Mar 31, 2016

முகாம்

அண்ணாவுக்கு அன்பு வணக்கம்,

தங்களை சேர் என்று அழைக்க மனம் ஒப்பவில்லை. காரணம் மிகவும் எளிது. தங்களின் எழுத்துக்கள் எம்மைப் போன்ற எளியவர்களின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது.

அண்ணா, எனது பெயர் தினேஷ். உங்கள் சொந்த மாவட்டமான ஈரோடு சத்தியமங்கலம் அருகில் உள்ள பவானிசாகர்  அகதிகள் முகாமில்  வசிக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும்  மேற்பட்ட  சிலோன்காரர்களில் நானும் ஒருவன் (நீங்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை இருந்தாலும் எம்மைச்சுற்றி இருக்கும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற மக்கள்  எம்மை அப்படித்தான் அழைக்கிறார்கள் அண்ணா). 

நீங்கள்   அறக்கட்டளை  தொடங்குவதற்கு  முன்பிருந்து நான் உங்கள்  தீவிர வாசகன். அறக்கட்டளை தொடங்கிய பின் அந்த அறிவித்தலை கண்ணுற்ற போது நிச்சயமாக என்னால் முடிந்த ஒரு சிறு தொகையையாவது அறக்கட்டளைக்கு அனுப்ப வேண்டும் என்று  நினைக்காத நாளில்லை. ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு மட்டும்  கிட்டவேயில்லை. அன்றன்றைக்கு வேலை செய்து எனது குடும்பப் பிரச்சினைகளையே சரி பண்ண எனது வருமானம் போதவில்லை. இதில் எங்கிருந்து அறக்கட்டளைக்கு அனுப்புவது?

நான் உங்களிடம் கேட்க போகும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகள்தான் எமக்கு ஓட்டுரிமை இல்லை என்ற காரணத்தினால் எம்மைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் நீங்களாவது   கல்வியறிவு இல்லாத மாணவர்களுக்கு உதவுவதைப் போலவோ அல்லது பாட சாலைகளுக்கு உதவுவதைப் போலவோ எமது பிள்ளைகளுக்கும் உதவலாமே? அவர்க்கும் பள்ளிக் கல்வியை முடித்து விட்டு கல்லூரி செல்ல வசதி இல்லாமல்தானே வறுமையில் வாடுகிறார்கள்?

சற்று சிந்தியுங்கள் அண்ணா.

இந்த வேண்டுகோளில் ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில் என்னை மன்னிக்கவும்.

அன்புள்ள, 
தினேஷ்.

அன்புள்ள தினேஷ்,

வணக்கம்.

வேண்டுகோளில் என்ன தவறு இருக்க முடியும்? இப்படியெல்லாம் தயங்க வேண்டியதில்லை. தகவலைக் கொண்டு வந்து சேர்த்தமைக்கு மிக்க நன்றி. 

முகாம்களில் இருக்கும் மாணவர்களுக்கு நிச்சயமாக உதவலாம். உதவி செய்வதில் இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. எல்லோரும் மனிதர்கள்தானே? கஷ்டப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் கை தூக்கிவிடலாம். கல்வி உதவிகளைப் பெறுகிற பயனாளிகளைப் பொறுத்தவரையிலும் ஒரே விதிதான். அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படியிருக்கும்பட்சத்தில் தகவல்களை அனுப்பி வைக்கவும். பெற்றோரின் வருமானம், குடும்பச் சூழல், மாணவர்களின் படிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்து தரலாம்.

சமீபத்தில் சில நண்பர்கள் வெளிமாநில பயனாளிகளின் விவரங்களை அனுப்பி வைத்திருந்தார்கள்- அவர்களுக்காக இந்தக் கடிதத்தைப் பொதுவெளியில் பிரசுரம் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. தமிழகத்தைத் தாண்டி வெளிமாநில பயனாளிகளுக்கு உதவக் கூடாது என்றெல்லாம் எதுவுமில்லை. ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற விவரத்தை வைத்துக் கொண்டு எங்கே சென்று விவரங்களைச் சரி பார்ப்பது என்கிற குழப்பம்தான். ஒன்று மும்பைக்குச் செல்ல வேண்டும் அல்லது ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும். இரண்டுமே எளிதான காரியமில்லை. விவரங்களை அனுப்புகிற நண்பரை நம்பலாம்தான். இருப்பினும் ஒரு முறையேனும் நேரடியாக விசாரித்துவிடுவது என்கிற விதியைத் தளர்த்திக் கொள்ள முடிவதில்லை.

தமிழ்நாட்டுக்குள் எந்த ஊராக இருந்தாலும் யாரையாவது பிடித்து விவரங்களைச் சரிபார்த்துவிட முடியும். வாய்ப்பே இல்லாதபட்சத்தில் நானே சென்று விடுவேன். ஆனால் பிற மாநிலங்கள் என்னும் பட்சத்தில் சிரமமாக இருக்கிறது. நம்மிடம் அவ்வளவு பெரிய வலையமைவு(நெட்வொர்க்) இல்லை. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் வெளிமாநில பயனாளிகளை நிராகரிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சில காலம் போகட்டும். ஒருவேளை நம்முடைய நண்பர்களின் வட்டம் பிற மாநிலங்களில் விரிவடைந்தால் எல்லைகளை விஸ்தரிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

தினேஷ், தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. தமக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும். தங்கள் குடும்பத்திற்குத் தேவையான அடிப்படையான வசதிகளை அடைந்த பிறகு நீங்கள் ஐந்து ரூபாய் அளித்தாலும் சந்தோஷமாகப் பெற்றுக் கொள்கிறேன். தற்போதைக்கு தங்களின் ஆதரவும் வாழ்த்துமே பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களின் முகாமில் வசிக்கிற தகுதியான மாணவர்களை அடையாளம் காட்டுவதே நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறந்த உதவியாக இருக்கும்.

மாணவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும். அடுத்த முறை ஊருக்கு வரும் போது முகாமுக்கு நேரில் வந்து தங்களையும் மாணவர்களையும் சந்திக்கிறேன்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்

அருட்பெருஞ்சோதி

ஒரு வருடத்திற்கு முன்பாக கோவை ஞானியைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவர் தன்னுடைய சேகரிப்பில் இருந்த புத்தகங்களையெல்லாம் வருகிறவர்களுக்குத் தந்து கொண்டிருந்தார்.  நமக்கு எந்தப் புத்தகங்கள் தேவையோ அவற்றை எடுத்து வந்து அவருக்கு உதவியாளராக இருந்த ஒரு பெண்மணியிடம் கொடுக்க வேண்டும். ஞானிக்கு கடந்த பல வருடங்களாகவே பார்வையில்லை. ஆனால் அவர் வாசிப்பை நிறுத்தியதில்லை. யாராவது உரக்க வாசித்துக் காட்டுவார்கள். அந்தப் பெண்மணி நாம் எடுத்து வந்திருக்கும் புத்தகத்தின் பெயரைச் சொல்வார். அதற்கு ஞானி அவராகவே ஒரு விலையைச் சொல்வார்.  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகமாக இருக்கும். ‘முந்நூறு போட்டுக்குங்க’ என்பார். அவருக்கு விலை தெரியவில்லை என்று அர்த்தமில்லை. அரை விலைக்கும் கால் விலைக்குமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். சில பள்ளி நூலகங்களுக்கு விலையே இல்லாமல் கொடுத்துக் கொண்டிருந்தார். 

புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை. இலவசம், குறைவான விலை என்கிற சூழல்களில் என்னுடைய கஞ்சத்தனம் எட்டிப்பார்த்துவிடும். பெங்களூரில் ஒரு கடை இருக்கிறது. பிரிகேட் சாலையில். கிலோ கணக்கில்தான் பழைய புத்தகங்களை விற்பார்கள். கிட்டத்தட்ட அத்தனையும் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள். வெளியிலிருந்து பார்த்தால் சாதாரண துணிக்கடை மாதிரிதான் தெரியும். ஆனால் உள்ளே புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். புத்தப் பிரியர்கள் இந்தப் பக்கம் வரும் போது சொல்லுங்கள். இரண்டு மூன்று கிலோ வாங்கிச் செல்லலாம். ஆரம்பத்தில் இந்தக் கடைக்குச் சென்ற போதெல்லாம் ‘பெரிய புத்தகம் ஒன்றை மட்டும் வாங்குவதை விட சிறிய புத்தகங்கள் நான்கைந்து வாங்கிக் கொள்ளலாம்’ என்கிற சில்லரைத்தனத்துடன் இரண்டு மூன்று முறை பாடாவதியான புத்தகங்களை வாங்கி வந்து லோல்பட்டிருக்கிறேன். ஞானி வீட்டிலும் அப்படித்தான் ஆகிப் போனது. அவரிடம் அரிய புத்தகங்கள் எவ்வளவோ இருந்தன. பெயரைச் சொன்னால் எழுத்தாளர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும்- அவர்களின் புத்தகங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தேன். இடத்துக்கும் கேடு; காசுக்கும் கேடு.

இப்பொழுது கொஞ்சம் ஞானோதயம் வந்திருக்கிறது. ஒளி வட்டம் தெரிகிறது என்று யாராவது சொன்னால் ‘அது சொட்டை எதிரொளிக்குதுங்க’ என்று சொல்லிவிடுகிறேன். இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது எதிரில் நிற்கவே முடியாது. சில திரைப்படங்களில் எதிராளி வரும் போது திடீரென்று வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டு கண்களைக் கூசச் செய்வார்கள் அல்லவா? அப்படி. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி!

திருவருட்பா புத்தகம் கிடைத்திருக்கிறது. பழைய பதிப்பு. காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை 1924 ஆம் ஆண்டு அச்சிட்ட புத்தகம். அதே எழுத்து. அதே உரைநடையுடன் தொண்ணூறு வருடங்கள் கழித்து இப்பொழுது அச்சிட்டிருக்கிறார்கள். எங்கள் ஊரில் ஒரு சித்த மருத்துவர் இருக்கிறார். சரவணன் என்று பெயர். முப்பது வருடங்களுக்கு முன்பாகவே பொறியியல் படித்தவர்.  அதுவும் நல்ல கல்லூரியில். ஆனால் பள்ளிக் காலத்திலிருந்தே சித்த மருத்துவத்தில் நாட்டம் என்பதால் படித்த படிப்புக்குச் சம்பந்தமேயில்லாமல் மருந்து தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுதே வேலைக்குச் சென்றிருந்தால் பெரிய நிறுவனத்தில் பெரிய இடத்தில் இருந்திருக்கலாம். ‘இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன்’ என்கிறார். செய்கிற வேலையை மனத் திருப்தியுடன் செய்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அமையும். சரவணன் வள்ளலாரைப் பின் தொடர்கிறவர். அவரைப் பார்க்கச் சென்றிருந்த போதுதான் புத்தகக் கட்டு வந்து இறங்கியிருந்தது. 

‘இந்தாங்க உங்களுக்கு ஒரு காப்பி’ என்றார். ஆயிரம் ரூபாயாவது இருக்கும் என்றுதான் நினைத்தேன். திருவருட்பாவின் ஆறு திருமுறைகள், வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, திருவருட்பா வரலாறு அது போக நிறைய உரைநடைகள் என எப்படியும் ஆயிரம் பக்கங்களைத் தாண்டும். கெட்டி அட்டைப் பதிப்பு வேறு. நவீன பதிப்பாளர்கள் இரண்டு மூன்றாயிரத்துக்கு குறைவில்லாமல் விற்பார்கள். இந்தப் புத்தகம் இருநூற்றைம்பது ரூபாய்தான். மூச்சடைத்துப் போனது. எப்படிக் கட்டுபடியாகிறது? கைக்காசைச் செலவழித்து அச்சடிக்கிறார்கள். இந்த நூலின் வழியாக வரக் கூடிய பணத்தையும் மீண்டும் திருவருட்பா அச்சடிக்கவே செலவு செய்கிறார்களாம்.

உலகம் காசுக்காக வெறியெடுத்துத் திரிகிறது. எங்கே வாய்ப்புக் கிடைத்தாலும் சுரண்டுகிற மனிதர்கள் இருக்கிறார்கள். அப்பாவுக்கு ஒரு மருந்து வாங்கித் தருகிறோம். ஒரு டப்பாவில் இருபத்தெட்டு மாத்திரைகள் இருக்கும். இருபதாயிரம் ரூபாய். தினமும் ஒரு மாத்திரை. மருத்துவமனையில் வாங்கிக் கொண்டிருந்தோம். அதில் போட்டிருக்கிற விலையில் ஒற்றை ரூபாய் குறைக்கமாட்டார்கள். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான மருந்துக் கடைகளில் பத்துச் சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள். ஆனால் இந்த மருந்து விலை அதிகமாக இருக்கிறது என்பதால் வெளிக் கடைகளிலும் கிடைப்பதில்லை. மருத்துவமனையில் மட்டும்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த மருந்தை வெறும் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு விற்கக் கூடிய விநியோகஸ்தரைக் கண்டுபிடித்திருக்கிறோம். அவரிடம் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கி கூடுதலாகப் பத்தாயிரம் ரூபாய் லாபம் வைத்து மருத்துவமனைகளில் வைத்து விற்கிறார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது? மாதம் பத்து மருந்து டப்பா விற்றால் அதில் மட்டுமே ஒரு லட்ச ரூபாய் இலாபம். பத்துதான் விற்பார்களா? ஒரு மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளச் சொல்லி எழுதிக் கொடுக்கிறார்கள். தம்மிடம்தான் மருந்து வாங்குகிறார்கள் என்பதும் தெரியும். அடக்கவிலைக்குக் கொடுக்க வேண்டியதில்லை. சற்றேனும் விலையைக் குறைத்துக் கொடுக்கலாம் அல்லவா? கொடுப்பதில்லை. இதில் விதிமீறல் என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாமே சட்டப்படிதான் செய்கிறார்கள். ஆனால் மனிதாபிமானம் என்பது துளியுமில்லை. மனித உயிரிலிருந்து எந்திரங்கள் வரைக்கும் எல்லாவற்றிலிருந்தும் பணத்தை எப்படி உருவுவது என்றுதான் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு ஆயிரம் பேரல் பெட்ரோலியத்தை உறிஞ்சினால் இவ்வளவு டாலர் கிடைக்கிறது என்றால் நாளை அதைவிடக் கூடுதலாக உறிஞ்சி அதைவிடக் கூடுதல் லாபம் பார்க்கலாம் என்கிற கார்போரேட் மனநிலைதான் எல்லா இடங்களிலும். தன்னுடைய சந்ததிக்குச் சொத்துச் சேர்ப்பதில்தான் ஒவ்வொருவரும் குறியாக இருக்கிறார்களே தவிர அடுத்தவனின் சந்ததி பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றிய உலகம் குரூரம்மிக்கதாக மாறிக் கொண்டிருக்கிறது. நீயும் குரூரமானவனாக மாறிக் கொள்; இல்லையென்றால் உன்னை முடித்துவிடுவார்கள் என்று பயமூட்டுகிறவர்கள்தான் சுற்றிச் சுற்றி இருக்கிறார்களே தவிர அடுத்தவன் எவ்வளவு அயோக்கியனாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் நீ அன்பைக் காட்டு என்று போதிக்கிறவர்கள் கண்களுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வாழ்ந்த பூமி கந்தக பூமியாகிக் கிடக்கிறது.

வள்ளலார் வரலாற்றிலும் நிறைய ட்விஸ்ட்கள் இருந்திருக்கின்றன. ஆறுமுக நாவலர் என்று தேடிப் பார்த்தால் கிடைக்கும். ‘நீ அருட்பா எழுதினால் அதை மறுத்து நான் போலியருட்பா மறுப்பு எழுதுவேன்’ என்று இரண்டு பேரும் அந்தக் காலத்திலேயே கோர்ட், கேஸ் என்று அழைந்திருக்கிறார்கள். அதே விருமாண்டிxபசுபதி ஸ்டைல்தான். 

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இந்தப் புத்தகத்தை 'Limited edition' என்கிறார்கள். இருநூற்றைம்பது ரூபாய்க்கு அச்சடித்துக் கொடுத்தால் அப்படித்தான் விற்க முடியும். கடலை பொரி கொடுப்பது போலக் கொடுத்தால் தலையில் துண்டு விழாது; பெரிய போர்வையே விழும். வாசிக்கிறோமோ இல்லையோ இந்தப் பழங்காலப் பதிப்பின் மறு அச்சிலிருந்து ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளலாம். எப்பொழுதாவது பயன்படும். பழைய பதிப்பு என்பதால் வாசிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும் என்றுதான் நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. வாசித்துவிட முடிகிறது.

