Mar 2, 2016

அறிவு

தமிழ்நாட்டில் இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் கெத்து காட்டுவார்கள். எம்.டி அல்லது எம்.எஸ் முடித்தவர்களைச் சொல்லவில்லை. அதற்கும் மேலாக டி.எம் மாதிரியான பெரும் படிப்புகளைப் படித்த மருத்துவர்களைச் சொல்கிறேன். ஒருவேளை விதிவிலக்காக சிலர் இருக்கக் கூடும். ஆனால் என்னுடைய அரைகுறையான மருத்துவமனை அனுபவத்தில் பார்த்தவரைக்கும் அப்படித்தான் தெரிகிறது.

ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டியிருந்தது. மருத்துவமனை வளாகம்தான் என்றாலும் கூட கண்ட இடத்தில் நின்று பதில் சொல்ல மாட்டார். யாராவது வழியை மறித்தால் கையை நீட்டி ‘அந்த மூலையில் நில்லுங்கள்’ என்பார். வெகு பவ்யமாக ஒதுங்கி நின்ற பிறகு  சாவகாசமாக வந்து மூலையில் கிடக்கும் நாற்காலியில் அமர்ந்து கொள்வார். எதிரில் நிற்பவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் நின்று கொண்டேதான் கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர் அமர்ந்து கொண்டே பதில் அளிப்பார். அப்படியொன்றும் மூத்த மருத்துவர் இல்லை. அவருக்கு என்னைவிட ஆறேழு வயது அதிகமாக இருக்கும். யாராவது நின்று கொண்டிருக்கும் போது அமர்ந்தபடியே பேசுவதற்கு கால்கள் கூசாதா?

அம்மாவிடம் சொன்னேன். ‘அறிவு இருக்கு. அப்படித்தான் இருப்பாங்க’ என்று ஒரே வரியில் அடக்கிவிட்டார். அறிவு இருந்தாலும் இப்படித்தான் இருக்கிறார்கள். அறிவுகெட்ட அதிகார வர்க்கமும் இப்படித்தான் நடந்து கொள்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் ஓர் அமைச்சர் பயணியர் மாளிகையில் தங்கியிருந்தாராம். மின்வாரியத்தின் மூத்த அதிகாரி ஏதோ அலுவல் நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார். தான் கேட்ட குழம்பு வகை வரவில்லை என்று அந்த அமைச்சர் அதிகாரியை நோக்கி விசிறினாராம். எந்த பதிலும் சொல்லாமல் அந்த அதிகாரி நின்றிருந்ததாகச் சொன்னார்கள். இந்த இடத்தில் யாருக்கு அறிவு அதிகம்? முப்பது வருடங்களுக்கு முன்பாகவே பொறியியல் படித்து முடித்துவிட்டு படிப்படியாக மேலே வந்த அந்த அதிகாரியைவிடவுமா அமைச்சருக்கு அறிவு அதிகம்? எனக்கு அறிவு இருக்கிறது; அதனால் திமிராக நடந்து கொள்கிறேன் என்பதைவிடவும் மோசமான மனநிலை வேறெதுவுமில்லை. அறிவு வேறு; சக மனிதர்களிடம் நாம் பழகுகிற தன்மை வேறு. இதெல்லாம் பிறப்பிலும் வளர்ப்பிலும் வர வேண்டுமே தவிர படிப்பிலும் அறிவிலும் வரக் கூடாது. 

ஒன்றேகால் கிலோ மூளையை வைத்துக் கொண்டு நாம் செய்கிற அழிச்சாட்டியங்கள் இருக்கின்றனவே! அடேங்கப்பா வகையறா.

மனிதன் தோன்றிய காலத்தில் கைகளும், கால்களும், பற்களும்தான் ஆயுதம். அவற்றை வைத்து எதிரியோடு மோதினான். கொஞ்சம் அறிவு வளர்ந்த பிறகு கற்களைப் பயன்படுத்தி சண்டையிட்டான். அடுத்தடுத்த காலகட்டங்களில் இரும்பினால் ஆன ஆயுதங்களைக் கண்டுபிடித்து அடுத்தவனோடு போரிட்டான். காலம் நகர நகர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என்று அறிவோடு சேர்ந்து ஆயுதங்களின் வீரியமும் பெருகின. வருங்காலத்தில் இருந்த இடத்தில் இருந்தே எதிரிகளைக் கொல்வதற்கு வைரஸ்களையும், ஆயுதங்களையும் ஏவப் போகிறான். எத்தனை சதவீதம் மூளைகள் நல்லனவற்றை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கின்றன?

