Jan 20, 2016

இல்லி நோடி

தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்களைக் கொண்டாடுகிறார்கள். மலையாளப் படங்களைப் பற்றி கேட்கவே தேவையில்லை. ப்ரேமம் பார்க்கவில்லை என்று சொன்னால் ஊர் விலக்கம் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. முகம் தெரியாத ஆட்களிடம் சண்டையிட்டுப் பார்க்க ஆசையிருந்தால் ‘மலர் டீச்சர் எல்லாம் ஒரு அழகாய்யா?’ என்று எழுதினால் போதும். லாரி நிறைய ஆட்களை ஏற்றி வந்து அடித்துவிட்டுப் போவார்கள். அக்கம்பக்கத்தவர்களை இப்படிக் கொண்டாடும் நம்மவர்கள் ஏன் கன்னடப் படங்களைக் கண்டு கொள்வதேயில்லை?  ஒருவேளை சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் போன்றவர்களை மட்டும் பார்த்துவிட்டு ‘இவர்கள் நடித்த படத்தை பார்க்க வேண்டுமா?’ என்று நினைத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. 

பெங்களூர் வந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து இனிமேலாவது கன்னடப்படங்களைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். Jarasandha என்ற படத்தின் போஸ்டரை வீதிகளில் ஒட்டியிருந்தார்கள். நடிகை ப்ரணீதாவை எனக்குப் பிடிக்கும். இதுவும் அவர் நடித்திருந்த படம்தான். ஆனால் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு ‘கடவுளே என்னை வேறு மாநிலத்துக்கு மாற்றிவிடு’ என்று உருண்டு புரண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். இதை வைத்து நக்கல் அடித்துக் கொண்டிருந்த போது ‘துனியா விஜய் நல்லா நடிப்பாரு’ என்றார்கள் கன்னடக்காரர்கள். 'எங்க விஜய்யும்தான் நல்லா நடிப்பாரு’ என்று சொல்லிவிட்டு கமுக்கமாக துனியா விஜய் நடித்த ஒன்றிரண்டு படங்களைப் பார்த்தேன். அவர்கள் சொன்னது உண்மைதான். நடிப்புக்கும் முகத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? தனுஷை திடீரென்று பார்க்கக் கூடியவர்கள் ‘இந்தாளு நடிகனா?’ என்றுதான் கேட்பார்கள். இப்பொழுது ஹிந்திக்காரர்களிடம் பேசினால் ‘தனுஷ் செம பர்மான்ஸ்’ என்று பம்மிவிடுகிறார்கள். 

கன்னட திரைப்படங்களின் மீதான தமிழ்நாட்டின் ஒவ்வாமை குறித்து மனோவியல் ஆராய்ச்சியே நடத்தலாம். ஒவ்வொரு மே மாதமும் ‘காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காதீர்கள்’ என்று குரல் எழுப்பி கடும்பகையை உருவாக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். 

தம்பிச்சோழன் பெங்களூரில் இருந்த போது கன்னடத் திரைப்படங்களின் டிவிடிக்களைத் தேடி அலைந்தோம். முந்தின வெள்ளிக்கிழமையன்று வெளியான தமிழ், ஹிந்தி, மலையாளப் படங்களின் டிவிடிக்களை பெங்களூரின் தெருக்களில் வாங்கிவிட முடியும். ஆனால் பழைய கன்னடப் படங்களின் டிவிடிக்களை வாங்குவது கஷ்டம். கிடைக்கவே கிடைக்காது. ‘போலீஸூன்னு இல்ல சார்...எவன் வேணும்னாலும் அடிப்பான்’ என்று சிடி விற்பவர்கள் சொல்வார்கள். எம்.ஜி.ரோட்டில் நேரிலேயே பார்த்திருக்கிறேன். 

ஆறேழு மாதங்கள் இருக்கும். டிவிடி வாங்குவதற்காக ஒரு கட்டையன் வந்திருந்தான். ஹிந்திப் படங்களைக் கேட்டான். தெருவில் ஒரு நாற்காலி மீது பரப்பி படங்களை விற்றுக் கொண்டிருந்த வடக்கத்தி பையன் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தான். கட்டையன் அந்தப் பையனிடம் ‘கன்னடா சிடி இதியா?’ என்றான். பையனும் அப்பாவித்தனமாக ஒளித்து வைத்திருந்த பொட்டலத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொடுத்துவிட்டான். சில வினாடிகள்தான். கட்டையன் தாறுமாறாக அடிக்கத் தொடங்கிவிட்டான். போலீஸ் வந்து சிடி கடைப் பையன் கைது செய்யப்படும் வரைக்கும் இந்தக் கலவரம் நடந்து கொண்டிருந்தது. இடையில் யாரும் பேச முடியவில்லை. சுற்றியிருந்த அத்தனை பேரும் கன்னட சினிமாவுக்கு ஆதரவாக நின்றார்கள். கன்னடத்தவர்களுக்கு இயற்கையிலேயே ‘நம்ம மாநிலம்’ என்கிற உணர்வு உண்டு என்பதை நேரடியாக புரிந்து கொண்ட தருணம் அது. நம்மவர்களுக்கும் அந்த உணர்வு இருக்கிறதுதான். ஆனால் தமிழ் சினிமாக்காரன் நஷ்டமடையக் கூடாது என்று எத்தனை பேர் குரல் கொடுப்போம்?