அருட்பா பதிப்பகம்,
arutpa@arutpaonline.com
044- 45528080
9444073960

Mar 29, 2016

உள்ளீடு

அவ்வப்பொழுது நெருக்கமான ஒரு சிலரிடம் கேட்டுக் கொள்வதுதான். ‘போர் அடிக்காம போகுதுங்களா?’. நிசப்தத்தில் எழுதுவதை முன் வைத்து இந்தக் கேள்வியைக் கேட்பேன். எதிர்கொள்கிற கருத்துக்களின் அடிப்படையில் நமது பாதையை அனுமானித்துக் கொள்ளலாம்.  ‘நான் போறதுதான் பாதை’ என்று கண்களை மூடிக் கொண்டு ஓட்டி குழியில் இறக்கிவிடக் கூடாது அல்லவா? அந்த சூதானம்தான். இந்த முறை சற்று பரவலாகவே கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அதனால்தான் வலது பக்கம் நான்கு கேள்விகள். 

எழுத்தைப் பொறுத்த வரைக்கும் நாம் எழுதுவதுதான் எழுத்து என்றெல்லாம் இருக்க வேண்டியதில்லை. நிசப்தம் உரையாடலுக்கான களமாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதைவிடவும் சக மனிதர்களுடன் உரையாடுகிற உரையாடி என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன். இத்தகைய ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் கவனம் பிசகிவிடுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. மதி மயங்குதல். அவ்வப்போது அருகாமையில் இருப்பவர்களிடம் ‘சரியா போறோமா’ என்று கேட்டுக் கொள்வதில் தவறில்லை. கிள்ளி வைக்கச் சொல்வது போல.

உரையாடுகிறவனுக்கு நிறைய உள்ளீடுகள் அவசியம். அது விவரங்களாகவோ, செய்திகளாகவோ, பின்னூட்டங்களாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருக்கலாம். அவற்றைக் குதப்பி அவன் ஒரு தெளிதலுக்கு வர வேண்டியிருக்கும். அப்படியான ஒரு குதப்பலுக்கும் தெளிதலுக்குமாக இந்தக் கேள்விகளை முன் வைத்திருக்கிறேன். மிகச் சாதாரணமான கேள்விகள்தான்.

ஃபேஸ்புக் மாதிரியான இடங்களில் இதையெல்லாம் கேட்க வேண்டியதில்லை. வாசிக்கிறார்களோ இல்லையோ விருப்பக்குறிக்கான பொத்தானை ஒரு அமுக்கு அமுக்கிவிட்டுச் செல்கிறவர்கள் அதிகம். அதனால் இங்கு மட்டும்தான் கேட்டிருக்கிறேன். தங்களின் முப்பது வினாடிகளை எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். அதே முப்பது வினாடிகளை எனக்காக ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி.

வேறு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் மின்னஞ்சலிடவும். vaamanikandan@gmail.com

எதிரி

எதிரியுடன் நேருக்கு நேர் நின்றுதான் மோத வேண்டும் என்பதில்லை. இப்பொழுதெல்லாம் நேருக்கு நேர் யார் மோதுகிறார்கள்? முகத்துக்கு நேராகப் பார்க்கும் போது குளிரக் குளிரச் சிரிக்கிறார்கள். அந்தப் பக்கம் நகர்ந்தவுடன் விஷப்பல்லைக் காட்டுகிறார்கள். யாரையும் நம்ப முடிவதில்லை. படு சூதானமாக இல்லாவிட்டால் போட்டுக் கொடுத்துவிட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள்.

ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஏகப்பட்ட பேருடன் சண்டை வரும். வேலைக்கு சேர்ந்திருந்த புதிது. அத்தனையும் ஈகோ பிரச்சினைகள்தான். சம்பந்தமேயில்லாமல் எதிர்ப்படுகிறவர்கள் மீதெல்லாம் பொறாமை. பக்குவமில்லாமல் இருந்த பருவம் அது. பீமா ராவ் என்கிறவர்தான் எனக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரது தாய்மொழி தெலுங்கு. ஆனால் தமிழ் அட்டகாசமாகப் பேசுவார். படித்ததெல்லாம் தமிழகத்தில்தான். பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் யாரையாவது குற்றம் சாட்டி அவர் அறைக்கு முன்பாக நிற்பேன். அவரும் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி அனுப்பி வைப்பார். 

ஒரு நாள் கிட்டத்தட்ட பொது மேலாளர் மட்டத்திலிருந்த ரவிசந்த்தைப் பற்றி ஏதோ போட்டுக் கொடுக்கச் சென்றிருந்தேன். பீமாராவ் நொந்து போய்விட்டார். 

‘அவர் என்னய்யா பண்ணினாரு?’ 

‘தமிழ்க்காரன்னா இளக்காரமா பார்க்கிறாரு சார்..அவருக்குத் தெலுங்குப் பசங்கன்னாத்தான் உசத்தி’ அதுவரை பீமாராவ் என்னை அமர வைத்துப் பேசியதில்லை.

‘இங்க வா..உட்காரு’ என்றார். நம்முடைய புகாரைக் கேட்டு அரண்டு விட்டார் என்கிற தெம்புடன் அமர்ந்தேன்.

‘இப்படியே ஒவ்வொருத்தனா புகார் சொல்லிட்டே இருக்கியே...என் மேல உனக்கு புகார் எதுவுமில்லையா?’ என்றார். இல்லை என்று சொன்னவுடன் அவர் விட்டிருக்கலாம். 

விடாப்பிடியாக ‘கண்டிப்பா இருக்கும்..யோசிச்சு சொல்லு’ என்றார்.

‘இருக்கு சார்..நான் என்ன சொன்னாலும் ஆக்‌ஷன் எடுக்கிறதே இல்லை’ என்றேன். சிரித்துவிட்டு ‘சரி..நம்ம கம்பெனி சேர்மேன் மேல ஏதாச்சும் புகார் இருக்கா?’ என்றார். அவர் மீதும் இருந்தது. சொன்னேன். மறுபடியும் சிரித்தார்.

‘ரெண்டு விஷயம் தம்பி....இந்த உலகத்துல நமக்கு 100% புடிச்ச ஆளுன்னா ஒருத்தருமே இருக்க மாட்டாங்க...இவனைப் புடிக்கலை அவனைப் புடிக்கலைன்னு சொல்லிட்டே இருந்தா ஒவ்வொருத்தரையும் சொல்லிட்டு இருக்கலாம்.ஒருத்தனும் மிஞ்ச மாட்டான். அட்ஜெஸ்ட் செஞ்சு பழகு’ என்றார். இது சாதாரணமான அறிவுரை. சிரத்தையே இல்லாமல் அமர்ந்திருந்தேன். ‘இரண்டாவது விஷயம்- மோதுறதுன்னு முடிவு செஞ்சுட்டா சரியான ஆளைப் பார்த்து மோதணும்...ஜெயிச்சாலும் பலன் இருக்கணும்...தோத்தாலும் காணாமல் போகாம நிக்கணும்’ என்றார். இது வித்தியாசமாக இருந்தது. ரவிச்சந்த் மாதிரியான ஆளைப் போட்டுக் கொடுப்பது பெரிய காரியமில்லை. பெருங்கொடுக்கு. அப்பொழுது எதையும் காட்டிக் கொள்ளாமல் சமயம் பார்த்து வீசிவிடுவார். அதைத்தான் பீமாராவ் சொன்னார்.

பெரும்பாலும் எதிரிகளை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை எதிரி நம்மைவிட பெரிய ஆளாக இருந்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் நம்மைக் காலி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் எதிர்த்து நிற்கிற திறன் இருக்கிறதா என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் கமுக்கமாக இருந்துவிடுவதுதான் நல்லது. எதிரியைத் தேர்ந்தெடுக்கிறேன் பேர்வழி என்று சற்று கவனம் பிசகினாலும் காணாமல் போய்விடுவோம். பொதுவெளியிலும் அப்படித்தான்; அலுவலகத்திலும் அப்படித்தான். 

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க..அது பத்தித் தெரியுமா?’ என்றார். கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் விவரம் எதுவும் தெரியாது. துழாவிப் பார்த்த போது பெரிய தகவல் எதுவும் இல்லை. லட்சுமிகாந்தன் அந்தக் காலத்தில் வெகு பிரபலம். சினிமா தூது என்றவொரு பத்திரிக்கையை நடத்தி அதில் நடிகர்களின் அந்தரங்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது பிரபலமாக இருந்த என்.எஸ்.கே, எம்.கே.தியாகராஜபாகவதர் உள்ளிட்டவர்கள் அரசாங்கத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த இதழ் நிறுத்தப்பட்டது. அதுவரை இத்தகைய செய்திகளின் காரணமாக புகழும் பணமும் பார்த்திருந்த லட்சுமி காந்தனின் கை அரித்துக் கொண்டேயிருக்க ‘ஹிந்துநேசன்’ என்கிற பத்திரிக்கையை வாங்கி அதில் விலாவாரியாக எழுத ஆரம்பித்தார். பிரபலங்கள் காதுகளில் புகை விட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப் போய்க் கொண்டிருந்த லட்சுமி காந்தனின் முடிவு மிக அல்பமானது. கிட்டத்தட்ட தெருச்சண்டை மாதிரியானதொரு அல்பமான சண்டையில் யாரோ சிலர் லட்சுமிகாந்தனை போட்டுத் தள்ளிவிட்டார்கள். கத்திக் குத்தோடு காவல் நிலையத்திற்குச் சென்ற லட்சுமி காந்தன் என்.எஸ்.கேவின் பெயரையோ, எம்.கே.டி பெயரையோ குறிப்பிடவில்லை. ஆனாலும் அவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி சிறையில் தள்ளினார்கள். வெளியில் வந்த என்.எஸ்.கேவாவது திரும்பவும் நடித்தார். எம்.கே.டியின் வாழ்க்கை அதோடு முடிந்து போனது. இதுதான் on the record.

இதைச் சொன்ன போது ‘லட்சுமிகாந்தன் யார் பெயரையும் குறிப்பிடாத போது ஏன் எம்.கே.டியும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிக்கினார்கள்? கொலை வழக்கில் சிக்கிய ரெண்டு பேரும் அப்புறம் எப்படி வெளியில் வந்தாங்க’ என்றார் அந்த நண்பர். எனக்கு எப்படித் தெரியும்? கு.சாமி மாதிரி யாராவது தீர்ப்புச் சொல்லியிருப்பார்கள் என்றேன். ‘அப்படியெல்லாம் இல்ல..அந்தக் காலத்துல ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்த குழாம் ஒன்றுக்கு நெருக்கமாக இருந்த பெண்மணி தில்லாலங்கடி வேலையைச் செய்து கொண்டிருந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த லட்சுமிகாந்தன் மேலும் விவரங்களைச் சேகரிப்பதற்காக முயற்சி செய்தான். அதனை அனுமதிக்க விடக் கூடாது என்று முடிவு செய்த மேல்மட்டம் சோலியை முடித்து தாங்கள் தப்பிப்பதற்காகப் பழியை பழைய எதிரிகள் மீது போட்டது’ என்றார். இது off the record. விருமாண்டி கதை மாதிரி. கமல் சொல்வதும் சுவாரசியம்தான். பசுபதி சொல்வதும் சுவாரசியம்தான். நண்பர் சொன்னது உண்மையா புனைவா என்றெல்லாம் தெரியவில்லை. ஒருவேளை பழங்காலத்து ஆட்கள் யாருக்கேனும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் ஒன்று - ஐம்பது வருடங்கள் ஆனாலும் அரசியல், சினிமா செய்திகள் புளிப்பதேயில்லை என்று தோன்றியது.  

சினிமாவிலும் அரசியலிலும் உச்சத்திற்கு வந்தவர்களின் எதிரிகளின் பட்டியலை எடுத்தால் எவ்வளவு சுவாரஸியமானதாக இருக்கும்? ஒவ்வொருவரும் உச்சத்தைத் தொடுவதற்காக எத்தனையோ எலும்புக் கூடுகளைக் காலடியில் போட்டு அதன் மீதாக நின்றிருக்கக் கூடும். மேலே நிற்பவர்களைத்தான் வரலாறு எழுதுகிறது. எலும்பாக மாறியவர்களை வரலாறு மறந்துவிடுகிறது அல்லது மேலே நிற்பவர்கள் மறக்கடிக்கச் செய்துவிடுகிறார்கள்.

துருவினால் நிறையக் கதைகள் இருக்கக் கூடும். ஆனால் ஏற்கனவே மேலே நிற்பவர்கள் கொஞ்சம் உயரம் போதவில்லை என்று நம்மையும் அடியில் போட்டுக் கொள்ள வழி செய்து கொடுத்த மாதிரி ஆகிவிடக் கூடாது. அதுதான் யோசனையாக இருக்கிறது.

Mar 28, 2016

அறக்கட்டளை தொடங்குவதற்கான வழிமுறைகள்

அறக்கட்டளை பதிவு செய்வது குறித்தும் அது சார்பான சந்தேகங்கள் குறித்தும் அவ்வப்பொழுது யாராவது கேட்பதுண்டு. நல்ல விஷயம்தானே.  நுட்பமான சில கேள்விகளுக்கு பதில் தெரியாது என்றாலும் அனுபவஸ்தன் என்கிற முறையில் சொல்கிற தகவல்கள்தான் இவை- சிலருக்கு உதவக் கூடும்.

அறக்கட்டளையைப் பதிவு செய்வதற்கு வழக்கறிஞர் யாரும் அவசியமில்லை. ஒரு பட்டயக் கணக்கரை(ஆடிட்டர்) பிடித்தால் போதுமானது. அவரிடம் அறக்க்ட்டளையின் பெயர், அதன் நோக்கம், யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கப் போகிறார்கள் என்ற தகவல்களைச் சொல்லிவிட வேண்டும். அறக்கட்டளையில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சம் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குறைவுதான் நிறைவு- தேவையற்ற பிக்கல் பிடுங்கல் இருக்காது. நிறைய உறுப்பினர்களை வைத்திருந்தால் அவர்களைச் சமாளித்துக் கொண்டிருப்பதே பெருங்காரியமாக இருக்கும்.

அறக்கட்டளையின் உறுப்பினர் விவரங்கள், அதன் செயல்பாடுகள், விதிமுறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கி ஆவண மாதிரியை (Sample document) பட்டயக் கணக்கர் தட்டச்சு செய்து நம்மிடம் கொடுப்பார். இந்த ஆவண மாதிரியை மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டியது அவசியம். ஒரு முறை பதிவு செய்யப்பட்ட பிறகு எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் மீண்டும் சார்பதிவாளரின் ஒப்புதலுடன்தான் செய்ய முடியும் என்பதால் அது தேவையற்ற மண்டைக் குடைச்சல். அதுவுமில்லாமல் ‘என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க? ட்ரஸ்ட்ல இருக்கிற எல்லோரையும் கூட்டிட்டு வாங்க’ என்று சொல்லித் தாளிப்பார்கள். ஒருவேளை அறக்கட்டளையின் பதிவு ஆவணத்தில் குறிப்பிடாத காரியங்களைச் செய்தால் எதிர்காலத்தில் வருமான வரித்துறையினர் உள்ளிட்டவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஆவணம் மிகச் சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் நல்லது.

ஆவண மாதிரி சரியாக இருக்கிறது எனில் நம்முடைய ஒப்புதலை பட்டயக் கணக்கருக்குச் சொல்லிவிடலாம். அவர் அந்த விவரங்களை பத்திரத் தாளில் தட்டச்சு செய்து தருவார். பத்திரத் தாளில் தட்டச்சு செய்யப்பட்டதை எடுத்துக் கொண்டு பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களையும் அன்றைய தினத்தில் சார்பதிவாளர் முன்பு அடையாள அட்டை, முகவரிச் சான்றுடன் ஆஜராகச் சொல்வார்கள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அந்தந்த ஊரின் ‘மாமூல்’ வழக்கப்படி பத்திரம் பதிவு செய்யப்படும். முக்கியமான விஷயம்- அறக்கட்டளையின் முகவரி எந்தப் பத்திரப் பதிவு அலுவலகத்தின் எல்லைக்குள் வருகிறதோ அந்த ஊரில்தான் பதிவு செய்ய முடியும்.

பதிவு செய்யப்பட்ட பத்திரம் கைக்கு கிடைத்தவுடன் PAN அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதையும் பட்டையக் கணக்கரே செய்து கொடுத்துவிடுவார். PAN அட்டை கிடைத்த பிறகுதான் வங்கிக் கணக்குத் தொடங்க முடியும். PAN அட்டை மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரத்துடன் வங்கியை அணுகி அறக்கட்டளையின் பெயரில் வங்கிக் கணக்குக்கான கோரிக்கையை முன் வைக்கலாம். ஆனால் ஒரு பிரச்சினை இருக்கிறது- இந்தியாவில் 90% அறக்கட்டளைகள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில்லை. அதனால் வருமான வரித்துறையினர் தங்களைத்தான் ராவு ராவென ராவுகிறார்கள் என்று பெரும்பாலான வங்கிகள் நெட்டி முறிப்பார்கள். அதனால் சாமர்த்தியமாகப் பேச வேண்டியது அவசியமாக இருக்கும். என்னையெல்லாம் இரண்டு மூன்று வங்கிகளில் அடித்துத் துரத்தாத குறைதான்.

அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு, PAN அட்டையும் வாங்கி, வங்கிக் கணக்குத் தொடங்கிவிட்டால் வேலை முடிந்த மாதிரிதான். அதன் பிறகு நன்கொடையாளர்கள் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பத் தொடங்கலாம். நாம் செய்கிற காரியங்களின் ஆவணங்கள் (ரசீதுகள், பயனாளிகளின் விவரங்கள், வரவு செலவுக் கணக்கு, நிழற்படங்கள்) உள்ளிட்டவற்றைச் சேர்த்து 12 A மற்றும் 80 G ஆகியவற்றுக்கு பதிவு செய்து கொள்ளலாம். இதையும் கூட வருமான வரித்துறை அலுவலகங்களில் தொடர்புடைய பட்டயக் கணக்கரே செய்து தந்துவிடுவார். 12 A என்பது இலாப நோக்கமற்ற, அரசு சார்பற்ற நிறுவனம் என்பதற்கான பதிவு. 80 G என்பது வருமான வரி விலக்குக்கான பதிவு. அறக்கட்டளையின் ரசீதைக் காட்டி நன்கொடையாளர்கள் தாம் செலுத்திய தொகைக்கான வரிவிலக்கைப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டு நிதியை நேரடியாகப் பெற வேண்டுமானால் FCRA என்று பதிவு செய்யப்படல் வேண்டும். அப்பொழுதுதான் டாலர், யூரோ போன்ற பணத்தில் பரிமாற்றம் செய்ய முடியும். நிசப்தம் அறக்கட்டளை அந்த விதியின் படி பதிவு செய்யப்படவில்லை என்பதால் முழுமையான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை.

அறக்கட்டளை தொடங்குவதற்கு வழக்கறிஞர் வேண்டும், காவல்துறை அதிகாரி வேண்டும் என்றெல்லாம் குழம்பிக் கிடக்க வேண்டியதில்லை. அப்படி யாராவது புருடாவிட்டாலும் நம்ப வேண்டியதில்லை. அறக்கட்டளை தொடங்குவது மிக எளிமையான காரியம்தான். அதிகம் செலவு பிடிக்கும் காரியமும் இல்லை. ஒரே பிரச்சினை - தொடங்கிய பிறகு ஒழுங்காக வேலையைச் செய்ய வேண்டும். நிதி மற்றும் சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் சற்றே பிசகினாலும் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து சேர்ந்துவிடும். 

அதனால் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளுங்கள். 'எண்ணித் துணிக கருமம்’. இதைத் தாண்டி வேறு ஏதேனும் விவரம் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளவும். எனக்கும் பதில் தெரியாது. சேர்ந்து விடையைக் கண்டுபிடிக்கலாம். Information is wealth!

வேகம்

அனீஸ் கேரளாக்காரர். பழைய அலுவலக நண்பரின் நண்பர். இரண்டொரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். எப்பொழுதாவது ஃபோனில் பேசுவதுண்டு. பெங்களூரில் ஜன்னல் திரைகள் விற்கும் தொழிலைச் செய்கிறார். வீட்டிற்கு வந்து ஜன்னல்களை அளவெடுத்துச் சென்று துணிகளை வாங்கி அளவுக்கு ஏற்ப தைத்து அவரே வந்து மாட்டிவிடுவார். பெரிய வருமானம் இல்லை என்றாலும் மோசம் என்று சொல்ல முடியாது. வாடகை வீட்டில் இருக்கிறார். போக்குவரத்துக்கு கார் வைத்திருக்கிறார். 

பெங்களூரில் மலையாளிகளுக்கு மலையாளிகள் உதவுவதைப் பார்க்க முடியும். அப்படித்தான் அனீஸூக்கும் யாரோ பெங்களூரைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். தொழிலுக்கென வந்து திருமணமாகி இரண்டு குழந்தைகள். ‘நாலஞ்சு வருஷத்துல சம்பாதிச்சுட்டு போய்டலாம்ன்னுதான் வந்தேன்’ என்று சொல்லியிருக்கிறார். தம்முடைய சொந்த ஊரை விட்டு வருகிற பெரும்பாலான மனிதர்களுக்குள் இருக்கும் ஆசைதான். இப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் நடைபெறும் கிடாவிருந்து, அக்கம்பக்கத்து மாரியம்மன் பண்டிகை, பூப்பு நன்னீராட்டு விழா, காது குத்து, மொட்டையடித்தல் உள்ளிட்ட சிறு சிறு கொண்டாட்டங்கள் எதற்கும் அழைப்பு வருவதில்லை. திருமண அழைப்புகள் கூட மிக நெருங்கியவர்களிடமிருந்துதான் வருகிறது. மற்றவர்கள் அழைப்பிதழ்களை கதவுச் சந்தில் செருகி வைத்துவிட்டுச் செல்கிறார்கள். நேரில் பார்க்கும் போது ‘உங்களை வரச் சொன்னா..அங்கிருந்து வரணும்..உங்களுக்கும் சிரமம்...அதான் சொல்லலை’ என்கிறார்கள். நம்முடைய நல்லதுக்காகத்தானே சொல்கிறார்கள் என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

உள்ளூரில் எங்கள் அப்பாவுக்குத் தெரிந்த உறவு முறையின் எண்ணிக்கையில் முப்பது சதவீதம்தான் எனக்கும் தம்பிக்கும் தெரியும். இப்படியே போனால் அடுத்த தலைமுறையில் ஐந்து சதவீதத்தினரைக் கூட தெரியாமல் போய்விடும். அனீஸூக்கும் அதே வருத்தம்தான். ‘நம்ம ஊர்தான் நமக்கு வேர்’ என்று அவர் சொன்ன வாக்கியத்தை மறக்கவே முடியாது. அனீஸூக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவளுக்கு ஆறு வயது. சிறியவனுக்கு நான்கு வயது. ‘ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் கூட்டிட்டு போய் ஊரைக் காட்டிட்டு வந்துடுறேன்...இப்படியே எவ்வளவு நாளைக்கு முடியும்ன்னு தெரியல..ஆனா முடியற வரைக்கும் இதைச் செஞ்சுடணும்’ என்றார். குழந்தைகளுக்கு தமது சொந்த ஊர் மீது பிடிப்பு வரும் என்கிற நம்பிக்கையில் இதைச் செய்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் ஊருக்குச் செல்லும் போது கார்தான். சேலம், கோவை வழியாக கேரளாவுக்குள் நுழைந்துவிடுவார்கள். பேருந்தில் சென்று வருவதைவிடவும் காரில் சென்று வருவதில் வசதி அதிகம். கூட ஒன்றிரண்டு பேர் சேர்ந்து கொண்டால் செலவும் குறைவு. கடந்த வாரம் ஈஸ்டர் விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். நேற்று மாலை மூன்று மணிக்கு கோபியிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தேன். ஆறரை மணிக்கு தொப்பூரைத் தாண்டி பேருந்து சென்று கொண்டிருந்தது. நண்பர் சாம் அழைத்தார். அனீஸீன் நண்பர். உறங்கியிருந்ததால் அலைபேசி அழைப்பை எடுக்காமல் தவற விட்டிருந்தேன். அடுத்தவர்கள் அழைக்கும் போது அலைபேசி அழைப்பைத் தவறவிடுவதைப் போன்ற கொடுஞ்செயல் எதுவுமில்லை. அவர்களுக்கு ஏதாவதொரு அவசரச் செய்தியாக இருக்கக் கூடும். குறைந்தபட்சம் எடுத்து ‘என்ன’ என்றாவது கேட்டுவிட வேண்டும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான அழைப்புகளைத் தவற விட்டுவிடுகிறேன். நம் தலைமுறையில் பெரும்பாலானோரும் அப்படித்தான். ஆயிரம்தான் சாக்குப் போக்கு சொன்னாலும் அது அயோக்கியத் தனம்.

தர்மபுரியை நெருங்கிய போது அலைபேசியைப் பார்த்துவிட்டு மீண்டும் சாம்மை அழைத்தேன். அவர் குரலில் பதற்றம் இருந்தது. ‘வண்டி ஓட்டிட்டு இருக்கீங்களா?’ என்றேன். அவர் தர்மபுரியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்றார். பெங்களூரில் இருந்திருந்தால் என்னையும் தனது காரில் ஏறச் சொல்லியிருக்கக் கூடும்.

‘ஊரிலிருந்து வந்துட்டு இருக்கேன்....இப்போ தர்மபுரி பக்கமா இருக்கேன்...என்ன விஷயம்?’ 

‘தொப்பூர்ல அனீஸ் ஃபேமிலிக்கு ஆக்ஸிடெண்ட்..வேற விவரம் தெரியலை....தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருக்காங்க..நீங்க தர்மபுரியில் இறங்க முடியுமா?’ என்றார். திக்கென்றிருந்தது. பேருந்து தர்மபுரியைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. 

நடத்துநரிடம் ‘சார் இறங்கணும்...முக்கியமான வேலை’ என்றேன். நடத்துநர் எதுவும் சொல்லவில்லை. விசிலடித்தார். அந்தச் சாலையில் நிறைய முறை பயணித்திருக்கிறேன். பழக்கமான சாலைதான். தர்மபுரியில் நண்பர்களும் உண்டு. பிரசாத்தை அழைத்தேன். விவரங்களைச் சொன்ன பதினைந்தாவது நிமிடம் வந்து சேர்ந்தார். இருளுமில்லாத வெளிச்சமுமில்லாத மாலை வேலை அது. அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அப்பொழுதும் அவசர ஊர்தி வந்து சேர்ந்திருக்கவில்லை. சந்தேகமாக இருந்தது. சாம்மின் அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தது. என்ன செய்வதென்று குழப்பம் தீரவில்லை.

தேசிய நெடுஞ்சாலைகள் வந்த பிறகு நம்முடைய வேகம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பயணித்துக் கொண்டிருக்கும் போது எந்த பயமுமில்லை. வண்டிக்குள் இருக்கும் போது வேகத்தை உணர முடிவதில்லை. இறங்கி ஐந்து நிமிடங்கள் சாலையோரமாக நின்று விரையும் வாகனங்களைப் பார்க்க வேண்டுமே! நூறு, நூற்றியிருபது கிலோமீட்டர் வேகம் என்பதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. கீழே நின்று அந்த வேகத்தைப் பார்க்கும் போது வயிற்றுக்குள் பல உருண்டைகள் உருளுகின்றன. பட்டால் சிதறுகாய்தான்.

சில நிமிடங்களில் சாம் அழைத்தார். 

‘குழந்தைக்கு மட்டும்தான் அடி பலம். மத்தவங்களுக்கு அப்படியொண்ணும் பிரச்சினையில்லை போலிருக்கு...பெங்களூர் நிமான்ஸூக்கு கொண்டு போறதா சொல்லுறாங்க’ என்றார். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டு வருவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. அவரை அதே இடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு பிரசாத்தின் வண்டியிலேயே சென்று சாம்மின் வண்டியில் ஏறிக் கொண்டேன். அவரது கார் வேகமமெடுத்தது. ‘சாம் மெதுவா போங்க’ என்று சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

‘அனீஸ் தனியா என்ன பண்ணுவான்?’ என்றார்.

அதுசரிதான். ஆனால் அவருடைய வேகம் திகிலூட்டுவதாக இருந்தது. பெங்களூரை அடையும் போது ஒன்பதரை மணி ஆகியிருந்தது. மற்றவர்கள் சிறு சிராய்ப்புகளுடன் இருந்தார்கள். விபத்து மூன்று மணியளவில் நடந்திருக்கிறது. பக்கத்திலேயே ஒரு மருத்துவமனையில் முதலுதவி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். சாம்முடன் உருவான தகவல் தொடர்பு குழப்பம் காரணமாக சரியான நேரத்துக்கு எங்களால் போய்ச் சேர முடியவில்லை. அனீஸ் எதுவும் பேசவில்லை தனது பிரார்த்தனையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அனீஸீன் மனைவி சாம்முடன் மலையாளத்தில் பேசினார். ‘இவரோட தப்புதான்...ரெட்டைப் பாலத்தில் வரும் போது ஓவர் ஸ்பீட்...தடுப்பில் மோதிவிட்டார்’ என்றார். மகளுக்கு மண்டையில் அடிபட்டிருந்தது. கட்டுப் போட்டு உறங்க வைத்திருந்தார்கள். 

‘பையன் ஐசியூவில் இருக்கான்..பயமா இருக்கு’ என்றார்.

என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ‘எதுவும் ஆகாது’ என்றேன். தேம்பத் தொடங்கினார். உறவினர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டதாகவும் அவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். யாரும் சாப்பிட்டிருக்கவில்லை. அரை மணி நேரம் கழித்து மருத்துவர் வந்தார். ‘இன்னும் ஒரு நாள் மானிட்டர் பண்ணனும்’ என்றார். குழந்தை- அதுவும் தலையில் அடி என்பதுதான் சிக்கல். தினசரி எவ்வளவோ விபத்துச் செய்திகளைக் கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். ஆனால் அருகில் இருந்து பார்க்கும் போதுதான் விபத்தின் வீரியம் புரிகிறது. 

கடவுளை வேண்டிக் கொண்டேன். சாம் தனது கையில் கற்றையாக பணத்தை வைத்திருந்தார். அதை அனீஸிடம் கொடுத்தார்.  அங்கு யாரும் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரும் ரத்தக் கறையோடு இருந்தார்கள். அதில் அந்தக் குழந்தையின் ரத்தமும் கலந்திருக்கக் கூடும் என்று நினைக்கும் போதே விரல்கள் நடுங்கத் தொடங்கின.

Mar 25, 2016

வெக்கை

பள்ளிப்பருவத்தில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் அமத்தா ஊரில் விட்டுவிடுவார்கள். மொண்டியப்பய்யன் என்றொருவர் இருந்தார். அவருடைய இயற்பெயர் என்னவோ- கள் எடுப்பதற்காக பனை மரம் ஏறி கீழே விழுந்ததிலிருந்து நொண்டியப்பனாகி பிறகு மொண்டியப்பனாகி எங்களுக்கு ஐயன் விகுதி சேர்த்து மொண்டியப்பய்யன் ஆகிவிட்டார். அமத்தா வீட்டில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டு அவர் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது விழுந்து விழுந்து சிரிப்போம். குழந்தைகளுக்கு ஒரு கதை; பெரியவர்களுக்கு ஒரு கதை என்று விதவிதமாகச் சொல்வார். சினிமாக்கதைகளும் அப்படித்தான் - சர்வர் சுந்தரம் படத்தை முப்பது வருடங்களுக்கு முன்பாக பார்த்திருப்பார். அந்தக் கதையை பிசகாமல் சொல்வார். திருவிளையாடல் படத்தை வசனத்தோடு சேர்த்துச் சொல்வார். 

‘சிவாஜி நடக்கிறதை பார்க்கோணும் அம்மிணி...அப்படியும் இப்படியும் வளைச்சு நெளிச்சு நடந்தான்னு வைய்யி...அந்த ஆளு கண்ணு கூட டான்ஸ் ஆடுது’ என்று அவர் என்ன சொன்னாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்போம். அவ்வப்பொழுது எங்களையும் இழுத்துவிட்டுவிடுவார். ஏதாவது கற்பனைக் கதை ஒன்றைச் சொல்லச் சொல்வார். அப்பொழுதிருந்துதான் நன்றாக புருடா விட்டுப் பழகினேன் என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அம்மா அப்பாவிடமும் கதை விடுவதற்கு அதுதான் அடித்தளமாக இருந்திருக்க வேண்டும். கண்ணம்மா டீச்சர் என்றொரு தமிழாசிரியை இருந்தார். ‘நெஞ்சு வலிக்குது டீச்சர்’ என்று நான் அளப்பதைப் பார்த்து நடுங்கிப் போய்விடுவார். பத்தாம் வகுப்பை முடிக்கிற சமயமாக ஒரு நாள் ஆசிரியைகள் அறைக்குச் சென்றிருந்த போது ‘உண்மையைச் சொல்லுற மாதிரியே பொய் சொல்லுறதுக்கு இவன்கிட்ட கத்துக்கணும்’ என்றார். பெருமைப்படுவதா அவமானப்படுவதா என்று தெரியாத குழப்பத்தில் ஓடி வந்துவிட்டேன்.

அமத்தா ஊரில் இருக்கும் போது பகல் முழுவதும் பொங்கியா காட்டில்தான் கழியும். அது பொட்டல் காடு. ‘ஒணான் கூட முட்டை வைக்காது’ என்பார்கள். ஆனால் ஓணான்கள் இல்லாத பொட்டல் நிலம் உண்டா? அதனால் எங்கள் வேட்டை பெரும்பாலும் ஓணானாகத்தான் இருக்கும்.  எங்கள் கையில் ஓணான் கிடைத்தால் அது பாவம்தான். 

