Feb 12, 2016

கெண்டசம்பிகே

ஓர் இளைஞனுக்கும் பெண்ணுக்குமான காதல். பெண் பணக்காரி. இளைஞன் அவர்களது நிறுவனத்தில் வேலை செய்கிறவன். வழக்கமாக இத்தகைய கதைகளில் காதலுக்கு வில்லனாக பெண்ணின் அப்பா இருப்பார். இங்கு அப்பாவுக்கு பதிலாக அம்மாதான் வில்லி. மாநகரத்தின் காவல்துறை ஆணையரிடம் அவளுக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. அந்தப் பையனைப் போட்டுக் கொடுக்கிறாள். கமிஷனர் தான் கவனித்துக் கொள்வதாக உறுதியளிக்கிறார். இது முதல் ட்ராக்.

மங்களூரில் ஒரு போதைக் கடத்தல் கும்பல் இருக்கிறது. மாஃபியா. அந்தக் கும்பலை கமிஷனரும் அவருடைய அணியும் சுற்றி வளைக்கிறார்கள். பெரு மதிப்பிலான போதைப் பொருட்களையும் கைப்பற்றுகிறார்கள். பத்துக் கோடியை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு மீதத்தை அமுக்கி ஒரு கிராமத்துக் கிணற்றில் ஒளித்து வைக்கிறார்கள். அந்த போலீஸ் குழுவில் இருக்கும் ஒரு எஸ்.ஐ போதையில் தனக்குக் கூடுதலான பங்கு வேண்டும் என்று கேட்கிறான். கமிஷனரின் உத்தரவுப்படி மற்ற இரண்டு காவலர்களும் சேர்ந்து கூடுதல் பங்கு கேட்டவனின் கதையை முடிக்கிறார்கள். இது இரண்டாவது ட்ராக்.

ஒரு நல்ல திரைக்கதையாசிரியருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளைச் சிண்டுகளில்லாமல் இணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அந்த விதியின் படி இந்த இரண்டு கதைகளையும் பிசிறு தட்டாமல் இணைக்கலாம். 

காவல்துறை ஆணையாளர் அந்த இளைஞனைக் கஞ்சா கேஸில் அமுக்கி தூக்கி வந்து அடித்து நொறுக்குகிறார். தனக்கு எதற்காக அடி விழுகிறது என்பதே பையனுக்குத் தெரிவதில்லை. அவன் நொந்து போன பிறகு நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்துகிறார்கள். சிறைத்தண்டனை என்பது தீர்ப்பாக வந்த பிறகு ஒரேயொரு போலீஸ்காரன் மட்டும் அந்த இளைஞனை வண்டியில் ஏற்றி அழைத்துச் செல்கிறான். அப்பொழுது அந்தப் பையன் தன்னை அழைத்துச் செல்லும் போலீஸ்காரனைச் சுட்டுவிட்டு தப்பிக்கிறான். எங்கேயாவது சென்றுவிடலாம்தான். ஆனால் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் காவல் நிலையத்தில் பறித்துவிட்டார்கள். காதலியை அழைத்து தனக்கு பணம் தேவைப்படுவதாகச் சொல்கிறான். அவள் தனது அம்மாவிடம் கடைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு வந்து அவனோடு சேர்ந்து கொள்கிறாள். இருவரும் தப்பி ஓடுகிறார்கள். பெண்ணின் அம்மா மீண்டும் கமிஷனரை அழைத்துப் பதறுகிறாள்.

விடுவார்களா? பையன் மீது கஞ்சா, கொலை வழக்குகளோடு சேர்ந்து ஆள் கடத்தல் வழக்கும் பதிவாகிறது. இரண்டு பேரும் ஊர் ஊராகச் சுற்றுகிறார்கள். தப்பித்து செல்வதற்காக வழிப்பறியாக இரண்டு கார்களை பறிக்கிறார்கள். குண்டடிபடுகிறார்கள். இடையில் காதலிக்கவும் செய்கிறார்கள்.

இளைஞனின் வழக்கை விசாரிக்கும் போலீஸ் ஒரு பக்கம் துரத்த, கமிஷனரின் குழுவைச் சேர்ந்த போலீஸார் காதலர்களின் கதையை முடித்துவிடும் நோக்கில் இன்னொரு பக்கம் துரத்த ஒவ்வொரு முடிச்சாக அவிழ்வதுதான் கதை. இடையிடையே அரும்புவிடும் காதல், அந்தப் பெண்ணின் குறும்பு, இளைஞனின் பயம் எனக் கலந்து ஒரு கலவையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் துனியா சூரி. துனியா அவர் இயக்கிய முதல் படம். சூரியுடன் பெயருடனேயே ஒட்டிக் கொண்டிருக்கிறது.

