Feb 5, 2016

அன்பு

நேற்று வீட்டுக்கு பார்சல் வந்திருந்தது. ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. மாலையில் அலுவலகம் முடித்து வந்த போது கொடுத்தார்கள். விலையுயர்ந்த அலைபேசி. என்னுடைய பெயரிலேயே ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நான் செய்யவில்லை என்று நன்றாகத் தெரியும். வேறு யாரோ அனுப்பி வைத்திருக்கிறார்கள். அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி. ஆனால் இத்தகைய விலையுயர்ந்த பரிசுகளுக்கு நான் தகுதியானவனாக இல்லை. தகுதியில்லை என்றால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிற பக்குவம் இல்லை. இன்று ஒரு அன்பளிப்பை வாங்கிக் கொண்டால் நாளைக்கு வேறு யாராவது அனுப்பமாட்டார்களா என்று எதிர்பார்க்கிற சராசரி மனம் என்னுடையது. யாரும் அனுப்பவில்லையென்றால் ஏங்கத் தொடங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

அன்பை வெறும் பொருட்களாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. Materialistic ஆக மாற்றிவிடுவது மாதிரி. தங்களின் மனப்பூர்வமான ஆசிர்வாதமும் அன்பும் போதுமானது. இதைப்  பேச்சுக்காகச் சொல்லவில்லை. 

எனக்கும் அன்பளிப்பு அனுப்பினார்கள் என்பதை ஊருக்கே அறிவிப்பது போல இதை வெளிப்படையாக எழுத வேண்டியதில்லைதான். ஆனால் யார் அனுப்பினார்கள் என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை. நிச்சயமாக நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடை அனுப்பி வைத்தவர்களில் யாராவதாகத்தான் இருக்க முடியும். ரசீதுகளில் வீட்டு முகவரி இருக்கிறது. வேறு இடங்களில் பெங்களூர் முகவரியை எங்கும் பதிவு செய்ததில்லை. தயவுகூர்ந்து இரண்டொரு நாட்களில் யார் அனுப்பியது என்ற தகவலை அனுப்பி வையுங்கள். திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறேன். ஒருவேளை விவரங்களை அனுப்பவில்லையென்றால் திங்கட்கிழமையன்று அந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி வைத்துவிடுவேன். தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தங்களின் அன்பைப் ஏற்றுக் கொள்கிறேன். ஐந்து ரூபாயைக் கூட அடுத்தவர்களுக்குக் கொடுக்க யோசிக்கும் போது பெயரைக் கூடச் சொல்லாமல் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கான பரிசுப்பொருளை அனுப்பி வைக்கிறார்கள் என்றால் எவ்வளவு மரியாதையும் அன்பையும் வைத்திருப்பீர்கள் என்று தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன். சந்தோஷமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

ஆனால், இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. இப்பொழுதுதான் வாழ்க்கையின் திசை புலனாகவே தொடங்கியிருக்கிறது. இந்தத் தருணத்தில் சிறு சிறு சஞ்சலங்களுக்கு மனதை ஆட்படுத்தினால் திசை மாறிவிடும் வாய்ப்புகள் நிறைய உண்டு. திசை மாறுகிற மனதை இழுத்துப் பிடிக்கிற பக்குவம் இன்னும் கைகூடவில்லை. 

நாம் செய்து கொண்டிருப்பது அத்தனையும் சாதாரணக் காரியம் என்கிற மனநிலை இருக்கும் வரைக்கும்தான் ஆத்மார்த்தமாகச் செய்ய முடியும். அது எந்தக் காரியமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ‘நாம் செய்வது அசாதாரணக் காரியம்’ என்ற மனநிலை வந்துவிட்டால் அதன் பிறகு கடினம். இத்தகைய விலையுயர்ந்த அன்பளிப்புகளும், புகழ்ச்சிகளும் அப்படியான மனத்தோற்றத்தை உருவாக்கி விடக் கூடும். 

ஒரு சமானிய மனிதனின் அத்தனை உணர்ச்சிகளும் உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன. ஏதாவதொரு உணர்ச்சி கிளறிவிடப்பட்டு பாதையை விட்டு விலகிவிடக் கூடாது என்று பயப்படுகிறேன் என்பதுதான் உண்மை. வெளியுலக சஞ்சலங்களிலிருந்தும் சலனங்களிலிருந்தும் மனது அலைபாயாமல் தடுக்க இன்னும் வெகு காலம் பிடிக்கக் கூடும். அதுவரைக்கும் இறுக்கமாக இருப்பதில் தவறேதுமில்லை. அதனால்தான் இதை அனுப்பி வைத்துவிட விரும்புகிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.