‘ஒரு காலத்துல விநாயகர் அரக்கனுக கூட சண்டைப் போட்டு களைச்சு போய் தண்ணி வேணும்ன்னு கேட்டாராம்....அணில் இளநீர் கொண்டாந்து கொடுத்துச்சு...இந்த ஒடக்கா இருக்குது பாரு...ஒண்ணுக்கை புடிச்சு கொடுத்துச்சாமா...அதனால இதை மட்டும் எங்க பார்த்தாலும் உடக் கூடாது’ என்று கல்லால் அடித்து அதன் வாயிலேயே சிறுநீரை நுரைக்க நுரைக்க அடித்து விடுவது வாடிக்கையாகியிருந்தது. விநாயகருக்கு அது செய்த பாவத்திற்காக வழிவழியாக அதன் சந்ததியினர் பாவத்தை அனுபவிக்கட்டும் என்பது எங்கள் எண்ணம். நாங்கள் பரவாயில்லை. இன்னமும் சில குரூரமானவர்கள் இருந்தார்கள். கருவேல முள்ளை ஒடித்து ஓணான் தலையில் குத்தி அந்தப் புண் மீது எருக்கம் பாலை வைத்து ‘இப்போ அதுக்கு பைத்தியம் புடிச்சுடும்...ஒண்ணுக்கு அடிச்சவன் ட்ரவுசருக்குள்ள பூந்து கடிச்சு வெச்சுடும்...ஓடுங்க’ என்பார்கள். ஒரு ஓணான் கூட ட்ரவுசருக்குள் ஏறியதைப் பார்த்ததில்லை என்றாலும் அய்யம்பாளையத்திலோ ஆவாரம்பாளையத்திலோ ஓணான் கடித்து யாரோ ஒருவன் குஞ்சாமணி இல்லாமல் சுற்றுவதாக கதை அளந்து கொண்டேதான் இருந்தார்கள்.

முள்ளால் குத்தி எருக்கம் பாலை வைத்தால் கொஞ்ச நஞ்ச வலியா வலிக்கும்? ஓணான் வலியில் தப்பி ஓட முயல்வதைப் பார்த்து ‘உன்னைத்தான் கடிக்க வருது..என்னைத்தான் கடிக்க வருது’ என்று தாறுமாறாக ஓடுவதில் அல்ப சந்தோஷம். புழுதி பறக்க விளையாடிய அந்த நாட்கள் அப்படியே நினைவில் பதிந்து கிடக்கின்றன. வறண்ட நிலத்தின் வெக்கையும் காலில் ஏறிய முட்களும் மனவெளிக்குள் பச்சையாகத்தான் இருக்கின்றன. வெகு நாட்களுக்கு ஓணான் வேட்டை நடந்து கொண்டேதான் இருந்தது.

ஒரு நாள் சலவாதிக்குப் போவதற்காக வந்த மொண்டியப்பய்யன் ஓணான் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். அப்பொழுது எதுவுமே சொல்லவில்லை. மாலை வீட்டில் ‘செகை’ பிடித்துக் கிடந்தேன். சூடு பிடித்துக் கொள்வதை எங்கள் ஊரில் அப்படித்தான் சொல்வோம். பகலின் மொத்தச் சந்தோஷத்தையும் துளித் துளியாக வெளியேறும் அந்த எரிச்சல் மிகுந்த சிறுநீர் வடித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். சூடான வெந்நீரைக் குடிக்கச் சொல்வார்கள்; நிறையத் தண்ணீரைக் குடிக்கச் சொல்வார்கள். ம்ஹூம். என்னதான் குடித்தாலும் வாதிப்பதை வாதித்துவிட்டுத்தான் உடலை விட்டு நீங்கும். 

கிழுவை மரத்தின் கீழாக ட்ரவுசரைக் கழட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மொண்டியப்பய்யன் அருகில் வந்து ‘சாவுற நேரத்துல நம்ம ஒவ்வொருத்தர்கிட்டவும் சாமி வருமாம்...நாம என்ன வரம் வேணும்ன்னாலும் கேட்டுக்கலாம்...நீங்க ஒண்ணுக்கு அடிச்சு விட்ட வலியில கிடந்த ஒடக்காகிட்ட சாமி அது என்ன கேட்டிருக்கும்?’ என்றார். கிளறிவிட்டுவிட்டார். பயம் தொற்றிக் கொண்டது. மனம் என்னென்னவோ யோசித்தது. ‘எம்மேல மண்டு உட்டவனுக்கு செகைப் புடிக்கோணும்ன்னு கேட்டதோட அதோட உசுரு போயிருச்சு’ என்றார். திக்கென்றானது. ‘இனி பண்ணாதீங்க...அவன் குஞ்சாமணி அழுகிப் போய்டோணும் கேட்டுடுச்சுன்னா என்ன பண்ணுவீங்க?’ என்றார். வாழ்க்கை முழுவதும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தைப் பட வேண்டும் என்கிற பயம்தான் பிரதானமாக இருந்தது. அதன் பிறகு ஓணான் அடிக்கப் போனதாக ஞாபகமேயில்லை. 

யோசித்துப் பார்த்தால் மொண்டியப்பய்யன் இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ‘உடம்புக்கு சொகம் கொடுத்து பழக்கவே கூடாது’ என்று அவர் சொன்னதன் அர்த்தம் அந்த வயதில் முழுமையாகப் புரிந்ததில்லை. ஆனால் இப்பொழுது தெரிகிறது. இப்பொழுதெல்லாம் உடல் சுகம் கேட்டுப் பழகிக் கொண்டிருக்கிறது. வெயிலில் இறங்குவதென்றாலே அவ்வளவு சங்கடமாக இருக்கிறது. உடல் நம் பேச்சைக் கேட்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. எப்பொழுது ‘குளிருது போத்திக்க’ ‘உப்புசம் அடிக்குது ஏஸில உட்காரு’ என்று நம்மிடம் உத்தரவு போட ஆரம்பிக்கிறதோ அப்பொழுதிருந்து உடல் மீதான நம் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குகிறோம் என்று அர்த்தம். அதற்கு விட்டுவிடவே கூடாது என்று நினைப்பேன். யாருடைய வீட்டிற்குச் சென்றாலும் ‘பாய் கொடுங்க படுத்துக்கிறேன்...சுடு தண்ணீர் வைக்க வேண்டாம்...குளிர்நீரிலேயே குளித்துக் கொள்கிறேன்’ என்று சொன்னால் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். 

இன்று கோயமுத்தூர் வந்திருக்கிறேன். மொத்தத் தமிழ்நாட்டையும் யாரோ எடுத்துக் கொதிகலனில் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. வெந்து தணிகிறது. 
(கனகமணி, ரூபி மற்றும் அவரது குழந்தை)

ரூபி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இளம் வயதுப் பெண். ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. நான்கு வயது இருக்கும். அந்தக் குழந்தைக்கும் கண்ணில் ஏதோவொரு கோளாறு. ரூபி மீண்டும் கர்ப்பமான இரண்டாவது மாதத்தில் அவருடைய கணவர் இறந்துவிட்டார். எலெக்ட்ரீஷியன். கார்போரேட் நிறுவனமொன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்து போனார். கோவை கணபதியில் வசிக்கும் கனகமணியும் அவருடைய தங்கை ரம்யாவும் அழைத்து ‘அந்தப் பொண்ணு அப்பாவி...வெளியுலகமே தெரியலை...ஏதாச்சும் செய்யுங்க’ என்றார்கள். என்ன தேவை, இப்போதைக்கு எதைச் செய்யலாம் போன்ற விசாரணைகளைச் செய்து சுந்தர்தான் ஒருங்கிணைத்தார். இப்போதைக்கு அவரால் வேலைக்கு எதுவும் செல்ல முடியாது. குழந்தை பிறந்த பிறகு அவருக்கு வேலை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துவிடலாம். தற்சமயம் ஆறு மாதத்திற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கிக் கொள்வதற்கான உதவியைச் செய்துவிட்டு வந்திருக்கிறேன். உள்ளே நுழையும் போது தலை இடித்துவிடக் கூடிய மிகச் சிறிய வீடு. திண்ணையிலேயே அமர்ந்து காசோலையை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது ‘இந்தக் கோடையில் இந்த வீட்டில் எப்படி வாழ முடியும்?’ என்ற சிந்தனை தோன்றிக் கொண்டேயிருந்தது. மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்?  

‘இங்க எப்படி வாழ முடியும்?’ என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது ‘உடல் சுகம் தேடிப் பழகியிருக்கிறது’ என்று அர்த்தம். 

‘ஏன் ஒவ்வொரு மனிதர்களையும் நேரில் சந்திக்க வேண்டும்?’ என்று கேட்கப்படுகிற கேள்விகளுக்கு நூறு பதில்களைச் சொல்லலாம். ஆனால் நம்மைத் திரும்பத் திரும்ப பரிசோதனை செய்து கொள்வதற்கு நம்மைவிட எளிய மனிதர்களை சந்திப்பது மிக அவசியம். எந்த மனிதரையும் பார்த்து நாம் பரிதாபப்பட வேண்டியதில்லை. இதுதான் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தைப் பார்த்து பரிதாபப்படுவதும், நம்மால் அந்த இடத்தில் வாழ முடியாது என்று அலட்டிக் கொள்வதும் அவசியமற்றது. அவ்வப்போது நம்மைத் தட்டி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய பரிசோதனைகள் சுயநலமானவை என்றாலும் அந்த பரிசோதனைதான் நம்மைத் திரும்பவும் நம்முடைய இயல்பான இடத்திலேயே நிறுத்தி வைக்கிறது. நிலத்திலிருந்து நாம் பறந்துவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டேயிருக்கிறது. 

ரூபியையும் அவருடைய குழந்தையயும் பார்த்துவிட்டுத் திரும்பிய போது மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. அவர்களின் வலியோடும் துக்கத்தோடும் ஒப்பிடும் போது செய்த உதவி ஒன்றுமேயில்லை. மனம் கனத்துக் கிடந்தது. அலை மோதும் எண்ணச் சிதற்லகளோடு கோவையின் சாலையில் நடந்த போது அந்த வெக்கை ஏனோ பழைய வெக்கையாக இல்லாமலிருந்தது.

Mar 24, 2016

பதில் தெரியுமா?

கோபிப்பாளையம் பள்ளியிலிருந்து அடிக்கடி அழைப்பு வருவதுண்டு. அரசு உதவி பெறும் பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரைக்கும்தான் இருக்கிறது. ஆனால் மாணவர்கள் படு சூட்டிப்பு. எந்தக் கேள்வி கேட்டாலும் தெரிகிறதோ இல்லையோ - தயங்கவே மாட்டார்கள். எழுந்து நின்று கையைக் கட்டியபடி நின்று அடித்துவிடுவார்கள். ‘வீட்டில் துணி துவைக்கும் போது நுரை வருதுல்ல? அந்த நுரை ஏன் கலர் கலரா தெரியுது?’ என்றேன். ஒரு பொடியன் எழுந்தான். இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்பு படிக்கக் கூடும். ‘ஒவ்வொரு அழுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்குதுங்கய்யா..அதனால் அப்படித் தெரியுதுங்க’ என்றான். மாணவர்கள் முடிந்த வரை தமிழில்தான் பேசுவார்கள். அதற்காகவே அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும். சிறப்பாக இயங்குகிற அரசுப் பள்ளிகளில் இதுதான் மாணவர்களின் தனிச்சிறப்பு. சரியோ, தவறோ- தைரியமானவர்களாக வளர்த்துவிடுகிறார்கள். மனனம் செய்வது, புரிந்து கொள்வது, பாடம் படிப்பதெல்லாம் அப்புறம்தான். 

பொதுவாகவே குழந்தைளிடம் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல்தான் எதிர்காலத்தில் அவர்களின் ஆளுமையை நிர்ணயம் செய்கிறது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசுப் பள்ளிகளில் சராசரி மதிப்பெண் வேண்டுமானால் குறைவாக இருக்கக் கூடும். ஆனால் மாணவர்களின் ஆளுமை (Persoanlity) என்ற அடிப்படையில் பார்த்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள். 

அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தனித்து இயங்குகிறவர்களாக (Indepent) இருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்தே அவர்களாகக் குளித்து, அவர்களாக உண்டு, அவர்களாக பள்ளிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். விதிவிலக்குகள் இருந்தாலும் இதுதான் பொதுவான நிலை. ஆனால் நகர்ப்புற அல்லது தனியார் பள்ளிகளுக்கு இது வாய்ப்பதில்லை. குளித்து விட வேண்டும். உணவூட்டி விட வேண்டும். வீட்டு வாசலில் வந்து நிற்கும் வாகனத்தில் ஏற்றிவிட்டு வர வேண்டும். மாலை நான்கு மணிக்கு ஒன்றாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு பொடிக் குழந்தைகள் சாரிசாரியாக நடந்து வீட்டுக்குச் செல்வதை அரசுப் பள்ளிகளில் இயல்பாகப் பார்க்க முடிகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் இது சாத்தியமில்லை. ஓரளவு காசு சேரச் சேர அதீதமான பயத்தை தேடிக் கொள்கிறோம். ‘பைப் தண்ணியைக் குடிச்சா சளி புடிச்சுக்கும்’ என்பதில் ஆரம்பித்து ‘மண்ணில் விளையாடினால் பூச்சி வந்துடும்’ வரைக்கும் எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். எட்டாம் வகுப்புக் குழந்தை கூட சாலையைத் தனித்து தாண்டிவிட முடியுமா என்று பயந்து கொண்டேயிருக்கிறோம்.

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிற வரைக்கும் அவர்களின் ஆளுமைத் திறன் தானாக வளரும். எப்பொழுது குழந்தைகளை பிராய்லர் கோழிகளாகப் பார்க்கிறோமோ அப்பொழுது அவர்களின் சகல திறமைகளுக்கும் கத்தரி விழுகிறது. இதனாலேயே என்னவோதான் தனியார் பள்ளியின் மாணவர்கள் தனித்து இயங்குபவர்களாக இருப்பதில்லை. வீட்டில் பெற்றோர்களையும், பள்ளிகளில் ஆசிரியர்களையும், சக நண்பர்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்திருக்கிறார்கள். படிப்பு, மதிப்பெண் என்கிற வகையில் அவர்கள் முன்னிலையில் இருந்தாலும் ஒட்டுமொத்த சராசரி என்று பார்த்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆளுமைதான் ஒரு படி மேலே இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட புரிதலில் இதைத்தான் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்குமிடையேயான மிகப் பெரிய வித்தியாசமாகப் பார்க்கிறேன்.

அதே போல ‘அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்கள்; யாரையும் கண்டுகொள்வதில்லை’ என்பதெல்லாம் பொதுமைப்படுத்தப்பட்ட வாதம். பெரும்பாலான அரசு மற்று அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். நேரடியாகவே பார்த்திருக்கிறேன். பிறகு எங்கே தேங்கிப் போய்விடுகிறார்கள் என்று கேட்டால் - exposure என்று சொல்லலாம். நகர்ப்புற, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கக் கூடிய நவீன வசதிகள் அரசு மற்றும் உதவி பெறும் ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில்லை. வெளிப்புற ஆலோசகர்கள், பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டால் பெரும்பாலான கிராமப்புற/அரசுப் பள்ளிகள் பின்னியெடுத்துவிடுவார்கள் என்று தைரியமாக நம்பலாம்.

கோபிப்பாளையம் பள்ளி ஆசிரியைகள் கிட்டத்தட்ட தங்கள் வீடு மாதிரிதான் பள்ளியை நினைக்கிறார்கள். சம்பளம் தருகிறார்கள்; வேலைக்கு வருகிறோம் என்கிற மனநிலையை அவர்களிடம் பார்த்ததேயில்லை. பல பள்ளிகளில் கைவிடப்பட்ட மனநலம் குன்றிய மாணவர்களையும் சேர்த்து பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்படியான ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். கடந்த ஆண்டு இந்தப் பள்ளிக்கு அறக்கட்டளையிலிருந்து விளையாட்டுச் சாதனங்கள் வாங்கிக் கொடுத்திருந்தோம். அதனால் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். ‘நீங்க எவ்வளவு நேரம் வேணும்ன்னா பேசுங்க’ என்றார்கள். நான் பேசிவிடுவேன். மாணவர்கள்தான் பாவம். ஊரில் எந்த இடத்தில் பார்த்தாலும் ‘வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம் அய்யாஆஆஆஆ’ என்று இழுத்து சங்கோஜமடையச் செய்வார்கள். குடும்பத்தினருடன் செல்லும் போது வேண்டுமானால் பந்தாவாக சட்டையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு முறை தமிழாசிரியருடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு பொடியன் ஓடி வந்து இழுவை போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். தமிழாசிரியர் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார்தான். ஆனால் எனக்குத்தான் ‘இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா’ என்று உள்ளுக்குள் அசிரீரி ஒலித்தது. 

அப்பேற்பட்ட மாணவர்கள் அடுத்த முறை பார்க்கும் போது தலை தெறிக்க ஓடிவிடக் கூடாதல்லவா?

