Feb 8, 2016

நாயகன்

ஒரு படத்தின் ஷூட்டிங். என்ன படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. பரம ரகசியம். பிரபுதான் நாயகன். எங்கள் ஊரில் படம் பிடித்தார்கள். பச்சையும் தண்ணீருமாக இருந்ததால் அந்தக் காலகட்டத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக எங்கள் ஊரில்தான் அதிகமான படப்பிடிப்புகள் நடக்கும். பாக்யராஜ் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு பல வருடங்களுக்கு இப்படித்தான். ஏகப்பட்ட படப்பிடிப்புகள். ஊர் ராசியின் காரணமாகவோ என்னவோ ஒரேயொரு பாடலாவது வந்து எடுத்துச் செல்வார்கள். 

கோபிப் பகுதியில் படப்பிடிப்பு நடக்கும் போது ‘வேடிக்கை பார்க்கிறேன் பேர்வழி’ என்று கூட்டம் மொய்க்காது என்பது ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கக் கூடும். அநேகமாக பெரியவர்கள் ஏகப்பட்ட படப்பிடிப்புகளைப் பார்த்து சலித்துப் போயிருக்கக் கூடும். எனக்குத் தெரிந்து சரத்குமார் படப்பிடிப்புகளின் போது மட்டும் சற்று அதிகக் கூட்டமிருக்கும். ‘உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறோம்’ என்று சொன்னால் பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுப்பார். நாடார்களாக இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே கிடைக்கும். மற்றபடி ரஜினி, சிரஞ்சீவி கூட வயல்வெளியில் தனித்து அமர்ந்திருந்து பார்த்திருக்கிறேன். 

ஒரு சமயத்தில் அருகருகே இரண்டு பட ஷூட்டிங்குகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு படப்பிடிப்பில் மன்சூர் அலிகானும் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வாய்த் துடுக்கு அதிகம் அல்லவா? வேடிக்கை பார்க்க வந்தவர்களிடம் வாயைக் கொடுத்துவிட்டார். மன்சூர் பேச்சில் கடுப்பாகி முரட்டுத்தனமாகக் கிளம்பியவர்கள் ஏழெட்டுப் பேரை அழைத்து வந்துவிட்டார்கள். ‘அவன் மண்டையைக் கிழிக்காம போக மாட்டோம்’ என்று திட்டு வாங்கியவன் ஒற்றைக் காலில் நிற்கிறான். மன்சூர் கொஞ்சம் கெத்து காட்டினார். ‘அடிச்சுடுவியா? என்னை அடிச்சுடுவியா?’ என்று பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் கடுப்பான ஒருவன் கல்லை எடுத்து வீச வந்துவிட்டான். ரஸாபாஸம் ஆகிவிடாமல் தடுப்பதற்காக பக்கத்து படப்பிடிப்பில் இருந்த பிரபு களமிறங்கி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் மன்சூர் மன்னிப்புக் கேட்டு பிரச்சினை அமைதியானது.

அந்தச் சம்பவம் நடந்த அதே வயல்வெளியில்தான் அடுத்த சில நாட்களுக்கும் படப்பிடிப்பு நடந்தது. அப்பொழுது பள்ளி விடுமுறை. நடவு நட்டு வயல் வெளி பச்சையாக இருந்தது. விடுமுறை நாட்களில் படப்பிடிப்பு பார்க்கச் சென்றால் முழுப் பொழுதும் காலியாகிவிடும். மதிய உணவையும் அங்கேயே முடித்துக் கொள்ளலாம். கம்பெனி சாப்பாடு. யாருமே எதுவும் கேட்டதில்லை. 

அன்றும் அப்படித்தான் வழக்கம் போல நாங்கள் மூன்று பேரும் குளித்துக் கொண்டிருந்தோம். படப்பிடிப்புக் குழாமிலிருந்து யாரோ வந்து ‘டேய் நடிக்கிறீங்களாடா?’ என்றார்கள். எதையுமே யோசிக்கவில்லை. ‘சரிங்கண்ணா’ என்று சொல்லிவிட்டோம். எங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். எப்படியும் களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசன் மாதிரி ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தது.

