Jan 7, 2016

கோணம்

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் தங்க வேண்டியிருந்தது. சில மாதங்கள் மேடவாக்கத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்து ப்ராஜக்ட் வேலையை பள்ளிக்கரணையிலிருந்த ஒரு நிறுவனத்தில் செய்து கொண்டிருந்தேன். நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அவ்வளவு தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருக்கிறேன். இல்லாத ஒரு அண்ணனை உருவாக்கி அவருக்கு விபத்து நடந்துவிட்டதாக புருடாவிட்டு ‘நீங்க ப்ராஜக்ட் செஞ்சு கொடுங்க...நான் அண்ணனை கவனிக்கப் போகணும்’ என்று கதை அளந்து ஏமாற்றியிருந்தேன். எனது அழுகையை அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் செய்து கொடுத்த ப்ராஜக்டை கல்லூரியில் காட்டி நல்ல பெயர் வாங்கிக் கொண்டேன். 

இப்படி ஏமாற்ற காரணமிருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு வேலை கிடைத்திருந்தது. ராக்கெட் விடும் வேலை என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை. அந்த நிறுவனத்தில் ஆட்களை வேலைக்கு எடுத்து கொஞ்ச நாட்களுக்கு பயிற்சி கொடுத்து விசாவும் ஏற்பாடு செய்து அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள். அதில் அவர்களுக்கு செமத்தியான வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. என்னை ஜாவா கற்றுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள். ஜாவா படித்தேனா என்று ஞாபகமில்லை. ஆனால் பெண்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தேன். எப்படியாவது ‘அமெரிக்க மாப்பிள்ளையாக ஊருக்கு வந்து அழகான பெண்ணைக் கட்டிக் கொள்ளலாம்’ என்ற நினைப்பில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். நிறுவனத்தில் ஆனவரைக்கும் கெஞ்சிப் பார்த்தேன். ‘பத்தாயிரமாச்சும் சம்பளம் கொடுங்கய்யா’ என்றதை அவர்கள் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அந்த நிறுவனம் கோட்டூர்புரத்தில் திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. 

மேடவாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் வந்து போவது வீண் அலைச்சலாக இருந்தது. அடையார் வந்து சேர்ந்தேன். அடையாறில் அப்பொழுது நண்பர்கள் யாருமில்லை. தனியாகத் தங்குவதற்கு அறை தேட வேண்டியிருந்தது. ஐஐடியை ஒட்டிய மாதிரி ஒரு சந்து உண்டு. அந்தச் சந்தில் ஓர் அறை கிடைத்தது. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்திருந்தார்கள். பக்கத்தில் இருக்கும் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த படு மோசமான அறை அது. நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் பத்து அல்லது பதினைந்து நாட்கள் தங்கியிருந்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். அது பெரிய சிரமம் இருக்காது. ஆனால் மாதக் கணக்கில் தங்குவது சிரமம். தெரியாமல் விழுந்துவிட்டேன். 

ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். காலை ஐந்து மணிக்கு எழுந்து இரண்டு மூன்று குடங்களில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். ஏமாந்துவிட்டால் எல்லாவற்றுக்கும் பாட்டில் தண்ணீர்தான். கொடுமையான வாழ்க்கை. நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் வாடைகையாகப் போய்விடும். ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுச் செலவுக்கு. மீதம் இரண்டாயிரம் ரூபாய் ஊருக்குச் சென்று வர, இடையில் கல்லூரிக்குச் சென்று வர, புத்தகங்கள் வாங்குவதற்கு என்று சரியாக இருக்கும். பெரும்பாலான சமயம் தனிமைதான்.

சனி, ஞாயிறுகளில் அறையின் ஆஸ்பெஸ்டாஸ் வெப்பத்தை தாளமாட்டாமல் ஏதேனும் புத்தகத்தை எடுத்துச் சென்று காந்தி மண்டபத்தில் தலைக்கு வைத்து படுத்துத் தூங்கி எழுந்து வருவேன். என்றாலும், தனிமையில் கிடப்பது ஒரு வகையில் சுகமானது. கண்டதையெல்லாம் மனம் யோசிக்கும். நம்மை நாமே புரிந்து கொள்வதற்கு இத்தகைய திக்கற்ற யோசனைகள் அவசியம். வாழ்க்கை முழுவதும் இத்தகைய தருணங்கள் அமைவதில்லை. எப்பொழுதாவது கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ‘நேரமே இல்லை’ என்கிற பஜனைதான் பழக்கமாகியிருக்கிறது. நம்மை நோக்கி அடுத்தவர்களால் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை யோசிக்க மட்டும்தான் நேரம் கிடைக்கிறது. அதைத் தாண்டி எப்பொழுது யோசித்துப் பார்த்தோம்? யோசனை என்றால் மனமானது சகட்டு மேனிக்கு அலைய வேண்டும். திக்கும் திசையுமில்லாமல் அலையும் போதுதான் நம்முடைய இலக்குகள் தெளிவாகும். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோமா என்பது புரியும். இனி நாம் செல்ல வேண்டிய பாதை துலக்கமாகும்.

விடிந்தவுடன் அலுவலகத்தில் இருக்கும் வேலைகள் மண்டையை ஆக்கிரமிக்கின்றன. மாலை ஆனால் வீட்டு நினைப்பு ஆக்கிரமிக்கிறது. கொஞ்ச நேரம் இடைவெளி கிடைத்தால் செல்போனும் இணையமும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. கடிவாளம் கட்டப்பட்ட குதிரை மாதிரி- முன்னால் தெரியும் பாதையைத் தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை.

