Jan 19, 2016

பாலியலும் குழந்தைகளும்

ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. எப்பொழுதாவது சந்தித்து பொதுவாகப் பேசிக் கொள்வோம். இப்பொழுதெல்லாம் யாராவது சந்திக்கலாமா என்று கேட்டால் ‘கும்பகோணம் டிகிரி காபி கடைக்கு வந்துடுங்க’ என்று சொல்லிவிடுகிறேன். அந்தக் கடையில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு காபியை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் பேசிவிட்டு வரலாம். சன் மியூஸிக்கில் பாட்டு போட்டுவிடுவார்கள். தினத்தந்தியில் ஏதாவது கள்ளக்காதல் செய்தியைப் புரட்டலாம். 

நண்பரிடம் எதையோ பேசிக் கொண்டிருந்த போது அவருடைய மகன் பற்றிய பேச்சு வந்தது. எட்டு வயதுப் பையன். அவனுக்கு ஓர் என்சைக்ளோபீடியா வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தால் ‘ஹூயுமன் பாடி பத்தி சொல்லித்தாங்க’ என்றுதான் கேட்கிறானாம். ஆண் பெண் நிர்வாண ஓவியங்கள் அந்தப் பக்கங்களில் இருப்பதைத்தான் ஆர்வத்துடன் பார்ப்பதாகச் சொன்னார். அவருக்கு வருத்தம். பையனுக்கு இதையெல்லாம் எப்படிச் சொல்லித் தருவது என்று குழப்பம்.

எட்டு வயதுப் பையனுக்கு இந்த அளவு கூட ஆர்வமில்லையென்றால்தான் பிரச்னை. எனக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் போது உடலுறவு பற்றித் தெரியும். எப்படித் தெரிந்து கொண்டேன் என்று நினைவில் இல்லை. ஆனால் தெரிந்து வைத்திருந்தேன். ஆட்டோவில் பயணித்த சக ஆண் பெண் மாணவர்களை பாலியல் ரீதியாக இணைத்து கிசுகிசுவாக நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். இது நடந்த விஷயம்தான். மறைக்க ஒன்றுமில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பாகவே இப்படி என்றால் இன்றைய குழந்தைகளுக்கு பாலியல் விவகாரங்களைத் தெரிந்து கொள்வது என்பது பெரிய விஷயமே இல்லை. 

தொப்புள் படங்களும், தொடை தெரியும் நடனங்களும் சர்வசாதாரணமாக குழந்தைகளின் கண்களில் படுகின்றன. ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வதைப் பார்க்கிறார்கள். நாயகனின் கைகள் நாயகியின் உடலை மேய்கிறது. ‘எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?’ என்ற கேள்வி குழந்தைக்கு எழுபது இயல்பானதுதானே? புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். வெளிப்படையாக பேசுவதற்கு யாருமில்லாத பட்சத்தில் தெரிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். 

தெரிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. பாலியல் மற்றும் உடல் சார்ந்த சமாச்சாரங்களைக் கல்லூரி காலம் வரைக்கும் கிளுகிளுப்புக்காகத்தான் பேசித் திரிந்திருக்கிறேனே தவிர புரிதல் என்பதெல்லாம் கிஞ்சித்தும் இருந்ததில்லை. புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் அமைந்ததில்லை. நம் தலைமுறையைச் சார்ந்த பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும். வெறுமனே தெரிந்து வைத்துக் கொண்டு ‘இது என்ன?’ ‘அது என்ன?’ ‘அது எப்படி இருக்கும்?’ என்கிற புதிர்க் கேள்விகள் மண்டைக்குள் குடைந்திருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் இத்தகைய கேள்விகளும் குடைச்சல்களும்தான் இளம்பிராயத்தின் கவனச் சிதறல்களுக்கு மிக முக்கியமான காரணியாக இருந்திருக்கின்றன. 

பாலியல் குறித்தான புரிதல்கள் வயதாக ஆக குழந்தைகளுக்குத் ‘தானாக உருவாகிவிடும்’ என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. நம்முடைய கல்வி முறையும் வெளிப்படையானதாக இல்லை. பாலியல் கல்வி என்பதெல்லாம் பேச்சளவில்தான் இருக்கின்றன. இத்தகைய சூழலில் குழந்தைகள் சக நண்பர்களின் வழியாக தெரிந்து கொள்வார்களே தவிர புரிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் குறைவு. தம்மைச் சுற்றிய சூழல்களிலிருந்து பாலியல், உடல் போன்றவற்றை வேகமாகத் தெரிந்து கொள்கிறார்கள் ஆனால் புரிந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை என்பது குழந்தைகளில் மனச்சிக்கல்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

வளரும் குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமான மனச் சிக்கல்கள் உருவாகும் போது பெற்றவர்களால் அது குறித்துப் பேச முடியும். ஆரம்பத்தில் சங்கடமாகத்தான் இருக்கும். எனக்கு இருந்தது. ஆனால் இப்பொழுது நானும் மகியும் சகஜமாக பேசிக் கொள்கிறோம். சரி, தவறு என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்- ‘நீயும் நானும் ப்ரண்ட்ஸ்..சரியா?’ என்று சொல்லிவிட்டுத்தான் பேசுகிறேன்.  ‘நமக்கு இருப்பது டெஸ்ட்டிக்கிள். பொண்ணுங்களுக்கு அது இருக்காது’ என்று அவனிடம் சொல்லித் தருவதற்கு கூச்சப்படவில்லை. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் பற்றியெல்லாம் பேசிக் கொள்கிறோம். நாங்கள் இப்படி பேசிக் கொள்வது இதுவரைக்கும் மனைவி உட்பட வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் குழந்தைக்கு அவசியமில்லாதது என்று அவர்கள் நினைக்கக் கூடும். ஆனால் இந்த உலகத்தில் அறிவைப் பொறுத்தவரையிலும் அவசியமானது அவசியமில்லாதது என்று எதுவுமேயில்லை என்பது என் சித்தாந்தம்.

