரும்படி திட்டமிடப்பட்டிருந்தது. மாணவர்கள் ஓடி வந்து கொண்டிருக்க, பள்ளியிருந்தவர்கள் இரவு முழுக்கவும் தூங்கவில்லை. விடிந்தும் விடியாமலும் வீட்டுக்கு ஓடிச் சென்று குளித்துவிட்டு பயபக்தியுடன் இறைவனை வழிபட்டுவிட்டு ஆறரை மணிக்கெல்லாம் மீண்டும் பள்ளியில் இருந்தோம். ‘நம்முடைய நாடு ஐம்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது’ என்பது உள்ளுக்குள் மிகப்பெரிய சந்தோஷத்தையளித்தது.  நம் வீட்டு நிகழ்வைவிடவும் உற்சாகமூட்டக் கூடிய நிகழ்வாக அது இருந்தது.

தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என எல்லோரும் பள்ளியில் இருந்தார்கள். நாட்டின் வரலாறு குறித்தும் அதன் பெருமைகள் குறித்தும் இரவு முழுக்கப் பேசினார்கள். என்னுடைய நாட்டின் மீது மிகுந்த பக்தியுடன் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வது பெருமையளிப்பதாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த நாடு நம்மால் உயர வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது. அன்றைய தினத்தில் மாணவர்களின் உணர்வெழுச்சி மிக இயல்பானதாக இருந்தது. இப்பொழுதுதான் நிறைய மாறிவிட்டது- இருபது வருடங்களில். ‘இந்தியா மோசம்; இந்த நாடு அயோக்கியர்களால் நிறைந்தது’ என்றுதான் திரும்பிய பக்கமெல்லாம் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் அத்தனை மனிதர்களும் நசுக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். எல்லாவற்றிலும் ஓர் எதிர்மறையான கோஷம் ஒலிக்கிறது. Negative vibrations.

இப்பொழுதெல்லாம் எதிர்மறைச் செய்திகளும் சம்பவங்களும்தான் மிகப்பெரிய அளவில் பிரதானப்படுத்தப்படுகின்றன. அதன் வழியாகவே தேசம் குறித்தான் எதிர்மறைச் சிந்தனைகள் ஊட்டப்படுகின்றன. நேற்று கோவையில் ஒரு மாணவரைச் சந்திக்க நேர்ந்தது. பனிரெண்டாம் வகுப்பு மாணவன். இந்தியன் என்கிற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் பேசினான். அதிர்ச்சியாக இருந்தது. ஓர் இளைஞனுக்கு தன்னுடைய சூழல் குறித்தும் தேசம் குறித்தும் இயல்பான புரிதல் உண்டாவதற்கும், வலிந்து திணிக்கப்பட்ட எண்ணம் ஏற்படுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இப்பொழுதெல்லாம் இங்கு எல்லாவிதமான கருத்துக்களும் திணித்துத்தான் விடப்படுகின்றன. நம்மைச் சுற்றிலும் நடக்கும் அத்தனையும் தவறானதாகவே இருப்பதான பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளும் அரசாங்கமும் கூட ஏதோவொரு இடத்தில் பிசகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கான கருத்தாக்கத்தை உருவாக்குவதில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் வலுப்பெற்ற பிறகு அரைகுறையான புரட்சியாளர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் நம்மைச் சுற்றிலும் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றிலும் புரட்சி பேசுகிற இவர்களுக்கு எதிர்மறையான சம்பவங்கள் மட்டுமே கிடைக்கின்றன என்பதுதான் துரதிர்ஷ்டம். 

‘உலகி வாழும் எட்டுக் கோடி தமிழர்களுக்கென்று தனியான நாடு இல்லை’ என்று முழுமையடையாத ஒரு புரட்சியாளர் பேசிக் கொண்டிருந்தார். அதாவது தனி நாடு வேண்டுமாம். கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் வாழும் தெலுங்கர்களுக்கும், கன்னடத்தவர்களுக்கும்தான் தனி நாடு இல்லை. தனி நாடும் தனி மாநிலமும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துவிடுகின்றனவா? ‘எங்களைக் கண்டு கொள்வதேயில்லை’ என்று சொல்லி பக்கத்து மாநிலத்தில் சந்திரசேகரராவ் என்கிற அரை மண்டயர் தனி மாநிலம் அமைத்தே தீர வேண்டும் எனத் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தார். சந்திரபாபு நாயுடுவும், ராஜசேகர ரெட்டியும் தன்னை மேலே வர விடமாட்டார்கள் என்பது அவருக்கும் தெரியும் மற்றவர்களுக்கும் தெரியும். சோனியா காலத்தில் பிரித்துக் கொடுத்தார்கள் இப்பொழுது பிங்க் பிரியர் முதலமைச்சர் ஆகிவிட்டார். மகன், மகள், சகோதரி மகன், சகோதரன் மகன் என்று மொத்தக் குடும்பமும் ஒரு மாநிலத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இனி இருபது முப்பது வருடங்களுக்கு இதுதான் தொடரும்.

