Jan 12, 2016

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்பதை இவ்வளவு அவசரமான வழக்காக எடுத்து ஒரே நாளில் விசாரணையை முடித்து தடை செய்கிறோம் என்று தீர்ப்பெழுத வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. ஜல்லிக்கட்டு என்பதை உணர்ச்சி பூர்வமான ஒரு சங்கதியாக முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. தேர்தல் சமயங்களில் இத்தகைய உணர்ச்சி விளையாட்டுக்கள் அரசியல்வாதிகளுக்கு அவசியமாக இருக்கின்றன. எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அரசியல் கட்சிகள் ஸ்கோர் செய்ய முயற்சிக்கத்தான் செய்வார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

அரசியல், வழக்கு, தேர்தல் என்பதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும் ஜல்லிக்கட்டை நம்முடைய அடையாளமாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? ஒரு காலத்தில் பொழுதுபோக்கு அம்சமாக இருந்த ஜல்லிக்கட்டு பிறகு வீரத்தின் அடையாளம் என்பதாகவும், முரட்டுக்காளையை வளர்ப்பதே கெளரவம் என்பதாகவும், அதை அடக்குகிறவர்கள் வீரத் திருமகன்கள் என்பதாகவும் குறியீடாகவும் அடையாளமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் காலத்திலும் ஒரு காளையை அடக்கித்தான் நம்முடைய வீரத்தையும் ஆண்மையையும் காட்ட வேண்டியிருக்கிறதா? காளையை அடக்கித்தான் நம்முடைய திறமையை வெளிப்படுத்த வேண்டுமா? ஏறு தழுவுதல் இல்லையென்றால் நமக்கான பொழுது போக்குக்கு வேறு வழியே இல்லையா?

ஜல்லிக்கட்டுக்கான அனுமதி என்பது நாட்டு மாடுகள், இயற்கை விவசாயம் குறித்தான ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதற்கான குறியீடு என்றெல்லாம் எழுதி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்துவதால் நாட்டு மாடுகள் பெருகும் என்பதாக இருந்தால் எந்தக் காலத்திலேயோ பெருகியிருக்க வேண்டும். இயற்கை விவசாயம் தழைத்தோங்கியிருக்கும். இனம், மொழி, அரசியல் உள்ளிட்ட மனச்சாய்வுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஜல்லிக்கட்டு தேவையா என்று யோசித்துப் பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு நடத்தித்தான் நம்முடைய கலாச்சாரத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. டாஸ்மாக்கும், அளவற்ற குடியும் சமூக அடையாளங்களாகிப் போன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சர்வசாதாரணமாக அடுத்த மனிதனைக் கொன்று வீசிவிட்டுப் போகிற ரத்தக் கறை படிந்த சூழலில் நம்முடைய் பிழைப்புத்தனம் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் நம்முடைய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அற்பத்தனமான சினிமா மோகம், குடி, அசிரத்தையான மனநிலை எனச் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையைச் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. நம் கண் முன்னால் நிகழக் கூடிய சமூக அவலங்களை நோக்கி குறைந்தபட்சமான கேள்விகளையாவது கேட்கும் சுரணையுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு குடல் சரிந்தும், முகம் கிழிந்தும் போகும் சிலரை வாழ்க்கையின் இருண்டகாலத்திற்கு தள்ளிவிடுவதற்காக ஜல்லிக்கட்டை நடத்தப் போகிறோம். இல்லையா?

இன்னொரு சாராரைப் போல ஜல்லிக்கட்டை கலாச்சாரத்துடன் எல்லாம் இணைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நிரந்தரமான கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள் என்பதெல்லாம் எதுவுமில்லை. காலம் மாறும் போது சமூகத்தின் செளகரியத்திற்கு ஏற்ப இவையெல்லாம் மாறிக் கொண்டேதான் இருக்கும். கடந்த இரண்டாயிரம் வருடங்களில் நம்முடைய உடைகள் மாறியிருக்கின்றன. திருமண முறைகள், சடங்குகள். சம்பிரதாயங்கள் என எல்லாமும் மாறியிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பாகச் செல்ல வேண்டியதில்லை- நூறாண்டுகளுக்கு முன்பான சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இன்னமும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோமா? ஐம்பதாண்டுகளுக்கு முன்பான உணவுப் பழக்கத்தைத்தான் இன்னமும் தொடர்கிறோமோ? எல்லாமே நெகிழ்ந்தும் வளைந்தும் உருமாறியும் போவதுதான் இயல்பானது. இன்னும் பத்து வருடங்களில் நம்முடைய பண்பாடு என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய விஷயங்களில் புதியன உள்ளே புகுந்திருக்கும். இப்பொழுது இருப்பவை உருமாறியிருக்கும். அதுதான் இயற்கையின் நியதியும் கூட. எல்லாவற்றையும் வறட்டுத்தனமாக பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 

