Feb 8, 2016

இந்து - இசுலாமியன்

இணையம் பரவலான பிறகு இந்து-இசுலாமிய வெறுப்பு வெகு ஆழமாக வேரூன்றிக் கொண்டிருக்கிறது. இரு பக்கத்து அடிப்படைவாதிகளும் தங்களின் ஆழ்மன வன்மத்தையெல்லாம் வெகு இயல்பாக எடுத்து வைக்கிறார்கள். இது ஒரு மோசமான சூழல். இருபது வருடங்களுக்கு முன்பு வரை எல்லாமும் சீராகத்தான் இருந்தது. எங்கள் ஊர்ப்பக்கங்களில் இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்துதான் வாழ்ந்தார்கள். ‘பாய்மார்கள்’ என்று சொல்வார்களே தவிர தனித்து வைக்கப்படவில்லை. நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள். ஐயர் வீடு, கவுண்டர் வீடு, செட்டியார் வீடு என்பது போல இசுலாமியர் வீடும் இன்னொரு வீடு. அவ்வளவுதான். அப்பொழுது இசுலாமியத் தாடி வைத்தவனை எல்லாம் சந்தேகமாகப் பார்க்கவில்லை. வீடு தர முடியாது என்று மறுத்ததில்லை. 

எங்களுக்குத் திருமணமான பிறகு விருந்துக்கு வந்தே தீர வேண்டும் என்று அழைத்தவர்களில் அபி சித்தப்பாவும் ஒருத்தர். ஹபிபுல்லா. அப்பாவின் நெருங்கிய நண்பர். அப்பாவை விட சின்னவர் என்பதால் எங்களுக்கு சித்தப்பா ஆகிவிட்டார். நாள் முழுவதும் ஈரோட்டில் அவர் வீட்டில் இருந்தோம். பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.  நண்பன் சாதிக்கின் திருமண அழைப்புக்காக அவனுடைய அம்மா, அக்கா என்று மூன்று நான்கு பேர்கள் கோபியிலிருந்து பெங்களூர் வீட்டுக்கு வந்து அழைப்பு வைத்தார்கள். கூரியரில் அனுப்பியிருக்கலாம். ஆனால் நேரில் வந்தார்கள். அவனுடன் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும் போது எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் திட்டிக் கொள்வோம். வேறுபாடாகப் பார்த்ததில்லை. முஜியின் திருமண நிகழ்வு ஏற்பாடுகளுக்காக இரவு முழுவதும் வேலை செய்த மூன்று இளைஞர்களில் நானும் ஒருவன். மற்ற இருவரும் இசுலாமியர்கள். திருமண மண்டபத்தில் எல்லோரும் உறங்கச் சென்ற பிறகு சேலத்துத் தெருவில் இரவு இரண்டு மணிக்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்து வேலையைச் செய்தோம். 

சாமானியர்களையும் சராசரிகளையும் எந்தக் காலத்தில் மதம் பிரித்து வைத்ததில்லை. இசுலாமியத் திருமணங்களில் சைவம் உண்கிறவர்களுக்காக தனியாக விருந்து பரிமாறுவது இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது. இல்லையென்று மறுத்தால் நிரூபித்துக் காட்ட முடியும். இசுலாமிய பெரியவரின் சமாதியில் திருநீறு மந்திரித்துக் கட்டுவதும், தர்க்காவில் கயிறு வாங்கிக் கட்டுவதும், கோவில்களில் இசுலாமியர்கள் பிரசாதம் வாங்கிக் கொள்வதும் வித்தியாசமாகப் பார்க்கப்படவில்லை. திருநீறு கொடுத்தால் வாங்கி கழுத்தில் பூசிக் கொள்கிற இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் வட இந்தியாவில் இந்து-இசுலாமிய வேறுபாடுகள் மிகத் தீவிரமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் தமிழகத்தில் குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய தமிழகத்தில் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. ஒருவிதமான சகோதரத்துவம் இருந்தது என்றால் மிகையில்லை. ஆனால் நிலைமை சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்து-இசுலாமியன் என்கிற அடிப்படையான வேறுபாடுகள் இப்பொழுது வேரூன்றிக் கொண்டிருக்கிறது. இசுலாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்து அதிரடிப்படை என்ற பெயரில் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு வீர விருது வழங்குகிறார்கள். இந்துக்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் இசுலாமியர்கள் மாநாடுகளை நடத்துகிறார்கள். இவையெல்லாம் தொண்ணூறுகளுக்குப் பிறகான அயோக்கியத்தனங்கள். தங்களை அறிவுஜீவிகளாகவும், சிந்தனாவாதிகளாகவும், வழிகாட்டிகளாகவும் கருதிக் கொள்கிற மேல்மட்ட ஆட்கள்- அது இந்துக்களிலும் சரி, இசுலாமியர்களிலும் சரி- அவர்கள்தான் மனிதர்களுக்கிடையே வேறுபாடு வளர வேண்டுமென தீவிரமாக இருக்கிறார்கள்.

