Feb 4, 2016

நம்பிக்கை

கல்லூரியில் எல்லோரையும் போலத்தான் அவனும் படித்தான் என்று சொல்ல முடியாது. ஆரம்பத்தில் படு சுமாராகத்தான் இருந்தான். மூன்றாவது செமஸ்டரில் இரண்டு விக்கெட். பதறவே இல்லை. ‘அரியர் வைக்காம பாஸ் செஞ்சு என்னடா சாதிக்கப் போறோம்?’ என்கிற வகையறா அவன். ஊர் சுற்றினான். சினிமா பார்த்தான். கடலை வறுத்தான். எல்லோரும் உருண்டு புரண்டு படித்த தேர்வுகளுக்கு முந்தின இரவில் இழுத்துப் போர்த்தித் தூங்கினான். அசரவே இல்லை. உருப்படாமல்தான் போகப் போகிறான் என்று அடுத்தவர்கள் கங்கணம் கட்டினார்கள். ஆனால் அவன் தெளிவாக இருந்தான்.

கண்ட்ரோல் தியரி மண்டையிலேயே ஏறவில்லை என்று மற்றவர்கள் குப்புறடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இவன் மட்டும் மோட்டார் ஒன்றுக்கு வயரிங் செய்து கொண்டிருந்தான். கணிதம் காலை வாரிக் கொண்டிருந்த போது கலக்கமேயில்லாமல் சில பல மின்னியல் சர்க்யூட்களை வடிவமைத்துக் கொண்டிருந்தான். குமார்- எங்கள் ஊரில் பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படித்தான். சேலத்தில் வேறொரு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தான். 

ஒரே நம்பிக்கைதான் குமாருக்கு- ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே கறிக்கு உதவாது. 

சேர்த்து வைத்திருந்த அரியர்ஸை எல்லாம் ஐந்தாவது செமஸ்டரிலிருந்து காலி செய்யத் தொடங்கினான். நான்கைந்து இருந்தன. நான்காம் ஆண்டு ஆரம்பிப்பதற்குள் சுத்தபத்தமாக முடித்துவிட்டான். அதன் பிறகு வேலைக்குத் தயாராக வேண்டும் வேண்டும் அல்லவா? முதலில் எழுத்துத் தேர்வு. அந்தக் கிணற்றைத் தாண்டினாலே கிட்டத்தட்ட வேலை வாங்கிய மாதிரிதான். ஆனால் அதுவொன்றும் புரிந்த கொள்ளவே முடியாத சூத்திரம் இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். வேலைக்குச் செல்ல விரும்பும் பத்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் பழைய வினாத்தாள்களை கூகிளாண்டவரிடம் கேட்டால் போதும் அள்ளியெடுத்துக் கொண்டு வந்து தருவார். டிசிஎஸ், விப்ரோ, இன்போஸிஸ் போன்ற பெருந்தலைகளைப் பட்டியலில் வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் திரும்பத் திரும்ப ஒரே கேள்விகளைத்தான் கேட்டிருப்பார்கள் அல்லது ஒரே வகையிலான கேள்விகள். பத்து வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பழகினால் பதினோராவது வினாத்தாளுக்கு கண்களை மூடிக் கொண்டு பதில் சொல்லலாம். குமார் எங்களுக்கெல்லாம் சொல்லித் தரத் துவங்கியிருந்தான். அவனது கல்லூரியிலிருந்து எழுத்துத் தேர்வில் வெற்றியடைந்த பதினேழு பேர்களில் அவனும் ஒருவன்.

