Jan 19, 2016

பிடிப்பு

வேதஷின் தந்தை இரண்டு மூன்று வாரங்களாகத் தொடர்பில் இருக்கிறார். வேதேஷூக்கு நான்கு வயதாகிறது. கடந்த ஜூலை மாதம் வரை இயல்பாக இருந்த குழந்தை. திடீரென தலைவலி அதிகமாகியிருக்கிறது. பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் பார்த்துவிட்டு அப்பல்லோவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கேதான் குழந்தைக்கு ஹீமோபீலியா என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ரத்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டால் சாதாரணமாக சில நிமிடங்களில் உறைந்துவிடும். ஆனால் இந்த நோயுடையவர்களுக்கு உறையாது. ரத்தக்கசிவு தொடர்ந்து கொண்டேயிருக்கும். வேதேஷூக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதனால் தலைவலி வந்திருக்கிறது. தலைவலியின் சிசிக்சைக்காகச் சென்றவர்களுக்கு தலையில் இடி இறங்கியிருக்கிறது.

எப்படியெல்லாம் நோய்கள் வருகின்றன? சராசரியாக முப்பத்தைந்தாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த நோய் வருகிறதாம். அதுவும் ஆண் குழந்தைக்குத்தான் வருகிறது. பச்சிளம் குழந்தைக்கு வரும் நோயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைவிடவும் வேறு துக்கம் ஏதேனும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஹீமோபீலியாவில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ‘ஏ’ வகை பொதுவானது. ‘பி’ அரிதானது. இந்தக் குழந்தைக்கு வந்திருப்பது ‘பி’ வகை. ஜீனில் உண்டாகக் கூடிய பிரச்சினை. 1960 வரைக்கும் இந்த நோய் வந்தவர்களின் வாழ்நாள் மிகக் குறைவாக இருந்திருக்கிறது. அதிகபட்சம் பத்திலிருந்து பதினோரு வருடங்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். அதுவும் வேதேஷூக்கு ஏற்பட்டிருப்பது போன்ற உள் ரத்தக் கசிவுகள் மிகுந்த அபாயம் மிக்கவையாக இருந்திருக்கின்றன. மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சமாளித்துவிடலாம் போலிருக்கிறது. சரியான சிகிச்சையின் மூலமாக சராசரி வாழ்நாளை கிட்டத்தட்ட நெருங்கிவிட முடியும் என்கிறார்கள். வேதேஷின் மருத்துவ சான்றிதழ்களை அனுப்பி வைத்திருந்தார்கள். மருத்துவ நண்பர் ஒருவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் பார்த்துவிட்டுச் சொன்ன தகவல்கள் இவை. 

வேதேஷின் தந்தை லோகநாதன் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக இருக்கிறார். கடந்த ஜூலையிலிருந்து வேதேஷூக்கு ஊசி வழியாக மருந்து ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதே சிகிச்சையை இன்னமும் இரண்டு வருடங்களுக்குத் தொடர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். Baxter Immunine 600 என்னும் அந்த மருந்து கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் ரூபாய் விலை. வாரத்திற்கு ஒரு ஊசி. மாதம் நான்கு மருந்து. ஐம்பதாயிரத்தைத் தொடுகிறது. எவ்வளவு வசதியான குடும்பமாக இருந்தாலும் சமாளிப்பது சிரமம்தான். முதல் நான்கைந்து மாதங்களுக்கு சென்னையில் இருக்கும் ஒரு அறக்கட்டளை உதவியிருக்கிறது. இனி தங்களால் கைகொடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். மாதம் ஐம்பதாயிரம் என்பது எந்தவொரு அறக்கட்டளைக்கும் பெரிய தொகைதான்.

‘நீங்க ஏதாச்சும் ஹெல்ப் செய்ய முடியுமா?’ என்றார். கடந்த இரண்டு மாதங்களாக குழந்தைக்கு மருந்து கொடுக்கப்படவில்லை. வழி இல்லாமல் விட்டுவிட்டார்கள். லோகநாதன் முயற்சித்தபடியேதான் இருக்கிறார். ஆனால் வழி அமையவில்லை போலிருக்கிறது. ‘தி இந்து’ ஆசிரியர் அரவிந்தன் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறார். நம்பிக்கையாகச் சொல்லியிருக்கிறேன். இரண்டு மாதங்களாக மருந்து கொடுக்காததன் காரணமாகவோ என்னவோ வேதேஷ் சோர்ந்து கொண்டேயிருக்கிறான் என்றார்.

இனியும் தாமதிப்பது சரியாக இருக்காது. அவருக்கு இந்த மருந்து எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் தெரியவில்லை. இதுவரையிலும் அந்த அறக்கட்டளையிலிருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நிசப்தம் வழியாக ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கான உதவியைச் செய்தால் வேறு வழிவகைகளைத் தேடுவதாகச் சொன்னார். ‘என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் அவரிடம் பதில் இல்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்கிறார். இப்படியான நம்பிக்கையில் அடுத்தடுத்த விடியல்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மனது பதைபதைக்கிறது. சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில்தான் ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரை இழுத்துப் பிடிக்க முகம் தெரியாத மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் பொல்லாதது. யாரைத் தூக்கி உச்சாணியில் வைக்கும் யாரை உருளவிட்டு வேடிக்கை பார்க்கும் என்பதைக் கணிக்கவே முடிவதில்லை.

உடனடியாக இந்த மருந்து எங்கே கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். சலுகை விலையில் எந்த மருந்து விநியோகஸ்தராவது வழங்குவார்களா என்று தேட வேண்டியிருக்கிறது.

வேதேஷ் மாதிரியான குழந்தைகளுக்கு வரும் நோய்மை நமக்கு வாழ்வின் மீதான பயத்தை உண்டாக்கினால் அந்தக் குழந்தையின் அப்பா லோகநாதன் மாதிரியானவர்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறார்கள். எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்கிற பிடிப்புடன் சலிக்காமல் அலை மோதுகிறார்கள். ஏதேனும் ஒரு கதவு திறந்துவிடும் என்று மாற்றி மாற்றித் தட்டுகிறார்கள். ‘நாளைக்கு இரண்டு மணிக்கு ஃபோன் செய்யுங்க’ என்றால் சரியாக இரண்டு மணிக்கு அழைப்பார். சலிப்பு, வெறுப்பு என்கிற எந்த விதமான குரல் மாற்றமும் இல்லாமல் ‘ஏதாச்சும் பண்ணுங்க சார்’ என்பார். அந்தக் குரலின் தொனியில் உடைந்து நொறுங்கிவிடுவது போலிருக்கும். ‘எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றிடலாம்’ என்று சொல்வதுதான் இப்போதைக்கு அவருக்கான ஒரே ஆறுதலாக இருக்கும்.