‘அஞ்சே நிமிஷம் பேசிக்கிறேன்...போரடிச்சா சொல்லுங்க’ என்று சில கேள்விகளைக் கேட்டுவிட்டு ‘ப்ளாஸ்டிக்கை கண்டபக்கம் போடாதீங்க...நீங்களா ஒரு மரத்தை வளர்த்துங்க...அடுத்த வருஷம் யாரெல்லாம் மரம் வளர்த்திருக்கீங்களோ அவங்களுக்கு நானொரு பரிசு தருவேன்’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன். கேள்விகள் என்றால் பாடத்திலிருந்து இல்லை. ‘தார் ரோட்டில் நடந்தால் கால் சுடுது...அதே மண் ரோட்டில் நடந்தால் ஏன் சுடுவதில்லை’ ‘ஏன் ஒவ்வொரு வருஷமும் மரங்கள் இலைகளை உதிர்க்குது?’ ‘கார்பன் டை ஆக்ஸைடு அதிகமானா ஏன் நிலமெல்லாம் தண்ணீருக்குள் மூழ்கிடும்ன்னு சொல்லுறாங்க?’ - இப்படியான கேள்விகள்.

சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு சில கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து வைக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

‘நல்லா பேசுனீங்க’ என்றார் தலைமையாசிரியர் அரசு தாமஸ். 

‘இதெல்லாம் எனக்கு சாதாரணமப்பா’ என்று மனதுக்குள் பந்தா செய்துவிட்டு வந்து வண்டியை எடுக்கும் போது ஒரு பொடியன் வந்தான். நான்காம் வகுப்பு படிக்கிறானாம்.

‘ஐயா கோடைகாலத்தில் நீராவிப்போக்கை தடுக்கணும்ன்னுதானே மரமெல்லாம் இலையை உதிர்க்குது?’ என்றான். இவன் எதுக்கு கொக்கி போடுகிறான் என்று தெரியாமல் ‘ஆமாம்ப்பா’ என்றேன். 

‘வேப்பமரத்தைப் பார்த்தீங்களா? வெயில்காலத்துக்கு முன்னாடி இலையெல்லாம் உதிர்த்துட்டு சரியா பங்குனி சித்திரைல உச்சி வெயில் காலத்துல தள தளன்னு ஆகிடுது..அது ஏன்?’ என்றான்.

‘அடங்கொக்கமக்கா’ என்று நினைத்துக் கொண்டேன்.

நல்லவேளையாக அலைபேசியில் யாரோ அழைத்தார்கள். பொடியனிடம் அவசர அவசரமாக ‘அடுத்த தடவை வரும் போது சொல்லுறேன் தம்பி’ என்று சொல்லிவிட்டு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஓரே ஓட்டம்தான். 

யாருக்காவது பதில் தெரியுமா?
Mar 23, 2016

பழம் விழுந்த பால்

கலைஞருக்கு தேமுதிகவை உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. ‘திமுகக் கூட்டணிக்கு தேமுதிக வருகிற வாய்ப்பு இருக்கிறது’ என்று ஒரு பக்கம் கலைஞர் நெக்குருகிக் கொண்டிருக்க, ‘கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை’ ‘அவங்க கூட பேச்சுவார்த்தையே நடக்கலை’ என்று பெருங்கற்களைச் சுமந்து ஸ்டாலின் ஒவ்வொன்றாகப் போட்டார். ஆட்சியில் பங்கு உள்ளிட்ட தேமுதிகவின் கடுமையான நிபந்தனைகள் ஸ்டாலினை எரிச்சலூட்டியிருந்தாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதை விஜயகாந்த்துக்கான ஸ்டாலினின் எதிர்ப்புணர்வு என்றுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பா எதிர்பார்ப்பதை மகன் எதிர்ப்பதை எப்படி புரிந்து கொள்வது? வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி என்றே எடுத்துக் கொள்ளலாம்.

‘நான் முதலமைச்சர் வேட்பாளர்ன்னுதான் தேமுதிக உள்ள வரக் கூடாதுன்னு வேலை செய்யறாங்களாய்யா?’ என்று துரைமுருகனிடம் கலைஞரிடம் கேட்டிருக்கிறார். பழம் கனியவில்லை என்றவுடன் பேச்சுவார்த்தைக்கு கனியையே அனுப்பலாம் என்று தலைவர் எடுத்த முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டதே பொருளாளர்தான் என்கிற தகவலும் உண்டு. தேமுதிக கைவிட்டுப் போனதை கலைஞர் கசப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்ததாகத்தான் தெரிகிறது.  இதைத் திமுகக்காரர்கள் ஒத்துக் கொள்ளவே போவதில்லை என்றாலும் இதுதான் உண்மை. பலவிதமான நாடகக் காட்சிகளுக்குப் பிறகு கனிந்த பழம் வேறொரு பால் குண்டாவில் விழுந்துவிட்டது. தேவையில்லாமல் ‘தேமுதிக வந்தால் ஜெயித்துவிடலாம்’ என்பது போன்ற மாயை உருவாக்கி அவர்கள் இல்லை என்னும் சூழலில் ‘ஒருவேளை தோத்துடுவோமோ?’ என்கிற எதிர்மறையான சிந்தனையை சாமானியத் தொண்டனிடம் விதைத்துவிட்டதுதான் இப்போதைக்கு திமுக கண்டபலன். 

அதிமுக மிகச் சரியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. செயல்படாத அரசாங்கம், ஊழல் கறை படிந்த ஆட்சியாளர்கள் என்பதையெல்லாம் ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு ‘எல்லாம் இந்த கேடிகள் செஞ்ச தப்பு..அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..பாவம்’ எனப் பேச வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஒருவேளை திமுகவும் தேமுதிகவும் சேர்ந்திருந்தால் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ளூரில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் வேட்பாளர்கள் ஆகியிருப்பார்கள். இப்பொழுது அதற்கும் அவசியமில்லை. யாரை வேண்டுமானாலும் நிறுத்துவார்கள். வெகு சீக்கிரம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். ‘இந்தத் தொகுதிகளை நீங்க பார்த்துக்குங்க’ என்று ஒவ்வொரு பெருந்தலைகளுக்கும் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு மேலிருந்து கீழாக பட்டுவாடா செய்வார்கள். எங்கேயாவது பட்டுவாடா தடைபட்டால் தயவுதாட்சண்யமே இல்லாமல் பொறுப்பாளரைத் தூக்கி வீசுவார்கள். எல்லாம் ஜரூராக நடக்கும். சரியான எதிரணி இல்லாதது, கரைபுரண்டு ஓடப் போகிற அதிமுகவின் பணபலம் போன்றவை கட்சியை கரை சேர்த்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.

அதிமுகவுக்கு ஆதரவான தொனியாக இருந்தாலும் இவற்றைத்தான் Fact ஆகப் புரிந்து கொள்கிறேன். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதில் எனக்கும்தான் விருப்பமில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் உருப்படியான எந்த வளர்ச்சித் திட்டமுமில்லை. அரசாங்கம் செயல்படவேயில்லை என்று அதிகாரிகளே சலித்துப் போய்த்தான் கிடக்கிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சி அதலபாதாளத்தில் கிடக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஆனால் பொது மனிதனுக்கு அதுபற்றிய பெரிய கவலை எதுவும் இருக்கப் போவதில்லை. ஆடு மாடு கொடுத்தார்கள், இலவசங்கள் கொடுத்தார்கள், மின்சாரம் இருக்கிறது என்பதுதான் முக்கியக் காரணிகளாக இருக்கப் போகிறது. 

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை  தூண்டிவிடுகிற வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். இந்த முறை திமுக இன்னமும் அத்தகையதொரு வேலையை ஆரம்பிக்கவே இல்லை என்பதுதான் நிஜம். நமக்கு நாமே, கூட்டணி உடன்பாடு என எதுவுமே அலையை உண்டாக்குகிற வேலை எதையும் செய்திருக்கவில்லை. சவசவத்துப் போன இந்த நடவடிக்கைகளினால் அதிமுக அரசுக்கு எதிரான மனநிலையை வாக்காக அறுவடை செய்கிற வேலைகளில் இதுவரைக்கும் திமுக தோற்றிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிமுகவின் பி டீம்தான் மநகூ என்று புலம்புவதைவிடவும் திமுகவுக்குள்ளேயே இருக்கும் அதிமுகவின் பி டீமைக் கண்டுபிடித்தாலே கூட திமுக தம் கட்டிக் கொள்ளலாம். ‘நாங்கதான் ஹைடெக்காக கட்சியை நடத்துகிறோம்’ என்று சொல்கிற குழுதான் அதிமுக வெல்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருகிறார்கள் போலிருக்கிறது. ஒருவேளை கலைஞர் முதல்வராக அமர்ந்து கட்சிக்குள் கண்டவர்கள் தலையெடுப்பதை வேடிக்கை பார்ப்பதைவிடவும் எதிர்கட்சியாகவே இருந்து கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாரோ என்னவோ?

தேமுதிக+மநகூ என்பதெல்லாம் சென்சேஷனல் செய்தி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பெரிதாக எதையும் சாதிக்கப் போவதில்லை. விஜயகாந்த் தன்னுடையப் பெயரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறார். அவரைத்தான் முதலமைச்சர் என்று காட்டி பாலபாரதியும் திருமாவும் நல்லக்கண்ணுவும் ஒலிவாங்கியைப் பிடிக்கப் போகிறார்கள். பாவமாக இருக்கிறது. இப்படித்தான் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கித் தரப் போகிறார்கள். தொகுதிக்குத் தொகுதி வாக்குகளைப் பிரித்து நிறையத் தொகுதிகளில் மிகக் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகிறார்கள். 

தேர்தலுக்கு இன்னமும் அறுபது நாட்கள் இருக்கின்றன. ஏதேனும் பெரிய தில்லாலங்கடி வேலை நடக்காவிட்டால் களம் இப்படித்தான் இருக்கப் போகிறது. இன்றைய சூழலில் மேற்சொன்னவற்றையெல்லாம் ஒரு சேரப் பார்த்தால் தனிப்பட்ட முறையில் எது நடக்கக் கூடாது என விரும்புகிறேனோ அது நடந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். திமுகவின் உள்ளடி வேலைகள், மநகூ+தேமுதிகவின் வாக்குப் பிரிக்கும் திட்டம் போன்றவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட Game over என்றுதான் என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

என்னமோ நடக்கட்டும். நமக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம்? வேலையைப் பார்க்கலாம். 

Mar 22, 2016

என்ன செய்ய முடியும்?

இவ்வளவு நாட்களாக எங்கள் அலுவலகம் எம்.ஜி.சாலைக்குப் பின்புறமாக இருந்தது. யார் கேட்டாலும் பந்தாவாக இருக்கட்டும் என்று ‘எம்.ஜி.ரோடுதான்’ என்று சொல்லிவிடுவேன். இதில் என்ன பந்தா என்று கேட்கிறவர்கள் எளிதாகக் கேட்டுவிடலாம். இங்கு வந்து பார்த்த பிறகுதான் புரிந்து கொள்ள முடியும்.

சென்னை எல்லாம் ஒரு ஊராய்யா? வெயிலும் ஒற்றை ரோஜாவோ குண்டுமல்லியோ மலராத பாலைவனமாகிப் போன சாலைகளும்- பெங்களூர் பெங்களூர்தான். சுஜாதா சொன்ன மாதிரி பெண்களூர். புது அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருப்பதேயில்லை. பொசுக்கு பொசுக்கென்று வெளியே வந்துவிடுகிறேன். வெளியில் தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் கடலை விற்கிறார். பொட்டலம் பத்து ரூபாய். ‘அவ்வஞ்சு ரூவாய்க்கு கொடுத்தீங்கன்னா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை கூட வாங்குவேன்’ என்று சொல்லி ரெகுலர் வாடிக்கையளாராக ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். புது இடத்துக்குச் சென்றால் சூழலை நமக்கு ஏற்ப மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடலைக் கடை. ஒரு கொய்யாக் கடை. ஒரு டீக்கடை -இது போதும். 

அடுத்ததாக மெஸ். வீட்டில் சாம்பார் செய்யும் போதெல்லாம் வேண்டுமென்றே சாப்பாட்டை மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். வழக்கமாக இரண்டு மணிக்கு உள்துறை அமைச்சரிடமிருந்து அழைப்பு வரும். 

‘சாப்பிட்டீங்களா?’

‘ஓ...’ 

‘என்ன கொண்டு வந்தீங்க?’ எனக்கு முன்னாலேயே கிளம்பிப் போய்விடுவதால் அந்த விவரம் வேணிக்குத் தெரியாது.

‘மறந்துட்டு வந்துட்டேன்’- சாம்பார் என்றால் மறந்துவிடுவான் என்கிற புரிதலுக்கு வந்துவிட்டதால் பெரிய பிரச்சினை இருப்பதில்லை.

‘என்ன சாப்பிட்டீங்க?’

‘சிக்கன் பிரியாணி’

‘பூண்டை திங்கிறேன்...ஜாகிங் போறேன்னு கண்டதையும் பண்ணிட்டு தினமும் சிக்கன் பிரியாணி தின்னுக்க வேண்டியது’

பழைய அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு கடையைப் பிடித்து வைத்திருந்தேன். அரைத் தட்டு பிரியாணி அறுபது ரூபாய். ஒரேயொரு துண்டு கறியை சோற்றுக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள். கையை விட்டுது துழாவு துழாவென்று துழாவி கண்டுபிடித்துவிடுவேன். அப்பா ஒரு தெருநாயை வளர்க்கிறார். ஜிம்மி. பழைய சோறு, பழைய ரசம் என்று எதை ஊற்றினாலும் தின்றுவிடும். ஆனால் திடீரென்று ஒரு சமயத்தில் எதையும் தின்னாது. பிறகு ஒற்றை எலும்புத் துண்டைப் போட்ட பிறகுதான் வழக்கத்துக்கு வந்து சேரும். தவறாமல் ஒவ்வொரு வாரமும் இந்தக் கதை நடக்கும். வேணி என்னை ஜிம்மியோடு ஒப்பிட்டுக் கொள்வாள். அந்த ஜிம்மிக்கு வாரம் ஒரு முறைதான் எலும்பு வாசம் தேவை. எனக்கு அவ்வப்போது தேவை. ஆனால் என்னதான் தின்று என்ன செய்வது? ஐம்பத்தேழே முக்கால் கிலோவைத் தாண்ட முடிவதில்லை. நெஞ்சம் முழுவதும் வஞ்சம். சதையே பிடிப்பதில்லை.

எம்.ஜி.சாலையிலிருந்து பிரிகேட் சாலைக்குச் செல்லும் வழியெங்கும் தேடிப் பார்த்துவிட்டேன். அநியாயம் - ஒரு பிரியாணி நூற்று எண்பது ரூபாய் சொல்கிறார்கள். முழுக் கோழியைப் பிடித்து உள்ளே அமுக்கி வைத்தாலும் கூட அவ்வளவுதான் விலை வரும். கடை வாடகையை எல்லாம் நம் பிரியாணி மீது கட்டுகிறார்கள். கடந்த சில நாட்களாக ஏதாவதொரு கடையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைய வேண்டியது. கையைக் கழுவிக் கொண்டு அமர்ந்த பிறகு விலைப்பட்டியலைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்கும். ஐடி கார்ட் எல்லாம் போட்டுக் கொண்டு விலையைப் பார்த்துவிட்டு எழுந்து சென்றால் சப்தமில்லாமல் துப்பி அனுப்பிவிடுவார்கள். 

பந்தாவாக முகத்தை வைத்துக் கொண்டு ‘ராகி முத்தே இல்வா?’ என்பேன். ராகிக் களியின் கன்னடப் பெயர். கிட்டத்தட்ட அரிசி உணவுக்கு இணையாக இங்கே களியை உண்கிறார்கள். அதனால் கேவலமெல்லாம் இல்லை. ‘இல்ல சார்’ என்ற பதில்தான் வரும். ‘பேடா’ என்று சொல்லிவிட்டு அடுத்த கடை. இப்படியே கடை தேடும் படலம் ஓடிக் கொண்டிருக்கிறது. சாப்பிடச் செல்கிறேன் பேர்வழி என்று அரை மணி நேரம் எடுக்கலாம் ஒரு மணி நேரம் சமாளிக்கலாம். அறுபது ரூபாய் பிரியாணியை இரண்டு மணி நேரமாகத் தேடிக் கொண்டிருந்தால் மேலாளர் ஒத்துக் கொள்வாரா? இவ்வளவு காசு கொடுத்துத் தின்றால் உடலில் ஒட்டாது என்பதால் கிடைப்பதை விழுங்கிவிட்டு வந்துவிடுகிறேன். அதுவொன்றுதான் எம்.ஜி.சாலையின் பெருந்துக்கம்.

ஒரு மலையாளப் பெண்மணி இதே சாலையில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். சற்றேறக்குறைய அறுபது வயது இருக்கக் கூடும். தலை முடி திரித்திரியாக சுருண்டிருக்கிறது. தோளில் ஒரு மூட்டையைச் சுமந்து கொண்டு கையில் ஒரு குச்சியை வைத்திருக்கிறார்.

