சில கவிதைகள் திடீரென வெளிச்சம் பெற்றுவிடும். கவிஞர் மகுடேசுவரின் கவிதையொன்றை பாராட்டி கமல் ட்விட்டரில் எழுத அது இப்பொழுது மிகப்பிரபலமான கவிதையாகிவிட்டது. கவிதைகளில் ஒரு வகையுண்டு. சற்றே நெகிழச் செய்யக் கூடிய கவிதைகள். அவை பெரும்பாலும் வாசிப்பு பழக்கமில்லாதவர்களைக் கூட உணர்ச்சிவசப்படச் செய்து ஈர்த்துவிடும். இந்தக் கவிதை அப்படியானது. பல அடுக்குளாலான நம் மனதின் மேல் அடுக்குகளில் மெலிதாகக் கீறச் செய்து ‘அருமை’ என்று சொல்லச் செய்துவிடுகிறது. புரிந்து கொள்ள எந்தச் சிக்கலுமில்லாததால் வாசிக்கிறவர்கள் திணறுவதில்லை. முடிக்கும் போது நெக்குருகிப் போகிறார்கள்.
கவிதை இதுதான் -
உங்கள் திருமணத்தன்று
நான் எங்கிருந்தேன்?
மகளின் கேள்விக்கு
விடைகூற முயன்றேன்.
அந்தத் தீயின்
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்.
எம் தலைமீது தூவப்பட்ட
அட்சதையில்
ஒரு மணியாக இருந்தாய்.
சூடிய மாலை நறுமணத்தில்
இருந்ததும் நீதான்.
தாத்தா பாட்டியரின்
கண்களில்
நீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.
உன் தாயைக் கரம்பற்றிய
என் உள்ளங்கைக்குள்
வெப்பமாக இருந்ததும்
நீயே.
கவிதையில் உண்மை இருக்க வேண்டும் என்பார்கள். திருமணத்தின் போது அந்தக் குழந்தை எங்கேயிருந்தது என்று சொல்லவேயில்லை; பிறகு எப்படி கவிதையில் உண்மை இருக்கிறது என்று யாராவது கேட்கக் கூடும். மகள் தந்தையிடம் வந்து ‘நான் எங்கே இருந்தேன்?’ என்று கேட்கும் போது இப்படியான மேம்போக்கான பதிலைத்தான் பெரும்பாலான தந்தையரால் சொல்ல முடியும். அந்த உண்மையைத்தான் இந்தக் கவிதை பதிவு செய்கிறது. ஆக இந்தக் கவிதையில் உண்மையில்லை என்றெல்லாம் நிராகரிக்க முடியாது. வாசிக்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கேள்வியைத் தங்களின் குழந்தைகளிடமிருந்து எதிர்கொண்டிருக்கக் கூடும். அந்த வகையில் வாசகரின் அனுபவத்தோடு நெருங்குகிறது.
இந்தக் கவிதை பெறுகிற வெளிச்சத்தைப் பார்க்கும் போது நா.முத்துக்குமாரின் ‘தூர்’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. கணையாழி விழாவொன்றில் சுஜாதா முத்துக்குமாரின் கவிதையையும் கவிஞரையும் வெகுவாகப் பாராட்ட முத்துக்குமாருக்குத் தனித்த கவனம் கிடைத்தது.
வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே
‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க.
தூர் கவிதையும், மகுடேசுவரனின் கவிதையும் கிட்டத்தட்ட ஒரே வகையிலான கவிதைகள்தான். கவிதைகளின் நுட்பங்கள் எதுவும் திறமையாகக் கையாளப்படாமல் ஒரு சம்பவத்தை அல்லது ஒரு உரையாடலை அதீத மிகையுணர்ச்சி இல்லாமல் பதிவு செய்கின்றன. கவிதைகளின் வெளியில் இத்தகைய மனப்பதிவுகளுக்கும் இடமுண்டு அல்லது காட்சிப்பதிவு என்றும் சொல்லலாம். கவிதை முடிகிற இடத்தில் வாசிக்கிறவனை ‘அட’ என்று சொல்ல வைக்கின்றன.
கவிதையின் வடிவமைப்பு, நுட்பம் போன்ற கவிதைகளுக்கான கருவிகளுடன் விமர்சன ரீதியில் இத்தகைய கவிதைகளை அணுகும் போது சிலாகிக்க ஏதுமில்லை என்றுதான் தோன்றும். ஆயினும், இத்தகைய கவிதைகளை இடது கையில் புறந்தள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். தம்மை இலக்கிய மிராஸ்தார்களாக நினைத்துக் கொள்கிறவர்கள் இத்தகைய கவிதைகளை நோக்கி பழிப்புக் காட்டக் கூடும். அது அவசியமற்றது. கவிதை மீதான பாராமுகம் கொண்டவர்களைக் கூட கவிதையை நோக்கித் திரும்பிப் பார்க்கும் வித்தையை இத்தகைய கவிதைகளால்தான் செய்ய முடியும். நவீன கவிதைக்கும், வெறும் உணர்ச்சிவசப்படுதலான கவிதை மாதிரிகளுக்கும் இடைப்பட்ட வகையிலானதான இத்தகைய கவிதைகள் பாலத்தின் வேலையைச் செய்கின்றன. அந்தப் பக்கமாக நிற்கும் சிலரைப் பிடித்து கவிதையின் உலகத்துக்குள் இழுத்துவிடுகின்றன. அதன் பிறகு பொறுமையும் ஆர்வமும் இருக்கக் கூடிய வாசகன் நல்ல கவிதைகளைத் தேடிக் கொள்வான்.
அந்த விதத்தில் இத்தகைய கவிதைகள் எப்பொழுதும் வரவேற்கத்தக்கவை.
