Feb 9, 2016

மருந்து

மிகச் சமீபத்தில் நாராயண ஹிருதயாலயாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. பெங்களூரின் மிக முக்கியமான இருதய மருத்துவமனை. பிற சிகிச்சைகளும் உண்டு என்றாலும் இருதயத்திற்கு என்ற சிறப்பு மருத்துவமனை இது. தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒரு குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். பண உதவி எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு கன்னடம் தெரியாது. அதனால் சற்று பதறினார்கள். அந்தக் குழந்தையின் அப்பா நிசப்தம் வாசிக்கிறவர். அந்த வகையில் அழைத்திருந்தார். கடந்த முறை மருத்துவமனைக்குச் சென்றதைக் காட்டிலும் இந்த முறை நிறைய வெளிநாட்டினரைப் பார்க்க முடிந்தது. 

மருத்துவரைப் பார்ப்பதற்காகக் குழந்தையும் குழந்தையின் பெற்றோரும் உள்ளே சென்றிருந்த போது ஒரு ஆப்பிரிக்கரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன நோய் என்று கேட்கவில்லை. அது சரியான கேள்வியுமில்லை. ஆனால் எதற்காக இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று விசாரிக்கத் தோன்றியது. இந்தியாவில் மருத்துவச் செலவு மிகக் குறைவு என்றார். தனது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். உண்மையிலேயே இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவுதான். அமெரிக்காவில் காப்பீடு இருந்தால் பிரச்சினையில்லை. எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் காப்பீட்டு நிறுவனம் சுமையை கவனித்துக் கொள்ளும். ஒருவேளை காப்பீடு இல்லையென்றால் காலி ஆகிவிடுவோம் என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் நிலவரம் அப்படித்தான். 

சில நோய்களைப் பொறுத்த வரையிலும் மருத்துவ சிகிச்சையைவிடவும் மருந்து விலை இன்னமும் அதிகம். உதாரணமாக அப்பாவுக்கு ஹெபாட்டிஸ் சி வைரஸ். அதற்கு Sofocure என்ற மருந்தை எடுத்துக் கொள்கிறார். தினமும் ஒரு மாத்திரை. மாத்திரை எடுத்துக் கொள்ளத் தொடங்கிய முதல் மாதத்திலேயே வைரஸ் காணாமல் போய்விடுகிறது. இருந்தாலும் குறைந்தது ஆறு மாதத்திற்காவது மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வைரஸ் மீண்டும் படையெடுத்துவிடும். ஆனால் ஒரு மாதத்திற்கான மருந்து விலை இருபதாயிரம் ரூபாய். ஆறு மாதங்களுக்கு என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். வெறும் மாத்திரை விலை மட்டும் இது. மாதாந்திர பரிசோதனை, பெங்களூருக்கும் கோயமுத்தூருக்கும் போக்குவரத்துச் செலவு, மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள்- இவையெல்லாம் தனி. வீட்டில் வருமானம் இருந்தால் சமாளித்துவிடலாம். இல்லையென்றால் என்ன செய்வது? ஆண்டவன் விட்ட வழி என்று இருந்துவிட வேண்டியதுதான்.

இந்த மருந்து உலகம் முழுவதிலும் ஒரே விலையில்தான் விற்கப்படுகிறதா என்று தேடினால் தலை சுற்றுகிறது. அமெரிக்காவில் இதே மருந்து வாங்க வேண்டுமானால் மாதம் முப்பத்தைந்து லட்சம் ரூபாய் தேவை. இருப்பதிலேயே காஸ்ட்லியான நோய் இது. ஹெபாட்டிட்டிஸ் சி- க்கு மட்டுமில்லை வேறு எந்த நோய்க்கான மருந்து விலையை ஒப்பிட்டாலும் இப்படித்தான் இருக்கிறது. சிறுநீரகப் புற்று நோய்க்கான Sorafenib என்ற மாத்திரை வாங்க இந்தியாவில் மாதம் ஒன்பதாயிரம் தேவை என்றால் அமெரிக்காவில் எட்டு லட்ச ரூபாய். ஹெபாட்டிட்டிஸ் பி வைரஸூக்கான Entecavir என்ற மருந்து இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். அதே மருந்து அமெரிக்காவில் எண்பத்தெட்டாயிரம் ரூபாய். இப்படி பெரிய விலைப் பட்டியலைத் தயாரிக்க முடியும்.