தமிழகத்தை தனிநாடு ஆக்கினால் மட்டும் என்ன நடக்கும்? கருணாநிதியோ, ஜெயலலிதாவோ பிரதமராக இருப்பார்கள். மற்றவர்கள் இப்படியேதான் துள்ளிக் கொண்டிருப்பார்கள். 

நான்கு பேர் வாழ்கிற வீட்டிற்குள்ளேயே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. நூற்றியிருபது கோடி மக்கள் வாழும் தேசத்தில் எந்தச் சிக்கலும் இருக்கக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு தேசமாக ஆயிரம் குறைகள் இங்கு இருக்கக் கூடும். ஆனால் வாழ்வதற்கும், உரிமைகளைப் பேசுவற்குமான இடத்தை இந்த நாடு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. மிகச் சிறந்த தேசமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக மோசமான தேசம் இல்லை. நாட்டிடமிருந்து விடுதலை வேண்டும், நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மாட்டோம் என்பதையெல்லாம் இந்த நாட்டிலிருந்துதான் உரக்கச் சொல்ல முடிகிறது.

தேசபக்தி விஷயத்தில் இங்கே Polarization நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று இந்துத்துவத்தை தூக்கிப் பிடிக்கிற ‘டேஷ் பக்தர்’ ஆக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டைத் துண்டாட வேண்டும் என்று சொல்கிற ‘இடதுசாரி துரோகியாக’ இருக்க வேண்டும். இரண்டு பக்கமுமில்லாமல் நடுவில் இருக்கும் இடம் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. தேசபற்று என்பதை மதத்தோடு சேர்த்துப் பார்க்காத முந்தைய தலைமுறையின் சிந்தனைகளை மீண்டும் தூசி தட்டப்பட வேண்டியிருக்கிறது. இனம், மதம், மொழி, சாதி சார்ந்து ஒருவனுக்கு எந்த அடையாளம் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் அதை எந்தவிதத்திலும் ‘இந்தியன்’ என்கிற அடையாளத்துடன் இணைத்து சிதைக்க வேண்டியதில்லை.

எண்ணங்களாலும், சிந்தனைகளாலும், செயல்களாலும் சிதறியிருந்தாலும் ‘இந்தியன்’ என்கிற எண்ணத்தின் வழியாக தேசத்தோடு இணைத்துக் கொள்வதும் ஒருவிதமான பெருமிதத்தைக் கொடுக்கிறது. அந்த உணர்வு ஏன் அருகிக் கொண்டிருக்கிறது?. நம்மிடையேயான இணைப்பின் கண்ணி ஏன் சிறுகச் சிறுக உடைந்து கொண்டிருக்கிறது.

‘இந்தியன்’ என்று பெருமையாக அறிவித்துக் கொள்வதன் வழியாக இங்கே நடக்கிற தவறுகளையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் ‘இந்தியா’ என்கிற போர்வைக்கு அடியில் போட்டு மூடி மறைப்பதாக அர்த்தமில்லை. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அந்தப் பிரச்சினைகளை இந்த அமைப்புக்குள் இருந்து சிந்தித்து அதற்கான தீர்வை நோக்கி அழைத்துச் செல்கிற தலைவர்களும் சிந்தனையாளர்களும்தான் தேவையாக இருக்கிறார்களே தவிர, எல்லாவற்றையும் எதிர்மறையாகவே யோசித்துக் கொண்டிருக்கிற, எல்லாவற்றுக்கும் அமைப்புக்கு வெளியிலிருந்து தீர்வைக் காட்டி மாயாஜாலம் காட்டுகிற எதிர்மறைச் சிந்தனையாளர்கள் இல்லை. புரட்சி என்பதற்கும் எதிர்மறைச் சிந்தனை என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இங்கே நிலவுவது புரட்சிக்கான மனநிலை இல்லை. வெறும் எதிர்மறைச் சிந்தனை மட்டுமே. சாமானியனை உணர்ச்சிவசப்படச் செய்து தன்பக்கம் இழுத்துக் கொள்கிற மோசமான எதிர்மறைச் சிந்தனை.