கன்னடத்தில் வந்த சிறந்த த்ரில்லர் கதைகளில் ஒன்று என்று அறிமுகப்படுத்தினார்கள். கெண்டசம்பிகே (Kendasampige). அதுதான் படத்தின் பெயர். நூறாவது நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. முதல் முறை படம் பார்த்த போது சப்டைட்டில் இல்லாமல்தான் பார்த்தேன். ஆனால் படத்தைப் புரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நேர்த்தியான திரைப்படம் என்று சொல்ல முடியும். கவனித்துப் பார்த்தால் தற்கால மலையாள, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களுக்கு எந்தவிதத்திலும் சளைக்காதவையாகத்தான் கன்னடப்படங்களும் இருக்கின்றன. திரைக்கதை அமைப்பு, நடிப்பு, வசனம், தொழில்நுட்பம் என்று எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஆனாலும் யார் வைத்த சூனியமோ தெரியவில்லை சாண்டல்வுட் திரைப்படங்களுக்கு சந்தை மதிப்பு இல்லை, இங்கே நடிக்கிற நடிகர்களுக்கு சம்பளம் இல்லை என்று ஏகப்பட்ட குற்றங்குறைகளை அடுக்குகிறார்கள்.

த்ரிஷா, நயன்தாராவிலிருந்து ஸ்ரீதிவ்யா வரைக்கும் யாரும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. முதலில் இவர்களுக்கு முட்டை மந்திரிக்க வேண்டும். வாய்ப்பில்லாத ஏகப்பட்ட தமிழ் நடிகைகள் பெங்களூரில்தான் வசிக்கிறார்கள். ‘கன்னடத்தில் இண்டரஸ்ட் இல்லையா?’ என்று கேட்டால் இதை எங்கேயும் எழுதிவிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘சம்பளம் ரொம்பக் குறைவு’ என்கிறார்கள். இரண்டு கோடிகளுக்குள் படத்தை முடிக்கிற தயாரிப்பாளர் சம்பளமும் குறைவாகத்தான் தருவார். தயாரிப்பாளர்களையும் விநியோகஸ்தர்களையும் கேட்டால் அதற்கு மேல் வியாபாரம் ஆவதில்லை என்கிறார்கள்.

புரிந்து கொள்ள முடியாத காரணம்.

கெண்டசம்பிகேவை மிகச் சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான படம் என்பதை மறுக்க முடியாது. எல்லாவிதத்திலும் கச்சிதமான படம் என்று சொல்ல முடியும். இயக்குநர் சூரியின் படங்களை ரியலிஸ்டிக் திரைப்படங்கள் என்கிறார்கள்.  அவருடைய முந்தைய படங்களை நான் பார்த்ததில்லை. என்றாலும் சினிமா தெரிந்த கன்னட இளைஞர்களிடம் விசாரித்தால் சூரிக்கு நல்ல மரியாதை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பணக்காரன்-ஏழை, அதிகாரம்-அப்பாவி, வலியவன் - எளியவன் போன்றவை நமக்கு பழக்கப்பட்ட சமாச்சாரங்கள் என்றாலும் சொல்லப்படுகிற தொனியும் இசையும் ஒளிப்பதிவும் கெண்டசம்பிகேவை நல்ல திரைப்படமாக மாற்றியிருக்கிறது. 

நாயகனும் நாயகியும் புது முகங்கள். அடக்கி வாசிக்கச் செய்திருக்கிறார். நாயகி சற்று வாயாடி. நாயகன் மூச். காட்சிக்கு தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட அதிகமாகப் பேசுவதில்லை. கமிஷனராக நடித்திருக்கும் பிரகாஷ் பெல்வாடியைப் பாராட்ட முடியாமல் விட முடியாது. கன்னட சினிமாவில் முக்கியமான செயற்பாட்டாளர் என்று அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். படத்தில் தனக்கான பாத்திரத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது வசன உச்சரிப்பு, உடல் மொழி என எல்லாவற்றிலும் ஒரு கிரிமினல்தனம் மிக்க போலீஸ் அதிகாரியைக் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார். திரைக்கதையில் இழையோடும் பதற்றம், காட்சிகளில் ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவை, சித்ரதுர்கா, பெலகாவி உள்ளிட்ட ஊர்களின் சந்து பொந்துகளில் நுழைந்து வெளியேறும் காட்சியாக்கம் உள்ளிட்டவற்றை படத்தின் பெரிய பலங்கள் என்று சொல்லாம்.

கமிஷனருக்கும் நாயகியின் அம்மாவுக்கும் என்ன தொடர்பு, தண்டனை விதிக்கப்பட்ட கைதியை ஒரேயொரு போலீஸ் அதிகாரியோடு அனுப்புவார்களா உள்ளிட்ட தர்க்கப் பூர்வமான கேள்விகள் எழுகின்றன என்றாலும் படத்தின் வேகமான திரைக்கதையும், அதற்கேற்ற படத் தொகுப்பும் சில விதிமீறல்களை மழுங்கடிக்கச் செய்துவிடுகின்றன. தொண்ணூற்று ஒன்பது நிமிடங்களில் படத்தை முடித்துவிட்டார்கள். படத்தின் அடுத்தடுத்த பகுதிகள் வரப் போவதாகச் சொல்கிறார்கள். கடந்த ஆறேழு வருடங்களாக நல்ல கன்னடப்படங்களைப் பார்க்காமல் தவிர்த்ததை நினைத்தால் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. Better late than never. இது எல்லோருக்கும்தான் பொருந்தும்.