Mar 11, 2016

சிறு சிறு பூக்கள்

‘கடலூரில் நிகழ்ச்சியே நடத்தாமல் பொருட்களை வழங்கினால் பிரச்சினை எதுவுமில்லாமல் சமாளித்துவிடலாம்’ என்று சிலர் ஆலோசனைகளைச் சொன்னார்கள். நிகழ்ச்சியாக நடத்துவதற்கு ஒரே காரணம்தான் - பயனாளிகள் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். பொருட்களை ஒவ்வோர் ஊராகக் கொண்டு போய் சேர்ப்பதாக இருந்தால் அதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அத்தனை ஊர்களுக்கும் செல்வதற்கான வாகனம் ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். தன்னார்வலர்களை அலையச் செய்ய வேண்டும். அப்படியே செய்தாலும் கூட ஊருக்குள் பொருட்களை எடுத்துச் செல்வதில் இருக்கும் சிரமங்கள், சமாளித்து ஊருக்குள் கொண்டு போனால் ‘அவனுக்கு மட்டும் கொடுக்கறீங்க..எங்களுக்கு கொடுக்க மாட்டீங்களா?’என்று கேட்பதற்கான வாய்ப்புகள், உள்ளூர் பெரிய மனுஷர்களின் தலையீடுகள் என எல்லாவற்றையும் யோசித்துத்தான் பொதுவான இடத்தில் வைத்து பொருட்களை விநியோகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தோம். மற்ற வழிமுறைகளைவிடவும் இதுதான் செலவும் சிரமமும் குறைவானது. 

சிறப்பு விருந்தினர் என யாரையும் அழைக்காமல்  ‘நீங்களே கொடுத்துடுங்க’ என்று சக்தி சரவணன் சொன்னார். எனக்கு அதில் விருப்பமில்லை. ‘அடுத்தவன் காசை வாங்கி நிகழ்ச்சி நடத்துறான்..அதில் அவனே முன்னாடி நிக்கிறான்’ என்று யாராவது எங்கேயிருந்தாவது சொல்லக் கூடும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது நம்மை நாமே தூக்கிப் பிடித்துக் கொள்வது போலத்தான். புரிந்து கொள்ளாதவர்களின் விமர்சனங்கள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லைதான். ஆனால் அவை தனிப்பட்ட முறையில் எழக் கூடிய விமரசனங்களாக இருப்பின் தாண்டிச் சென்றுவிடலாம். ஆனால் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் வந்துவிடக் கூடாது என விரும்புகிறேன். முடிந்தவரையில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு கட்சி முத்திரை குத்த வேண்டியதில்லை. கட்சி சார்பற்ற கூட்டங்களில் அவரது செயல்பாட்டையும் பேச்சையும் கவனித்தவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், நிசப்தம் அறக்கட்டளை மீது மிகுந்த அன்பு கொண்டவர். முதற்கட்ட உதவிகளை வழங்கிய தருணத்திலிருந்து பின்ணனியில் அவரது உதவியும் ஆதரவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் ‘எங்கேயும் பெயர் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லிவிடுவார். இப்பொழுது வரைக்கும் பெயரை வெளியில் சொல்லாமல் அவர் உதவிக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும். நிகழ்ச்சிக்கு வர முடியுமா என்று கேட்டவுடன் சரி என்று சொல்லிவிட்டார்.

இப்படித்தான் இந்த நிகழ்ச்சி முடிவு செய்யப்பட்டது.

நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. பொருட்களை அடுக்கி வைத்துவிட்டார்கள். பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. காவல்துறையினர் பாதுகாப்புக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 

சென்னை ராமகிருஷ்ணா மடத்திலிருந்து தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஐம்பது முதல் அறுபது மாணவிகளுக்கு இலவசமான செவிலியப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகச் சொன்னார்கள். நிகழ்ச்சியில் அவர்களும் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. கடலூரின் ஒரு கிராமப்புற பள்ளியிலிருந்து ஆசிரியர் அழைத்தார். ‘எங்கள் ஊர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐம்பது பேனா வாங்கித் தர்றீங்களா?’ என்றார். இப்படித்தான் சிறு சிறு பூக்கள் பூக்கின்றன.