எல்லோருக்கும் வாயடைத்துப் போனது. வகுப்பில் முதல் இடத்தில் இருந்த பெண்களை- எப்பொழுதுமே பெண்கள்தானே முதல் சில இடங்களில் இருப்பார்கள்- திருப்பியனுப்பியிருந்தார்கள். அதன் பிறகு யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் வேலைக்கு சேர்வதைப் போலத்தான். அடித்து நொறுக்கிவிட்டான். குமாருக்கு ஆங்கிலம் பிரச்சினையில்லை. அடித்துபிடித்து பேசிவிடுவான். பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியத்தில்தான் படித்தான். ஆனால் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே பிற கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்து கொள்வான். தெரிகிறதோ இல்லையோ- உருட்டி மிரட்டி அரைகுறை ஆங்கிலத்திலேயே பேசுவான். ஆரம்பத்தில் தமிழிலேயே ஆங்கிலம் பேசி கலங்கடித்தவன் பிறகு ஆங்கிலத்திலேயே ஆங்கிலம் பேசியதெல்லாம் தனிக்கதை. 

வளாக நேர்காணலை நடத்த வரும் எல்லோருக்கும் அறிவு சுடர்விட்டு எரியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. நமக்கு மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களாகத்தான் இருப்பார்கள். நமக்கு அவர்களை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குமார் எங்களுக்கெல்லாம் ஒரு சூட்சமத்தைச் சொல்லிக் கொடுத்திருந்தான். வலை விரித்தல். அதாவது நேர்காணல் நடத்துபவர்களுக்கு வலையை விரிக்க வேண்டும். முதல் மூன்றாவது நிமிடத்திலேயே அவர் எப்படிப்பட்ட ஆள் என்பதைக் கண்டுபிடித்துவிட வேண்டும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. தொண்ணூற்றொன்பது சதவீதம் நேர்காணல்களில் ‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்றுதான் கேட்பார்கள். இது நமக்கான வாய்ப்பு. வசவாக பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டையாகப் பேசாமல் ஒரு குட்டிக் கதையொன்றைத் தயாரித்து வைத்திருப்பது அவசியம். ஒரு சோகம், ஒரு நகைச்சுவை, ஒரு செண்டிமெண்ட் என்று கலவையடித்து ஒன்றரை அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் சொல்லிவிட வேண்டும். இந்தக் கதை சொல்லும் போதே எதிராளியின் முகபாவத்தை வைத்து ஆளை எடை போட்டுவிடலாம்.

சொல்ல எளிமையாகத்தான் இருக்கிறது. நேர்காணல் நடக்கும் இடத்தில் நமக்கிருக்கும் டென்ஷனில் இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி வரும்தான். அதற்குத்தான் பயிற்சி அவசியம். கண்ணாடி முன்னாடி பேசிப் பார்ப்பதிலிருந்து, நண்பர்களாகவே மாதிரி நேர்காணல்களை நடத்துவது வரை பயிற்சி செய்து பார்த்திருக்க வேண்டும். இந்த வேலை கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றால் அடுத்த வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற கெத்து இருந்தால் மிக அவசியம். அது மட்டும் இருந்துவிட்டால் பதற்றமே வராது. இப்படி பதற்றம் இல்லாமல் இருந்தால்தான் வலையை விரிக்க முடியும். வலையை விரித்தால்தான் வேலையை அமுக்க முடியும். 

இது ஜூஜூபி சமாச்சாரம்தான். ‘இட்லி சுடுவது எப்படி?’ என்று கேட்கும் போது நமக்கு பதில் தெரியவில்லையென்றால் ‘தெரியாது’ என்று பொக்கையாக முடித்துவிடக் கூடாது. வடை சுடவாவது தெரிந்திருக்கும் அல்லவா? ‘இட்லியை வடை கூட சேர்ந்து சாப்பிட்டால் டக்கராக இருக்கும்’ என்று பதிலைச் சொல்ல வேண்டும். அடுத்த கேள்வி கண்டிப்பாக வடையைப் பற்றித்தான் இருக்கும் என்று சத்தியமே செய்யலாம். கேள்வி கேட்கிறவனை நமது மைதானத்துக்கு இழுத்து வந்தாகிவிட்டது. இனி தர்ம அடி அடிக்க வேண்டியதுதான். அதனால்தான் படிக்கிற காலத்தில் ஏதாவது ஒரு பாடத்தையாவது நமக்கு வடையாக மாற்றி வைத்திருக்க வேண்டும் என்பார்கள். அக்குவேறு ஆணிவேறாக ஒரேயொரு பாடம் தெரிந்தால் போதும் வடை சுட்டே கரையேறிவிடலாம். குமாருக்கு அப்படி இரண்டு பாடங்களில் படு கில்லாடியாக இருந்தான். எந்தப் பாடமுமே தெரியாது ஆனால் வேலையும் வேண்டும் என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது. கொஞ்சம் கடினமான வழி. அதை அப்புறமாகச் சொல்கிறேன்.

குமார் முதல் நேர்காணலிலேயே வெற்றியடைந்தான். குமார் குடும்பம் பெரிய வசதி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் பஞ்சம் பார்க்காத நடுத்தரக் குடும்பம். குமாரின் மிகப்பெரிய பலமே மிஸ்டர். கூல்தான். சுனாமியே சுழற்றிக் கொண்டு வந்தாலும் கர்சீப்பை வைத்து கப்பல் செய்ய முடியுமா என்று அடுத்த வழியைத்தான் யோசிப்பானே தவிர சோலி முடிந்தது என்று சொங்கிப் போகாதவன். அது ஐடி துறையில் மிக அவசியம். எதுவாக இருந்தாலும் சமாளித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்துவிட்டால் போதும். பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பாகவே அவனுடைய ஆண்டுச் சம்பளம் ஆறு லட்ச ரூபாய். அந்த நிறுவனத்திலிருந்து மொத்தமே மூன்று பேர்களைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். அதில் அவனும் ஒருவன். சிரித்துக் கொண்டே வந்தவனிடம் வயிற்றெரிச்சலோடு ‘எப்படிடா?’ என்ற கேட்ட போது கட்டை விரலை உயர்த்திக் காட்டி அவன் சொன்னது ஒரே வார்த்தைதான் - ‘கான்ஃபிடன்ஸ்.

8 எதிர் சப்தங்கள்:

மகேஸ் said...

looks similar

http://selfconf.blogspot.in/2006/04/blog-post_114586978153482757.html

ADMIN said...

///இந்த வேலை கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றால் அடுத்த வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற கெத்து இருந்தால் மிக அவசியம்.///

ஆமாம்..இந்த மாதிரி எண்ணம் இருந்தாலே மனதில் பதற்றம் வரவே வராது... நேர்காணல் நடத்துபவர்களுக்கும் "இவன் லேசு பட்டவன் இல்ல போல இருக்கேன்னு" ஒரு எண்ணம் வந்துடும்..!

kannathasan said...

இதுல வடை மேட்டர் மட்டும் கொஞ்சம் நான் செஞ்ச வேலைய ஒத்து போகுது,ஆனா 3வருடம் அனுபவத்துக்கு அப்பறம் தான் வடை சுடவே தெரிஞ்சது

sonaramji said...

இப்ப குமாா் அண்ணா எங்கே

Unknown said...

எந்தப் பாடமுமே தெரியாது ஆனால் வேலையும் வேண்டும் என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது. கொஞ்சம் கடினமான வழி. அதை அப்புறமாகச் சொல்கிறேன்.


ATHU ENNANU SOLLUNGA...

நெய்தல் மதி said...

என்னைப் பொறுத்தவரையில் வேலை கூட சற்று சிரமப்பட்டால் கிடைத்துவிடுகிறது. ஆனால் அலுவலகத்தில் உள்ள அரசியலை சமாளிப்பதுதான் மிகவும் கடினமாக உள்ளது.

Anonymous said...

inspiring

சேக்காளி said...

@Murugesa P //எந்தப் பாடமுமே தெரியாது ஆனால் வேலையும் வேண்டும் என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது. கொஞ்சம் கடினமான வழி. அதை அப்புறமாகச் சொல்கிறேன்.
அது என்ன சொல்லுங்க//
//கேட்ட போது கட்டை விரலை உயர்த்திக் காட்டி அவன் சொன்னது ஒரே வார்த்தைதான் - ‘கான்ஃபிடன்ஸ்.//
பதில் இதுதானே மணி?