Mar 8, 2016

தடை

எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். எழுதிவிடலாம்.

கடலூரில் வரும் சனிக்கிழமையன்று நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுக்காக காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தோம். அவர்களின் உதவியில்லாமல் சாத்தியமில்லை.  ஆரம்பத்தில் எதுவும் பிரச்னையில்லை. ஆனால் இடையில் யாரோ புண்ணியவான் ‘தேர்தல் தேதி அறிவித்த பிறகு நடத்தப்படும் நிகழ்ச்சி’ என்று புகார் அனுப்பியிருக்கிறார்கள். இப்பொழுது சில தடைகள். தடைகளை நீக்குவதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். தடைகளைத் தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தாலும் ஏதோ துளி உறுத்தல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இத்தகைய செயல்களில் கூட பிரச்சினைகளைச் செய்வதற்கு எப்படி மனம் வருகிறது? மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு வாழும் மனிதர்கள்.

ஏதேனும் அரசியல் கட்சி சார்பான நிகழ்ச்சியாகவோ அல்லது இந்த நிகழ்வின் வழியாக யாருக்கேனும் அரசியல் ஆதாயம் கிடைப்பதாகவோ இருப்பின் தடைகளை ஏற்படுத்துவதில் அர்த்தமிருக்கிறது.  கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பது பேர் இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறார்கள். அவரவர் சொந்தக் காரியங்களை தள்ளி வைத்துவிட்டு வேலை செய்திருக்கிறார்கள். துளி சகாயம் கிடைக்காத உழைப்பு. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பலரும் நம்பிக் கொடுத்திருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை சரியான ஆட்களுக்குச் சேர்த்துவிடலாம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமுமில்லாமல் பணியாற்றியிருக்கிறார்கள். அதில்தான் யாரோ கை வைக்க விரும்பியிருக்கிறார்கள்.

பயனாளிகளை நேரில் பார்த்த பிறகு முடிவுக்கு வந்திருக்கலாம்.  முந்நூறு பயனாளிகள்- கடலூரின் கிராமப்புறங்களில் மிகக் குரூரமாக பாதிக்கப்பட்ட ஏழைகள். அவர்களுக்குத்தான் உதவவிருக்கிறோம். இத்தகைய புகார்களால் நிகழ்ச்சியைத் தேர்தலுக்குப் பிறகு நடத்திக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சொல்லிவிட்டால் கொஞ்சம் சிரமம்தான். நூற்றுக்கணக்கான இஸ்திரி பெட்டிகளையும் தையல் எந்திரங்களையும் இன்னபிற கருவிகளையும் எங்கேயாவது வைத்து பாதுகாக்க வேண்டும். அதைக் கூடச் செய்துவிடலாம். யாராவது முன்வந்துவிடுவார்கள். ஆனால் அந்த முந்நூறு குடும்பங்களின் இரண்டு மூன்று மாத வருமானம் தாமதப்படுத்தப்படவிருக்கிறது என்பதுதான் கொடுமை. ஏதோவொரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய நல்ல உணவைத் தடுக்கிறார்கள். ஏதோவொரு முதியவருக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையைத் தடுக்கிறார்கள். ஏதோவொரு குடும்பத்தின் சிறு சந்தோஷத்தை நிறுத்தி வைக்க முயற்சிக்கிறார்கள்.

நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகளில், கணக்குகளை பரமாரிக்கிற விதத்தில், பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கிற வழிமுறைகளில் என எதிலேனும் குறையிருப்பின் நேரடியாகத் தெரிவித்திருக்கலாம். சரி செய்து கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை அல்லது ஒருவேளை தனிப்பட்ட ரீதியிலான கோபம், பொறாமை என்றிருப்பின் அதைத் தனிப்பட்ட முறையில் காட்டலாம். இப்படியான பொதுக்காரியத்தில் நுழைந்து குதர்க்கம் செய்ய வேண்டியதில்லை. அப்படிச் செய்வது ஆகப் பெரிய பாவச்செயல். தனது நான்கைந்து தலைமுறைகளுக்கான பாவத்தைச் சேர்த்து வைக்கிறார்கள் என்று அர்த்தம். - இதற்கு மேல் என்ன சொல்வது?

ஒரு காரியத்தைச் செய்யும் போது பத்து பேர் ஆதரவாக நிற்கும் போது ஒன்றிரண்டு பேர் எதிர்த்து நிற்பது வாடிக்கைதான். இதுவும் அப்படித்தான்.

இந்த நிகழ்ச்சியின் வழியாக யாருக்கெல்லாம் உதவவிருக்கிறோம், பயனாளிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறோம் என எல்லாவற்றையும் முந்தைய பதிவுகளில் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் துல்லியமாக கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பொதுக்காரியங்களைச் செய்யும் போது இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று - இத்தகைய மனிதர்களின் முயற்சிகளினால் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் பிரச்சினைகளைச் செய்ய முடியுமே தவிர உத்வேகத்தையும் திட்டமிடலையும் எந்தவிதத்திலும் சிதைத்துவிட முடியாது என்கிற நம்பிக்கையிருக்கிறது. ஒவ்வொரு தடையும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கான பலத்தைத்தான் கொடுக்கிறது.

விளையாட்டாகவோ வினையாகவோ குட்டையைக் குழப்பியிருக்கிறார்கள். விளக்கியாகிவிட்டது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இன்னமும் எதையாவது செய்து தடை செய்ய விரும்பினால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். முடிந்தளவில் தடைகளை உடைப்பதற்கு முயற்சிக்கலாம். அதற்குமேல் நாம் பெரிதாக மனக்கெட வேண்டியதில்லை. எது நடக்க வேண்டுமோ அது நிச்சயம் நடக்கும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. உதவி பெறப் போகும் பல நூறு குடும்பங்களின் எதிர்பார்ப்புகளையும்,  உதவிகளைச் செய்திருக்கும் பல நூறு மனிதர்களின் ஆசையையும் யாரோ ஒரு சிலரின் துர்கனவுகள் தடுத்துவிடாது. பார்க்கலாம்.