அடையாறில் தனித்துக் கிடந்த சமயத்தில் நிறைய யோசிக்க முடிந்தது. ‘இதுவரை பொய் பேசி ஏமாற்றியதெல்லாம் போதும்; இனியாவது நல்லவனாக இருப்போம்’ என்று அவ்வப்பொழுது யோசிப்பேன். இதெல்லாம் சுய திருப்திக்காகச் சொல்லிக் கொள்வது. புற்று நோயாளிகளைப் பார்க்கும் போதெல்லாம் குலை நடுங்கும். நோய்மை மனிதனை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பதைவிட கொடிய தண்டனை வேறு இருக்க முடியாது. எனது அறைக்கு பக்கத்திலேயே புற்று நோய் தாக்கிய ஒரு பெண்ணைத் தங்க வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் பேய் பிடித்திருப்பதாக நினைத்து அவளுக்கு ஏதேதோ மந்திர தந்திரங்களைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் மனநிலையே மாறியிருந்தது. நள்ளிரவில் கூக்குரலிடுவாள். நடுங்கி எழுந்து அமர்வேன். இத்தகைய பயங்களிலிருந்தும் அடுத்தவர்களின் வேதனைகளிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்வதற்காக ‘யோக்கியனாக இருப்போம்’ என்கிற நினைப்பு தேவையானதாக இருந்தது. அதுவொரு வகையில் பாதுகாப்பானதாக உணரச் செய்தது. செய்கிறதையெல்லாம் செய்துவிட்டு சபரிமலைக்கு மாலை அணிவதைப் போலத்தான் இது.

நல்லவனாக இருப்போம் என்று முடிவு செய்தாகிவிட்டது. அடுத்தது என்ன செய்வது? சட்டைப்பையில் இருந்து காசு எடுத்துக் கொடுக்கிற அளவுக்கு தயாளனும் இல்லை. கைவசம் சில்லரையும் இல்லை. மண்டை காய்ந்து குழம்பி ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். புற்று நோய் மருத்துவமனைக்கு வருகிறவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுவது என்கிற முடிவு அது. ஒரு நல்ல நாளாகப் பார்த்து ஒரு குடம் தண்ணீரில் தலைக்குக் குளித்துவிட்டு மருத்துவமனைக்கு முன்பாக நின்று கொண்டேன். பிஞ்சுக் குழந்தைகளையும் வயதானவர்களையும் சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் செல்லும் போதெல்லாம் நெஞ்சுக்குள் வெறுமை படர்ந்து கொண்டிருந்தது.

அதீத உணர்ச்சிவசப்படுதல் எப்பொழுதுமே நல்லது இல்லை. 

எட்டு மணி இருக்கும். வடக்கத்திப் பெண்மணி ஒருவர் சிறுமியை அழைத்துக் கொண்டு வந்தார். முப்பத்தைந்து வயது மதிக்கலாம். அவரது கையில் இரண்டு பைகள் இருந்தன. அந்தச் சிறுமியிடம் ஒரு பை. அவர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. வேறு துணையில்லாமல் வந்திருந்தார்கள். முகத்துக்கு நேராகப் பார்த்து சிரித்தேன். அவர் அதை விரும்பவில்லை. வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார். அதோடு நான் விட்டிருக்க வேண்டும். அருகில் சென்று பைகளைக் கொடுக்கச் சொல்லி கையை நீட்டினேன். அதுதான் வினையாகப் போய்விட்டது. என்னை வழிப்பறிக்காரன் என்று நினைத்துக் கொண்டார்.

‘போலீஸ் போலீஸ்’ என்று கத்தினார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஓடினால் நாம் திருடன் என்பது உண்மையாகிவிடும். நம்மூரில் கேட்கவா வேண்டும்? ஒருத்தன் சிக்கினால் துரத்தி துரத்தி அடிப்பார்கள். புருஷன் மீதும் பொண்டாட்டி மீதும் இருக்கிற கோபத்தையெல்லாம் இப்படிச் சிக்குகிறவர்கள் மீதுதான் இறக்குவார்கள். ஓடாமல் அங்கேயே நின்று ‘அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் கையை நீட்டினேன்’ என்று சொன்னால் நம்புவார்களா என்றும் சந்தேகம். என்ன நினைத்தேனோ தெரியவில்லை- அந்தத் தருணத்தில் ஓடுவதுதான் சரியாகப் பட்டது. அந்தப் பெண் அதற்குள் இரண்டு மூன்று முறை கத்தியிருந்தாள்.

‘கடவுளே கருப்புசாமி..காப்பாத்துடா’ என்று தலை தெறிக்க ஓடினேன். முகச் சதைகள் அதிர்ந்தன. முரட்டு ஓட்டம். பின்னால் யாராவது துரத்துகிறார்களா என்று தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் வந்து பிடித்துவிடக் கூடும் என பதறியபடியே ஓடி சந்துக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு யாரும் துரத்தவில்லை என்று தெரிந்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது.

ஜஸ்ட் மிஸ் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றிரண்டு நாட்களுக்கு அந்தச் சம்பவம் மனதுக்குள் அலையடித்துக் கொண்டேயிருந்தது. சிறுமியின் முகம் வந்து வந்து போனது. அதன்பிறகு அந்த மருத்துவமனையின் பக்கமாகவே நான் செல்லவில்லை என்பது இருக்கட்டும். அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள்? தனது உடைமைகளை ஒரு கொடியவனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டதாக நம்பியிருக்கக் கூடும். சென்னையில் படு மோசமானவர்கள் நிறைந்திருப்பதாக ஒரு முடிவுக்கு வந்திருப்பாள். தன்னுடைய வேதனையோடு கூடுதலாக இன்னுமொரு வேதனையை இறக்கி வைக்க முயற்சிப்பதாக கடவுளையும் சபித்திருக்கக் கூடும்.