‘எதையும் யோசிக்காமல் ஒரு நிமிடம் இரு’ என்று அடக்கி வைக்க முடிவதில்லை. அலை பாய்கிறது. அப்படியே யோசித்தாலும் கண்டதையெல்லாம் யோசிக்கிறது. இப்படித்தான் உலகில் இருக்கும் மூளைகளில் பெரும்பாலானவை எதிர்மறையாகவேதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. தான் எப்படி பிழைப்பது? அடுத்தவனை எப்படிக் காலி செய்வது? பொறாமை, வயிற்றெரிச்சல், சொல்லப் போகிற பொய்களுக்கான திட்டமிடல், எதிரிகளை வீழ்த்துவதற்கான சிந்தனைகள், களவாணித் தனங்கள்- அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெங்களூரில் மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட வேறொரு மருத்துவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இயல்பாகப் பேசினார். விபத்துகளில் மூளையில் அடிபடுகிற மனிதர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார். அவர் அந்தத் துறையில் வல்லுநர். Concussion என்ற சொல்லைத் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்தினார். அர்த்தம் தெரியாமல் ‘அப்படின்னா?’ என்று கேட்டேன். விபத்துகளினால் மூளையில் அடிபடுவதைத்தான் அப்படிச் சொல்கிறார். 

‘வில் ஸ்மித் நடிச்ச புதுப் படம் கூட இதே பேரில் வந்திருக்கு. பார்த்துடுங்க’ என்றார். 

இணையத்தில் தேடிப் பார்த்தால் இந்தியாவில் ரிலீஸ் ஆன மாதிரி தெரியவில்லை. ஒருவேளை திருட்டு டிவிடியில்தான் அவரும் பார்த்திருக்கக் கூடும். பார்த்துவிட்டேன். அட்டகாசமான படம் என்று சொல்ல முடியாது. மெதுவாக நகரும் படம். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடுகிறது. ஆனால் பார்க்க வேண்டிய படம்தான். 

அமெரிக்காவில் இருந்த சமயத்தில் ‘இன்னைக்கு ஃபுட்பால் மேட்ச் இருக்கு’ என்று அவரவருக்கு பிடித்த அணியின் டீ-சர்ட்டில் வருவார்கள். முதலில் நமக்குத் தெரிந்த கால்பந்தாட்டம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இது அமெரிக்கன் ஃபுட்பால். Foot க்கும் பந்துக்கும் சம்பந்தமேயில்லாத ஃபுட்பால். கிடாய்கள் மோதிக் கொள்வது போல மோதிக் கொள்கிறார்கள். அப்படி மோதிக் கொள்ளும் போது மூளைக்கு ஏற்படும் சேதாரங்களையும் அதன் விளைவாக பழைய விளையாட்டு வீரர்களின் மனநிலை பிறழ்வதையும் பென்னெட் ஓமாலு என்கிற பிரேதப் பரிசோதனைகளைச் செய்யும் மருத்துவர் கண்டுபிடித்து ஆய்வை சமர்ப்பிக்கிறார். பல பில்லியன் டாலர்கள் புழங்கும் இந்த விளையாட்டுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடும் என்று விளையாட்டுச் சம்மேளனங்கள் மருத்துவருக்கு பலவிதமான நெருக்குதல்களைக் கொடுக்கின்றன. Bennet Omalu நைஜீரியாவைச் சார்ந்தவர். அந்த மருத்துவரின் உண்மைக் கதைதான் இந்தப் படம். 

படத்தைப் பார்த்துவிட்டு இதுவரை எவ்வளவு முறை எனக்கு மண்டையில் அடிபட்டிருக்கிறது என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். வேலுச்சாமி வாத்தியார் விரல்களை மடக்கிக் கொட்டியதெல்லாம் நினைவில் வந்து போனது. எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் ஐம்பது வயதுக்கு மேல் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடக் கூடும். 

பெங்களூர் நரம்பியல் மருத்துவர் ‘சரியான இடம் பார்த்து ஒரேயொரு அடி விழுந்தாலும் கூட திரும்ப எழவே முடியாத மூளைச்சாவுக்கு வாய்ப்பிருப்பதாக’ சொன்னார். ஒன்றரை வினாடியில் நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிடுவதற்கான சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நடந்து கொண்டிருந்தவரின் மீது பைக் மோதி இறந்து போகிற மனிதர்களைப் பற்றியும் தெரியாத்தனமாக வழுக்கி விழுந்து மூளைச்சாவு அடைந்த மனிதர்களைப் பற்றியும் ஏதாவது செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. எல்லாமே கண நேர விபத்துகள்தான். சிறுகச் சிறுகச் சேர்த்த அத்தனையும் காலி. இதில் நான் அறிவாளி என்றும் அடுத்தவன் மடையன் என்றும் நினைத்துக் கொண்டு மிதப்பாக நடந்து திரிவதையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது?

யாரையும் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. வாழ்க்கை ரொம்ப ரொம்பத் துக்கினியூண்டு. நாம்தான் இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து கொண்டு தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறோம்.