Jan 29, 2016

முரண்

‘பேச்சுக்கும், எழுத்துக்கும், வாழுற வாழ்க்கைக்குக்கும் சம்பந்தமேயில்லாம இருக்கானுங்க’ என்று ஒரு இலக்கிய நண்பர் புலம்பினார். கிட்டத்தட்ட முக்கால் போதை. அவருக்கு என்ன பதிலைச் சொன்னாலும் பிரச்னைதான். சிக்கிக் கொண்டதாகத் தோன்றியது. அவர் யாரைச் சொன்னார் எதற்காகச் சொன்னார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அவர் சொன்னது எல்லோருக்கும்தான் பொருந்தும். அவருக்கும் சேர்த்துத்தான்.

முரண்கள் இல்லாத வாழ்க்கை எவ்வளவு பேருக்குச் சாத்தியம்? எதைப் பேசுகிறோமோ அப்படியே வாழ வேண்டும். முடியுமா? ம்ஹூம். நாம் பேசுகிற பேச்சின் வழியாக நம்மைப் பற்றிய உயர்ந்த பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறோம். அடுத்தவர்கள் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று கண்களையும் காதையும் திறந்து வைத்துக் கவனிக்கிறோம்.

இது மனித இயல்புதான்.

மூன்று வயதுக் குழந்தை கூட கை தட்டை எதிர்பார்க்கிறது. கைதட்டு வேண்டும், அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக பொய் சொல்லத் தயங்குவதில்லை. இந்தச் சமூகத்திலும் நம்மைச் சார்ந்தவர்களிடத்திலும் நம்மைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கான வாக்கியங்களையும் வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்துப் பேசுகிறோம். செயல்வழியாகக் கூட இப்படியான நல்லதொரு பிம்பத்தையும் அபிப்ராயத்தையும் உருவாக்க முடியும்தான். ஆனால் சாத்தியமில்லை. ‘நான் பொய்யே சொல்ல மாட்டேன்’ என்று சொல்வது எளிது. ஆனால் அப்படி இருப்பது கடினம். செயல் வழியாக நம்மால் முடியாததையெல்லாம் வார்த்தைகளின் வழியாக புருடாவிட்டு கட்டமைக்க முயற்சிக்கிறோம்.

பேசுகிறபடியே வாழ வேண்டாம். குறைந்தபட்சம் பேச்சுக்கும் நம் வாழ்க்கைக்குமான இடைவெளியைக் குறைக்கலாம். எல்லாவற்றிலும் பொய்களை நிரப்பி என்னவாகப் போகிறது?

ஒரு பெரியவரைச் சந்திக்க நேர்ந்தது. கோவை சாந்தி மெடிக்கல்ஸில். Shanthi Social Service பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். இல்லையென்றால் தேடிப்பார்க்கவும். அவர்களின் செயல்களைப் பற்றித் தனியாக எழுத வேண்டும். எந்த மருந்துக்கும் இருபது சதவீதம் தள்ளுபடி கொடுக்கிறார்கள். சில மருந்துகளுக்கு முப்பது சதவீதம் வரைக்கும். அங்கேயே ஒரு உணவு விடுதி உண்டு. இருபது ரூபாய் இருந்தால் வயிறு நிரம்பிவிடும். ஆதரவற்ற முதியவர்களுக்கு இலவசமாக உணவிடுகிறார்கள். மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு முப்பது ரூபாய். ஆய்வகச் சோதனைகளைப் படு சல்லிசாக முடித்துக் கொள்ளலாம். இப்படி எதிலுமே இலாபமில்லாமல் இயங்குகிறார்கள். சாந்தி கியர்ஸ் ஒரு காலத்தில் வெகு பிரபலமான நிறுவனம். முதலாளிக்கு ஆண் வாரிசு யாருமில்லை. மகள்களால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை போலிருக்கிறது. நிறுவனத்தை விற்றுவிட்டு இந்த வளாகத்தை விலைக்கு வாங்கி இத்தகைய சமூக சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அந்த வளாகத்திற்குள் ஒரு முறை சென்று திரும்பினால் உடல் சிலிர்க்கிறது. இத்தகைய மனிதர்களை நேரில் பார்த்தால் காலில் விழுந்து வணங்க வேண்டும்.

