சிறுகச் சிறுக ஒரு கிராமத்துக்கான உதவிகளை திட்டமிட்டபடி செய்து முடித்திருக்கிறோம். பெரிய காட்டுப்பாளையத்தின் தலித் குடியிருப்பு வெள்ளத்தில் பெரு மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட பகுதி. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமான உதவிகள் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்து அந்த மக்களிடமே அவர்களின் தேவைகளை எழுதித் தரச் சொல்லி அவை விண்ணப்பங்களாகப் பெறப்பட்டன. பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் கேட்டவை வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆடுகள், மாடுகள், முந்திரி உடைக்கும் எந்திரம், தையல் எந்திரங்கள் எனக் கலவையான உதவிப் பொருட்கள் இவை.
இந்த ஒரு ஊருக்கு ஏழு லட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது.
சக்தி சரவணன் தலைமையில் நல்லவொரு அணி அமைந்திருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல கடந்த சில மாதங்களால வேலைக்கு கூடச் செல்லாமல் தொடர்ந்து இத்தகைய நலப்பணிகளில் ஈடுபடுகிற வெங்கடேஷ், பிரகாஷ் மாதிரியானவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு தினமும் கடைகளுக்குச் செல்வது, பண்ணைகளுக்குச் செல்வது, உதவிப் பொருட்களை விநியோகம் செய்வது என்று தொடர்ந்து அலைந்திருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களின் உதவியினால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடிகிறது. ஒரு கட்டத்தில் ‘இவ்வளவு பணத்தை சரியான வகையில் கொண்டு போய்ச் சேர்க்க முடியுமா?’ என்கிற குழப்பம் வந்தது. ஆனால் இந்த அணியின் செயல்பாடுகள் மட்டுமே அந்த அவநம்பிக்கையைத் துடைத்தெறிந்தது என்றால் மிகையில்லை.
இதுவொரு அனுபவம். அடுத்த முறை ஆடுகள் கொடுப்பதற்கும் மாடுகள் கொடுப்பதற்கும் நூறு முறை யோசிக்க வேண்டியிருக்கும். எல்லோருக்கும் ஒரே அளவிலான ஆடு மாடுகளை நூற்றுக்கணக்கில் வாங்குவது லேசுப்பட்ட காரியமில்லை. ‘அவனுக்கு மட்டும் பெரிய ஆடு’ ‘என்னோட மாட்டுக்கு சுழி சரியில்லை’ என்று நிறைய புகார்கள். அதையெல்லாம் சமாளிக்கத் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ‘தானம் கொடுக்கிற மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கிற கதை’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம். ஆனால் அந்த மனிதனின் இடத்தில் நின்று பார்க்கும் போது அவர்கள் வருந்துவது சரி என்றுதான் படும். ஒரு உதவியைச் செய்யும் போது பெற்றுக் கொள்கிறவர்களும் திருப்தியடைய வேண்டும். உதவியைச் செய்கிறவர்களும் திருப்தியடைய வேண்டும். ஆடுகளை வழங்கும் போது சாத்தியமில்லை. ‘எனக்கு அருமையான ஆடு கிடைத்துவிட்டது’ என்று குடும்பம் உற்சாகமடையும் அதே இடத்தில் ‘நமக்கு சரியான ஆடு கிடைக்கலை’ என்று இன்னொரு குடும்பம் வருந்துகிறது. நம்மால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். மீண்டும் வேறொரு ஆட்டை வாங்கிக் கொடுப்பதெல்லாம் சாத்தியப்படாத காரியம்.
மற்றபடி பெரும்பாலானவர்களுக்கு சந்தோஷம்தான்.
நம்முடைய அனுபவத்துக்கு மீறிய செயல்களைச் செய்யும் போது சில குற்றங்குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்த மாதிரியான வேலையை இப்பொழுதுதானே செய்கிறோம்? கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இந்த உதவிகள் மக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படுகிறது என்று அடுத்த ஆறு மாதங்களுக்கு கண்காணிக்கலாம். அதனடிப்படையில் எதிர்காலத்தின் திட்டமிடல்களை அமைத்துக் கொள்ளலாம். Fire and forget என்பார்கள். செய்துவிட்டு மறந்துவிடுவது. பிற வேலைகளில் அது சரியாக இருக்கும். இத்தகைய சமூகப் பணிகளில் அந்தத் தத்துவம் ஒத்து வராது. தொடர்ச்சியான கற்றல் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். Continous process.