வீட்டிற்கு ஓடிச் சென்று நல்ல சட்டையாகப் போட்டுவிட்டு வந்துவிடலாம் என்று பேசிக் கொண்டோம். வீட்டிற்கும் வாய்க்காலுக்கும் இரண்டு கிலோமீட்டர் இருக்கும். அப்பொழுதெல்லாம் ஒரே ஓட்டம்தான். ‘போய் துணி மாத்திட்டு வருட்டுங்களாண்ணா?’ என்று வேல்முருகன்தான் கேட்டான். ‘அதெல்லாம் வேண்டாம்டா...இங்கேயே இருங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவர்களிடமே நல்ல துணியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். அதன்பிறகு படப்பிடிப்புக் குழுவிலிருந்து ஒருவர் வந்து பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார். 

‘ஏனுங்கண்ணா?’ என்றதற்கு 

‘நீங்க கிளம்பி போய்டுவீங்கன்னுதான்’ என்றார். இயக்குநர் அவரைக் காவலுக்கு அனுப்பியிருக்கிறார். அப்பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்.

‘அதெல்லாம் போகமாட்டோம்’ என்று சொல்லிவிட்டு கடப்பாரை நீச்சலையெல்லாம் அவரிடம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தோம். அவர் ஏதேதோ கேள்விகளைக் கேட்டபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்.

விஜியன் ‘என்ன சீன்?’ என்று கேட்டான்.

அவர் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார். முக்கால் மணி நேரத்திற்குப் பிறகாக நாங்கள் குளித்துக் கொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே கேமிராவைக் கொண்டு வந்தார்கள். எங்களைக் காவல் காத்தவர் நாங்கள் மேலே வரவே அனுமதிக்கவில்லை. என்ன காட்சி, என்ன உடை என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இருந்தாலும் உள்ளுக்குள் கிளுகிளுப்பாக இருந்தது. 

வேல்முருகன் ஆள் சிவப்பாக அழகாக இருப்பான். எப்படியும் அவனுக்குத்தான் நல்ல காட்சியாகக் கிடைக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

காட்சியைச் சொல்லிவிடுகிறேன் -

நாயகி வாய்க்கால் கரையோரமாக ஓரமாக தனது தோழிகளுடன் நடந்து வருவார். நாயகியின் பெயரைச் சொன்னால் படத்தைக் கண்டுபிடித்து யாராவது ஒருவர் மானத்தை வாங்கிவிடக் கூடும். அதனால் ரகசியமாகவே இருக்கட்டும்.  அந்தச் சமயத்தில் நானும் மற்ற இரண்டும் பொடியன்களும் வாய்க்காலில் எட்டிக் குதிக்க வேண்டும். அப்படியொரு காட்சியை இயக்குநர் யோசித்திருந்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் குளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு முடிவுக்கு வந்திருக்கக் கூடும். இந்தக் காட்சியைச் சொன்னவுடன் சப்பென்றாகிவிட்டது. இருந்தாலும் கால்ஷீட் கொடுத்தாகிவிட்டது. மறுக்க முடியவில்லை. இயக்குநர் நாயகியிடம் விவரத்தைச் சொன்னார். நாயகி அவள் நிற்க வேண்டிய இடத்துக்கு வந்த பிறகு எங்களைக் காவல் காத்தவர் இயக்குநரிடம் என்னவோ சொன்னார்.

‘பொடியன்களா...சொருவல் அடிச்சீங்களாமே...அப்படியே அடிக்கிறீங்களா?’ என்றார். அந்த காவலரிடம் சொருவல் அடித்துக் காட்டியது தப்பாகப் போய்விட்டது. சொருவல் என்றால் மோரி மீது நின்று தலை கீழாக எட்டிக் குதிக்கிற சேட்டை. அதற்கும் ஒத்துக் கொண்டோம்.

