Feb 24, 2016

பிதற்றல்

இவ்வளவு பரிதவிப்பான தினங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்ததில்லை. கடந்த ஒரு மாதமாகவே அப்பாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. அவர் சிகிச்சை பெற்றுவரும் கோவை சிங்காநல்லூர் மருத்துவமனையில் அழைத்துக் கேட்ட போதெல்லாம் ‘அப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு ஏதாவதொரு மாத்திரையைக் கொடுக்கச் சொன்னார்கள். பயமாக இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு நான்காவது வாரமும் அழைத்துச் செல்வோம். இந்த முறை மூன்றாவது வாரத்திலேயே அழைத்துச் சென்றோம். 

முதுநிலை மருத்துவர் மீதான நம்பிக்கை படிப்படியாகக் குறைந்திருந்தது. நோயாளியை அமர வைத்துக் கொண்டு கணினித்திரையைப் பார்ப்பதும், அலைபேசியில் பேசுவதும் பிறகு திரும்பி ‘என்ன பேசிட்டு இருந்தோம்’ என்று கேட்பதுவுமாக சலிப்பை ஏற்படுத்தியிருந்தார். இளநிலை மருத்துவரைச் சந்தித்த போது ‘எதுக்கு ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்த்துடுறீங்களா?’ என்று கேட்டார். அதன் பிறகு நிறைய சோதனைகள். நிறையச் சிக்கல்கள். எல்லாவற்றையும் இப்பொழுது பேச விரும்பவில்லை. 

சிங்காநல்லூர் மருத்துவமனையில் நம்பிக்கையூட்டும் விதமாக எந்த மருத்துவரும் பேசாதது பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது. அவர்களைப் பொறுத்தவரைக்கும் எழுபதை நெருங்குகிற ஒரு பெரியவர் அவர். எனக்கு அப்படியில்லை அல்லவா? யாரிடமும் விரிவாக விவாதிக்கவும் முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் போனேன். சில மருத்துவத் துறை சார்ந்த நண்பர்களிடம் மட்டும் பேச முடிந்தது. அதுவும் பேசும் போதே உடைந்து போகிற மனநிலை. அப்பாவை எனக்கு மிகப் பிடிக்கும். யாருக்குத்தான் அவரவர் அப்பாவைப் பிடிக்காது? நாங்கள் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு ஆஸ்துமா தொந்தரவு. சாதாரண அரசு ஊழியர். அம்மாவும் அப்பாவும் ஒவ்வொரு மருத்துவமனையாகச் செல்வார்கள். அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று பார்க்காத மருத்துவமில்லை.  அவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு வீட்டில் நானும் தம்பியும் விளையாடிக் கொண்டிருப்போம். என்ன நடக்கிறது என்பதைச் சொல்லவே மாட்டார்கள்.  ஆனாலும் எங்களுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார்கள். சிரமப்பட்டுத்தான் வளர்த்தார்கள்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது மிதி வண்டி வேண்டும் என்று கேட்டேன். கோபியை விடவும் கவுந்தப்பாடியில் நூறு ரூபாய் குறைவாகக் கிடைக்கும் என்று அங்கே சென்று மிதிவண்டியைப் பூட்டி அழுத்திக் கொண்டே வந்துவிட்டார். கடும் வெயில். வியர்வை வழிய மூச்சிரைக்க அவர் வந்து சேர்ந்த போது புதுச் சைக்கிளின் உற்சாகத்தையும் தாண்டி அப்பாவை நினைத்து அழுதேன். அதன் பிறகு அவரை நினைத்து இப்பொழுதுதான் அழுகிறேன். மருத்துவக் கோப்புகளை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கும், கோவைக்கும் பேருந்துகளில் பயணிக்கும் போது என்னையுமறியாமல் உடைந்து கொண்டிருந்தேன். எந்த ஒரு மனிதனுக்கும் தனிமையில் அழுகிற நிலைமை வரவே கூடாது. சுற்றிலும் இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்த போதெல்லாம் அவசரப்பட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

கடந்த வாரத்தில் சிங்காநல்லூர் மருத்துவமனையில் சொல்லிவிட்டு வந்து கோவை மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். சக்தியை உறிஞ்சுகிற செலவுதான். ஆனால் வேறு எந்த வழியுமில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம். மருந்துகள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அம்மாவும் நொறுங்கிப் போயிருக்கிறார். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகக் கிளறப்பட்டு மேலெழும்பி வந்து கொண்டேயிருக்கின்றன.

