Feb 26, 2016

வேட்பாளர் தேர்வும் திமுகவும்

நேற்று திமுகவின் வேட்பாளர்கள் நேர்காணல் குறித்து எழுதிய கட்டுரையை உடன்பிறப்பு எதிர்த்திருந்தார். ‘அரசியலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்’ என்று சொல்லியிருந்தார். சரிதான். ஆனால் யாரை நிறுத்தினாலும் வெல்ல வைக்கிற கட்சியாக ஒரு காலத்தில் திமுக இருந்தது என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். மற்ற தொகுதிகளை விட்டுவிடலாம். எனக்கு நன்றாகத் தெரிந்த தொகுதி கோபிச்செட்டிபாளையம். செங்கோட்டையனின் கோட்டை என்பார்கள். 1977 ஆம் ஆண்டு பக்கத்து தொகுதியான சத்தியமங்கலத்தில் நிறுத்தி கே.ஏ.செங்கோட்டையனை வெற்றி பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். அடுத்த மூன்றே ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் ‘நீ உங்க ஊர்லயே நில்லுய்யா’ என்று கோபிச்செட்டிபாளையத்திற்கு மாற்றினார். அதன் பிறகு 1980, 1984, 1989, 1991 என்று தொடர்ச்சியாக கே.ஏ.எஸ் தான் எம்.எல்.ஏ. அசைக்கவே முடியவில்லை.

அதுவரை ஈரோடு மாவட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த சு.முத்துச்சாமி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவா ஜானகியா என்று தள்ளாடிய போது செங்கோட்டையன் துணிந்து ஜெ அணியில் சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டு பெரும்பலத்தோடு அதிமுக வென்ற பிறகு போக்குவரத்து மற்றும் வனத்துறை என்கிற வளமான இரண்டு துறைகளுக்கும் அமைச்சரானார். அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் ‘சாதனைச் செம்மலே வருக’ என்று போஸ்டர் அடித்தார்கள். முத்துச்சாமி ஓரங்கட்டப்பட்டு கே.ஏ.எஸ்தான் ஈரோடு மாவட்ட அதிமுக என்கிற சூழல் உருவாக்கப்பட்டது. தொகுதிக்குள் கல்யாணம் என்றாலும் சரி; கருமாதி என்றாலும் சரி அமைச்சரின் மொய் வந்து சேர்ந்துவிடும்.

எங்கள் ஊரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் சிலைத் திறப்புக் கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய கருணாநிதி ‘கூட்டமா வருவீங்க..ஆனா ஓட்டு மட்டும் எங்களுக்கு போட மாட்டீங்க’ என்று வெளிப்படையாகவே பேசினார். 1996 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு எதிரான அலையடித்த போது ‘எல்லாப் பக்கம் தோற்றாலும் கோபியில் அதிமுக வென்றுவிடும்’ என்றுதான் பேச்சு உலவியது. திமுக சார்பில் பெட்டிக்கடைக்காரர் கோ.ப.வெங்கிடு களமிறக்கப்பட்டார். பிரச்சாரத்தில் நெருப்புப் பொறி பறந்தது. ‘உங்கள் வாக்கு வட்டிக் கடைக்கா? பெட்டிக் கடைக்கா?’ என்று வீதிக்கு வீதி தூள் கிளப்பினார்கள். அதிமுகவை தோற்கடிக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள். கடைசியில் பெட்டிக்கடைதான் வென்றது.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு இரு சக்கர வாகனத்துக்கு ஓட்டுநர் வைத்துக் கொண்டு சாலைகளில் சுற்றிக் கொண்டிருந்தார் எம்.எல்.ஏ. எங்கள் ஊர் டீக்கடைகளில் இரண்டு பக்கமும் முட்டுக் கொடுக்கப்பட்டு கற்களால் ஆன திண்ணையை அமைத்து வைத்திருப்பார்கள். அந்தத் திண்ணைகளில் சாதாரணமாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருப்பார். எம்.எல்.ஏ பதவி முடிந்த பிறகு அவரது இளைய மகன் நடத்திக் கொண்டிருக்கும் அதே டீக்கடையின் கல்லா பெட்டியில் அமர்ந்து காசு வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார். 

இதுவொன்றும் பழங்காலக் கதை இல்லை. வெறும் இருபது வருடங்களுக்கு முன்பாக நடந்ததுதான் இது. அசைக்கவே முடியாத மனிதர் என்று நினைத்தவரை எந்த பணபலமும் இல்லாத ஒரு டீக்கடைக்காரர் வென்றார். இருபது வருடங்களுக்கு முன்பு வரை சாத்தியமாக இருந்தது இப்பொழுது ஏன் சாத்தியமாவதில்லை?

திமுக போன்ற தொண்டர் பலமுள்ள கட்சிகள் ‘வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறவருக்கு தருகிறோம்’ என்ற பெயரில் காசு இருக்கிறவனுக்கு தர வேண்டியதில்லை என்பதுதான் என் வாதம். காசு படைத்தவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் ஒன்று- தான் சம்பாதித்ததைக் காப்பாற்றிக் கொள்ள வருகிறான். இல்லையென்றால் இருப்பதைப் பெருக்கிக் கொள்ள வருகிறான். அவர்களுக்கு ஏன் வாய்ப்பைக் கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்க விரும்புகிறேன். தொகுதியின் சந்து பொந்துகளைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் வேட்பாளரைக் களமிறக்கட்டும். கட்சியில் பரிச்சயமானவராக இருக்கட்டும். மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை- கெட்ட பெயரைச் சம்பாதிக்காதவராக இருக்கட்டும். அப்பேற்பட்ட வேட்பாளரை நிறுத்தி பழைய திமுகவின் உற்சாகத்தை தொண்டர்களிடம் உண்டாக்கிப் பார்க்கட்டும் என்றுதான் சொல்கிறேன்.