கடலைக்கடைக்காரர் ‘அந்தம்மா பேப்பர் படிக்கிறதை கவனிங்க’ என்றார். ஏதோ கன்னடச் செய்தித்தாளை விரித்து மலையாளத்தில் வாசித்துக் கொண்டிருந்தார். பாவமாக இருந்தது. 

‘இங்கதான் இருப்பாங்களா?’ என்றேன்.

‘எப்பவாச்சும் வரும்’ என்றார்.

மனம் சமநிலையிழந்து கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தைவிட்டுத் தவறி வந்திருக்கக் கூடும் அல்லது குடும்பம் விரட்டியடித்திருக்கக் கூடும். ஏதோ மலையாளச் செய்தியை மனதில் குதப்பியபடி தனது பாதையை மறந்துவிட்டு தெருநாய்களை விரட்டுவதற்காக ஒற்றைக் குச்சியை வைத்துக் கொண்டு அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். பார்த்த போது முறைத்தார்.   தலையைக் குனிந்து கொண்டேன்.

கடலைக் கடைக்காரரிடம் ‘அந்தம்மாகிட்ட பேசுவீங்களா?’ என்றேன்.

‘எதுக்கு தம்பி?’ என்றார் அதிர்ச்சியடைந்தவராக. 

அந்தப் பெண் எங்களை வேகமாக கடந்து கொண்டிருந்தார். பெங்களூரின் தெருக்களிலும் சாலைகளிலும் இத்தகைய பெண்களைச் சாதாரணமாகக் கடந்து விட முடிவதில்லை. ஒரு காலத்தில் அவர்களுக்கும் குடும்பம் இருந்திருக்கும். இப்பொழுதும் கூட அவர்களைச் சார்ந்தவர்கள் எங்கேயாவது இருக்கக் கூடும். திசை தவறிப் போன பறவைகளைப் போன்ற இந்தப் பெண்மணிகளை ஏதாவதொரு சமயத்தில் அவர்களது குடும்பம் தேடியிருக்கக் கூடும். பிறகு சலித்துப் போய் ‘இறந்து போய்விட்டார்’ என்று சமாதானம் அடைந்திருப்பார்கள். ஆனால் அமைதியடையாத ஆன்மாவைப் போல இந்த பெருநகரத்தின் திகில் நிறைந்த இரவுகளில் பயந்தும் ஒடுங்கியும் வேட்டை நாய்களிடம் தப்பித்தும் சிக்கியும் சின்னாபின்னமாகியும் எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதனையும் முறைத்துக் கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் நிலை நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நினைக்கும் போது பகீரென்றாகிவிடுகிறது.

‘நாம ஏதாச்சும் பண்ண முடியாதா?’ என்றேன்.

‘என்ன பண்ணுவீங்க?’ என்றார்.

தெளிவான பதில் என்னிடமில்லை. அவரை இன்னுமொரு முறை பார்த்தால் போதும். அவருக்காக எதையாவது செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. அப்படியொரு நல்ல காரியத்தைச் செய்தால் பகிர்ந்து கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடிய ஆகச் சிறந்த நல்ல காரியம் உண்டென்றால் அதுவாகத்தான் இருக்க முடியும்.

தேசம்


1997 ஆம் ஆண்டு எங்கள் பள்ளியில் சுதந்திர தின பொன்விழாவைக் கொண்டாடினோம். இரவு முழுக்கவும் பள்ளியிலேயே இருந்தோம். மேடையில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருந்தது. பாடினார்கள். ஆடினார்கள். கவிதைகள் வாசித்தார்கள். அப்பொழுது திருப்பூர் குமரனின் மனைவி உயிரோடிருந்தார். அவரிடம் சுதந்திர ஜோதியை வாங்கிக் கொண்டு மாணவர்கள் தொடர் ஓட்டமாக வந்தார்கள். இரவு முழுவதும் ஓடி அடுத்த நாள் காலையில் கொடியேற்றும் நிகழ்வுக்கு முன்னால் பள்ளிக்கு வந்து சேரும்படி திட்டமிடப்பட்டிருந்தது. மாணவர்கள் ஓடி வந்து கொண்டிருக்க, பள்ளியிருந்தவர்கள் இரவு முழுக்கவும் தூங்கவில்லை. விடிந்தும் விடியாமலும் வீட்டுக்கு ஓடிச் சென்று குளித்துவிட்டு பயபக்தியுடன் இறைவனை வழிபட்டுவிட்டு ஆறரை மணிக்கெல்லாம் மீண்டும் பள்ளியில் இருந்தோம். ‘நம்முடைய நாடு ஐம்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது’ என்பது உள்ளுக்குள் மிகப்பெரிய சந்தோஷத்தையளித்தது.  நம் வீட்டு நிகழ்வைவிடவும் உற்சாகமூட்டக் கூடிய நிகழ்வாக அது இருந்தது.

தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என எல்லோரும் பள்ளியில் இருந்தார்கள். நாட்டின் வரலாறு குறித்தும் அதன் பெருமைகள் குறித்தும் இரவு முழுக்கப் பேசினார்கள். என்னுடைய நாட்டின் மீது மிகுந்த பக்தியுடன் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வது பெருமையளிப்பதாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த நாடு நம்மால் உயர வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது. அன்றைய தினத்தில் மாணவர்களின் உணர்வெழுச்சி மிக இயல்பானதாக இருந்தது. இப்பொழுதுதான் நிறைய மாறிவிட்டது- இருபது வருடங்களில். ‘இந்தியா மோசம்; இந்த நாடு அயோக்கியர்களால் நிறைந்தது’ என்றுதான் திரும்பிய பக்கமெல்லாம் எழுதுகிறார்கள். இந்த நாட்டில் அத்தனை மனிதர்களும் நசுக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். எல்லாவற்றிலும் ஓர் எதிர்மறையான கோஷம் ஒலிக்கிறது. Negative vibrations.

இப்பொழுதெல்லாம் எதிர்மறைச் செய்திகளும் சம்பவங்களும்தான் மிகப்பெரிய அளவில் பிரதானப்படுத்தப்படுகின்றன. அதன் வழியாகவே தேசம் குறித்தான் எதிர்மறைச் சிந்தனைகள் ஊட்டப்படுகின்றன. நேற்று கோவையில் ஒரு மாணவரைச் சந்திக்க நேர்ந்தது. பனிரெண்டாம் வகுப்பு மாணவன். இந்தியன் என்கிற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் பேசினான். அதிர்ச்சியாக இருந்தது. ஓர் இளைஞனுக்கு தன்னுடைய சூழல் குறித்தும் தேசம் குறித்தும் இயல்பான புரிதல் உண்டாவதற்கும், வலிந்து திணிக்கப்பட்ட எண்ணம் ஏற்படுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இப்பொழுதெல்லாம் இங்கு எல்லாவிதமான கருத்துக்களும் திணித்துத்தான் விடப்படுகின்றன. நம்மைச் சுற்றிலும் நடக்கும் அத்தனையும் தவறானதாகவே இருப்பதான பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளும் அரசாங்கமும் கூட ஏதோவொரு இடத்தில் பிசகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கான கருத்தாக்கத்தை உருவாக்குவதில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் வலுப்பெற்ற பிறகு அரைகுறையான புரட்சியாளர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் நம்மைச் சுற்றிலும் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றிலும் புரட்சி பேசுகிற இவர்களுக்கு எதிர்மறையான சம்பவங்கள் மட்டுமே கிடைக்கின்றன என்பதுதான் துரதிர்ஷ்டம். 

‘உலகி வாழும் எட்டுக் கோடி தமிழர்களுக்கென்று தனியான நாடு இல்லை’ என்று முழுமையடையாத ஒரு புரட்சியாளர் பேசிக் கொண்டிருந்தார். அதாவது தனி நாடு வேண்டுமாம். கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் வாழும் தெலுங்கர்களுக்கும், கன்னடத்தவர்களுக்கும்தான் தனி நாடு இல்லை. தனி நாடும் தனி மாநிலமும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துவிடுகின்றனவா? ‘எங்களைக் கண்டு கொள்வதேயில்லை’ என்று சொல்லி பக்கத்து மாநிலத்தில் சந்திரசேகரராவ் என்கிற அரை மண்டயர் தனி மாநிலம் அமைத்தே தீர வேண்டும் எனத் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தார். சந்திரபாபு நாயுடுவும், ராஜசேகர ரெட்டியும் தன்னை மேலே வர விடமாட்டார்கள் என்பது அவருக்கும் தெரியும் மற்றவர்களுக்கும் தெரியும். சோனியா காலத்தில் பிரித்துக் கொடுத்தார்கள் இப்பொழுது பிங்க் பிரியர் முதலமைச்சர் ஆகிவிட்டார். மகன், மகள், சகோதரி மகன், சகோதரன் மகன் என்று மொத்தக் குடும்பமும் ஒரு மாநிலத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இனி இருபது முப்பது வருடங்களுக்கு இதுதான் தொடரும்.

தமிழகத்தை தனிநாடு ஆக்கினால் மட்டும் என்ன நடக்கும்? கருணாநிதியோ, ஜெயலலிதாவோ பிரதமராக இருப்பார்கள். மற்றவர்கள் இப்படியேதான் துள்ளிக் கொண்டிருப்பார்கள். 

நான்கு பேர் வாழ்கிற வீட்டிற்குள்ளேயே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. நூற்றியிருபது கோடி மக்கள் வாழும் தேசத்தில் எந்தச் சிக்கலும் இருக்கக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு தேசமாக ஆயிரம் குறைகள் இங்கு இருக்கக் கூடும். ஆனால் வாழ்வதற்கும், உரிமைகளைப் பேசுவற்குமான இடத்தை இந்த நாடு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. மிகச் சிறந்த தேசமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக மோசமான தேசம் இல்லை. நாட்டிடமிருந்து விடுதலை வேண்டும், நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மாட்டோம் என்பதையெல்லாம் இந்த நாட்டிலிருந்துதான் உரக்கச் சொல்ல முடிகிறது.

தேசபக்தி விஷயத்தில் இங்கே Polarization நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று இந்துத்துவத்தை தூக்கிப் பிடிக்கிற ‘டேஷ் பக்தர்’ ஆக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டைத் துண்டாட வேண்டும் என்று சொல்கிற ‘இடதுசாரி துரோகியாக’ இருக்க வேண்டும். இரண்டு பக்கமுமில்லாமல் நடுவில் இருக்கும் இடம் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. தேசபற்று என்பதை மதத்தோடு சேர்த்துப் பார்க்காத முந்தைய தலைமுறையின் சிந்தனைகளை மீண்டும் தூசி தட்டப்பட வேண்டியிருக்கிறது. இனம், மதம், மொழி, சாதி சார்ந்து ஒருவனுக்கு எந்த அடையாளம் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் அதை எந்தவிதத்திலும் ‘இந்தியன்’ என்கிற அடையாளத்துடன் இணைத்து சிதைக்க வேண்டியதில்லை.

எண்ணங்களாலும், சிந்தனைகளாலும், செயல்களாலும் சிதறியிருந்தாலும் ‘இந்தியன்’ என்கிற எண்ணத்தின் வழியாக தேசத்தோடு இணைத்துக் கொள்வதும் ஒருவிதமான பெருமிதத்தைக் கொடுக்கிறது. அந்த உணர்வு ஏன் அருகிக் கொண்டிருக்கிறது?. நம்மிடையேயான இணைப்பின் கண்ணி ஏன் சிறுகச் சிறுக உடைந்து கொண்டிருக்கிறது.

‘இந்தியன்’ என்று பெருமையாக அறிவித்துக் கொள்வதன் வழியாக இங்கே நடக்கிற தவறுகளையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் ‘இந்தியா’ என்கிற போர்வைக்கு அடியில் போட்டு மூடி மறைப்பதாக அர்த்தமில்லை. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அந்தப் பிரச்சினைகளை இந்த அமைப்புக்குள் இருந்து சிந்தித்து அதற்கான தீர்வை நோக்கி அழைத்துச் செல்கிற தலைவர்களும் சிந்தனையாளர்களும்தான் தேவையாக இருக்கிறார்களே தவிர, எல்லாவற்றையும் எதிர்மறையாகவே யோசித்துக் கொண்டிருக்கிற, எல்லாவற்றுக்கும் அமைப்புக்கு வெளியிலிருந்து தீர்வைக் காட்டி மாயாஜாலம் காட்டுகிற எதிர்மறைச் சிந்தனையாளர்கள் இல்லை. புரட்சி என்பதற்கும் எதிர்மறைச் சிந்தனை என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இங்கே நிலவுவது புரட்சிக்கான மனநிலை இல்லை. வெறும் எதிர்மறைச் சிந்தனை மட்டுமே. சாமானியனை உணர்ச்சிவசப்படச் செய்து தன்பக்கம் இழுத்துக் கொள்கிற மோசமான எதிர்மறைச் சிந்தனை. 

Mar 19, 2016

சாகாள்

அகரமுதல்வனின் சிறுகதை சாகாள். சமீபத்தில் வெளியான இந்தக் கதையை வைத்துக் கொண்டு தாறுமாறாக அடித்துக் கொள்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழினிதான் கதையின் நாயகி. அவரது இயற்பெயர் சிவகாமி சுப்பிரமணியம். அகர முதல்வனின் கதையில் சிவகாமி என்ற பெயரே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட நான்காண்டுகள் புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழினி 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இறந்த அவர் புற்று நோயால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது.


அகரமுதல்வனின் கதையில் சிவகாமி 23 முறை தொடர்ந்து வன்புணர்வு செய்யப்படுகிறாள். சித்ரவதை செய்யப்படுகிறாள். எல்லாவிதத் துன்பங்களுக்கும் பிறகு மெதுவாகக் கொல்கிற விஷமருந்தை ஏற்றி சாகடிக்கப்படுகிறாள். 

இந்தக் கதையை வைத்துக் கொண்டு இணையவெளியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து விவாதம் நடைபெறுகிறது. அகரமுதல்வனைப் புரட்டி எடுக்கிறார்கள். அகரமுதல்வன் தீவிரமான புலி ஆதரவாளர். இளம் வயதிலேயே இலக்கிய உலகில் தனக்கான இடத்தை ஸ்திரமாக அமைத்துக் கொண்டவர். ஏகப்பட்டவர்களுக்கு இவர் மீது வன்மம் உண்டு என்பதை நேர்பேச்சில் உணர்ந்திருக்கிறேன். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இந்த விமர்சனங்கள் ‘சாகாள்’ என்கிற கதைக்கான விமர்சனங்களா அல்லது அகரமுதல்வன் என்ற தனிப்பட்ட மனிதர் மீதான விமர்சனங்களா என்று குழப்பம் வருகிறது.

இராணுவம் செய்த அயோக்கியத்தனங்களை டிவி சேனல்களில் குறும்படங்களாகவும், ஆவணங்களாகவும் பதிவு செய்யும் போது ஒரு எழுத்தாளன் புனைவாகவோ அல்லது அபுனைவாகவோ கதையாக எழுதும் போது ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்? இதற்கு முன்னால் விடுதலைப்புலிகளின் எதிர்பாளர்கள் தங்களின் கதைகளில் புலிகளைப் பாத்திரங்களாக்கி மிக மோசமாக பதிவு செய்ததையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுபடுத்திப் பார்க்கலாம். இந்தக் கதையில் மட்டும் என்ன பிரச்சினை என்று புரியவில்லை. 

இந்தக் கதையில் தமிழினியை மையப்பாத்திரமாக்கியிருப்பது நெருடலாகத்தான் இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கதை எழுதுவது ஆரோக்கியமான போக்காக இருக்காது. சிவகாமி என்ற பெயரை மாற்றியிருந்தால் கூட இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்காது என்று நினைக்கிறேன். ஆயினும். இந்தக் கதையை எழுதுவதற்கான எல்லாவிதமான சுதந்திரமும் அகரமுதல்வனுக்கு இருப்பதாகத்தான் நம்புகிறேன். இந்த ஒரு கதைக்காக அவரை குத்திக் கிளறுவது சரியாகப் படவில்லை.

தமிழினி இராணுவ முகாம்களில் இத்தகைய துன்பங்களை அனுபவித்திருக்கவில்லையென்றால் சந்தோஷம். ஆனால் இராணுவ முகாம்களில் அத்தனை பெண்களுமே கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்கள் என்பதைத்தான் இந்தக் கதையின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கிறார்களா என்று புரியவில்லை. கதையில் வரக் கூடிய சிவகாமி தமிழினியாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்குமான ஒற்றைப் பிரதியாக கதையின் நாயகி இருக்கிறாள் என்கிற வகையில் இலக்கிய மோஸ்தர்கள் விட்டுக் கொடுப்பதுதான் நல்லது. 