மிருகவதை என்பதெல்லாம் இருக்கட்டும். கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டுகளில் இறந்து போன குடும்பங்களின் நிலைமை என்னவாகியிருக்கிறது? ‘ஜல்லிக்கட்டை நடத்துவோம்’ என்கிற போராளிகளில் எத்தனை பேர் இந்தக் குடும்பங்களில் வெளிச்சம் ஏற்றுகிறார்கள்? வெளியிலிருந்து பார்க்கும் போது ‘நாலு பேர்தான் செத்துப் போனாங்க’ என்பது சர்வசாதாரணமாக இருக்கலாம். ஆனால் அந்த நான்கு குடும்பங்களின் வலியை அந்த நான்கு குடும்பங்களால் மட்டும்தான் உணர முடியும். வெறியேற்றுவதும், உசுப்பேற்றுவதும் விவேகம் இல்லை. ஐந்தறிவு கொண்ட வெறியேற்றப்பட்ட விலங்கை விரட்டிப் பிடிப்பது வீரமும் இல்லை. இப்படி உசுப்பேற்றுபவர்கள் யாரும் அலங்காநல்லூரில் களம் இறங்கப் போவதில்லை அல்லது தனது மகனிடம் ‘இதுதான் ஆண்மை. போய் மாட்டைப் பிடி’ என்று வழியனுப்பப் போவதில்லை. சாகிறவன் சாமானியன். அகப்படப் போகிறவர்கள் அப்பாவிக் குடும்பத்தினர்.

ஃபேஸ்புக்கையும், நியூஸ் சேனல்களையும் பார்த்துவிட்டு எல்லாவற்றையும் உணர்ச்சிகரமாக அணுகிக் கொண்டிருக்கிறோம். சாலையில் போகும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் செத்துப் போகிறார்கள். பெயர் தெரியாத நோய் பீடித்து உயிரை விடுகிறார்கள். அணுக்கழிவு, வேதிப்பொருட்கள், சுற்றுச் சூழல் என்று இந்த உலகை ஒவ்வொரு நாளும் பாதுகாப்பற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலுமிருந்து நம் அடுத்த தலைமுறையை எப்படிப் பாதுகாப்பது என்பதை யோசிக்க வேண்டிய தருணத்தில் இருந்து கொண்டு அபாயகரமான செயல்களை ஆதரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஜனவரிக்கு ஜனவரி ‘ஜல்லிக்கட்டை நடத்துவோம்’ என்பதும் ‘மாடுகளை வதைக்காதீர்கள்’ என்பது அபத்தமான நாடகத்தின் இருவேறு காட்சிகளாக பல்லிளிக்கின்றன.

இந்தப் பல்லிளிப்புகளுக்கிடையில் நீதிமன்றங்களின் அவசரத் தலையீடுகள், தேர்தல் வாக்கு அரசியலுக்காக கையில் எடுக்கப்படும் வாதங்கள், ‘எங்களால்தான் இது’ என்கிற வறட்டு கோஷங்கள் எல்லாம் வெகுவாகக் குழம்பச் செய்கின்றன. பெட்டா போன்ற அமைப்புகளின் அரசியல் பற்றி தனியாகப் பேசலாம். பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு அவசியம்தானா? இப்படிக் குழம்புவதும் இரண்டு நாட்களில் அடுத்தவொரு உணர்ச்சிகரமான சம்பவத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போராளியாக உருவெடுப்பதும் நம்முடைய தினசரிக் கடமைகளில் ஒன்றாகிக் கொண்டிருக்கிறது. பல் துலக்குகிறோமோ இல்லையோ- போராளி ஆகிவிடுகிறோம்.