மழை நிவாரணப் பணிகளில் முதற்கட்டமாக ஆயிரம் குடும்பங்களுக்கான மளிகைச் சாமான்கள் வழங்கியதை முதற்கட்ட உதவி என்று பெரியகாட்டுப்பாளையத்துக்கான உதவிகள் இரண்டாம் கட்டம். முதற்கட்ட உதவியில் எட்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் செலவானது. (விவரம் : இணைப்பில்) பெரியகாட்டுப்பாளையத்துக்கான உதவிக்கு ஏழு லட்சத்து அறுபதாயிரம். இரண்டு கட்ட உதவிகளுக்கும் சேர்த்து பதினாறு லட்ச ரூபாய் ஆகியிருக்கிறது. இரண்டாம் கட்ட உதவிக்காக வழங்கப்பட்ட காசோலைகளில் சில இன்னமும் வங்கியில் செலுத்தப்படவில்லை அப்படியிருந்தாலும் அறக்கட்டளையின் கணக்கில் இன்றைய தேதியில் நாற்பத்தொன்பது லட்ச ரூபாய் இருக்கிறது.
இதோடு முடிந்துவிடவில்லை. நிறைய வேலை இருக்கிறது. அடுத்த கட்டமாக கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து சலித்து எடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கான உதவிகளைச் செய்யவிருக்கிறோம். மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பம் என்றால் மட்டும்தான் உதவப் போகிறோம். அதற்கு பதினைந்து லட்ச முதல் இருபது லட்ச ரூபாய் வரைக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. சரியான பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அது போக மீதமிருக்கும் தொகையில் கணிசமான பகுதியை மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்விச் செலவுக்கு என ஒதுக்கி வைத்து ஏப்ரல், மே மாதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Cheque No
|
பெயர்
|
தொகை
|
விவரம்
|
91
|
Periya
Andavar Lathe works
|
40000
|
முந்திரி உடைக்கும்
எந்திரம் முன்பணம்
|
93
|
Periya
Andavar Lathe works
|
35000
|
முந்திரி உடைக்கும்
எந்திரம் மீதத் தொகை
|
95
|
Royal
Biz Technologies
|
150000
|
ஆடுகள் வாங்குவதற்கான
முன்பணம்
|
96
|
Anadkumar
Agencies
|
117000
|
தையல் எந்திரங்கள்
முன்பணம்
|
97
|
Kumaraguru
|
150000
|
மாடுகள் வாங்குவதற்கான
முன்பணம்
|
98
|
Mano
Agencies
|
46300
|
எந்திரங்கள்
|
99
|
Virtual
Galaxy
|
60000
|
கணினிகள்
|
151
|
Royal
Biz Technologies
|
113000
|
ஆடுகள் வாங்கிய பிறகான
மீதத் தொகை
|
152
|
Anadkumar
Agencies
|
10500
|
தையல் எந்திரங்கள்
மீதத் தொகை
|
101
|
Kumaraguru
|
37200
|
மாடுகள் வாங்கிய பிறகான
மீதத் தொகை
|
விவரங்கள்:
1) முந்திரி உடைக்கும் எந்திரம் ரூ.7500/-என்ற விலையில் பெரிய ஆண்டவர் லேத் வொர்க்ஸிலிருந்து பெறப்பட்டது. (பத்து எந்திரங்களுக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்)
2) ஆடுகள் கிலோக் கணக்கில் வாங்கப்பட்டன. மொத்தம் நாற்பத்தைந்து ஜோடி ஆடுகள். மொத்தம் 1010 கிலோ எடை வந்தது. ஒரு கிலோ ரூ.260/ என்ற விலையில் வாங்கப்பட்டது.
3) ஆனந்த்குமார் ஏஜென்சியில் மொத்தம் பதினைந்து தையல் எந்திரங்கள் வாங்கப்பட்டன. ஒரு எந்திரம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய்.
4) திரு.குமரகுரு மாட்டு வியாபாரி. ஒரு மாடு பெருமதிப்பாக ஏழாயிரத்து இருநூறு ரூபாய் என்று விலை பேசப்பட்டது. அந்த மாட்டை அவர் ஆறாயிரத்து எந்நூறுக்கும் வாங்கியிருக்கலாம். ஏழாயிரத்து எந்நூறுக்குக்கும் வாங்கியிருக்கலாம். நமக்கு சராசரி விலையில் கொடுத்தார். மொத்தம் இருபத்தாறு மாடுகள்.
