Jan 18, 2016

விண்ணப்பங்கள்

சனிக்கிழமையன்று கடலூர் சென்றிருந்தேன். ஐம்பது லட்ச ரூபாய்க்கான பயனாளிகளை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்று தெரியும். நிறைய நண்பர்களிடம் பேச வேண்டியிருந்தது. ஜெகதீசனிடமும் பேசியிருந்தேன். ‘நம்ம சக்திகிட்ட பேசுங்க’ என்றார். சக்தி சரவணன் குறித்தான அறிமுகம் எதுவுமில்லை. பேசி விவரங்களைச் சொன்ன போது ‘செஞ்சுடலாம் தலைவரே’ என்றார். இடையில் ஓரிரு முறை மட்டும் அவரிடம் என்னவிதமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்று மட்டும் சொன்னேன். அதோடு சரி. கடந்த வாரமே கடலூர் செல்வதாகத்தான் திட்டம். ‘இப்போத்தான் பசங்க மும்முரமா வேலை செஞ்சுட்டு இருக்காங்க..அடுத்த வாரம் வந்துடுங்க..சரியா இருக்கும்’ என்றார். அதற்காகத்தான் சனிக்கிழமையன்று சென்றிருந்தேன். 

ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைத் திரட்டி வைத்திருக்கிறார்கள். தனது மகிழ்வுந்தின் பின்பக்கம் நிறைத்து எடுத்து வந்திருந்தார். எல்லாவற்றையும் அறையில் வைத்து பிரித்தோம். விவரங்களைத் திரட்டிய சில தன்னார்வலர்களையும் வரச் சொல்லியிருந்தார். வந்திருந்தார்கள். விண்ணப்பங்களை பிரித்து அடுக்க சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. சக்தி சரவணன் கடலூரில் சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். எந்த ஊடகத்திலும் அவர் முக்கியப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரது பின்னால் ஏகப்பட்ட இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள். உள்ளூரில் அவரைப் பற்றி நல்லவிதமாகப் பேசுகிறார்கள். அதுதான் முக்கியம். ஊடகங்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. 

தன்னார்வலராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வெங்கடேஷ் என்றவொரு இளைஞர் வந்திருந்தார். திருமணம் ஆகாத இளைஞர். ஏ.சி.மெக்கானிக். தினக் கூலி மாதிரிதான். தீபாவளிக்குப் பிறகு இன்னமும் வேலைக்குச் செல்லவில்லை. ஊர் ஊராக அலைந்து நிவாரணப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். தனது கிராமத்தில் நேதாஜி இளைஞர் மன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார். பேசும் போதே தெரியும் அல்லவா? லட்சியவாதம் பேசுகிற இள ரத்தத்தை. அப்படியான இளரத்தம்.

‘வேலைக்கு போறதில்லைன்னு வீட்டில் எதுவும் சொல்லுறதில்லையா?’ என்றால் ‘சொல்லுறாங்க சார்...வாங்கின பழைய கடனுக்கு மாசம் பதினஞ்சாயிரம் வட்டி கட்டணும்..ரெண்டு மூணு மாசமா கட்டவேயில்லை...தம்பி தங்கச்சி எல்லாம் இருக்கு...சொல்லாம இருப்பாங்களா?’ என்கிறார்.

‘இனியாச்சும் வேலைக்கு போகலாம்ல?’ என்று கேட்டால் ‘இறங்கியாச்சு..பாதியில விட்டுட்டு எப்படி போக முடியும்?’ என்று ஆச்சரியப்படுத்துகிறார். அதே போல பிரகாஷ். வெல்டிங் வேலைக்குச் செல்கிறவர். மழைக்குப் பிறகு இன்னமும் வேலைக்குச் செல்லவில்லை. 

‘இந்தத் தலைமுறை சீரழிந்து கொண்டிருக்கிறது. யாருக்குமே அக்கறையில்லை’ என்கிற ரீதியில் யாராவது பேசினால் இத்தகைய இளைஞர்களைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வேலை செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். 