அந்த வளாகத்தில்தான் மேற்சொன்ன பெரியவரைச் சந்தித்தேன். எழுபது வயது இருக்கக் கூடும். தினசரி அங்கே வந்து இலவச மதிய உணவை எடுத்துக் கொள்கிறார். ராஜலட்சுமி மில்ஸில் வேலை செய்தவர். இப்பொழுது அந்த ஆலை இயங்குவதில்லை. குடும்பம் உறவு என்றெல்லாம் யாருமில்லை. திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பாகவே மனைவி தற்கொலை செய்து இறந்து போய்விட்டாராம். அதை அவர் சொன்ன பிறகு நான் எதுவும் கிளறவில்லை. ‘பொய்..பூரா பொய்...வாயைத் திறந்தா பொய் பேசிட்டுத் திரிஞ்சேன்’ என்றார். குடித்திருக்கிறார். சீட்டாடியிருக்கிறார். சம்பாதியத்தையெல்லாம் விட்டிருக்கிறார். எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்து வீட்டில் பொய் சொல்வாராம். அவர்களுக்குக் குழந்தையில்லை. ‘அவ யார்கிட்டத்தான் எல்லாத்தையும் சொல்லுவா?’ என்று கேட்டுவிட்டு இடைவெளி விட்டார். 

அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. மனைவியை அடித்திருக்கிறார். அந்தப் பெண்மணி உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு புழுங்கியிருக்கிறார். எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம். ‘அதான்...ஒரு நாள் வீட்ல வாங்கி வெச்சிருந்த சீமெண்ணையை ஊத்தி கொளுத்திட்டா’. இதைச் சொன்ன போது அவர் அழவில்லை. ஆனால் குரல் உலர்ந்திருந்தது. எந்த ஜென்மத்திலும் தீராத பாவத்தைச் சேர்த்து வைத்திருப்பதாகச் சொன்னார். எல்லாவற்றையும் தண்டனையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். மதிய உணவு மட்டும்தான். காலையிலும் இரவிலும் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏதாவது மருந்து மாத்திரைகள் தேவைப்பட்டால் இந்த மருந்துக் கடையில் வாங்கிக் கொள்கிறார். பத்து பைசா வருமானம் கிடையாது. சிறிய வீடொன்று இருக்கிறது. அதனால் இரவில் தங்குவதற்கு பிரச்சினையில்லை.

‘இப்போ நீங்க பொய் சொல்லுறதில்லையா?’ என்றேன். 

‘பொய் சொல்லறதில்லைன்னு சொன்னா அது பொய்யாத்தான் இருக்கும்’ என்றார். சிரித்துக் கொண்டோம். 

‘பொய் சொன்னதுதான் அவளை ரொம்ப பாதிச்சுடுச்சு’ என்றார். அவர் சொல்வது சரிதான். ஒரு மனிதனின் எவ்வளவு பெரிய தவறையும் மன்னித்துவிட முடியும். ஆனால் பொய் சொல்லியிருக்கிறார் என்று தெரிந்தால் அதை கிரகித்துக் கொள்வதுதான் கடினம். அதன் பிறகு பேசுவதற்கே பிடிக்காமல் போய்விடுகிறது.

முரண்கள் இல்லாத வாழ்க்கையை சில நாட்களுக்காவது வாழ்ந்து பார்த்துவிட வேண்டும். அழுத்தமும் பாரமும் இல்லாத வாழ்க்கை அது. எதை நினைக்கிறோமோ அதைப் பேசிவிட வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி அலட்டி ஆர்பரித்து...எதற்கு இந்தக் கருமாந்திரங்கள் எல்லாம்? 

பெரியவர் இடையில் கொஞ்ச நாட்கள் எஸ்.கே.எம் மயிலானந்தன் நிறுவனத்தில் வேலையில் இருந்திருக்கிறார். எஸ்.கே.எம் மயிலானந்தன் உலக சமுதாய சேவா சங்கத்தலைவர். வேதாத்ரி மகரிஷியைப் பின் தொடர்கிறவர். உயிர்வதை பாவம் என்பார். இப்பொழுது பூர்ணா சிக்கன் (Porna என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்- நியூமரலஜி) என்று கறிக்கோழி வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். உலக அமைதி, கொல்லாமை என்றெல்லாம் பேசிவிட்டு இப்படி கறிக்கடையை ஆரம்பிக்கலாமா என்று யாரும் கேட்கப் போவதில்லை. அப்படியே கேட்டாலும் அதற்கு தெளிவான பதில் ஒன்றைச் சொல்வார்கள். 

பெரியவரிடம் கறிக்கோழி வியாபாரம் பற்றிக் கேட்டேன்.  ‘விடுங்க தம்பி...உலகமே அப்படித்தான்’ என்றார். என்னுடைய டோக்கன் எண்ணை அழைத்தார்கள். அப்பாவுக்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன்.