Jan 2, 2016

கபாடபுரம்

கே.என்.செந்திலை வெகுகாலமாகத் தெரியும். இப்படி யாரையாவது சுட்டிக் காட்டும் போது பெருமையாக இருக்கும் அல்லவா? எனக்கு அந்தவொரு பெருமை உண்டு. செந்தில் அவிநாசிக்காரர். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிபட்டிருந்த போது இருவரையும் அவிநாசியில் இருக்கும் பாலச்சந்தர் மருத்துவமனையில்தான் படுக்க வைத்திருந்தார்கள். செந்திலின் வீடு வெகு பக்கம். ஒரு அகண்ட சாக்கடையின் கரையில் கொசுக்கள் கடிக்க அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒரே வயதையொத்தவர். தீவிரமாக வாசிக்கிறவர். அதைவிடத் தீவிரமாக எழுதுகிறவர் என்று அவரைப் பிடிக்க நிறையக் காரணங்கள் உண்டு.

இப்பொழுது கபாடபுரம் என்றவொரு இணைய இதழை நடத்துகிறார். இரண்டாவது இதழ் வந்துவிட்டது சுகுமாரன், அம்பை, ஜெயமோகன், ஷங்கர் ராம சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கியமான ஆளுமைகளிடம் படைப்பை வாங்கி வெளியிட்டிருக்கிறார். எந்த படைப்பையும் தாண்டிச் செல்ல முடியாது. அருமையான படைப்புகள். மதியத்திலிருந்து இதழை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எழுதிவிட வேண்டும் என்கிற உந்துதல் இல்லாமல் இல்லை.

பொதுவாக, இணைய எழுத்துக்கள் மேம்போக்கானவை. அவை வாசகர்களிடமிருந்து அதிகமான உழைப்பைக் கோராதவை. பரவலாகவே ‘இணையத்தில் வர்றதெல்லாம் இலக்கியம் இல்லை’ என்று இலக்கியவாதிகள் சொல்வார்கள். அதை அப்படியே மறுக்கவும் முடியாது. இணையம் என்பது அப்படித்தான். ஆனால் பொதுவான இந்த எண்ணத்தில் சில இதழ்கள் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கின்றன. சொல்வனம், கபாடபுரம் போன்றவை அப்படியான இணைய இதழ்கள்.

கே.என்.செந்தில் தொடங்கியிருக்கும் இந்தச் செயல்பாடு மிக முக்கியமானது. இணையத்தில் இதழை நடத்துவது என்பது எளிதான காரியமில்லை.

அச்சு இதழ்கள் என்பவை தேதியானால் வீடு வந்து சேர்ந்துவிடும். எப்படியாவது கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் இணைய இதழ் அப்படியில்லை. இணையத்தைப் பொறுத்தவரைக்கும் தொடர்ச்சி அவசியம். ஒரு வாரம் எழுதாமல் இருந்தால் மறந்துவிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கும். இணைய இதழ்களை நடத்துகிறவர்களின் உற்சாகம் குறைவதற்கு இதுதான் முக்கியமான காரணம். இதழ் வெளியாகும் தினத்தன்று ஆயிரம் பேர் வாசித்தால் அடுத்தடுத்த தினங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகு கணிசமாக குறைந்து கொண்டேயிருக்கும். பத்தாவது நாட்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாகிவிடும்.

செந்தில் நிறைய பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்க்கலாம்.

இணைய இதழின் அனைத்து படைப்புகளையும் ஒரே தினத்தில் வெளியிட வேண்டியதில்லை. தினம் ஒரு படைப்பாக வாங்கி வெளியிடலாம். வாசகர்கள் தொடர்ந்து வருவார்கள். ‘இன்னைக்கு இந்தத் தளத்தை வாசிக்க வேண்டும்’ என்பது மனதில் பதிந்துவிடும். ஆனால் தினமும் படைப்புகளை வெளியிடுவதில் நடைமுறைச் சிரமங்கள் நிறைய இருக்கின்றன. வாசகர்களுக்கு மற்றுமொரு வலைப்பதிவு போன்ற மனநிலை உருவாகி விடக் கூடும்.

இணைய இதழ்களுக்கு வருமானம் எதுவுமில்லை. அச்சு இதழ்களுக்கு படைப்புகளை அனுப்புவதைப் போல இணைய இதழ்களுக்கு படைப்புகளை அனுப்புவதற்கு பெரும்பாலானவர்கள் விரும்பமாட்டார்கள். இத்தகைய சிக்கல்களைத் தாண்டி காத்திரமான படைப்புகளை வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.  ‘இதழ் தரமானது’ என்கிற எண்ணத்தை உருவாக்க வேண்டும். சமரசம் செய்து கொள்ளாத ஆசிரியர்/ஆசிரியர் குழு என்ற நம்பிக்கை வர வேண்டும். அதே சமயம் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இதையெல்லாவற்றையும் பொறுமையாகத்தான் சாதிக்க முடியும். செந்திலும் கபாடபுரமும் அந்த இடத்தை அடைவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது.

நம்பிக்கைக்கு குந்தகமில்லாமல் இரண்டாவது இதழையும் கொண்டு வந்திருக்கிறார். வாய்ப்பிருக்கிறவர்கள் இதழை வாசித்துப் பார்க்கலாம். சற்றே பொறுமையாக வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் இவை. ஆனால் வாசிக்கத் தவற விடக் கூடாதவை என்று தைரியமாகச் சொல்லலாம். தினம் ஒரு படைப்பு என்றாலும் கூட அடுத்த இதழ் வெளியாகும் வரைக்கும் வாசித்துக் கொண்டிருக்கலாம்.

இலக்கியவெளிக்கு அப்பால் இருப்பவர்களுக்கு செந்திலின் பெயர் பரிச்சயமில்லாமல் இருக்கக் கூடும். ஆனால் பரிச்சயம் செய்து கொள்ள வேண்டிய பெயர் என்பதில் சந்தேகமில்லை. எழுத்திலும் வாசிப்பிலும் தொடர்ந்து அர்ப்பணிப்போடு இயங்கக் கூடியவர் கபாடபுரத்திலும் இதே அர்ப்புணிப்புடன் தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றலையும் வலிமையும் உற்சாகத்தையும் இணையவெளி வழங்கட்டும்.

4 எதிர் சப்தங்கள்:

‘தளிர்’ சுரேஷ் said...

இணைப்புக்குச் சென்று வாசிக்கிறேன்! விகடனில் உங்களை பாராட்டியுள்ளார்கள்! வாழ்த்துக்கள்! புத்தாண்டு வாழ்த்துக்களும்! நன்றி!

தங்கம் பழனி said...

நல்லதொரு அறிமுகம். வாழ்த்துகள்..!

Vinoth Subramanian said...

Will read sir.

உமாகணேஷ் said...

கலாப்ரியாவின் வேனல் தொடரா? தெரியவில்லை. ஆனால் தவறாமல் படிக்க வேண்டிய கதை. அத்தனை நுணுக்கங்கள் அதில். உங்கள் நண்பருக்கும் கபாடபுரம் இதழுக்கும் வாழ்த்துகள்