அவனுக்கு அவ்வப்பொழுது சந்தேகங்கள் வரும். பெரும்பாலும் நியாயமான சந்தேகங்கள். நியாயமான சந்தேகங்கள் என்று எப்படிச் சொல்கிறேன் என்றால் அதே கேள்விகள் ஒரு காலத்தில் எனக்கும் இருந்திருக்கின்றன. யாருமில்லாத சமயங்களில் தனது சந்தேகங்களைக் கேட்பான். பதிலைச் சொல்லிவிடுகிறேன். அப்பட்டமாக எல்லாவற்றையும் சொல்லித் தருகிறேன் என்று அர்த்தமில்லை. ஆனால் முடிந்தவரை அவனுடைய வயதுக்கேற்ற நாசூக்கான பதில்களைச் சொல்ல முடிகிறது. இத்தகையை கேள்விகளை அவன் தனக்குள் வைத்துக் கொண்டு உழப்பிக் கொள்வதையும் விடவும், விவரம் தெரியாத சக நண்பனின் வழியாக அரைகுறையாகத் தெரிந்து கொள்வதைவிடவும் ‘அப்பாகிட்ட கேட்டா சொல்லிடுவார்’ என்று அவன் நம்புவதே நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். 

‘என் குழந்தைக்கு எதுவும் தெரியாது’ என்று நினைத்துக் கொண்டிருப்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் பெரிய தவறு. குழந்தைகளுக்குத் தெரியும். இரண்டு வயதில் குழந்தைகள் தங்களின் உடல் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். அப்பொழுதிருந்தே தனது பாலியல் உறுப்புகளுடன் விளையாடுவதையும் அதன் வழியாக சந்தோஷம் அடைவதையும் தெரிந்து கொள்கிறார்கள். ‘இதில் என்னவோ இருக்கு’ என்கிற ஆர்வம் அவர்களுக்கு உருவாகிறது. இது குறித்தெல்லாம் பேசுவதற்கு பெற்றவர்களிடம்தான் முயற்சித்துப் பார்க்கிறார்கள். நாம் பேச்சை மாற்றினால் அல்லது இதையெல்லாம் பேசக் கூடாது என்று தடை போடுவதால் ‘அம்மா அப்பாகிட்ட பேசக் கூடாது போலிருக்கு’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். குழந்தைகளின் இத்தகைய முடிவுகள்தான் நமக்கும் பிள்ளைகளுக்குமான உறவின் தூரத்தை அதிகரிக்கின்றன. அப்படியொரு முடிவுக்கு வரும் குழந்தைகள் இதையெல்லாம் வேறு யாரிடமோ விவாதிக்கிறார்கள். எதையோ புரிந்து கொள்கிறார்கள். 

நம்முடைய குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்பதைப் பற்றி நமக்கு போதுமான விவரம் இருப்பதில்லை. ‘அவன் அப்படியில்லை’ என்றே நம்பிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் அவனைப் பற்றி வரக் கூடிய சிறு புகாரும் பேரிடியாக இறங்குகிறது. குழந்தைகள் தமக்கான நண்பர்களை தமது வீடுகளில்தான் தேடுகிறார்கள் - எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி பேசக் கூடிய நண்பர்களை எதிர்பார்க்கிறார்கள். ‘இதை மட்டும் நாம பேச வேண்டாம்..ஆனா நாம ப்ரண்ட்ஸ்’ என்று சொன்னால் அது போலியான வாதம். அப்படியெல்லாம் ஃபில்டர் செய்யப்பட்ட நட்பு இருக்கவே முடியாது. 

2 எதிர் சப்தங்கள்:

NARAYAN said...

உண்மை, தற்போதைய சூழலில், இணையத்தின் வாயிலாக எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ள வேளையில், பாலியல் குறித்தான புரிதல்களை குழந்தைகளுக்கு புரிய வைப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. மேலும் பெற்றோர்களுக்கே பாலியல் குறித்த சரியான புரிதல் இல்லை. நமது கலாச்சாரத்தில் அதனை வெளிப்படையாக பேசினாலே தவறாகப் பார்க்கப்படுகிறது.

நெய்தல் மதி said...

பாலியல் கல்வி வேண்டும் என்று பேசத் தொடங்கினாலே வானுக்கும் பூமிக்குமாக குதிக்க தொடங்கிவிடுகிறார்கள். கலாச்சாரம் சீரழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள். நம் குழந்தைகளுக்கு நம்மைவிட வேறு யார் உற்ற தோழனாக, தோழியாக இருக்க முடியும்? தங்களின் கருத்துகளோடு முழுவதுமாக உடன்படுகிறேன். சிந்திக்க தூண்டும் நிறைவான பதிவு.