அதிகாரத்தின் கோரப்பசி கொண்ட இராணுவமும் அதிகாரவர்க்கமும் பெண்ணுடலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறோம். விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சலனப்படங்களிலும் அனுபவக் கட்டுரைகளிலும் வாசித்துக் கொண்டிருக்கிறோம். அதே தகவல்களை அகரமுதல்வனின் எழுத்து வழியாகக் கதையாக வாசித்துவிட்டு இவ்வளவு கொந்தளிக்க வேண்டியதில்லை. கொந்தளிக்கும் பலரின் அரசியல் நிலைப்பாடுகளின் பின்னணிகளைப் பார்த்தால் பெரும்பாலானவர்களின் விமர்சனங்களை இடது கையில் தள்ளிவிட்டு தாண்டிவிடலாம்.

பொதுவான வாசகர்கள் இந்தக் கதையை ஒரு முறை வாசித்துவிடவும். ஆதரவு எதிர்ப்பு என்பதையெல்லாம் மறந்துவிட்டு வாசித்த கதையில் இருக்கும் குறைபாடுகளையும் நிறைகளையும் வெளிப்படையாக விவாதிக்கலாம். படைப்பு சார்ந்த நேர்மையான விவாதங்கள் பொதுவெளியில் அவசியமானவை. அகரமுதல்வன் என்ற எழுத்தாளனைத் தள்ளி வைத்துவிட்டு சிவகாமியை மட்டும் முன்னிறுத்திப் பேசலாம்.

மற்றபடி, அகரமுதல்வனிடம் சொல்வதற்கு ஒன்றிருக்கிறது- நீங்கள் ஈழமண்ணில் பார்த்த வலிகளையும் கண்ணீரையும் ஒப்பிடும் போது இன்றைய விமர்சனங்களும் கூச்சல்களும் எந்தவிதமான எடையுமற்றவை. எதிர்மறை விமர்சனங்களை துச்சமாக நினைத்து நகர்ந்து செல்வதில்தான் படைப்பாளியின் வெற்றி இருக்கிறது. இன்னமும் காலமிருக்கிறது. எழுதிக் குவிக்கவும் வாசித்துத் தள்ளவும் தளங்கள் காத்திருக்கின்றன. பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் முன்னேறிக் கொண்டேயிருங்கள் சப்தங்கள் உங்களுக்குப் பின்னால் தானாக அடங்குவதை உணர முடியும்.

(இந்தக் கதையை இப்பொழுது எந்தத் தளத்திலும் காண முடியவில்லை. அதனால் நிசப்தம் தளத்தில் பிரசுரம் செய்கிறேன்)

                                                                      ***

சாகாள்- அகரமுதல்வன்

இந்தக் காலவெளியிலிருந்து அவளால் மீள முடியவில்லை. கணங்களில் சலிப்பு நிகழ்ந்த பின்னர் விரும்பத்தகாத இருத்தலாக வாழ்க்கை திணறுகிறது. துயரங்களுக்குள் ஒடுங்கி வானத்தைப் பார்க்கிற பறவைக்கு பறத்தலில் ஒரு பயமிருப்பதைப் போல அவளுக்குள்ளும் வாழ்க்கை நடுங்கத்தொடங்கிவிட்டது. புலர்ந்த காலையும், இரவும் அவளுக்கு ஒன்றாகவே நிறம்காட்டியது. பொழுதுகள் தீரத்தீர தன்னையும் தீர்த்துக்கொண்டிருக்கும் உயிரியாய், இருட்டின் விலங்குகள் போடப்பட்டிருக்கும் தனது கைகளை எப்போதேனும் தூக்கி முகம் துடைத்து வலியழிப்பாள். அழிக்க அழிக்கத் தோன்றும் வலியின் சாகாவரம் அவளில் தொற்றியிருந்தது. கருகிப்போன சோளக்கதிர்களில் குட்டி ஓணான்கள் ஏறுவதைப் போல தனக்கு ஏற்றப்பட்ட மெல்லக் கொல்லும் விசமருந்துகள் உக்கிரமாவதை விளங்கியிருந்தாள். தன்னை கண்ணாடியில் பார்க்கிற போதெல்லாம் இறந்து கொண்டிருக்கும் விநோதமானவொரு உருவத்தைப் நினைத்து வாய்விட்டுச் சிரிப்பாள் சிவகாமி. நினைத்தலுக்கே நரம்பதிரும் இடைவிடாத வன்புணர்வை, முலை நசிக்கும் சப்பாத்துக் கால்களின் சித்ரவதைகளை  திணித்து பருக்கப்பட்ட சாராயங்களை, உடம்பெல்லாம் கறுத்தப் பொட்டுக்களாயிருக்கும் சிகரெட் சூடுகளையென தானெதிர்கொண்ட எவற்றையும்  எவரிடமும் பகிராமல் சிறையில் இருக்கும் சிவகாமியின் தலையின் மேல் பல்லியொன்று வீழ்ந்தது. சிறைகளுக்குள் இருக்கும் பல்லிகள் மேலிருந்து கீழே விழுவதற்கும் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளின் தலைகளையே தேர்ந்தெடுக்கிறது.

மெகசின் சிறைச்சாலையில் ஒரு வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கும் சிவகாமி அங்குவரும் தேரர்களுக்கும், சிங்கள அரசின் உயர் அதிகாரிகளுக்கும் கண்காட்சிப் பொருளாகவே இருந்தாள். இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த சிவகாமியோடு கதைப்பதையும் போர் வெற்றியின் பெருமைகளை பற்றி சொல்லிக்காட்டுவதையும் ஒரு வேலையாகவே தேரர்கள் தொடர்ந்து செய்துவந்தார்கள்.சிவகாமி துன்பத்தை அமைதிப்படுத்தத் தெரிந்தவளாய் தன்னை மாற்றிக்கொண்டாள். அவலங்கள் சக்கரங்களாகி சுழலும் பாதையின்  நிரந்தரமானவளாய் தன்னை உணர்ந்துகொண்டாள். போராளியாகவிருந்த கடந்த காலங்களை சிறையறையில் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அவளைச் சூழும் இருளுக்கு இவ்வுலகை மிரட்டும் குரலிருந்தது.
                                             
சிவகாமியை பார்ப்பதற்கு இடைக்கிடை தமிழ் அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறைச்சாலைக்கு வருவார்கள்.  சிறைக்கதவுக்குள் நின்று கொண்டு வந்தவர்களை பார்த்து புன்னகைக்கும் சிவகாமியின் பண்பும் ஒழுக்கமும் துயரத்திலும் பிசகவில்லை. சிறைச்சாலையில் நிறையப் பெண் போராளிகள் அடைக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர் ஒருவரைத் தான் சந்திக்கமுடியுமென கட்டுப்பாடு இருந்தது. சிவகாமியை சந்திக்க ஒருமுறை வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரை இராணுவம் பல கேள்விகளை கேட்டுத் தான் சிறைக்குள்ளேயே அனுமதித்து. சிவகாமி சந்திக்கும் இடத்திற்கு கூட்டி வரப்பட்டதற்கு பிறகும் அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்க சிவகாமியின் ஆடையில் அவளுக்குத் தெரியாமலேயே கருவியொன்றை பொருத்தியிருந்தார்கள்.

வணக்கம் தங்கச்சி...

சிவகாமியை பாராளுமன்ற உறுப்பினர் கும்பிட்டு கண்கள் கலங்கச் சொன்னார்.

வணக்கம் அண்ணா, எப்பிடி இருக்கிறியள்? சிவாகாமி கூப்பிய தனது கரங்களுக்குள் வாதைகளின் வாயைக் கட்டிப்போட்டிருந்தாள். உலகிற்கு சொல்லமுடியாத துயரங்களை சித்ரவதைகளை சிறைகளில் சந்தித்த பெண்ணுடல் சிவகாமியினது. போரும் போரின் வெற்றியும் பெண்களின் உடலைத்தான் தீனியாக்கியது. அலரிமாளிகையில் கண்ணாடிப்பெட்டியில் கிடக்கும் புத்தரின் புனிதப்பல்லுக்கு ஒரு தமிழச்சியின் பிறப்புறுப்பைக் கீறி இரத்தம் தெளித்தார்கள் என்கிற ஒரு செய்தியை  தடுப்பில் இருந்த போராளிகளுக்கு இடையில் இராணுவமே கசியவிட்டது.

“சனங்களை அலையவிட்டு, குடும்பங்களைச் சிதறடிச்சு எல்லாரையும் நொண்டியாக்கி ஆறுதல் அடையினம் தங்கச்சி. காணமல் போன பிள்ளையை வவுனியாவில இருந்து தேடத் தொடங்கி கொழும்பு வரைக்கும் வந்து அழுதழுதே செத்துப்போகிற பெற்றோர்கள், முள்ளிவாய்க்காலில செத்துப்போனது என்று தெரிஞ்சால் கூட நிம்மதி அந்தச் சனங்களுக்கு. கோவில் வாசலில கூடி நிக்கிற மாதிரி இராணுவ முகாம்களுக்கு முன்னால சனங்களை நிப்பாட்டிப்போட்டாங்கள். பிள்ளையள் கடவுள் என்றால் இப்ப இராணுவ முகாம் கோவில். கண்ணீரும் அலைச்சலும் தான் சனங்களுக்குள்ள நிரம்பியிருக்குத் தங்கச்சி என்றார் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்.

சிவகாமியின் மூச்சுக்குள் சனங்களின் அவலம் புயல் காற்றின் பாய்க்கப்பலைப் போல திணறியது. முள்ளிவாய்க்காலிலிருந்து மக்களை அடைத்து வைத்திருந்த செட்டிக்குளம்  முகாமில் தான் சிவகாமியிருந்தாள். அடையாளமே தெரியாத ஒருத்தியாக தன்னை மாற்றிக்கொண்டு இருந்து சிலகாலங்களில் தப்பிவிடலாம் என நினைத்த சிவகாமியை இரண்டு வாரங்களிலேயே இராணுவம் கண்டுபிடித்துவிட்டது. சிவகாமியை இராணுவம் கைதுசெய்த சம்பவம் பெரியளவில் மக்களால்  பேசப்பட்டது. போர்வெற்றிக்க்கு பிறகு தாம் பெற்ற இன்னொரு வெற்றியென்று அரசாங்கத்தின் புலானய்வு அலகு தன்னை நினைத்து பெருமிதம் கொண்டது. இயக்கத்தின் கடைசிக்கால ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அதிருப்தி அடைந்திருந்த மக்கள் சிலரே இராணுவப் புலனாய்வாளர்களிடம் சிவகாமியை காட்டிக்கொடுத்தார்கள் என ஒரு இராணுவ அதிகாரியே ஊடகங்களுக்கு செய்தி வழங்கினான். சிவகாமி இராணுவத்தின் கையில் அகபட்ட முதல் நாளில் அவளை விசாரணை செய்த  குழுவில் ஒரு தமிழனும் இருந்தான். வவுனியாவில் உள்ள ரகசிய இடத்திற்கு சிவகாமியை கொண்டு போய் விசாரித்த அந்தக் குழு கோத்தபாயவின் விசுவாசிகளாய் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டது.              அவர்களிடம் அகப்பட்ட போதிருந்த பாவாடை சட்டையோடு சிவகாமி அவர்களுக்கு முன்னிருந்தாள்.

தன்னை ஒரு முன்னாள் போராளி என்று அறிமுகப்படுத்திய அந்தக் குழுவின் ஒரே தமிழனானவனை வேறு எங்கேனும் பார்த்த ஞாபகம் அவளுக்கு வரவில்லை. விசாரணையே ஒரு மரத்தின் கீழேயே நடாத்தப்பட்டது. அதுவொரு இராணுவ முகாமென்பது சிவகாமிக்கு தெளிவு. திரும்பும் பக்கமெல்லாம் சிப்பாய்கள் தெரிந்தார்கள். சிவகாமியும் அந்த விசாரணைக்குழுவும் இருப்பதிலிருந்து இருபது அடிகள் தள்ளி கோத்தபாயவின் படமும் சிங்களத்தில் ஏதோ எழுதியும் பெரியளவில்  பதாகைகள் நிறுவப்பட்டிருந்தது. என்ன விநோதம்! அந்த வளாகம் முழுதும் கோத்தபாயாவின் படங்கள் ஆளுயர பதாகைகளில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இரத்தம் குடித்து இறுகிப் போன பிசாசின் முகம் இப்படித் தான் இருக்கமுடியுமென சிவகாமி நம்பினாள்.

நீங்கள் ஏன் சரணடையவில்லை? என்று சிங்களத்தில் கேட்கப்பட்ட கொழும்பின் கேள்வியை தமிழனானவன் மொழிபெயர்த்துக் கேட்டான். விசாரணைகளின் தன்மைகளை, இராணுவ உரையாடல்களை அது கோருகிற விடயங்களோடு புரிந்துகொள்ளக்கூடியவர்கள் இயக்கப் போராளிகள்.
   
எனக்கு உங்களிடத்தில் சரணடைய பயமில்லை அவமானம் இருந்தது என்று அத்துணை இறுக்கத்தோடு பதில் சொன்னாள். அவளுக்கு மேலிருந்த மரம் அசைவதில்லை என்பது போல இருந்தாலும் காற்று அசைப்பேன் என்று சொன்னது. காற்றுக்கு அசைத்து மட்டும் தான் பழக்கம். இந்த விசாரணை அவளை என்னவெல்லாம் செய்யப்போகிறது எனும் நடுக்கம் அந்த மரத்திலிருந்த செண்பகம் ஒன்றுக்கு இருந்தது. இந்த மரத்தடி நிறைய விசாரணைகளையும் நிறைய பதில்களையும் கண்டிருக்கும்.

நீங்கள் ஏன் முள்ளிவாய்க்காலிலேயே சரணடையவில்லை என்று அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலகம் கேட்கிறது?

அது தான் சொல்கிறேன். உங்களிடம் சரணடைய எனக்கு அவமானமாக இருந்தது. ஆனாலும் உங்களிடம் அகப்பட்டு விடுவேன் என்று உள்மனசு சொன்னது என்று எழுதிக்கொள்ளுங்கள். நிச்சயமாக இந்தக் காலத்தில் பிரகாசத்தை விரும்புவர்கள் வாழமுடியாது,இனி எத்தனையோ காலங்களுக்கு நாம் இருட்டிலேயே காணமல் போகும் கனவைப் போன்றவர்கள் என்று நான் முதலிலேயே விளங்கிவிட்டேன். நீ கடைசியாக எப்போது பிரபாகரனைப் பார்த்தாய்?

அவன் நீங்களில் இருந்து “நீ”க்கு வந்துவிட்டதை உணர்ந்து கொண்ட சிவகாமி நான் தலைவரைப்  பார்த்தது பெப்ரவரியில, அதுக்கு பிறகு பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாள்.

பிரபாகரன் என்று கருணா உறுதிப்படுத்திய அந்தச் சடலத்தின் புகைப்படம் வெளியான பத்திரிக்கையை காட்டி இது பிரபாகரன் தானே என்று சிங்கள அதிகாரி கேட்டான். அவள் அந்தப் பத்திரிகையை அப்போது தான் கையில் வாங்கிப் பார்த்தாள். சிரித்தாள். அது தான் உங்களை நம்பிய கருணாவே உறுதிப்படுத்தி விட்டாரே அவரை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டாள். அந்தக் கேள்வியின் உச்சியில் அப்படியொரு தீக்கங்காய் நக்கல்.

இல்லை நாங்கள் இன்னும் நம்பவில்லை. பிரபாகரன் செத்துப்போயிட்டார் ஆனால் இது அவரோட உடம்பு என்று நாங்கள் நம்பவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். கருணாவை அரசாங்கம் நம்பியதில்லை. அவர் தான் அரசாங்கத்தை நம்புகிறார் என்று அந்தத் தமிழனானவன் சொன்னான். துரோகத்தை எதிரிகளும் விரும்புவதில்லை. மரத்தில் இருந்த செண்பகத்தை திடீரென நிமிர்ந்து பார்த்தாள் அதன் பிடரி மயிர் சிலிர்த்து கண்களின் சிவப்புக் கூடியிருந்தது.

விசாரணை முடிய இன்னொரு இடத்திற்கு கொண்டு போகப்போவதாக அவளிடம் சொல்லப்பட்டது. அவள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னாள். விசாரணை முடிந்ததோடு அவளை தமது கைபேசிகளிலும், புகைப்படக்கருவிகளிலும் படமெடுத்தார்கள். தாங்கள் வைத்திருந்த கோப்புகளில் கையெழுத்திடும்படி பணித்தார்கள். தமிழனானவன் அவளை அக்கா என்று அழைத்தபோது          தன்னை அக்கா என்று அழைக்கவேண்டாம் என மறுத்தாள். நீங்கள் இன்னும் அடங்கவில்லை என்று தமிழனானவன் கன்னத்தில் அறைந்தான். ஆமோதிப்பதைப் போல அமைதியாக நின்றாள்.