எதனால் இந்தியாவில் மருந்துகளின் விலை குறைவு என்று அலசினால் புரிந்து கொள்ளச் சிக்கலாக இருக்கிறது. காப்புரிமைச் சட்டம்தான் முக்கியக் காரணி. இந்தியாவில் மருந்துகளின் மீது அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருக்கக் கூடிய மருந்துகளின் விலையும் விற்பனையும் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அதனால்தான் இந்தியாவில் விலை குறைவு. உலகில் எண்பது சதவீத பால்வினை நோயாளிகளுக்கான மருந்துகள் இந்தியாவில் இருந்துதான் செல்கின்றன. இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சினை. அவர்களின் லாபம் பாதிக்கப்படுகிறது. அதனால் அந்நிறுவனங்கள் இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. அரசாங்கத்தை வளைக்க வழி தேடுகின்றன. ஒவ்வொரு முறையும் இந்தியாவுடன் வணிக ரீதியிலான பேச்சு வார்த்தை நடக்கும் போது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட அரசாங்கங்கள் இந்திய அரசு மீது மருந்துத் துறையில் நிலவும் கட்டுப்பாடுளை நீக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கான காரணம் பின்னணியில் இருக்கும் அந்தந்த நாட்டு மருந்து நிறுவனங்கள்தான். 

இதை எழுதக் காரணமிருக்கிறது. 

2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்கள். மருந்துகளின் மீதான கட்டுப்பாடு நீக்கப்படுகிறது என்றும் அதனால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை இந்தியாவில் தாறுமாறாக எகிறப் போகிறது என்றும் DNA India பத்திரிக்கையில் வந்திருந்த செய்தி அது. அதிர்ச்சியாக இருந்தது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியது போல மருந்துகளின் மீதான கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டார்களோ என்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் செய்திகளைத் தேடிப் பார்த்த போது அப்படி எதுவுமில்லை என்றுதான் தெரிகிறது. ஒருவேளை அப்படியெதுவும் நடந்தால் இந்தியர்களின் மீதான பேரிடியாக இருக்கும்.

வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவரைக்கும் எதுவுமில்லை. ஏதேனும் மருத்துவச் செலவு என்று வந்துவிட்டால்தான் வலி புரியும். சில நாட்களுக்கு முன்பாக வேதேஷ் குறித்து எழுதியிருந்தேன். நான்கு வயதுச் சிறுவன். அவனுக்கு ரத்தம் உறையாததுதான் பிரச்சினை. கை கால்களில் வெட்டுப்பட்டு ரத்தம் பெருக்கெடுத்தால் கட்டுப் போட்டு ஏதாவது செய்வார்கள். மூளைக் குழாயில் ரத்தம் கசிந்தால் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு வாரமும் ஊசி போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு ஊசி பதினைந்தாயிரம் ரூபாய். மாதம் ஐம்பதிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை. வேதேஷ் குறித்து எழுதியவுடன் இந்த நோய்க்கான உதவி செய்யச் சங்கங்கள் இருக்கின்றன, மருந்துகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்றெல்லாம் நிறையத் தகவல்கள் வந்தன. இருக்கின்றனதான். ஆனால் நடைமுறைச் சாத்தியங்கள் மிகக் குறைவு. இத்தகைய சங்களில் எங்கேயாவது பேசி இணைத்துவிடலாம் என்று முட்டி மோதிக் கொண்டிருந்த போது கால தாமதமாகிக் கொண்டேதான் இருந்தது.

விலை குறித்து யோசனை செய்து கொண்டிருந்தால் ஒரு குழந்தையின் உயிரைப் பணயம் வைப்பது மாதிரிதான். பாக்ஸ்டர் நிறுவனத்தில் பணியாற்றுகிற செந்தில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் கொடுத்த தகவல்களின் படி பதின்மூன்றாயிரத்துக்கு மருந்தைக் கொடுக்கும் விநியோகஸ்தரைக் கண்டுபிடித்தோம்.  இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக ஊசியைச் செலுத்திய பிறகு கிடைக்கக் கூடிய இரண்டு வார அவகாசத்தில் வேறு வழிகளைத் தேட வேண்டும்.


இப்படி விலையுயர்ந்த மருந்துகளின் உதவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நிறையப் பேரைத் தெரியும். இந்த விலைக்கே திணறிக் கொண்டிருக்கிறார்கள். மருந்துகளின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்தியாவிலும் கூட அமெரிக்க, ஐரோப்பிய விலைகளில் மருந்துகள் விற்கப்படுமாயின் லட்சக்கணக்கானவர்களால் மருத்துவம் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்து இந்தியாவில் மருந்துகளின் மீதான கட்டுப்பாடு அப்படியேதான் இருக்கிறது. ஒருவேளை மருந்துகளின் மீதானக் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது என்கிற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதைப் பகிர்ந்து மக்களின் விழிப்புணர்வைத் தூண்டுவதில் அர்த்தமிருக்கிறது. இல்லாதபட்சத்தில் இப்படியொரு புரளியைக் கிளப்புவது லட்சக்கணக்கான- அதுவும் பரிதாபகரமான லட்சக்கணக்கானவர்களின் வயிற்றில் பட்டாம்பூச்சியைப் பறக்கச் செய்வது போலத்தான்.

ஆயினும், காப்புரிமைச் சட்டங்கள், மருந்து நிறுவனங்களின் அரசியல், லாபிகள், புகுந்து விளையாடும் லஞ்சம் என்பதெல்லாம் இருண்ட உலகத்தின் புதிரான பக்கங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்வதே கூட அதிசுவாரசியம்தான். முயற்சிக்கலாம்.