5) மனோ ஏஜன்ஸியில் நான்கு டிரில்லிங் எந்திரங்கள் (Makita HR2020), நான்கு வெட்டு எந்திரங்கள் (Makita HT 412) மற்றும் ஒரு வெல்டிங் எந்திரம் வாங்கப்பட்டது.
6) வெர்ச்சுவல் கேலக்ஸி கடையில் மூன்று கணினிகள் வாங்கப்பட்டன. ஒரு கணினி மட்டும் கடலூர் மாவட்டத்தின் மன்னம்பாடி அரசுப் பள்ளிக்கு வழங்கப்படுகிறது.
சில படங்கள்:
இவை தவிர எப்பொழுதும் போல மருத்துவ நிவாரண உதவிகளுக்கான விசாரணைகளும் காசோலைகள் அனுப்புதலும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நிறைய வேலைகள். நெருக்குகின்றன. அதனால்தான் பதில் சொல்லப்படாத மின்னஞ்சல்களும், ஏற்கப்படாத அலைபேசி அழைப்புகளும் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன. தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். வேண்டுமென்று தவிர்ப்பதில்லை.
வார இறுதியில் அடுத்த கட்டப் பணிகளை ஆலோசனை செய்வதற்காகவும், விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்காகவும் கடலூர் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது. அடுத்த முறை வரும் போது தெரியப்படுத்தவும் என்று சொல்லியிருந்த நண்பர்களுக்காக இந்தச் செய்தி. இரண்டு நாட்களுக்கும் வேலை தொடர்ந்து இருக்கக் கூடும். வாய்ப்பிருப்பின் நிச்சயம் சந்திக்கலாம்.
கணக்குவழக்கில் ஏதேனும் சந்தேகம், தவறு இருப்பின் தெரியப்படுத்தவும். வேறு எந்தக் கேள்வியாக இருந்தாலும் கேட்கலாம். பொதுப்பணம் இது. வழக்கம் போல வங்கி பரிமாற்ற (Bank Statement) விவரங்களை மாத இறுதியில் பதிவு செய்துவிடுகிறேன்.
நன்றி.
5 எதிர் சப்தங்கள்:
Keep up good work.
நல்லது. வாழ்த்துக்கள் மணி.
//பெரிய காட்டுப்பாளையத்தின் தலித் குடியிருப்பு//
சில எழுத்துக்களை மாற்றியிருக்கலாம்.நறு"மனம்" படைத்தவர்கள் கூட அந்த எழுத்துக்களை வாசிக்கும் போது வெறு(ப்பு) மனதிற்கு மாறி விடுவார்கள்.அவர்களாகவே உங்கள் மீது வெர்ச்சுவல் வண்ணம் பூசி தொடர்ந்து உதவுவதை நிறுத்த எண்ணி விடலாம்.
(பேரூந்து கழகத்திற்கு பேர் வச்சதால பேரூந்து பயணத்தையே தவிர்த்தவர்கள் வாழும் ஊரிது).
அப்புறம்
//அந்த மனிதனின் இடத்தில் நின்று பார்க்கும் போது அவர்கள் வருந்துவது சரி என்றுதான் படும்//
என்று நினைக்க மாட்டார்கள். சாதி புத்தி போவுமா? என்று தான் நினைப்பார்கள்.
/ எல்லோருக்கும் ஒரே அளவிலான ஆடு மாடுகளை நூற்றுக்கணக்கில் வாங்குவது லேசுப்பட்ட காரியமில்லை. ‘அவனுக்கு மட்டும் பெரிய ஆடு’ ‘என்னோட மாட்டுக்கு சுழி சரியில்லை’ என்று நிறைய புகார்கள். /
பயனாளிகளையே தேர்ந்தெடுக்க சொல்லிவிட்டு அதற்குரிய பணத்தை விற்பவரிடம் நேரடியாக கொடுத்துவிடலாமே
அது சாத்தியமில்லை. பயனாளிகளை ஆடுகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்த இடத்தில் குறைந்தது நூறு ஆடுகள் இருக்க வேண்டும். ஒருவேளை அது முடியாமல் தனித்தனி ஆட்களிடம் வாங்கினால் ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்து ரசீது வாங்குவது கடினமான காரியம்.
//நிறைய வேலைகள். நெருக்குகின்றன. அதனால்தான் பதில் சொல்லப்படாத மின்னஞ்சல்களும், ஏற்கப்படாத அலைபேசி அழைப்புகளும் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன. தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். வேண்டுமென்று தவிர்ப்பதில்லை.//
My suggestions is, You can assign a dedicated person to maintain all nisaptham trust related work and give monthly salary. Salary can be given from the interest amount.
Post a Comment