முடியாத காரியமா என்ன?

தமிழகம் முழுவதும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினால் அதுவே திமுகவில் மிகப் பெரிய மறுமலர்ச்சிதான். அத்தனை தொகுதிகளிலும் சாத்தியமில்லை என்றாலும் பாதித் தொகுதிகளிலாவது அப்படியான வேட்பாளர்களை நியமிக்கட்டும். தொகுதிக்கு முப்பது பேர் விருப்ப மனு கொடுத்திருந்தால் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு பேராவது திமுகவின் கொள்கைகளில் ஆழமான பற்றும், சமூக ஆர்வமும் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர் என்ன சாதியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். பணபலம் இல்லாதவராக இருந்துவிட்டுப் போகட்டும். அப்பேற்பட்ட வேட்பாளரகளை வைத்து தேர்தல் களத்தைச் சுத்திகரிக்கும் வேலையை திமுக முன்னெடுக்கட்டும். அதைத்தான் எழுதியிருந்தேன்.

எனக்குத் தெரிந்த வரையில் கோபி தொகுதிக்கு மட்டும் முப்பது பேர்களாவது விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். பழைய அமைச்சர் என்.கே.கே.பி ராஜா, குமணன், கள்ளிப்பட்டி மணி, ஓ. சுப்பிரமணியம், மணிமாறன், நகரச் செயலாளர் நாகராஜ் என்ற அந்தப் பட்டியலில் எனக்கு மற்றவர்களைப் பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால் குமணன் பற்றித் தெரியும். தாய்த் தமிழ் பள்ளியின் தாளாளர். முப்பது பேர்களைச் சேர்த்து பள்ளி தொடங்கி ‘தமிழில் பாடம் நடத்துவோம்’ என்கிற கொள்கைவாதி. ‘ஆங்கில மீடியம் வெச்சா நாலு காசு பார்க்கலாம்’ என்பதைக் காற்றில் விட்டுவிட்டு தமிழைப் பிடித்து தம் கட்டிக் கொண்டிருக்கிறார். மேலே சொன்ன அதே டீக்கடை எம்.எல்.ஏவின் மகன். கடலூரில் வெள்ள நிவாரணப் பணி என்றாலும், கடற்கரையில் சுனாமி என்றாலும் ராத்திரியோடு ராத்திரியாக பேருந்து பிடித்துச் செல்லக் கூடிய நல்ல மனிதர். முப்பது ஆண்டுகளாக கட்சியின் தீவிரமான தொண்டனாகவும் எளிமையான மனிதராகவும் உலவும் இத்தகைய சமூக ஆர்வலர்களுக்கு திமுகவில் வாய்ப்பு வழங்கப்படட்டும் என்று உள்ளூர விரும்புகிறேன். இப்படியான ஆட்கள் இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளிலும் வாய்ப்புக் கேட்டிருப்பார்கள் என்பதுதான் உண்மை. அவர்களில் வெகு சிலரையாவது தேர்ந்தெடுக்கட்டும்.

கொள்கைகளை முன்னிறுத்தி, மக்களின் பிரச்சினைகளை முன் வைத்து போராடும், சரியான வேட்பாளர்கள் நின்றால் மக்கள் ஏன் வாக்களிக்க மறுக்கப் போகிறார்கள்? ‘காமராஜர் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி?’ என்று கருப்பு காந்தியின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டிய கட்சிதானே திமுக? அப்பொழுது திமுகவின் சார்பில் மிராஸ்தார்களும், பண்ணையார்களுமா தேர்தலில் நின்றார்கள்? நேற்று முளைத்த கட்சிகள் ‘வெல்வதற்கான வாய்ப்புள்ள ஆட்களைத் தேடுகிறோம்’ என்று சொன்னால் அர்த்தமிருக்கிறது. திமுக மாதிரியான பலம் பொருந்திய கட்சிகள் பொருத்தமான ஆட்களை நிறுத்திவிட்டு அவர்களை வெல்ல வைக்க வேண்டும். அதுதான் கட்சிக்கும் நல்லது. கட்சியினருக்கும் நல்லது. தமிழகத்திற்கும் நல்லது. அதைவிட்டுவிட்டு கோடிகளைக் கொட்டுகிறவர்களுக்கும், கட்சியின் கொள்கைகளைக் கூடச் சொல்லத் தெரியாதவர்களுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் குறுநில மன்னர்களாகவும் குண்டர்களாகவும்தான் உருமாறுவார்கள். மக்கள் தொண்டர்களாகவா இருப்பார்கள்? இது குறித்து இன்னமும் பேசலாம்தான். ‘இது உட்கட்சி விவகாரம்’ என்று அடுத்த வம்புக்கு வருவதற்குள் நிறுத்திக் கொள்ளலாம்.