என்ன செய்ய முடியும்?

சோதனைகள் வர வேண்டிய கால கட்டம் என்று இருந்தால் அதைத் தவிர்க்கவே முடியாது என்பதைத் உணர்ந்து கொண்டிருக்கும் தருணம் இது. ‘இந்தத் துன்பத்தை இவன் தாங்கிக் கொள்வான்’ என்று முடிவு செய்யப்பட்டு அந்தத் துன்பம் அவரவருக்கு வழங்கப்படுகிறது போலிருக்கிறது. அதைத் தாங்கிக் கொள்கிற மனதையும் சமாளிக்கிற பலத்தையும் சேர்ந்து கொடுத்தால் தேவலாம். ‘நாம் அடுத்தவர்களின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டால் நம் துன்பம் குறைந்துவிடும்’ என்கிற சிறு நம்பிக்கை இருந்தது. சுயநலமான நம்பிக்கைதான். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை. இன்னாருக்கு இதுவென்று ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவையவை அதன்படியே நடக்கின்றன.

இந்த மன உளைச்சலினால் கடந்த சில நாட்களில் அறக்கட்டளை சம்பந்தமாக எந்தவொரு விசாரணையையும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்திருந்த காசோலைகளில் ஒன்றை மட்டும் அனுப்பி வைக்க முடிந்தது. எதையும் செய்கிற மனநிலை இல்லை என்பதுதான் காரணம். நிறையப் பேர் அழைத்திருந்தார்கள். இணைப்பைத் துண்டித்துக் கொண்டேயிருந்தேன். யாரிடமாவது உணர்ச்சிவசப்பட்டுவிடுவேனோ என்கிற பயம் உள்ளூர இருந்து கொண்டேயிருந்தது.

அப்பா இப்போதைக்கு நன்றாக இருக்கிறார். நேற்று வீட்டிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பும் போது தலையணைக்குக் கீழாக இருந்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். ‘வேண்டாங்கப்பா’ என்றேன். வற்புறுத்திக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். வீட்டை விட்டு வேகமாக வெளியேறி அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

அடுத்தவர்களின் குடும்பங்களில் கேள்விப்படக் கூடிய நோய்மை, பிணி என்பதெல்லாம் இப்பொழுது நமக்கு சாதாரணமாகியிருக்கின்றன. அவர்கள் சொல்லும் போது கேட்டுவிட்டு பரிதாபக் குரலில் ஆறுதல் சொல்லிவிட்டு மறந்துவிடுகிறோம். அதன் பிறகு நம்முடைய உலகம் இயல்பானதாக மாறிவிடுகிறது. ஆனால் அதே நோய்மையும் பிணியும்  நம் ரத்த உறவுகளில் நிகழும் போதுதான் வலியையும் கண்ணீரையும் உணர முடிகிறது. ஆனால் ஒன்று- நமக்கு நிகழ்கிற எல்லாக் காரியங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு என முழுமையாக நம்பலாம். இதுவும் கூட அப்படித்தான். அதே சமயம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிற மனநிலையைத்தான் இறைவனிடம் கேட்கிறேன். ஆனால் எல்லாத் தருணங்களிலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ளவும் தாங்கிக் கொள்ளவும் முடிவதில்லை. இதை தட்டச்சு செய்யும் போதும் கூட கண்ணீர் வழிந்து கொண்டேதான் இருக்கிறது.

குறிப்பு: யாரேனும் Bayer அல்லது Health Impetus நிறுவனத்தில் பணி புரிந்தால் தெரியப்படுத்தவும். தங்களிடம் ஓர் உதவி கோரவிருக்கிறேன். நன்றி.