Feb 2, 2016

சிறு கல்

‘முந்திரிக்கொட்டை மாதிரி எல்லாத்துக்கும் தலையைத் தூக்காதடா’ என்று வாத்தியார் கொட்டும் போது முந்திரிக்கொட்டை எப்படி இருக்கும் என்றே தெரியாது. முப்பது வருடங்களுக்குப் பிறகு கடலூர் சுற்றுவட்டாரத்தில் சுற்றும் போதுதான் முதன் முறையாக முந்திரிக்காட்டைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த முந்திரிக்காடுகள்தான் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம். முந்திரிக்காட்டு விவசாயிகளிடம் மூட்டைகளில் முந்திரியை வாங்கி வந்து சுத்தியல் வைத்து உடைத்துக் கொடுக்கிறார்கள். அனுபவஸ்தர்களால் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வரைக்கும் உடைக்க முடிகிறது. முந்திரி சீசன் வேளாண்மை. வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டும்தான் விளைச்சல் இருக்கும். மற்ற சமயங்களில் வேறு ஏதேனும் வேலைகளைச் செய்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தில் வாங்கப்பட்ட விண்ணப்பங்களில்- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் இது- தொண்ணூற்றைந்து விண்ணப்பங்களில் பத்து விண்ணப்பங்களில் முந்திரி உடைக்கும் எந்திரங்களைக் கேட்டிருந்தார்கள். இரண்டு வகையிலான முந்திரி உடைக்கும் எந்திரங்கள் இருக்கின்றன. முதல் வகையில் முந்திரியைக் கையில் பிடித்துக் கொண்டு காலால் மிதிக்க வேண்டும். மேலே இருந்து இறங்கும் வெட்டுக் கத்தி முந்திரியை உடைக்கும். இந்த முதல் வகை எந்திரம் விலை குறைவு. ஆனால் பழக்கமில்லாதவர்கள் பயன்படுத்தினால் விரல்களை வெட்டிவிட வாய்ப்பு அதிகம். இந்தப் படத்தில் இருப்பது இரண்டாம் வகை. முந்திரியை வைத்துவிட்டு கையை எடுத்துக் கொள்ளலாம். எந்திரமே பிடித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவர்கள் கூட பயன்படுத்த முடியும். ரிஸ்க் இல்லை.



கிராமப்புற மக்கள் இந்த எந்திரத்தைக் கேட்க காரணமிருக்கிறது. சுத்தியலில் உடைப்பதைவிடவும் குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகமான அளவு முந்திரியை எந்திரத்தின் மூலமாக உடைக்க முடியும். முந்திரி உடைக்கும் எந்திரத்தின் வழியாக ஒரு நாளைக்கு முந்நூற்றைம்பது ரூபாய் வரைக்கும் வருமானம் பார்க்க முடியும். முந்நூற்றைம்பது ரூபாய் வருமானம் என்பது அந்தச் சேரி மக்களுக்கு பெரிய வருமானம். ஒரு எந்திரம் பத்தாயிரத்துக்கு மேலாக விலை சொல்லியிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரையிலும் பத்தாயிரம் ரூபாய் பெரிய தொகை என்பதால் இந்த எந்திரத்தை வாங்குவது சாத்தியமில்லை. 

மொத்தமாக பத்து எந்திரங்கள் தேவை என்பதால் ‘பெரிய ஆண்டவர் லேத்’ பட்டறையில் பேசி ஒரு எந்திரம் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறோம். சக்தி சரவணனுக்கும் அவரது குழுவினருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள்தான் முன்னால் நின்று வேலைகளைச் செய்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த எந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இது தொடக்கம். இதே ஊரிலேயே தையல் எந்திரங்கள், உணவு விடுதி அமைப்பதற்கான தட்டுமுட்டுச் சாமான்கள் ஆகியன இந்த வாரத்தில் வழங்கப்படவிருக்கிறது. ஆடு மாடுகள் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் வழங்கப்பட்டுவிடும். அதன் பிறகு கடலூரின் பிற பகுதிகளுக்கான உதவிகள் வழங்கப்படும்.



எனக்கு பெரிய வேலை இல்லை. களத்தில் இறங்கிச் செய்கின்ற கடலூர் நண்பர்களை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் உதவியில்லையென்றால் வெகு சிரமப்பட்டிருக்க வேண்டும். தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதிலிருந்து பொருட்களை விநியோகம் செய்வது வரை அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார்கள். சக்தி சரவணன் மிகச் சிறந்த அணியை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த மாதிரியான அணி நம்மோடு இருந்தால் எவ்வளவு பெரிய வேலையையும் துணிந்து செய்ய முடியும். பிற நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது பதிவு செய்கிறேன்.

