Jan 21, 2016

வேலை

‘மார்கெட்டிங் ஆட்டோமேஷன்ல ஆளுங்க வேணும்’ என்று வினோத் கேட்ட போது ‘அதெல்லாம் பிரச்சினையே இல்லை’ என்று சொன்னேன். 

‘ஆட்டோமேஷன்’ என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு நரம்புகள் தனித்தனியாக நடுங்கத் தொடங்கிவிடும். ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது எப்படியாவது அந்த நிறுவனத்தை விட்டுத் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. 

அவற்றுள் ஒரு முக்கியமான காரணமும் உண்டு- 

நிறுவனத்தின் தலைவருக்கு ஒரு தம்பி இருந்தார். பத்தாம் வகுப்பு கூட படித்திருப்பாரா என்பது சந்தேகம். வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூ, வெள்ளை கைக்குட்டை என்று காலையிலேயே வந்துவிடுவார். அவர்தான் நிறுவனத்தின் இயக்குநர். நிறுவனத்திலிருந்து பத்து ரூபாய் வாங்குவதென்றாலும் அவரிடம் அனுமதி பெற வேண்டும். தனியாக அழைத்து விசாரித்துவிட்டு பச்சை நிற கையெழுத்துப் போட்டு நிதித்துறைக்கு அனுப்பி வைப்பார்.

எம்.டெக் மெக்கட்ரானிக்ஸ் என்பதால் என்னை விட்டால் மொத்த நிறுவனத்தையும் தானியங்கி இயக்கமாக மாற்றிவிடுவேன் என்று நம்பியிருந்தார்கள். என்னை வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர் பெயர் ரவி சந்த். அவர் ஒவ்வொரு வாரமும் நிறுவனத்தின் தலைவரைச் சந்தித்து ‘சார் பையன் எம்.டெக் சார்...விஐடி சார்’ என்று படம் ஓட்டிவிடுவார். நிறுவனத்தலைவருக்கு என் மீது அபரிமிதமான நம்பிக்கை. அவ்வப்போது அழைத்து ‘அர்த்தமாயிந்தா? அர்த்தமாயிந்தா?’ என்று கேட்பார். நானும் மண்டையை வெகு வேகமாக ஆட்டிவிட்டு வந்துவிடுவேன். 

நிறுவனத்தில் எந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவே ஐந்தாறு மாதங்கள் பிடித்தன. ஆனால் அதற்குள் அவற்றையெல்லாம் தானியங்கியாக மாற்றி தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லத் தொடங்கியிருந்தார்கள். அதையும் பரம ரகசியம் போல ‘இதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்’ என்று வேறு வடிவேலு பாணியில் பேசுவார்கள். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வரும். அவர்களும் எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்வார்கள்? ‘மிஷின் ரெடியா?’ என்று தாளிக்கத் தொடங்கினார்கள். Machine ம் சரி Mission ம் சரி- இம்பாசிபிள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரு பட்டியல் தயாரித்தேன். இரண்டு மோட்டார்; ஒரு சுருள் வயர்; இரண்டு பேட்டரி செல் என்பது மாதிரியான நகைச்சுவைப் பட்டியல். ‘இதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால் செஞ்சுடலாம்’ என்கிற ரீதியில் புருடா விட்டேன். அப்பொழுதுதான் பிம்பிளிக்கி பியாப்பி ஒருவனை வேலைக்கு எடுத்திருக்கிறோம் என்று அவர்கள் உணரத் தொடங்கினார்கள். 

விட்டுப் பிடிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். தயாரிக்கப்பட்ட பட்டியல் வெள்ளைச் சட்டை இயக்குநரிடம் சென்றது. ‘இதையெல்லாம் வெச்சு ஏமி சேஸ்தாவு?’ என்றார். அளந்தேன். நம்பிக் கொண்டார். ‘அடுத்த வாரத்தில் பணம் வந்துவிடும்’ என்று சொல்லி அனுப்பினார். பணம் வருவதற்குள் இந்த நிறுவனத்தைவிட்டு தப்பித்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். இல்லையென்றால் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து செய்யச் சொல்வார்கள். பிதுக்கா பிதுக்கா என்று முழித்தால் நம்மை வைத்துச் செய்துவிடுவார்கள். அதுவும் ரவிசந்த் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே. இரண்டு பாரடைஸ் பிரியாணியை ஒரே தடவையில் விழுங்குவார். எப்படியும் நசுக்கி மூட்டைப்பூச்சியாக்கிவிடுவார்.