5 எதிர் சப்தங்கள்:
மிராசுதாரே தேவலாம் இதுக்கு...
"உண்மையில் பெண் இருக்க்கவேண்டிய இடம் மலர் மாலையிலும், அட்சதையிலும் அல்லது கைவெப்பதிலுமா அல்லது உள்மனமா? சுந்தரகிருஷ்ணன், மதுரை.
இது மாதிரியான ‘அபத்த’ உணர்ச்சிக் கவிதைகளை இவர்கள் எல்லாம் இன்னும் எத்தனை காலத்திற்கு எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்களோ? எப்படிக் கவிதை எழுதுவது என்பதை பிரமிள், ஆத்மாநாம், நகுலனிடமிருந்து இவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஏன் காளி-தாஸ் என்னும் ஸ்டெல்லாபுரூஸ் கூட அற்புதமான (உணர்ச்சி பொங்கும்) கவிதைகளை எழுதியிருக்கிறார்.
இந்தக் கவிதைகள் மிக மிகச் செயற்கையாக இருக்கின்றன. நா.முத்துகுமார் கொஞ்சம் தேவலாம். மகுடேசுவரன் மிகை உணர்ச்சிக் கவிதை. கமல் பாராட்டி விட்டால் மட்டும் அது நல்ல கவிதையாகி விடுமா என்ன?
கவிஞரான நீங்களே மிகையுணர்ச்சிக் கவிதைகளை, உயர்விநவிற்சிக் கவிதைகளை - அதுவும் இந்தக் காலத்தில் - ஆதரிப்பது வியப்பைத் தருகிறது!
ஜெயமோகன் கிண்டல் செய்திருப்பது சரிதான். :-)
கவிதைகளை நோக்கி ஒரு வாசகனை திருப்புவதோடு மட்டுமின்றி சிலரை எழுதவும் மகுடேஷ்வர் மற்றும் முத்துக்குமார் கவிதைகள் தூண்டக்கூடும். Mr. Anonymous மகுடேஷ்வர் போல சிந்தித்திருக்க கூட வாய்ப்பில்லை, தாங்கள் ஏதேனும் எழுதி இருந்தால் பகிரவும்.
வேரா? வியர்வை நீரா?
ஓ புளிய மரமே !
என்னளவில் நீயே எனக்கு போதிமரமே!
சுள்ளி பொறுக்கினோமே
சுடும் நெருப்பினில் வைத்தோமே
பழத்தை சப்பி சுவைத்தோமே
பழ ரசத்தை ரசித்து குடித்தோமே
கிளையை வளைத்து ஒடித்தோமே
கிளித்தட்டு ஒளிந்து ஆடினோமே
நிழலில் அமர்ந்து இருந்தோமே
நின்று சில மணிநேரம் பேசினோமே
பிசினை பிய்த்து பார்த்தோமே
பிடித்த புத்தகத்தில் ஒட்ட வைத்தோமே
இலையை இழுத்து பார்த்தோமே
இளந்தளிரை நசுக்க முனைந்தோமே
உன் நிழலில் - பகலில் படுத்து உறங்கினோமே
உலகிருலில் உறங்க பயந்து ஒதுங்கினோமே
பட்டை உரிய நின்றாய்
என் - பாட்டன் வயதை சொன்னாய்
பாத்தி கெட்ட மறந்தோம்
பனி (தூய்மை) நீரை ஊற்றாமல் கிடந்தோம்
ஊரின் வழியில் நின்றாய்
ஊருக்கு வழியை சொன்னாய்
கல்லெடுத்து அடித்தோமே
கனியெடுத்து கடித்தோமே
புளிப்புச் சுவை கண்டோமே
புதுப்பல் கூச்சம் கொஞ்சம் உணர்ந்தோமே
பல்முத்து புளியங்கொட்டையில் எடுத்தோமே பருவமடைந்த மங்கைகளுடன் சிறுவயதில் பல்லாங்குழி சிலமுறை ஆடினோமே
பள்ளிக்கூடம் விட்டதும் வந்தோமே
உன்மீது- பலமுறை ஏறி ஆடினோமே
பலகை செய்து பார்த்தோமே
பட்டுப் போகாமல் நின்றாயே
தண்ணீர் நாங்கள் தரவில்லையே
தளிர்க்கும் முயற்சியை நீ விடவில்லையே
உரத்தை நாங்கள் இடவில்லையே நீயோ - உயரே வளர மறக்கவில்லையே
நகர வளர்ச்சியால்
வாயுக்கள் பல தந்தோமே
நகராத உயர்ச்சியினால் O2 -வை மட்டுமே தந்தாயே
இன்பங்களை நீயே கொடுத்தாயே இடர்பாடுகளை யாமே கொடுத்தோமே
புயலில் புதுப்பொலிவுடன் நின்றாயே
புது மடைவெள்ளத்தில் மலை போன்று நின்றாயே
இன்றும்
உயிருடன் நீ இருக்க காரணம் உன் ஆணிவேரா?
அல்லது
உன் மேல் உயிர் வைத்த என் முன்னோரின் வியர்வை நீரா?
இயற்கை சீற்றங்களை பல கடந்தாயே இயந்திர மனித பகையில் பலி கொண்டாயே
வாய் இருந்தால் வானளவு வஞ்சிருப்பியோ
பேசியிருந்தால் பேரண்டம் வரை முறையிட்டுருப்பியோ
உன் விதை எடுத்து வைத்தேன் நிலத்தில் உன் சந்ததி நிலைத்து நிற்கும் மீண்டும் உலகத்தில்
இப்படிக்கு
மு.பாலசுப்ரமணியன் SI
Post a Comment