ஆயுதம் ஏந்திய சிப்பாய்களின் பாதுகாப்போடு கண்களும் கைகளும் கட்டப்பட்டு வெள்ளை வானொன்றில் ஏற்றபட்டு சித்ரவதைக்காக பயணித்துக்கொண்டிருப்பதை சிவகாமிக்கு யாரும் சொல்லத்தேவையில்லை. கோழைகளின் வீரம் சித்ரவதை. சிப்பாய்கள் மூவர் சேர்ந்து அவள் கதறியழும்வரை அவளின் மார்பை இறுக்கிப் பிடித்து கொண்டாடினார்கள். மாற்றினத்து பெண்களின் மார்புகளை அறுக்கும் மானுடர்களைத் உலகம் சிங்களர் என்று அழைக்கட்டும். வாகனம் எங்கோவொரு இடத்தில் நின்றது. கண்கள் கட்டி நின்ற அவளுக்கு நீ நிற்பது என் மேல் என்றது காடு.

சிங்களத்தில் பலர் கதைத்துக்கொண்டிருந்தார்கள். கண்களின் மேல் காலத்தைப் போல இருக்கும் துணியை யாரோ அவிழ்க்கிறார்கள். கைகள் ஏற்கனவே கட்டில் இருந்து பிரிக்கப்பட்டுவிட்டது. அவிழ்க்கப்பட்ட கண்களுக்கு முன்னால் ஐம்பதுக்கு மேற்பட்ட பெம்பிளைப் பிள்ளைகள் நிர்வாணமாக இருத்திவைக்கப்பட்டிருந்தார்கள். அது அடர்ந்த காடு மட்டுமல்ல பெண் போராளிகளுக்கான வதை முகாம். கண்கள் அவிழ்க்கப்பட்டதும் அவளை அடையாளம் கண்ட சில பிள்ளைகள் அக்கா என்று கதறி அழுதார்கள். சில பிள்ளைகள் யார் என்று கேட்டு அறிந்து கொண்டார்கள். நோய் வந்து தூங்கும் கோழிகளாய் சில பிள்ளைகள் கண்களை சொருகிக் கொண்டு மஞ்சள் முன்னா மரங்களுக்கு கீழே இருந்தார்கள். சிலருக்கு அம்மை போட்டிருந்தது. நாடும் காடும் பரவிய தோல்வியை நடுக்காட்டின் நிர்வாணம் உறுதிசெய்தது.

அவளை கீழே இருக்குமாறு சிப்பாயொருவன் சொன்னான். அவள் பிற போராளிகளோடு சேர்ந்திருக்கவே விரும்பினாள். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு முன்னால் இருக்குமாறு சொல்லப்பட்டது. நிர்வாணமாக இருக்கும் போராளிப் பிள்ளைகளுக்கும் அவளுக்குமிடையில் இருந்த இடைவெளியானது சிறு தூரமே தவிர அவர்கள் ஒன்றாகவே உணர்ந்தார்கள். நிர்வாணமாக இருந்த போராளிகள் நால்வர் சாப்பாட்டு டாசரை தூக்கிக் கொண்டு வந்தார்கள். எல்லோருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. இதனை கண்காணிக்கும் சிப்பாய் தமிழில் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை ஒரு முஸ்லிம் என்று எல்லோருக்கும் சொல்லுவதன் மூலம் வெளியேற்றத்தை பறைசாற்றினான். ஆயுதங்களோடு காடுகளுக்குள் நிமிர்ந்து நின்றவர்களை நிர்வாணத்தோடு வரிசையாக்கி சாப்பாடு வழங்கினார்கள். அவளை இராணுவம் இன்னும் சாப்பிடு என்று சொல்லவில்லை. அவள் அப்படியே தானிருந்தாள். மனமெங்கும் சாவின் ஆசைகள் மரங்களைப் போல பெருகித்துளிர்த்தது. அந்தக் காட்டின் சுற்றுப் புறத்தில் இவ்வளவு நேரங்களில் எந்தப் பறவையையோ குருவிகளையோ அவள் காணவில்லை. மானுடர்க்கு சுதந்திரமற்ற காடுகளில் கூட உயிரினங்கள் வாழாது என்று அவள் உள்ளூரச் சிந்தித்தாள்.

வானத்தை பார்க்கமுடியாமால் மரங்களால் வடிவமைக்கப்பட்ட சிறைச்சாலை போன்று எல்லாம் மூடப்பட்டிருந்தது. ஆடைகளோடு இருக்கும் அவளை விதிவிலக்காக தண்ணீர்க் கொடிகள் பார்த்தது. தன்னை இவர்கள் என்ன செய்வார்கள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். நேரப் போகிறவற்றை நிர்வாணமாக இருக்கும் போராளிப்பிள்ளைகளின் உடல்களில் இருந்த தடயங்கள் சொல்லிற்று. யுத்தத்தை வென்ற அதிகாரம் தனது மமதையை தோல்வியுற்ற யோனிகளிலேயே நிகழ்த்தும். பிரபாகரன் இல்லை என்று தெரிந்ததன் பின்னர் இந்தக் காடுகளும் குனிந்து பணிந்துவிட்டது என்று இயற்கையை சினந்தாள். நிர்வாணமான போராளிகள் சாப்பிட்ட பிறகு எங்கேயோ இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டார்கள்.  அவர்களில் சிலர் அவளுக்கு கை காட்டிப் பிரிந்தார்கள். அந்தக் காட்டில் நிர்வாணமாக நடந்து போகும் போராளிப் பிள்ளைகளின் காலடிகள் சருகுகளில் காய்ந்த கொடும் சாட்சிகள்.

ஒரு பத்து நிமிடம் கழிய இன்னுமொரு தொகை நிர்வாணப் போராளிகள் காட்டிற்குள் இருந்து அவள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். நிர்வாணமான போராளிகளால் நிறைந்திருப்பதை காடு என்று அழைப்பதா? அவள் இருந்த நிலத்தின் மீது நடுக்கத்தோடு குச்சி ஒன்றால் எதையோ கீறினாள். கண்கள் அநாதரவான பாடல்களை கண்ணீராக எழுதியது. உடலில் சவக்களை தொற்றிய அவளின் நெஞ்சில் காலால் எட்டி  உதைந்தான் இராணுவ அதிகாரியொருவன். சித்ரவதை செய்கிற இராணுவ அதிகாரிக்கு பாதுகாப்புக்கு நின்ற சிப்பாய்கள் அவளின் ஆடைகளை கிழித்தார்கள். ஊமைத் துயரம் உழல்வதைப் போல நிலமெங்கும் கதறினாள். காட்டின் எல்லா இலைகளிலும் கேட்ட கதறல் ஒட்டியது. காற்றில்லை. அவளின் வாய்க்குள் துவக்கின் முன் பகுதியை ஓட்டி டிகரில் கைவைத்தபடி சிப்பாய். அவளை வன்புணர்ந்தபடியிருக்கும் இராணுவ அதிகாரிக்கு பாதுகாப்பாக இன்னொரு சிப்பாய். தன்னிலிருந்து காலம் பிய்த்தெறிந்த சாவின் துண்டைப்போல அவள். வானம் பார்த்திராத காட்டின் மத்தியில் அவளுடல் எல்லா மிருகத்தனங்களையும் எதிர்கொண்டது. நிர்வாணமாக நிற்கும் பிற போராளிகள் தரையில் அமர்ந்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கொடுங்காலத்திலும் சிறகுகள் உள்ள பறவையொன்று மரங்களுக்குள் வந்தமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. தனது பறத்தலின் ஓய்வில் இளைப்பாறும் இடமாக பறவை இந்தக் காட்டைத் தெரிவித்தது.

நிர்வாணமாக இந்தக் காட்டிடையே உலவப் போகிறவளாக அவளும் ஆக்கப்பட்டிருந்தாள். அவளின் மேலிருந்து எழுந்த இராணுவ அதிகாரி இந்திரியத்தை அவளின் மார்பிலும் படச்செய்தான். தானொரு பெம்பிளைக் ஹொட்டியின்*முகத்தில் இந்திரியத்தை பாய்ச்சியதை பிரபாகரனை உயிரோடு பிடித்ததற்கு சமனாக நினைத்துப் பெருமைப்பட்டான். எந்த நிலத்திற்காக இத்தனை துயரங்களை சுமந்தாளோ அந்த நிலத்தில் நிர்வாணமாயிருந்தாள். போராளிகளை நிர்வாணமிடுவதன் மூலம் தாம் வெற்றியடைந்து விட்டதாக எண்ணுகிற இனவாதத்தின் முனை மழுங்கிய பேரிகை அவளுக்கு எரிச்சலைத் தந்தது.    சாவுக்கு அப்பாற்பட்டவர்களை வன்புணர்வின் மூலம் அடிமைகளாக்கி நிர்வாணங்களாய் காடுகளுக்குள் அலையவிடுவதில் அதிகாரமும் போரின்  வெற்றியும் நிரந்தரமாகி விடாது. காட்டின் வதைமுகாமில் நிர்வாணமாக இரண்டு மாதங்கள் நூற்றுக்கணக்கான போராளிகளோடு இருந்தாள். கோத்தபாயவின் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்திற்கான பணிப்பெண்களாக, வன்புணரப்படுவோராக குறைந்தபட்சம் இருநூறு போராளிகள் நிர்வாணமாகவே இந்தக் காட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தார்கள். ரணம் பெருக்கும் சித்தரவதைகள் காடுகளில் அம்மாவென,ஐயோவென ஒலியெழுப்பும் ஒரேயொரு ஜீவராசிகளாக போராளிகளே இருந்தார்கள். போராளிகளை வடிவின் பெயரில் தரப்படுத்துவதும்,உடலின் அளவில் பிரிப்பதும் அவர்களை கற்பனைக்கும் மனிதத்தன்மைக்கும் எட்டாதபடி வன்புணர்வு செய்து தரையில் கிடத்திச் சாகடிப்பதும் கோத்தபாயவின் வதைமுகாமில் திருவிழாவைப் போல முன்னெடுக்கப்பட்டது.

இவளை ஒரு சிப்பாய் கட்டில்களில் படுத்திருக்கும் பிற சிப்பாய்களிடம் தெரியப்படுத்துகிறான். இவளொரு பெம்பிளைப் புலி, அதிலும் முக்கியமானவள், நீங்கள் எப்போது வேண்டாம் என்கிறீர்களோ அப்போது தான் அவள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவாள் என்று சொல்லுகிறான். சிப்பாய்கள் கைகளைத் தட்டி ஆரவாரமான சிரிப்புக்களையும் நக்கல் கதைகளையும் சொல்லுகிறார்கள். சலித்துப் போன அவலமும் அனுபவமும் நிர்வாணமாக நின்ற எல்லாப் பிள்ளைகள் மீதும் முளைத்திருந்தது.

கட்டிலில் கிடந்த சிப்பாய் ஒருவன் எழும்பி வந்து அவளின் பிறப்புறுப்பில் தனது கைகளால் சத்தம் வரும்படி பொத்தி அடித்தான். எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தார்கள். சில கட்டில்களில் இவற்றையெல்லாம் பார்க்காமல் போராளிகளை வன்புணர்ந்து கொண்டிருந்தார்கள். சில கட்டில்களில் சொல்லமுடியாத பணிகளை எல்லாம் பிள்ளைகள் செய்து கொண்டிருந்தார்கள். போராளிகளாக இருந்ததினாலேயே இந்த நிலை எமக்கு ஏற்பட்டு விட்டது என்று இத்தனை நாட்களில் யாரும் யாரோடு பேசியது கிடையாது. சிப்பாய் ஒருவன் சிவகாமியை கைகளைக் காட்டி அழைத்தான். அவனுக்கு காலில் பெரிய காயம் தனது மூத்திரச் சட்டியை எடுத்துத் தரும்படி கட்டளையிட்டான். பக்கத்துக் கட்டிலின் இரு சிப்பாய்கள் உதவியோடு அவளை வன்புணரத்தொடங்கியவன் நீண்ட நேரம் வதைத்தான். அவளை மிகக் கொடூரமாகவெல்லாம் வன்புணரவேண்டும் என்று துடித்தான். கால்கள் முடியாத ஒரு சிப்பாய் அவளை வதைக்கிற பொழுது பலநூறு பலம் கொண்டான். நெரிந்த அவளின் உடலிலிருந்து கடந்தகாலத்தின் நிமர்ந்த நடை கொண்ட நிழலும்,உரைகளும் வரிகளாய் வந்து போனது.

ஆயுதங்கள் மட்டுமல்ல,போராட்டம் மட்டுமல்ல எமது எதிர்காலங்களும் விடுபட்டுப் போய்விட்டது போல வதை. தோல்வியின் குரூரம் பலித்தது. எங்கெனும் பிள்ளைகளின் இரத்தங்கள் வன்புணர்வில் வடிந்தபடியே இருந்தது. குளிப்பதற்காய் காட்டில் வெட்டப்பட்டிருக்கும் குளத்தில் தண்ணீருக்குள் அமுங்கி தற்கொலை செய்து கொண்ட பிள்ளைகள் இருவரை செத்துக்கொண்டிருந்த மற்றவர்கள் புதைத்தார்கள்.

அக்கா நீங்கள் ஏன் இவங்களிட்ட பிடிபட்டனியள்? இன்னொரு பிள்ளை இவளிடம் கேட்டாள்.

அந்தக் கேள்வியில் அடியாழத்தில் நீங்கள் குப்பி கடித்திருக்கலாம் தானே என்கிற இன்னொரு சாரமும் இருந்தது. எல்லோரும் வாழவேண்டியதற்காக செத்துப்போகலாம் என்று தான் நாங்கள் கழுத்தில குப்பியை போட்டம்,ஆனால் எல்லாரும் செத்துப் போயிட்டினம் நாங்கள் மட்டும் சாகிறம். வந்திருக்கக் கூடாது தான். சோற்றுக்குள் இலையான்கள் விழுந்து கிடந்ததை பொருட்படுத்தவில்லை. அப்படியே உருட்டிய சோற்றை விழுங்கிக் கொண்டாள்.

“ஏன் அண்ணா எங்களை இப்பிடி விட்டிட்டு போனவர்” என்று கண்கள் கலங்கிக் கேட்ட இன்னொரு பிள்ளையின் இரண்டு மார்புக் காம்புகளும் இல்லாமல் அந்த இடத்தில் புண்ணாகிக் கிடந்தது. அந்தப் பிள்ளையின் காம்புகளற்ற மார்புகளைப் போலவே இந்தக் கேள்விக்கும் பதிலில்லை. அந்தக் கேள்வியைக் கேட்ட பிள்ளையும் பதிலைப் போல ஓரிருதினங்களில் இல்லாமல் ஆகிவிட்டாள். அவளின் செத்துப் போனவுடல் அந்தக் காட்டில் நிர்வாணமாக அலைந்த சக போராளிகளிடமே காட்டப்படவில்லை.

அந்தக் கேள்வியும் இல்லாத பதிலும் தொடர்ந்து பயணிப்பதைப் போல சிவகாமியும் அந்தக் காட்டில் இருந்து ஆடைகள் வழங்கப்பட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டாள். மெகசின் சிறையில்  கொண்டு வந்து அடைக்கப்பட்டாள். வதைமுகாமில் பறிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டதே தவிர அங்கிருந்தவர்கள் எல்லோரும் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். பல்லிகள் நிறைந்திருக்கும் சிறையறைக்குள் பயந்து பைத்தியங்களைப் போல போராளிகள் முகங்களை முகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து 23தடவைகள் எல்லோருக்கும் தெரிந்து  வன்புணர்வு செய்யபட்ட சிவகாமியை இராணுவக் கோப்ரல் “எய்ட்ஸ் நங்கி” என்று தன் இப்போது கூப்பிடுகிறான். கனவழிந்த கருப்பையில் இறந்துபோன சிசுக்களாய் போராளிகள் இருந்தார்கள். எந்தப் பொழுதும் ஆடைகள் களையப்படலாம் என்பதை பகிடியாகக் கதைக்கத் தொடங்கினார்கள். அதிக வலி தருகிற சித்ரவதைகளை நாளும் எதிர்கொள்பவர்களின் உளம் அதனை பகிடி செய்யத்தொடங்குகிற பொழுது நிறைந்த வன்முறை அவர்களை பின் தொடரத் தொடங்குகிறது. தனக்கு மெல்லக் கொல்லும் விஷ மருந்து ஏற்றி மூன்று மாதங்கள் ஆகிவிட்டதை தவிர தன்னைப் பார்க்க வந்திருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரிடம் சிவகாமி எல்லாவற்றையும் கதைத்தாள், சொன்னாள். சிவகாமியை பார்க்க வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான நேரம் முடிவடைந்தவுடன் அவர் விடைபெற்றார்.

மெஹசின் சிறைச்சாலை கம்பிகளுக்குள் நின்ற முகத்தின் இறுக்கத்தோடு தான் மூன்று வருடங்கள் கழித்து புற்றுநோயால் இறந்ததாக சொல்லப்பட்ட சிவகாமி சவப்பெட்டிக்குள்ளும் மரணித்திருந்தாள். யாருமே அறியாத சேதிகளோடு தாயக வானம் அழுதது.