இடையில் வேறு ஏதாவது நிறுவனங்களில் வேலைக்கான நேர்காணல்கள் இருக்கின்றனவா என்று தேடிக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ அந்த வார இறுதியில் ஆரக்கிள் நிறுவனத்தில் நேர்காணல் நடக்கவிருப்பதாக மின்னஞ்சல் வந்திருந்தது. அப்பொழுது சதீஷ் ராஜாமணி என்பவர் அந்நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவர் நான் படித்த வேலூர் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர். அவர்தான் வேலை வாய்ப்பு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர்கள் வேறு ஏதோ வேலைக்குத்தான் ஆள் எடுத்தார்கள். எனக்கு அது பற்றி ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. ஆனால் சதீஷ் ராஜாமணியின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்துவிடலாம் என்கிற குருட்டு தைரியத்தில் வெகு ஜோராகச் சென்றிருந்தேன். டேபிள் துடைக்கச் சொன்னாலும் சரிதான். என்ன குறைந்துவிடப் போகிறது? இங்கேயிருந்து தப்பித்தால் சரி.

இரண்டு பேர் நேர்காணல் நடத்தினார்கள். ‘நீங்க கேட்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது..ஆனா என்னோட ஏரியாவில் ஸ்ட்ராங்’ என்று முதலிலேயே சரணடைந்துவிட்டேன்.

‘சதீஷை உங்களுக்கு எப்படித் தெரியும்?’ - இந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்டார்கள்.

‘அண்ணன் மாதிரி’

‘சொந்தமா?’ என்றார். சீனியரை எல்லாம் அண்ணன் என்று அழைக்கிற பரம்பரையில் வந்தவன் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இப்படித்தான் சீனியர் பெண்களை எல்லாம் அக்கா என்று அழைத்து வீணாகப் போனவர்களின் பட்டியலிலும் ஓரிடத்தைப் பிடித்து வைத்திருந்தேன்.

‘ஆமாங்க...தூரத்துச் சொந்தம்’ - ஒரேயடியாக அடித்துவிட்டேன்.

அதற்கு மேல் அவர்கள் அதைப் பற்றி விசாரிக்கவில்லை. ‘நாங்க கேட்கிறதுக்கு உனக்குத் தெரியாதுன்னா உனக்கு என்ன தெரியும்ன்னு சொல்லு..நாங்க கேட்கிறோம்’ என்றார்.

‘ஆட்டோமேஷன் தெரியும்’

‘வெரிகுட்..செஞ்சிருக்கியா?’

‘யெஸ்...விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில்’

‘நீ செஞ்சதை விளக்க முடியுமா?’ - இப்படியெல்லாம் மடக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னவென்று சொல்வது? வெள்ளைச்சட்டை இயக்குநரிடம் ஒரு பட்டியல் கொடுத்ததுதான் அதிகபட்ச வேலை.

‘எங்கள் நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் ட்ரான்ஸ்பர்மர் தயாரிக்கிறார்கள். அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாற்றுவதைச் செய்து கொடுத்திருக்கிறேன். மேலே ஒரு கம்பி கட்டி அது வழியாக இடம் மாற்றுவோம். இங்கே ஒரு பட்டன் அமுக்கினா கம்பி வழியாகவே அந்தப் பக்கம் சென்றுவிடும்’

ட்ரான்ஸ்பர்கள் கனம் மிகுந்தவை. ‘என்னது கம்பி கட்டி தூக்குவியா? அறுந்து விழாதா?’ என்று அதிர்ச்சி காட்டினார்.

‘அதெல்லாம் கெட்டி கம்பிதாங்க’ - சாதாரணமாகச் சொன்ன இந்த பதிலிலேயே இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். அப்பொழுது எனக்கு ஆறு மாத அனுபவம் கூட இல்லை. 

அதுவரை அமைதியாக இருந்த மற்றொரு மனிதர் ‘சரி அதெல்லாம் விடு...ஆட்டோமேஷன்னா என்னன்னு சொல்லு’ அடிவயிற்றிலேயே கையை வைத்தார். 

‘எனக்குத் தெரியாதுங்கிறது உனக்குத் தெரிஞ்சுடுச்சு...விடுய்யா நான் கிளம்பறேன்’ என்று நினைத்தேன். அவர் விடமாட்டார் போலத் தெரிந்தது. ஏசி அறையில் வியர்வை பெருகெடுத்தது. உளறினேன். இன்னொரு கேள்வியை அதே ஆள் கேட்க முயன்றார். கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையிலிருந்த என்னைப் பார்த்து பரிதாப்பட்ட மற்றொருவர் ‘போய் நல்லா ப்ரிப்பேர் செஞ்சுட்டு வா..அடுத்த தடவை பார்க்கலாம்’ என்று சொல்லிக் காப்பாற்றினார். 

