மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை அமைக்கிற கூட்டணியாக இருக்கும் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. அது தமிழக அரசியலில் சாத்தியமும் இல்லை. ஒவ்வொரு ஐந்தாண்டுகளின் இறுதியிலும் நாம் உணரக் கூடிய ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இந்த முறையும் இருக்கிறது. ஆனால் மக்களின் இந்த மனநிலையை வாக்காக மாற்றுவதற்கான சாதுரியமும் சாணக்கியத்தனமும் பணச் செல்வாக்கும் மக்கள் நலக் கூட்டணியிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளின் ரூபாய் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. அந்த விலைவாசியோடு போட்டி போடும் வலிமை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே உண்டு என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் இவர்கள் பெற முயலக் கூடிய கணிசமான வாக்குகள் என்பது அதிமுகவுக்கு எதிரான வாக்குகளாகத்தான் இருக்கும். தான் வழித்தெடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கும் போது இவர்கள் இறங்கிக் குட்டையைக் குழப்புவதாக திமுக பதறுவதன் அடிப்படையான காரணம் இதுதான். திமுக விசுவாசிகள் ‘மக்கள் நலக் கூட்டணி என்பது அதிமுகவின் B டீம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்வதும் அதனால்தான். இன்றைய சூழலில் அதிமுகவை எதிர்ப்பதைவிடவும் மக்கள் நலக் கூட்டணியைக் காலி செய்வதுதான் திமுக ஆதரவாளர்களின் முதன்மையான அஜெண்டாவாக இருக்கிறது.
இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு முன்னால் மிகப்பெரிய சவால் இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான ஒவ்வொரு வாக்கையும் தனது பாக்கெட்டில் எடுப்பதுதான் அது. ஒரு பிரம்மாண்டமான கூட்டணியால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் இன்றைய சூழலில் அது சாத்தியமானதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் மட்டுமே ஒத்து வரும் போலிருக்கிறது. பிற அத்தனை கட்சிகளும் தனித்தனியாக களமிறங்குவதான தோற்றம்தான் நிலவுகிறது. காங்கிரஸை மட்டும் இழுத்துக் கொண்டு ஆட்சியை அமைத்துவிட முடியும் என்பது அடைய முடியாத பெருங்கனவாகத்தான் இருக்கும்.
அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் முழுமையாக திமுகவுக்குச் செல்லும் போது அந்தக் கட்சி வெற்றியடைவது உறுதியாகிவிடும். அதனால்தான் தேமுதிக உள்ளிட்ட அத்தனை கட்சிகளையும் தனது கூட்டணிக்கு இழுத்துக் கொள்ள திமுக பிரயத்தனப்படுகிறது. அதே சமயம் தனக்கு எதிரான வாக்குகள் சிதற வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. அதிமுக-பா.ஜ.க தலைமைகளிடம் இருக்கும் இணக்கத்திற்கு அவர்கள் நினைத்தால் ஒரே கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் அதை அதிமுக விரும்பாது. தனக்கு எதிரான வாக்குகளை ஓரளவு கவரக் கூடிய தேமுதிகவை இணைத்துக் கொண்டு பா.ஜ.க தனிக் கூட்ட்ணியாக இறங்குவது தமக்கு சாதகமானதாக இருக்கும் என அதிமுக கருதும். பாஜக ஓர் அணியாகவும், மக்கள் நலக் கூட்டணி ஓர் அணியாகவும் தேர்தலில் நின்று திமுகவுக்குச் செல்ல வாய்ப்புடைய அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்கும் போது அது மறைமுகமாக அதிமுகவுக்கு உதவுவதைப் போலத்தான். எதிரிகள் சிதறிக் கிடக்கும் போது எளிதாக கோல் அடித்துவிட முடியும்.
மக்கள் நலக் கூட்டணியை ‘மாற்று அரசியல் இயக்கம்’ என்று அந்தக் கூட்டணியின் தலைவர்கள் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கான மாற்று என்று மக்களை நம்ப வைக்கக் கூடிய எந்தவொரு வலிமையும் இவர்களிடம் இல்லை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இருபதாண்டுகளுக்கு முன்பாக வைகோவுக்கு இருந்த செல்வாக்கு இன்று இல்லை. வட தமிழ்நாட்டைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வலுவான தளம் இல்லை. கம்யூனிஸ்ட்களைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை- தேர்ந்தெடுத்த வெகு சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு தங்களால் ஆட்சியமைத்துவிட முடியும் என்று நம்புவது நடைமுறைச் சாத்தியமே இல்லாதது.
வாக்குகளைப் பிரிப்பார்கள். ஒற்றை இலக்கத் தொகுதிகளில் இரண்டாவது இடத்தை அடைய முடியும். பெரும்பாலான தொகுதிகளில் திமுகவை மண்ணைக் கவ்வச் செய்வார்கள். அதுதான் நடக்கும். இன்றைய சூழலில் அதிமுகவின் பெயர் கெட்டுக் கிடக்கிறது. திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு அபரிமிதமாக இல்லை. ஆக, கூட்டணி மட்டுமே தேர்தல் முடிவுகளின் திசையை நிர்மாணிக்கப் போகிறது. அதிமுக தனியாகவும், திமுக தனியாகவும், பிற கட்சிகள் தனித்தனியாகவும் நிற்பது அதிமுகவுக்கான வாய்ப்பாகத்தான் முடியும்.
தனிப்பட்ட முறையில், அதிமுகவை வெல்ல வைப்பதை மறைமுக அஜெண்டாவாக வைத்துக் கொண்டு செயல்படாத கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இன்னும் மூன்று மாதங்களில் வலுவான கூட்டணியாக மாற வேண்டும் என விரும்புகிறேன். வெறும் வாக்குகளைப் பிரிக்கும் கூட்டணியாக இல்லாமல் இரட்டை இலக்கத் தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக அது இருக்க வேண்டும். அது நடக்காது என்றாலும் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. திமுக வந்தால் பாலாறு ஓடும் என்பதும் அதிமுக வந்தால் தேனாறு ஓடும் என்பதெல்லாம் நம்முடைய அதீதமான கற்பனைகள்தான். இந்தக் கட்சியின் ஆட்சியில் மாவட்டச் செயலாளரிலிருந்து நகரச் செயலாளர் வரைக்கும் குறுநில மன்னர்களாக குத்தாட்டம் போடுவார்கள். அந்தக் கட்சியின் ஆட்சியில் அமைச்சர்களிலிருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை கப்பம் வசூலிக்கும் அடிமைகளாகச் செயல்படுவார்கள். வேறு என்ன கண்ட பலன்?
ஒவ்வொரு முறையும் அறுதிப் பெரும்பான்மையில் வெல்ல வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்து என்ன நடந்திருக்கிறது? ‘ஒன்னா நீ இரு; இல்லைன்னா நான் இருக்கேன்’ என்று மற்ற யாரையுமே வளர விட்டதில்லை. பல கட்சி ஆட்சி முறை என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை வெறும் ஏட்டளவில்தான் இருக்கிறது. இருகட்சி ஆட்சிமுறைதான் நிலவுகிறது. யாராவது தலையெடுத்தால் நசுக்கித் தள்ளுகிறார்கள். சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக இதுதான் நடந்து வந்திருக்கிறது.
ஒவ்வொரு முறையும் பெரும்பான்மையுடன் கூடிய வலுவான ஆட்சி அமைந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. ஐம்பதாண்டுகளில் எத்தனை அணைக்கட்டுக்கள் அல்லது நீர் மேலாண்மைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் எத்தனை? அந்தந்தக் கட்சிக்காரர்கள் சம்பாதித்தார்கள். ஆட்டம் போட்டார்கள். ஒரு முறையாவது பெரும்பான்மை இல்லாத ஆட்சி அமையட்டும். அத்தகைய வலுவில்லாத ஓர் ஆட்சி அமைந்து மூன்றாவது, நான்காவது சக்திகள் தலையெடுக்கட்டும். தவறு ஏதுமில்லை. காலப் போக்கில் மாற்று அரசியல் இயக்கங்கள் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கான தளத்தை இந்தத் தேர்தல் உருவாக்கித் தரட்டும் என ஆசைப்படுவோம்.
8 எதிர் சப்தங்கள்:
Why there is no comments about dmdk & pmk?
//எத்தனை நீர் மேலாண்மைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?//
முக்குக்கு முக்கு கடை தொறந்திருக்காங்களே!
People welfare front is a non-entity as far Tamilnadu is concerned. all the parties
in that front are vulnerable for poaching by DMK, especially VCK,and the two communist
parties, so the DMK is trying to break the MDMK which anyway will not join the DMK Front.
Eventhough DMK wants a grand alliance, its thalaivar is a miser, will not give respectable
number of seats to parties of that alliance. With PMK not joining any front, TN Elections
this time is going to be interesting.
ALL PARTIES ARE FILLED WITH SELFISH FELLOWS. HOW CAN THEY BRING A TRUE GOVERNMENT. ALL ARE GIMMICKS..
I DNT SEE ANY BENEFIT FROM POLITICAL SYSTEM IN NEXT TWO GENERATION. PEOPLE SHOULD WORK FOR PEOPLE, WHICH CANNOT HAPPEN IN THE COMMECIAL WORLD.
I support மக்கள் நலக் கூட்டணி
We are cursed. What else to say?
Mr mani kandan sir ,
They people didnt say them as a மாற்று அரசியல் இயக்கம்
Its actually a another movemnent in FB
https://www.facebook.com/TNAlternativePoliticalMovement/
So plz dont make confuse
can you please change this ???
கேள்வி கேட்காத தலைப்புகளோடு ஒரு மாதம் முழுதாக கடந்து விட்டீர்கள்!
- இது நக்கல் இல்லை மணி , indirect Feedback !
Post a Comment