பயனாளிகளை அடையாளம் காண்பதற்கும் வடிகட்டுவதற்கும் தன்னார்வலர்கள்  எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் இருந்து பார்த்திருந்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். நேற்றுக் கூட சக்தி சரவணன் எழுதியிருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் தன்னார்வலர்கள் கூடி அன்றைய தினத்தில் நடைபெற்ற வேலைகளை ஆலோசிப்பது வழக்கம். தினமும் கூட்டம் ஆரம்பிக்கும் ஒரு முதலாமாண்டு கல்லூரி மாணவர்  போது தனது செல்போனை சார்ஜரில் இணைத்து கூட்டம் முடியும் போது எடுத்துச் செல்வாராம். விசாரித்த போதுதான் தெரிந்திருக்கிறது அந்த மாணவனின் வீட்டில் மின்சார வசதி இல்லை. இன்னமும் கூட மின்சார வசதியில்லாத மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால் அந்த மாணவன் தனக்கான தேவை என்று எந்த விண்ணப்பமும் கொடுத்திருக்கவில்லை. இத்தகைய தன்னலமற்ற தன்னார்வலர்கள்தான் இந்த வெள்ள நிவாரணப் பணி சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தடுத்த வேலைகளுக்கான உத்வேகத்தைக் கொடுக்கிறார்கள். 

கடந்த பல நாட்களாக ஒவ்வொரு ஊராகச் சென்று விசாரித்து அந்தந்த ஊர்களில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவைகளை எழுதி வாங்கி, அந்த விண்ணப்பத்துடன் ரேஷன் கார்ட் உள்ளிட்ட ஏதேனுமொரு அரசாங்க அடையாள அட்டையைச் சேர்த்து நிழற்படங்களோடு வாங்கி வந்து குவித்து, பிரித்து, வடிகட்டி என மலைக்கச் செய்யும் காரியம். செய்து முடித்திருக்கிறார்கள்.

நாளை வாய்ப்பிருக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள். பயனாளிகளைத் தவிர வேறு யாருக்கும் எந்த தனிப்பட்ட பலனுமில்லாத கூட்டம் இது. ஆனாலும் கூடுகிறோம். இத்தகைய நிகழ்ச்சிகளில் முகம் தெரியாமல் பாடுபட்டிருக்கும் அத்தனை பேரும் பாராட்டப்பட வேண்டும். உற்சாகப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய உழைப்பாளர்கள் ஒவ்வொருவருமே இந்த தேசத்தின் பொக்கிஷங்கள்தான். இவர்களின் இந்த மனநிலை எல்லாக் காலத்திலும் அப்படியே இருக்க வேண்டும். அதற்காக நம்முடைய அரை நாள் பொழுதை செலவழித்து பாராட்டலாம். வாழ்த்தலாம். பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

வேலையை ஆரம்பிக்கும் போது எவ்வளவோ யோசித்தோம். யோசனை என்பது வேறு; நடைமுறை என்பது வேறு. இத்தகைய பணிகளைப் பொறுத்த வரையில் எது சாத்தியமோ அதற்கேற்ப நம் முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ‘நான் முடிவெடுத்தாச்சு..இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்றால் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்வோம். நம்முடைய இறுதி இலக்கை அடைவதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். அந்தப் பயணத்தில் உறுதியாக இருக்கிறோம்.

பயன்பெறவிருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிச்சயமாக இதுவொரு விளக்காக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். திரியைப் பற்ற வைக்கிறோம். அவை சுடர் விடட்டும்.

5 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

கண்டிப்பாக சுடர் விட்டு எரியும்..!
வாழ்த்துகள்!

Jaypon , Canada said...

My prayers are always with success of this endeavor. All the best Anna.

சேக்காளி said...

//‘நான் முடிவெடுத்தாச்சு..இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்றால் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்வோம்//
பயப்படாதீர்கள் மணி.
சிலருக்கு திரும்பிய பக்கமெல்லாம் திசை தான்.நீங்கள் அந்த சிலரில் ஒருவர்.

Unknown said...

நாளை வாய்ப்பிருக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள். பயனாளிகளைத் தவிர வேறு யாருக்கும் எந்த தனிப்பட்ட பலனுமில்லாத கூட்டம் இது. ஆனாலும் கூடுகிறோம். இத்தகைய நிகழ்ச்சிகளில் முகம் தெரியாமல் பாடுபட்டிருக்கும் அத்தனை பேரும் பாராட்டப்பட வேண்டும். உற்சாகப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய உழைப்பாளர்கள் ஒவ்வொருவருமே இந்த தேசத்தின் பொக்கிஷங்கள்தான். இவர்களின் இந்த மனநிலை எல்லாக் காலத்திலும் அப்படியே இருக்க வேண்டும். அதற்காக நம்முடைய அரை நாள் பொழுதை செலவழித்து பாராட்டலாம். வாழ்த்தலாம். பிரார்த்தித்துக் கொள்ளலாம். TRUE Words.

Vinoth Subramanian said...

Good work sir.