அவ்வளவுதான். செத்தாலும் ஆரக்கிள் வாசலில் கால் வைக்கக் கூடாது என்று ஒரே ஓட்டம்தான். அதன்பிறகு சதீஷ் ராஜாமணியின் முகத்தை இதுவரையிலும் பார்க்கவில்லை.

                                                               ***

இப்பொழுது வினோத் கேட்கிறார். ‘மார்கெட்டிங் ஆட்டோமேஷன்’ என்று இணையத்தில் தேடிப் பார்த்தால் சுவாரசியமாக இருக்கிறது. மார்க்கெட்டிங் துறைதான் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. ‘வாங்கலாமா? வேண்டாமா?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை ஒரே அமுக்காக அமுக்கி வாங்க வைப்பது சாதாரணக் காரியமில்லை. அதை மென்பொருட்களைப் பயன்படுத்திச் செய்கிறார்கள்.

மார்கெட்டிங் ஆட்டோமேஷன் பற்றித் தெரிந்த ஆட்கள் குறைவு. அவர் கேட்கிற அளவுக்கான ஆட்களைப் பிடிக்க முடியவில்லை.

நிசப்தத்தில் எழுதிவிடுவதாகச் சொன்னேன். சரி என்றார். பொறியியல், எம்.பி.ஏ படித்த மாணவர்கள் - 12 மாத அனுபவம் இருந்தால் சாலச் சிறப்பு, HTML தெரிந்தால் அட்டகாசம்- மார்கெட்டிங் ஆட்டோமேஷன் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு வினோத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். ஒருவேளை நேர்காணலுக்கு அழைத்தால் நிறுவனத்தைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

vinodh.m@verticurl.com
                                                ***

வினோத் மாதிரி செந்தில் மற்றொரு நண்பர். பெங்களூரில்தான் இருக்கிறார். அமெரிக்க நிறுவனங்கள்தான் அவருக்கான வாடிக்கையாளர்கள். அவர் செய்து கொடுக்கிற வேலைக்கு டாலரில் பணம் அனுப்பிவிடுகிறார்கள். தனியாக வேலை செய்து கொண்டிருந்தவர் நிறுவனத்தை சற்று விரிவு படுத்துகிறார். அவருக்கு இரண்டு பையன்கள் தேவைப்படுகிறார்கள். ‘ஜாவா, ஸ்ப்ரிங் தெரிந்த பையன்களாகச் சொல்லுங்கள்’ என்றார். சொல்லிவிட்டு அது கட்டாயமில்லை என்றும் எதைச் சொன்னாலும் கப்பென்று பிடித்துக் கொள்கிற பையன்களாக இருந்தால் போதும் என்றார்.  அவர் தேற்றிவிடுவார். 

பெங்களூரில் வீடு பிடித்துக் கொடுத்துவிடுகிறார். அங்கேயே தங்கிக் கொள்ளலாம். அலுவலக செட்டப் எதுவும் இருக்காது. நினைத்த நேரத்தில் எழுந்து வேலையைச் செய்து கொடுத்தால் போதும். அமெரிக்க வாடிக்கையாளரின் டாலரை வாங்கி சம்பளமாகக் கொடுத்துவிடுவார். Fresher ஆக இருப்பவர்களுக்கு பெரிய சம்பளமாக இருக்கும்.

கடந்த வருடத்தில் படித்து முடித்தவர்களாக இருந்தால் செந்திலைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்-

vbsenthilinnet@gmail.com
        
                                                                 ***

செந்திலுக்கு அனுப்பினாலும் சரி; வினோத்துக்கு அனுப்பினாலும் சரி- நேர்காணலில் ‘எனக்குத் தெரியாது’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடக் கூடாது. தெரிந்ததையெல்லாம் அடித்து நொறுக்க வேண்டும். ‘இவனுக்குத் தெரியுமா தெரியாதா’ என்பதை முடிந்தால் அவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். இதையும் சொல்லியே அனுப்புங்கள்.

                                                              ***
பின்வரும் பிரிவுகளில் 4 வருடங்களுக்கு மேல் அனுபவம் இருப்பின் எனக்கு அன்ப்பி வைக்கவும்.

Technical Analyst – Oracle EBS
Technical Analyst - B2B (webMethods)
Technical Analyst – Portal  (Angular JS, Spring/Hibernate)
Business Intelligence – OBIEE
Technical Analyst – PLSQL & Java