எங்கள் குடியிருப்பில் ஒரு வீட்டுக்காரர்கள் வெகு வசதியானவர்கள். கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அந்தப் பெரியவர். திருப்பதிக்கு பக்கத்தில் நாற்பது ஏக்கர் தோட்டமிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியும் ஒரு ஏக்கர் இரண்டு கோடிக்கும் குறைவில்லாமல் விற்குமாம். கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அவருடைய மகள்தான் எங்கள் குடியிருப்பில் இருக்கிறார். அப்பா கட்டிக் கொடுத்த வீடு. வீடு என்று சொன்னால் பாவம் பிடித்துக் கொள்ளும்- பங்களா. கட்டிக் கொடுத்துவிட்டு அவர் திருப்பதி சென்றுவிட்டார். விட்டுவிட்டு வந்தால் யாராவது அரசியல்வாதி கம்பிவேலி போட்டு தன்னுடைய இடம் என்று அறிவித்துவிடுவான் என்று பயப்படுகிறார். அவருடைய மனைவி மட்டும் மகள் குடும்பத்தோடு இருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக மூன்று தடியன்கள் எங்கள் பகுதியில் கோடு வாரியிருக்கிறார்கள்- அங்குமிங்குமாக அவர்கள் அலைவது குறித்து இரண்டு மூன்று பேர்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஆனால் எப்படிக் கேட்க முடியும்? விட்டுவிட்டார்கள். எங்கள் வீட்டுக்கு முன்பாகக் கூட சில நிமிடங்கள் அமர்ந்திருந்ததாகத் தம்பி சொன்னான். அவசர அவசரமாக பூட்டை எடுத்துச் சென்று பூட்டிவிட்டு வந்ததாகச் சொன்னான். நாம் தப்பித்தால் சரிதான். இது வியாழக்கிழமை நடந்தது.
வெள்ளிக்கிழமையன்று மாலை ஏழு மணிக்கு தம்பி அழைத்து ‘அலுவலகத்திலிருந்து கிளம்பிட்டியா?’ என்றான். ஏன் என்று கேட்டதற்கு வீட்டிற்கு அருகாமையில் நிறையக் காவலர்கள் நிற்பதாகவும் பயந்துவிட வேண்டாம் என்பதற்காகச் சொன்னதாகவும் சொன்னான். அவன் சொல்லாமல் இருந்திருந்தால் கூட பயந்திருக்க மாட்டேன். சொன்ன பிறகு அலுவலகத்தில் அமரவே முடியவில்லை. நீங்கள் எதிர்பார்த்ததுதான்.
கோடுவாரிக் கொண்டிருந்த மூன்று பேரும் வெள்ளிக்கிழமையன்று மதியம் மூன்று மணிக்கு அந்த மாளிகையின் கதவைத் தட்டியிருக்கிறார்கள். கீழ் தளத்தில் அந்த முதிய பெண்மணி மட்டும் இருந்திருக்கிறார். அவருக்கு காது மந்தம். யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என்று தெரிந்தவுடன் எழுந்து சென்று கதவைத் திறந்திருக்கிறார். திபுதிபுவென்று உள்ளே நுழைந்த மும்மூர்த்திகளும் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அவருடைய மகள் மேல் தளத்தில்தான் இருந்திருக்கிறார். Work from home. ஆனால் அவருக்கு கீழே நடப்பது எதுவும் தெரிந்திருக்கவில்லை. அந்தப் பெண்மணியை ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டு வாயில் துணியைச் செருகிவிட்டார்கள். அவருடைய கழுத்து காதில் இருந்ததையெல்லாம் கழட்டிவிட்டு கீழ் தளத்தில் இருந்தவற்றையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டார்கள். அதோடு விட்டுத் தொலைந்திருக்கலாம். செல்லும் போது அவரது கையில் அழுந்தக் கீறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பாவிகள். கதறவும் முடியாமல் கத்தவும் முடியாமல் அப்படியே மயங்கிக் கிடந்திருக்கிறார்.
முன்பெல்லாம் வீட்டில் யாருமில்லை என்றால்தான் பெங்களூரில் திருட வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை.
முன்பெல்லாம் வீட்டில் யாருமில்லை என்றால்தான் பெங்களூரில் திருட வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை.