                                                                       ***

பெரியவர் மாசிலாமணி அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. அன்னூரைச் சேர்ந்த ஆனந்த் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். மாசிலாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அறுவை சிகிச்சை முடிந்து வெளியே கிளம்பும் வரைக்கும் தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகளைச் செய்திருக்கிறார். மொத்தம் பதினான்காயிரத்து ஐநூறு ரூபாய்க்கு காசோலை அனுப்பப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து அழைத்து பனிரண்டாயிரத்து ஐநூறு ரூபாயில் அறுவை சிகிச்சை முடிந்துவிடும் என்றும் மீதமாகும் பணத்தை அறக்கட்டளையின் கணக்குக்குத் திருப்பி அனுப்பிவிடட்டுமா என்று கேட்டார்கள். 

மாசிலாமணி எந்த ஆதரவுமற்றவர் என்பதால் அந்தத் தொகையை அவரிடமே அளித்துவிடச் சொல்லியிருக்கிறோம். ஒரு மாதத்திற்கான சிறு உதவியாக இருக்கும். 

ஆனந்த் இந்த ஒரு படத்தைத்தான் எடுத்திருக்கிறார். பெரியவரின் வேறு படம் எதுவுமில்லாததால் இந்தப் படம் பதிவு செய்யப்படுகிறது.


அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ‘நான் பெங்களூர் போய் நன்றி சொல்லிவிட்டு வருகிறேன்’ என்று ஆனந்திடம் சொன்னாராம். 

‘இங்கேயிருந்தே காலில் விழுகிறேன். வர வேண்டாம்’ எனச் சொல்லச் சொல்லியிருக்கிறேன். ஆனால் பயமாகத்தான் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் கூட்லு கேட்டுக்கு வந்து நின்று அலைபேசியில் அழைக்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆனந்துக்கும், மாசிலாமணி எப்படி இருக்கிறார் என்று தொடர்ந்து விசாரித்த மற்றவர்களுக்கும் நன்றி. நலமாக இருக்கிறார். 

4 எதிர் சப்தங்கள்:

suppamani said...

vDear Mr.Manikandan
What you are doing is a great job; With regard to this type of help I would like to suggest as follows : Just a suggestion; Instead of giving the amount as GIFT, you can think of giving the same as a soft loan without any interest payable and to repay the loan in lengthy periods in small instalemnts; Since thei is just to improve their lifehood and to earn more; By asking them to repay such loan what I feel is you can give such loan to more people so that they can stand on thier own legas and improve thie earnongs and lifestyle; I HOPE YOU WON'T THINK AS "NANDHI" I AM STANDING IN THE MIDDLE WHILE YOU ARE DOING ALL THESE FOR A NOBLE CAUSE
r.s.mani

Vaa.Manikandan said...

திரு.மணி,

சுழல் நிதி, சிறு கடன் போன்றவை குறித்தான ஆலோசனைகள் வந்தன. ஆனால் இந்தத் தருணத்தில் அதையெல்லாம் செய்வது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். ஆள் பலம், நிர்வாக நேரம் போன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இப்படியே சில காலம் தொடர்வோம். எல்லாம் சரியாக அமையும்பட்சத்தில் இத்தகையை செயல்களைச் செய்யலாம் என்று நினைக்கிறேன். நந்தி என்றெல்லாம் எதுவுமில்லை. தொடர்ச்சியான ஆலோசனைகளும், பரிந்துரைகளும்தான் அறக்கட்டளையின் செயல்பாடுகளை வடிவமைக்க உதவியிருக்கின்றன. தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. தயங்காமல் கருத்துக்களை பகிரலாம்.

நெய்தல் மதி said...


"முந்நூற்றைம்பது ரூபாய் வருமானம் என்பது அந்தச் சேரி மக்களுக்கு பெரிய வருமானம்."
அந்தச் சேரி மக்களுக்கு என்பதற்கு பதிலாக உழைக்கும் மக்கள் என்று குறிப்பிடலாமே.
மற்றபடி அவர்கள் உழைத்து பிழைப்பதற்கான வழியை உருவாக்கி தந்தமைக்காக எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் அறப்பணி...!

Vinoth Subramanian said...

Good work mani sir. Special appreciations to sakthi saravanan sir and his team.