தோராயமாக ஐம்பது லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை. உண்மையைச் சொன்னால் அறக்கட்டளையின் கணக்குக்கு பணம் வரத் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் சற்று கெத்தாகத்தான் இருந்தது. வீட்டில் கூட பெருமையடித்துக் கொண்டேன். ‘பத்து லட்சம் வந்திருக்கு’ ‘இருபது ஆகிடுச்சு தெரியுமா?’ ‘இருபத்தஞ்சு லட்சம் வந்துடுச்சு’ என்றெல்லாம் பேசுகிற வரைக்கும் இனிப்ப்பாகத்தான் இருந்தது. அப்புறம்தான் நடுக்கம் ஆரம்பித்தது. பெருமைக்கு வாங்கிக் குவித்து வைத்துக் கொண்டு வறுத்து தின்னவா முடியும்? அருணாச்சலம் ரஜினி கதை ஆகிவிடும் போலிருந்தது. அதனால்தான் சற்று ஜாக்கிரதையாக ‘செய்வோம்...ஆனால் பொறுமையாகத்தான் செய்ய முடியும்’ என்று பொறுப்பானவனாக எழுதி வைத்தேன். அதுவொரு எஸ்கேப் மெக்கானிஸம். ஒரு மாதம், இரண்டு மாதம் என்கிற காலக்கெடுவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?
நினைத்தபடி வேலைகளைச் செய்து முடித்திருக்கிறோம். இப்போதைய கணக்கில் வெள்ள நிவாரண உதவியாக மட்டும் கிட்டத்தட்ட முப்பத்தைந்து லட்ச ரூபாய்க்கான உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கிய மளிகைச் சாமான்கள் (எட்டே முக்கால் லட்ச ரூபாய்), பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தில் தொண்ணூற்று இரண்டு குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் (ஆடு, மாடுகள், முந்திரி உடைக்கும் எந்திரம் உள்ளிட்டவை- கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய்) இப்பொழுது மூன்றாம் கட்டமாக கிட்டத்தட்ட இருபது லட்ச ரூபாய். ஆக மொத்தம் முப்பத்தைந்து லட்ச ரூபாயைத் தாண்டியிருக்கிறது. துல்லியமான கணக்கை கூடிய விரைவில் சமர்ப்பிக்கிறேன்.
மழை நிவாரண உதவிகளைத் தவிர்த்து அறக்கட்டளை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை நிசப்தம் வழியாகச் செய்திருக்கும் கல்வி மருத்துவ உதவிகள் இருபது லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக் கூடும். குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கான வேலைகளைச் செய்வோம் என்றோ அல்லது நம்மால் செய்ய முடியும் என்றோ நினைத்ததில்லை. அவையவை அதனதன் போக்கில் நடக்கின்றன. நிறையப்பேர் நம்புகிறார்கள். துணையிருக்கிறார்கள். அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து நல்லவிதமாக வெளியில் பேசுகிறார்கள். இவையெல்லாம்தான் பாஸிட்டிவ் எனர்ஜி. துணிந்து வேலைகளை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
நல்ல காரியங்களைச் செய்யும் போது பயப்பட வேண்டியதேயில்லை என்பதை இந்த மூன்று மாத கால அனுபவம் உணர்த்தியிருக்கிறது. நாம் நினைப்பதைவிடவும் சிறப்பாகச் செய்து கொடுப்பதற்கு ஆட்கள் தானாகச் சேர்ந்துவிடுகிறார்கள். நம்முடைய ஒரே வேலை- சரியானவர்களை அடையாளம் காண்பது மட்டும்தான். அச்சிறுபாக்கம் ஜெயராஜின் அணி, கடலூரின் சக்தி சரவணன் அணி பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமானால்- இவர்கள் அப்படியே தேர்தலில் களமிறங்க வேண்டும். ஆனால் அது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள் என்பதுதான் அவர்களின் பலமே.
அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இன்னமும் இருபத்தாறு லட்ச ரூபாய் இருக்கிறது. இன்னமும் சில கொடுக்கப்பட்ட காசோலைகளுக்காக பணம் கணக்கிலிருந்து குறையவில்லை. வெள்ள நிவாரணப் பணிகளை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். ஜூன் மாதத்தில் கல்விக் கட்டணமாகக் கொடுப்பதற்காக கணிசமான தொகையை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். மற்றபடி நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக செய்யப்படுகிற கல்வி மருத்துவ உதவிகள் வழக்கம் போலவே தொடரும்.
கடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், உதவி துணைக் கண்காணிப்பாளர் தேவரத்தினம், பெரும்பாலான சட்டச் சிக்கல்களை தீர்த்துக் கொடுத்த வழக்கறிஞர் கதிர்வேல் என ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மேடையில் பொருட்களை வாங்கிக் கொண்ட சில பயனாளிகள் நெகிழ்ச்சியில் அழுதார்கள். ஒவ்வொருவரிடமும் தமிழச்சி தங்கபாண்டியன் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தார். கடலூரில் நிகழ்ச்சி நடப்பதைத் தெரிந்து கொண்டு புதுச்சேரியிலிருந்து சிவக்குமரன், பெங்களூரிலிருந்து அருண் கார்த்திக், செந்தில், நெல்லையிலிருந்து சரவணன், கோபியிலிருந்து ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தினர் என நிறையப் பேர் வந்திருந்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.
சக்தி சரவணனின் குடும்பத்தினர் ஏதோ குடும்ப நிகழ்ச்சி போல அத்தனை பேரும் வந்து ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். கத்தார் ஜெகா, கார்த்தி கருணா (டிமிட்ரி) போன்றவர்களின் வருகை என்பது மனோரீதியிலான பலம். இயன்றவரையிலும் அத்தனை தன்னார்வலகளையும் தனித்தனியாகச் சந்தித்து நன்றி சொல்லியிருக்கிறேன். ஆனால் நன்றி என்பதெல்லாம் சிறு வார்த்தை. பம்பரம் போலச் சுழன்றார்கள் அந்தத் தம்பிகள்.
ஊடகங்களிடமிருந்து பெரிய ஆதரவு இல்லை. விளம்பரத்துக்காக இல்லை- ஒருவேளை ஏதேனும் பிரச்சினைகள் நிகழ்ந்தால் ஊடகவியலாளர்கள் அரங்கில் இருப்பது நல்லது என நினைத்து சில ஊடக நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். யாருமே பதிலளிக்கவில்லை. நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையென்றாலும் இவர்களின் மெளனம் சற்றே வருத்தமுறச் செய்தது. எல்லாமே நமக்கான படிப்பினைகள்தான்.
மழை தனது கோர நடனத்தை ஆடிவிட்டுச் சென்ற பிறகு பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்களுக்கும் நன்கொடையாளர்களும் இடையில் பாலமாக இருக்க உதவிய கடவுளுக்குத்தான் நன்றியைச் சொல்ல வேண்டும். என் மீதும் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை வைத்திருந்த ஒவ்வொரு மனிதருக்கும் எனது அன்பும் பிரியமும். நேற்றிரவு பெங்களூர் திரும்பினேன். மனதுக்குள் அவ்வளவு நிம்மதியாக இருந்தது. வழக்கமாக பயணங்களின் போது ஏதாவதொரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பேன். நேற்று புத்தகம் எதையும் தொடாமல் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாக ஊர்களை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் தெளிந்து கிடந்தது.
அத்தனை பேருக்கும் நன்றி.
அத்தனை பேருக்கும் நன்றி.
பயனாளிகளில் ஒரு பகுதியினர்
15 எதிர் சப்தங்கள்:
செயிச்சுட்ட ராசா.
//அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாக ஊர்களை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் தெளிந்து கிடந்தது.//
இதுதான் வெற்றியின் அடையாளம் மணி.
//பந்தாவுக்காக//
முதுகையா காட்டுவார்கள்.
"முன்தலை வழுக்கை தெரியக்கூடாதுங்கறதுக்காக"
ன்னு வெளங்குறா மாதிரி லேபில் வைக்கலாமுல்லா.
வாழ்த்துக்கள். தன்னம்பிக்கை அதிகம் ஆயிருக்கு !
Congrats Mani Anna
Congratulations to Mani anna and team
Congrats sir
caption for last snap ... TIME TO LEAD
தனிமனிதரான உங்களாலேயே இப்படி உதவிகள் செய்யும் முடியும் என்றால் நம் தலைவர்கள் மனது வைத்தால் நாட்டிற்கு என்னென்ன செய்யலாம்....ஹும்ம்
இப்படியே இன்னும் பல நல்ல செயல்களை செய்து கொண்டே இருங்கள் ஆனால் இப்படி செய்து வரும் உங்களை அரசியலில் குதித்து இன்னும் பல நல்லகாரியங்களை செய்யலாம் என்று பலர் ஏற்றிவிடலாம். ஆனால் அதற்கு மட்டும் மயங்கிவீடாதிர்கள்
நிகழ்ச்சி நல்ல படியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!! சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!
தங்கள் பணி தொடரட்டும்!
All the Best. God Bless you always.Really Great...
Great Job, Keep it up :)
Vijay
அது யார் சார் வேட்டியம் கையுமாய் ஒரு ஆள் பாவமாய் எல்லா புகைப்படத்திலும் ? நல்ல மனுசனா தெரியறாரே ?
Dear Mani, congratulations, tons and tons of thanks and appreciations. I wish, you never have any hardships in life and be helping others more and more. God bless you, your family and the generations.
- Dev
வாழ்த்துக்கள்.
Post a Comment