மேல் தளத்தில் இருந்த பெண் அம்மாவுக்கு உள்ளிடபேசியில் (intercom) அழைத்திருக்கிறார். சத்தமேயில்லை. பதறிப் போய் கீழே வந்து பார்த்த போது வரவேற்பறை முழுவதும் ரத்தம் ஓடிக் கிடந்திருக்கிறது. என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்திருக்கிறது. காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு தூக்கி மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். அதனால்தான் காவலர்கள் சுற்றிலும் நின்றிருந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாகவே அந்த மூன்று பேரையும் எங்கள் குடியிருப்பில் நிறையப் பேர் பார்த்திருக்கிறார்கள். காவலர்கள் விசாரித்திருக்கிறார்கள். ‘பார்த்தோம். ஆனா சரியா அடையாளம் தெரியலை’ என்று சொல்லியிருக்கிறார்கள். தம்பியும் அதையேதான் சொல்லியிருக்கிறேன். ‘குண்டா ஒருத்தன் இருந்தான் சார்...ஆனா முகவெட்டு தெரியல’ என்றானாம்.
‘அட அடையாளத்தைச் சொல்லியிருக்கலாம்ல?’ என்றேன்.
‘எதுக்கு? போலீஸ்காரனுக்கு ஒருவேளை அவனுகளோட கனெக்ஷன் இருந்து...அந்த எதுக்கால ஊட்டுக்காரன் அடையாளம் சொல்லுறான்...போய் கவனின்னு சொல்லி அனுப்பறதுக்கா?’ என்றான். எனக்கு குப்பென்றாகிவிட்டது. தம்பிக்கு கொஞ்சம் நல்ல நேரம். எப்படியும் அவன் தப்பித்துவிடுவான். அடையாளம் மாறி என்னைத்தான் மொக்கிவிட்டு போவார்கள். ‘அதுவும் சரிதான்’ என்று சொல்லிவிட்டு அமைதியாகிக் கொண்டேன்.
இவ்வளவுதான் நகரம்.
இந்த வீட்டுக்குக் குடி வந்த புதிதில் பக்கத்து வீட்டில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் இறப்பு. அவருடைய அம்மா இறந்து போனார். மரணம் நிகழ்ந்த வீட்டில் அவருடைய குடும்பம் மற்றும் அவருடைய சகோதரியின் குடும்பம் மட்டும்தான் இருந்தார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் இருந்தது. யாருமே இல்லை. மனரீதியிலான ஆறுதலுக்காவது யாராவது வர மாட்டார்களா என்று ஏங்கியிருக்கக் கூடும். இந்த திருட்டுப் போன வீட்டிலும் அப்படித்தான். யாருமே எட்டிப் பார்க்கவில்லை. கிராமங்களிலும் நிலைமை மாறியிருக்கிறது என்றாலும் இவ்வளவு மோசமாக இருக்காது. விசாரித்துவிட்டாவது போவார்கள். இங்கு எல்லாவற்றிலும் ஒரு அவநம்பிக்கை. ‘நாமும் நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்’ என்று நினைக்கிறார்கள். எதுக்கு வெட்டி வம்பு என்று தயங்குகிறார்கள்.
இன்று காலையில் அந்தப் பேராசிரியரைப் பார்த்தேன். ஊரிலிருந்து வந்திருக்கிறார். அவரிடம் ‘வார இறுதியில் ஊருக்குப் போயிருந்தேன். இன்னைக்குத்தான் வந்தேன்...கேள்விப்பட்டேன் சார்’ என்றேன். ‘ஒன்றும் பிரச்சினையில்லை’ என்று சொல்லிவிட்டு நிற்காமல் நகர்ந்துவிட்டார். வேறு ஏதேனும் தகவல்களைக் கேட்பேன் என்று அவர் பயந்திருக்கக் கூடும். எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் வந்துவிட்டேன். நாம் யாரையுமே நம்பாத, நம்மை யாருமே நம்பாத ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதான மனநிலை வந்துவிட்டது. வெகு நாட்களாகவே மனதுக்குள் உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான். ஆனால் சமீபமாக கொந்தளிக்கிறது.
வெறும் பணத்துக்காகத்தான் இந்த ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லையா? மனிதம், உதவி, நட்பு, சக மனிதம் மீதான நம்பிக்கை என எல்லாவற்றையும் ரூபாய் நோட்டுகளுக்குக் கீழாகப் போட்டு புதைத்திருக்கிறோம் என்று தோன்றியது. அலுவலகத்திற்கு வரும் வரைக்கும் மனம் நிலைகொள்ளவே இல்லை. தம்பியிடம் அழைத்து ‘நீ கோயமுத்தூரில் வேலை வாங்க முடியுமா? நானும் முயற்சிக்கிறேன். அங்கே போய்விடலாம்’ என்று சொல்லியிருக்கிறேன். நடக்குமா என்றுதான் தெரியவில்லை.