எல்லாம் தயாரான பிறகு ‘ம்ம்..ஜட்டியைக் கழட்டுங்க’ என்றார். இதைக் கேட்டவுடன் தலையில் தென்னம்மட்டை டமார் என்று விழுந்தது மாதிரி இருந்தது. சுற்றிலும் நாயகி, அவளின் தோழிகள் என பெருங்கூட்டம் நிற்கிறது. வேல்முருகனுக்கு விக்கித்துப் போய்விட்டது. எனக்கு அதைவிடவும். விஜியன் மட்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறான். அவர்களிடம் எப்படி மறுப்புச் சொல்வது என்றும் தெரியலை. 

‘அட யோசிக்காதீங்க’ என்று திரும்பவும் சொன்னார்கள்.

‘அண்ணா அம்மணக் குண்டியாவெல்லாம் நடிக்க முடியாது’ என்று வேல்முருகன் தான் துணிந்து சொன்னான். ஆனால் அவர்கள் விடவில்லை. 

‘முகமெல்லாம் தெரியாதுடா’ என்றனர். 

முகம் தெரியவில்லை என்றால் எதற்கு நடிக்க வேண்டும் என்று பயங்கரக் குழப்பம். 

‘தம்பிகளா குதிங்கடா...பணம் வேணும்னா வாங்கித் தர்றேன்’ என்றார் முதலில் வந்து கேட்டவர். அது ஒருவித கெஞ்சல் தொனி. இயக்குநர் தன்னைக் கடித்து வைத்துவிடக் கூடும் என்ற பயம்.

பணம் பிரச்சினையேயில்லை. ஆனால் மானம்? ஊரே பார்க்குமே. ஆனால் தப்பிக்க வழி இருப்பதாகவே தெரியவில்லை. ஒரே ஓட்டமாக ஓடிவிடலாம் என்றால் துணி அத்தனையும் வேறு இடத்தில் இருந்தது. வேல் முருகனைப் பார்த்தேன். அவன் கழட்டிவிடலாம் என்றான். நடிகையைப் பார்த்தேன். அவளுடைய தோழிகளை எல்லாம் பார்த்தேன். எங்கள் பஞ்சாயத்து அவர்களுக்கு பெரும் சிரிப்பை வரவழைத்திருந்தது. 

‘டேய் சீக்கிரம்டா...வெயில் போறதுக்குள்ள எடுத்தாகணும்’ என்றார் இயக்குநர். கற்புக்கரசன்களைத் துகிலுரிவதில் அவர் உறுதியாக இருந்தார்.

தயாரானோம். கேமிரா ரோல் ஆனது. காட்சியின்படி நாயகி தனது தோழிகளுடன் சிரித்துக் கொண்டே நடந்து வந்தாள். அவள் எதற்காகச் சிரித்தாலோ தெரியவில்லை. ஓடி வந்து சொருவல் அடித்தோம். இந்த சினிமாக்காரர்கள் இருக்கிறார்களே- ஒரு தடவையில் திருப்தி அடையவே மாட்டார்கள். மீண்டும் மீண்டும் ‘ஆக்‌ஷன் கேமிராதான் கட்’தான். பத்து முறையாவது சொருவல் அடித்திருப்போம். அப்புறம்தான் ஆடை அணிய அனுமதித்தார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு ‘அண்ணா.... காசுங்கண்ணா’ என்று வேல்முருகன் கேட்டான்.

‘நாளைக்கு இங்கதான் ஷூட்டிங்’என்றார்கள்.

அடுத்த நாளும் சென்று பார்த்தோம். செல்வதற்கு முன்பாகவே என்ன ஆனாலும் அம்மணமாக நடிப்பதில்லை என்று பேசி முடிவு செய்து கொண்டோம். அதில் உறுதியாக இருப்பது என்று சத்தியமும் எடுத்துக் கொண்டு வீராப்பாகச் சென்று பார்த்த போது அங்கே அவர்கள் வரவே இல்லை. ‘ஏமாத்திட்டானுகடா’ என்று கடுப்பாகி ‘படம் ஓடக் கூடாது’ என்று ஏரிக்கரை விநாயகருக்கு ஒரு டப்பா தண்ணீரை ஊற்றி சாமி கும்பிட்டோம். படம் வெளியானது. எங்கள் பிரார்த்தனை வெற்றியடைந்தது. படம் ஓடவில்லை. நல்லவேளையாக அந்த நிர்வாணப் பொடியன்கள் நாங்கள்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை.