Feb 25, 2016

வேட்பாளர்கள் நேர்காணல்

கடந்த வாரத்தில் ஊர்ப்பக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து தட்டிகளை நிறுவியிருந்தார்கள். கோபியில் பிரினியோ கணேஷ், அவிநாசியில் மூன்றாவது வார்டு கவுன்சிலர் மோகன் என்று கட்சிக்குள் பெரிய பரிச்சயமில்லாத இளைஞர்கள்தான் மெனக்கெட்டு செலவு செய்து தட்டிகளை வைத்திருக்கிறார்கள். கணேஷ் கோபி சட்டமன்றத் தொகுதிக்கு வாய்ப்பு கேட்கிறவர்களில் ஒருவர். அவிநாசி மோகன் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வாய்ப்பு கேட்கவிருக்கிறாராம். இப்படி தமிழ்நாடு முழுவதும் ஆட்கள் இருப்பார்கள். அதிமுகவின் மிகப்பெரிய பலம் இது. யார் வேண்டுமானாலும் பதவிக்கு வந்துவிட முடியும் என்கிற சூழல் உண்டு. அதனால் உற்சாகம் குறையாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கே.ஏ.செங்கோட்டையன், செந்தில் பாலாஜியிலிருந்து ஜெயக்குமார் வரைக்கும் எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்கிற பம்முதலில்தான் இருப்பார்கள். 

எங்கள் ஊர்ப் பக்கத்தில் இருக்கும் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ குறித்து ஒரு கதை உண்டு. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவின் நேர்காணலுக்குச் சென்றிருக்கிறார். ஏதோ கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். ‘பணம் கட்டினா அம்மாவை பார்க்க முடியும்ன்னு சொன்னாங்க. அதுக்குத்தாங்க கட்டினேன். ஸீட் வாங்கோணும்ன்னு எல்லாம் ஒண்ணுமில்லைங்க’ என்று சொல்லி கூழைக் கும்பிடு போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். அப்பொழுது ஜெயலலிதா பாந்தமாக சிரித்தாராம். அடுத்த சில மாதங்களில் எம்.எல்.ஏ ஆகி ஸ்கார்ப்பியோ காரில் அந்த மனிதர் சுற்றத் தொடங்கினார். எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும் உச்சிக்கு சென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை கட்சியின் வலிமைக்கு மிக அவசியம்.  அதனால்தான் இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிககமானவர்கள் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். விருப்ப மனுவுக்கான தொகை குறைவு, அம்மாவின் பெயரில் பணம் கட்டியவர்கள்தான் அதிகம் என்று எவ்வளவுதான் சாக்குபோக்கு சொன்னாலும் கட்சி வேலை செய்கிறவர்கள் ‘நமக்கும் ஒரு காலம் வரும்’ என்று அசாத்தியமான நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

திமுகவும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தது. தேநீர் கடைக்காரர், சைக்கிள் கடைக்காரர், சலூன் வைத்திருந்தவர் என்று சாதாரண மனிதர்கள் கட்சியின் பதவிகளையும் ஆட்சியின் அதிகாரத்திலும் பங்கெடுத்தார்கள். ஆனால் படிப்படியாக அந்தச் சூழல் அருகிக் கொண்டே வந்தது. மாவட்டச் செயலாளர்களுக்கும் அவர்களது கண்ணசைவுக்குள் இருப்பவர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இப்பொழுது நேர்காணலுக்குச் செல்கிறவர்களில் யாரிடம் பேசினாலும் ‘அந்த ஆள் காசு கொடுத்து வாங்கிட்டான்’ என்று சொல்லிவிட்டுத்தான் செல்கிறார்கள். பிறகு ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டால் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் நம்பிக்கை. ‘இந்த முறை தகுதியான ஆட்களுக்குத் தர வாய்ப்பிருக்கு’ என்று சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையை திமுக பூர்த்தி செய்துவிடுமானால் அதுவே கட்சிக்கான பெரும் வெற்றிதான். விடமாட்டார்கள். தனக்கு விருப்பமில்லாத ஆட்களுக்கு வாய்ப்புத் தரப்படும் போது கட்சியின் குறுநில மன்னர்கள் குழி பறிக்கும் வேலையைச் செய்வார்கள். ஆனால் அதையெல்லாம் தடுக்கிற வித்தை தெரியாதவரா கலைஞர்?

கடந்த ஒன்றிரண்டு நேர்காணல்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்தவர்களை மொத்தமாக அழைத்து நிறுத்தி ‘உங்கள் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கினாலும் சரி; உங்களில் யாருக்கு ஒதுக்கினாலும் சரி வெற்றிக்கு பாடுபடணும். சரியா?’என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். இந்த முறை அணுகுமுறை மாறியிருக்கிறது. வாய்ப்புக் கேட்கும் ஒவ்வொருவரிடமும் கருத்துக் கேட்கிறார்கள். கூட்டணி குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஒரே நாளில் ஐந்தாறு மாவட்டங்களுக்கான நேர்காணல் என்ற பழைய திட்டத்தை மாற்றி ஒவ்வொரு நாளும் நான்கு மாவட்டங்கள் என்று ஆசுவாசமாக விசாரிக்கிறார்கள். நல்லவேளையாக மாவட்டச் செயலாளர்களை அருகில் வைத்துக் கொள்வதில்லையாம். ‘ஒருவேளை உங்களுக்குத் தரவில்லையென்றால் வேறு யாரை பரிந்துரைப்பீர்கள்’ என்று கேட்கும் போது பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் முட்டைக்கண்களை உருட்டி உருட்டி பார்ப்பார்கள். அவருடைய கையாட்களின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்று அர்த்தம். அதனால் நேர்காணலுக்குச் சென்றவர்கள் திணறிப்போவார்கள். மாவட்டச் செயலாளர்கள் அருகில் இல்லாத போது ‘எனக்கு கொடுக்கறீங்களோ இல்லையோ, தயவு செஞ்சு மா.செவுக்கு மட்டும் கொடுத்துடாதீங்க.’ என்று கூட தைரியமாகச் சொல்லலாம்.

திமுகவின் இந்த அணுகுமுறையை பாராட்ட வேண்டும். நேர்காணலில் பங்கேற்பவர்களுக்குக் கிடைக்கும் இரண்டு முதல் ஐந்து நிமிடத்திலான கால கட்டத்தில் தங்களுடைய மனதில் இருப்பனவற்றையெல்லாம் கட்சியின் தலைமையிடம் கொட்டிவிட்டு வந்துவிட முடியும். எவ்வளவோ புழுங்கல்களுடன் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கட்சிக்காரர்கள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக இருந்து பேசுவதற்கான வாய்ப்புகள் ஒரு சிலருக்காவது கிடைக்கக் கூடும். சபரீசன்தான் வேட்பாளர்களை முடிவு செய்கிறார், பணம்தான் பிரதானம் என்றெல்லாம் பேச்சுக்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் எவ்வளவு நம்புவது என்று தெரியவில்லை. நமக்கு நாமே பயணத்தின் ஆரம்பத்தில் தன்னை முன்னிறுத்திய ஸ்டாலின் பயணத்தின் இறுதியில் ‘கலைஞரை முதல்வராக்குவோம்’ என்று திரும்பத் திரும்ப பேசியது, பொதுச் செயலாளர் அன்பழகனின் அறிக்கையில் ‘கலைஞர் நேர்காணல் நடத்துவார்’ என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டது போன்றவை எல்லாம் இன்னமும் கலைஞரின் முழுக்கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கிறது என்று நம்ப வைக்கிறது. அதனால் வேட்பாளர் தேர்விலும் அவர்தான் முடிவு செய்யக் கூடும்.

கார்போரேட் ஹை-டெக் பிரச்சாரம், ஏ.சி அறைக்குள் அமர்ந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்வது போன்ற வழிமுறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு திமுக தன்னுடைய பழைய தேர்தல் வழிமுறைகளை மேற்கொள்வது பல வகைகளிலும் கட்சிக்கு வலு சேர்ப்பதாகத்தான் இருக்கும். கடந்த சில தேர்தல்களைப் போல் பணம் படைத்தவன், முந்தாநாள் கட்சிக்கு வந்தவனுக்கு எல்லாம் வாய்ப்பை வழங்காமல் காலங்காலமாக கட்சிக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்கள், தொகுதிக்குள் கெட்ட பெயர்களைச் சம்பாதிக்காதவர்கள் என்கிற வகையில் வடிகட்டி வாய்ப்பு வழங்கினாலேயே கட்சியின் பாதி வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

இந்த முறை ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மக்கள் நலக் கூட்டணி இப்போதைக்கு திமுகவுக்கான பெரிய அச்சுறுத்தல். விஜயகாந்த்தின் முடிவை வைத்து இன்னுமொரு கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு சூழலில் இரண்டு மூன்று திசைகளில் வாக்குகள் சிதறும் போது திமுக தமது கட்சியின் சார்பில் யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதைவிடவும் யாருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதில்தான் வெகு தெளிவாக இருக்க வேண்டும். திமுக இப்படியொரு முடிவை எடுக்குமானால் அது தமிழக அரசியலில் நல்லதொரு மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

என்னிடம் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறாய் என்று கேட்டால் ‘வேட்பாளரைப் பார்த்துத்தான் வாக்களிப்பேன்’ என்பேன். அது எந்தக் கூட்டணியாக இருந்தால் என்ன? எந்தக் கட்சியாக இருந்தால் என்ன? ‘நல்ல வேட்பாளருக்கு வாக்களிப்போம்’ என்கிற சூழல் உருவாகட்டும். அவர் வெல்கிறாரோ தோற்கிறாரோ இரண்டாம்பட்சம். ‘தோற்கிற ஆளுக்கு வாக்களித்து வாக்கை வீணடிக்கக் கூடாது’ என்பதெல்லாம் மூட நம்பிக்கை. நல்ல வேட்பாளர் நிறுத்தப்படும்பட்சத்தில் அவருக்கென்று கணிசமான வாக்குகள் விழும் என்கிற சூழல் உருவாக வேண்டும். அதுதான் வெறும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து முடிவுகளை வளைத்துவிடலாம் என்கிற கட்சிகளின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும். அப்படியொரு சூழல் உருவானால்தான் எதிர்காலத்தில் ‘எவ்வளவு செலவு செய்வாய்?’ ‘நீ என்ன சாதி’ என்கிற கேள்விகளையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு ‘உனக்கு தொகுதியில் நல்ல பேர் இருக்கா?’ என்கிற கேள்வி நேர்காணல்களில் முன் வைக்கப்படும். நல்ல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாற்றங்கள் இப்படித்தான் உருவாக வேண்டும். நம்மிடமிருந்து உருவாகட்டும். சின்னத்தைப் பற்றியும் கூட்டணி பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்போம்.

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

‘நல்ல வேட்பாளருக்கு வாக்களிப்போம்’

நல்ல வேட்பாளரை எப்படி கண்டுகொள்வது. வேட்பாளர் நல்லவராக இருந்து கட்சி மோசமாக இருந்தால் என்ன பன்னுவது?

Siva said...

Seeman is doing good. He talks right thing. He keeps the points in front of us which you had wrote here in "Nisaptham".
Example: kannukutheriyaadha thaneer kollai, strengthening Head quarters without spreading to other districts.

We can support seaman to win know?

Anonymous said...

I support seeman. naam tamilar

Anonymous said...

seeman is best

Anonymous said...

https://www.facebook.com/100011041321207/videos/175347466176630/

சேக்காளி said...

//இந்த முறை ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மக்கள் நலக் கூட்டணி இப்போதைக்கு திமுகவுக்கான பெரிய அச்சுறுத்தல்//
ஆரம்பித்த ஐந்தாறு நாட்களிலேயே சிதறி போய் விடுவார்கள் என்ற எண்ணத்தினை சிதறடித்து இப்போது வாக்குகள் சிதறி போகுமளவிற்கு முன்னேறியிருப்பது மக்கள் நல கூட்டணிக்கு கிடைத்த வெற்றிதானே.
அடுத்து
//காலங்காலமாக கட்சிக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்கள், தொகுதிக்குள் கெட்ட பெயர்களைச் சம்பாதிக்காதவர்கள் என்கிற வகையில் வடிகட்டி வாய்ப்பு வழங்கினாலேயே கட்சியின் பாதி வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.//
என்றாலும் நல்லது தானே. அதற்கு ஒரு காரணமாய் அமைந்த மக்கள் நலக்கூட்டணி ஆளும் அரசை தீர்மானிக்கும் சக்தியாகட்டும்.

Vinoth Subramanian said...

Good thinking.