சாமானியன் எல்லாக்காலத்திலும் சாமானியனாகத்தான் இருக்கிறான். சிவக்குமார் ரம்ஜான் கஞ்சி வாங்கிக் குடிப்பதையும், கமாலுதீன் கோவிலில் பொங்கல் வாங்கித் தின்பதையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. ஆனால் படித்தவன், நாலும் தெரிந்தவன் என்று சொல்லிக் கொள்கிற அழுக்கு நிறைந்த மனிதர்கள்தான் பழத்தில் விஷ ஊசியை ஏற்றி தின்னக் கொடுக்கிறார்கள். ‘அடுத்தவர்கள் மோசம்’ என்று நிறுவி தங்கள் அறிவுஜீவித்தனத்தை நிரூபிக்கிறார்கள். இத்தகைய சல்லிகள் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை முன் வைக்கும் போது அது கீழே இருக்கும் சாமானிய மக்களின் மனதிலும் விஷமாக ஊடுருவுகிறது. இதுதான் ஆபத்தான போக்கு. இசுலாமியன் என்றாலே தீவிரவாதி என இவனும், தாங்கள் தொடர்ந்து நசுக்கப்படுவதாக அவனும் கருதுகிறான். பாங்கு ஒலியை அதிரச் செய்து தனது வன்மத்தைக் கக்குகிறான். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தர்க்காக்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். 

இன்னமும் இருபத்தைந்து வருடங்களில் நிலைமை இன்னமும் மோசமாகக் கூடும். வெறியேற்றுகிற வேட்டை நாய்கள் ஊர் முழுவதும் பரவியிருக்கின்றன. இணையமும், ஃபேஸ்புக்கும், வாட்ஸப்பும் வேட்டை நாய்களுக்கான முழுச் சுதந்திரத்தை வழங்குகின்றன.  ‘உன் மதத்தை நீ போற்று; என் மதத்தை நான் போற்றுகிறேன்’ என்று சொல்லுகிற மனிதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் தங்களின் மதம் உயர்ந்தது என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. அடுத்தவர்களின் மதம் மோசம் என்று விதைக்கிறார்கள். அழுக்கு நிறைந்த மனிதர்கள் வாழும் வேட்டைக்காடாக இந்தத் தேசம் மாறிக் கொண்டிருக்கிறது. ‘அடுத்தவன் மோசம்’ என்று நிறுவ முயன்று வெறுப்பை விதைக்கும் மனிதர்களை எப்படி மனிதன் என்று ஏற்றுக் கொள்வது? 

தான் வாழ்கிற சமூகத்தில் நிலவுகிற வேறுபாடுகளைக் களைய முயற்சித்து அந்த நிலத்தை வாழ்வதற்கு உகந்ததாக மாற்ற முயற்சிக்கிறவன்தான் பக்குவமடைந்த சிந்தனையாளனாக இருக்க முடியுமே தவிர எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுக்கிறவனை எப்படிச் சிந்தனையாளனாக ஏற்றுக் கொள்வது? துருவேறிய மூளையுடன் ரத்தக் கறை படிந்த பற்களை புன்னகையில் மறைக்கும் யாருமே ஆபத்தானவர்கள்தான். சராசரிகள் எப்பொழுதும் போல வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் இவர்களும் கலந்துதான் வாழ்கிறார்கள். இந்தச் சராசரிகளின் ஒற்றுமையை வளர்க்காவிட்டாலும் தொலைகிறது. தேவையில்லாத வன்மத்தை விதைக்கிறார்கள். மங்கலத்து இசுலாமியனுக்கு அவிநாசி ஐயர் ஆகாதவர் இல்லை. ஆனால் இவர்கள் பேசியும் எழுதியும் பகைமையை ஊட்டுகிறார்கள்.

இந்துக்களுக்கென தீவிர இயக்கங்களும், இசுலாமியர்களுக்கென தீவிர இயக்கங்களும் பெருகியும் வளர்ந்தும் பாய்ச்சுகிற தீயானது எதிர்வரும் தலைமுறையினரைத் திணறடிக்கப் போகிறது. பெயர் தெரியாத புத்தம் புது நோய்கள், எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள், வாயு மண்டலத்தில் நிறையும் கரியமிலவாயு, உயரும் கடல்மட்டம், அணுகுண்டுகள், ராணுவப் பகைமைகள், தீவிரவாதம், விபத்துக்கள், கண் மண் தெரியாத போட்டி என இந்த உலகமே மெல்ல மெல்ல பிண மேடையாக மாறிக் கொண்டிருக்கிற சமயத்தில் அறிவாளிகளும் சிந்தனையாளர்களும் படித்தவர்களும் மதத்தின் பெயரால் வெறுப்பு விஷத்தை உமிழ்வது எதிர்கால சந்ததியினருக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம். சற்றும் மனிதத்தன்மையற்ற செயல்.

அறிவுஜீவிகளைவிடவும் சாமானியர்கள் அதிகமாக நிறைந்திருந்த காலத்தில் எல்லாமும் சுமூகமாகத்தான் இருந்தன. எப்பொழுது சாமானியர்களின் எண்ணிக்கையைவிடவும் அறிவுஜீவிகளின் எண்ணிக்கை அதிகமானதோ அப்பொழுதிருந்துதான் வன்மமும் விஷமும் வெறியும் கொழுந்துவிட்டு துளிர்க்கின்றன. உள்ளபடியே சற்று பதற்றமாகத்தான் இருக்கிறது. அழுக்கேறிய மனிதர்கள் மூச்சுத் திணறச் செய்கிறார்கள். முதலில் நம் அழுக்கைக் கழுவுவோம். பிறகு உபதேசம் செய்வோம்.