சமீபமாக நிறையக் கன்னடப் படங்களைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். படங்கள் அரிதாகத்தான் கிடைக்கின்றன. வழக்கமான சிடி கடைக்காரனிடம் வால் பிடித்து தினமும் பேசி நட்பாக்கி வைத்திருக்கிறேன். ‘எனக்கு புதுப்படம் வேண்டாம். பழைய கன்னடப்படங்கள் கிடைத்தால் போதும்’ என்று சொன்ன பிறகு படத்தின் பெயரைச் சொல்லி வைத்தால் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்துவிடுகிறான். கடந்த வாரத்தில்  ‘உலிதவரு கண்டந்த்தே’ (Ulidavaru kandanthe) என்றொரு படத்தைச் சொல்லி வைத்திருந்தேன். 2014 ஆம் ஆண்டு வெளியான படம். ‘உலிதவரு’ என்றால் மற்றவர்கள். கண்டந்த்தே என்றால் ‘பார்த்தது’ என்று அர்த்தம். அடுத்தவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதுதான் அர்த்தம்.


உடுப்பி அருகே இருக்கும் கடற்கரையோர கிராமமான மால்ப்பேவில் இரண்டு சிறுவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். ராகு மற்றும் ரிச்சி. சிறுவர்களுக்கிடையிலான சண்டையில் ராகுவை வேறொருவன் அடிக்க வருகிறான். ரிச்சி இடையில் புகுந்து அடிக்க வருகிறவனைக் கொன்றுவிடுகிறான். கொலை நடந்த பிறகு ராகு தப்பி ஓடிவிட ரிச்சியை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அடுத்த பதினைந்து வருடங்களுக்கு ராகு பாம்பேயில் தாதாக்களுடன் வேலையில் இருக்கிறான். எட்டு வருடங்களுக்குப் பிறகு சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளிவந்த ரிச்சி உள்ளூரில் பெரிய ரவுடியாகிறான். சங்கரண்ணா என்னும் உள்ளூர் தாதாவுக்கு கையாள். சொல்லுகிற வேலையைச் சுத்தமாகச் செய்வான். 

சங்கரண்ணாவின் மீன்பிடி படகில் விலைமதிப்பற்ற தங்கக்கட்டி கிடைக்கிறது. அதை பாலு என்பவன் அபேஸ் செய்த பாம்பேயைச் சேர்ந்த எவனோ ஒருவனுக்கு விற்கிறான். அதை ராகு திருடிக் கொண்டு மால்ப்பே வருகிறான். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மால்ப்பே வரும் அவன் தனது அம்மாவை தன்னுடன் துபாய் அழைத்துச் செல்ல விரும்புகிறான். இந்தியாவில் இருந்தால் பாம்பேக்காரர்கள் எப்படியும் கொன்றுவிடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். சங்கரண்ணா அந்தத் தங்கக்கட்டியை மீட்டு வரும் பொறுப்பை ரிச்சியிடம் ஒப்படைக்கிறான். ரிச்சி பாலுவைத் தூக்கிச் சென்று மீன்பிடி படகில் வைத்து கும்முகிறான். கடைசியில் யாரை யார் கொன்றார்கள் என்பதுதான் கதை. 

கதையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்களின் பார்வையில் சொல்வது போல பின்னி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி. நாயகனும் அவர்தான். இரண்டரை மணி நேரப் படம். அட்டகாசம் என்று சொல்லலாம். ஒரு சிக்கலான திரைக்கதையை எப்படி தெளிவாகச் சொல்ல முடியும் என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்ல முடியும். ஒளிப்பதிவும் இசையும் கனகச்சிதமாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்தான். ஆனால் நிறையப் பாடல்கள். டூயட் எல்லாம் எதுவுமில்லை. படத்தோடு இணைந்த பாடல்கள். அது மட்டும்தான் எனக்கு சற்று உறுத்தல். ரிச்சியாக நடித்திருக்கும் ரக்‌ஷித் ஷெட்டி, டெமாக்ரஸி என்ற பெயரில் நடித்திருக்கும் பொடியன், ரிச்சியின் நண்பன், நடிகர் கிஷோர் என பெரும்பாலான நடிகர்கள் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுத முடியும். ரக்‌ஷித் ஷெட்டியின் நடிப்பைப் பற்றி நிறையப் பேசலாம். அதையெல்லாம் தனித்தனியாகச் செய்ய வேண்டும். கன்னட சினிமா ஒன்றும் புறக்கணிக்கத்தக்க அளவிலான மோசமான களமில்லை என்பதற்கு இந்தப் படம் ஒரு சோற்றுப் பதம். கதை, நடிப்பு, தொழில்நுட்ப சமாச்சாரங்கள் என்று அவர்களுக்கும் மிரட்டத் தெரிகிறது. தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் ஹிட் அடித்த நாயகன் பத்து விரலைக் காட்டி சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள். கன்னடத்தவர்கள் பெரும்பாலான படங்களை இரண்டு கோடி பட்ஜெட்டில் முடிக்கிறார்கள்.

இல்லி நோடி குரு.