அதே சமயம் இத்தகைய இளைஞர்களிடம் அழுத்தம் திருத்தமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்- சமூகத்திற்கு உதவுவது, ஊருக்கு உழைப்பது என்பதெல்லாம் சரிதான். ஆனால் குடும்பத்திலிருந்து பேச்சு எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நம்மை நீண்டகாலத்திற்கு இத்தகைய வேலைகளைச் செய்ய அனுமதிக்கும். எப்பொழுது வீட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் எழத் தொடங்குகிறதோ அந்தக் கணத்திலிருந்து நம் மீது அழுத்தங்கள் உருவாகும். மெதுமெதுவாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சராசரி குடும்பஸ்தன் ஆகிவிடுவோம். பெரும்பாலான லட்சியவாதிகள் காலப்போக்கில் குடும்பம் என்கிற நீரோட்டத்தில் இணைந்து அமைதியாகிப் போவதற்கு இதுதான் காரணம்.

இப்படியான இருபது இளைஞர்கள் கடலூர் மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களைத் திரட்டியிருக்கிறார்கள். இவர்களோடு சில மகளிர் சுய உதவிக் குழுக்களும் வேலை செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அத்தனை பேரும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தான். இவர்களை சக்தி சரவணன் ஒருங்கிணைத்திருக்கிறார். பெரிய வேலை இது. விண்ணப்பங்களைப் பார்க்கும் போதுதான் உணர முடிந்தது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாகச் சென்றிருக்கிறார்கள். அந்த ஊரில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமிருந்துது பெறப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்திலும் ரேஷன் அட்டையின் பிரதி, பயனாளியின் நிழற்படம், அவர்கள் எழுதிய கடிதம் உள்ளிட்டவை இணைக்கப்பட்டிருந்தது. அவை வெறும் காகிதங்களாகத் தெரியவில்லை. விதவைகள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என ஒவ்வொரு விண்ணப்பத்திலும் ஒரு கதை இருக்கிறது. இவற்றைத்தான் சனிக்கிழமையன்று பிரித்து எடுத்தோம். 

கடலூரில் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகள்தான். அவர்களுக்கு மேய்ச்சலைத் தவிர வேறு எதுவும் தெரிவதில்லை. ஆடு, மாடுதான் கேட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அந்த விண்ணப்பங்களை தனியாக வைத்திருக்கிறோம். மற்ற பொருட்களான இஸ்திரி பெட்டி, தையல் எந்திரங்கள், இஸ்திரிப் பெட்டி உள்ளிட்ட பொருட்களைக் கோரும் விண்ணப்பங்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பொருட்களை முதலில் வழங்கிவிடலாம். அதன் பிறகு ஆடு, மாடு குறித்தான கோரிக்கைகளை பரிசீலிக்கலாம். 

கடலூரின் பிற பகுதிகளிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு முன்பாக பெரிய காட்டுப்பாளையத்திற்கான நிவாரண உதவிகளைச் செய்து முடித்துவிடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த ஊருக்குச் சென்றிருந்தோம். கடலூரிலிருந்து தோராயமாக நாற்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. பெரிய காட்டுப்பாளையத்தின் அருந்ததியர் குடியிருப்பு ஓடையின் நடுவில் இருந்திருக்கிறது. இப்பொழுது மழைக்குப் பிறகு தூர்வாரியிருக்கிறார்கள். அதனால் ஓடையாகத் தெரிகிறது. முன்பு புற்களும் செடிகளும் நிறைந்து கிடந்திருக்கிறது. அதன் நடுவில் ஒரு வீடு இருக்கிறது அல்லவா? அதே போல கிட்டத்தட்ட பத்து குடிசைகள் அந்த வீட்டுக்கு முன்பாக இருந்திருக்கின்றன. வெள்ளம் இப்பொழுது தப்பித்து தனித்து நிற்கு இந்த வீட்டை மூழ்கடித்துச் சென்றிருக்கிறது. இந்தக் குடியிருப்பில் மட்டும் பத்துக்கும் மேலானவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். மொத்தம் தொண்ணூற்றைந்து வீடுகள். அத்தனை பேரும் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘கால்களுக்குக் கீழாக பிணம் கிடந்தது’ என்று சொல்லி அழுதார்கள். இந்தக் குடியிருப்புவாசிகளில் பத்து குடும்பத்தினர் முந்திரி உடைக்கும் எந்திரம் கேட்டிருக்கிறார்கள். முந்திரி விளையும் காலத்தில் தோட்டங்களில் இருந்து முந்திரியை வாங்கி வந்து சுத்தியல் வைத்து கைகளால் உடைக்கிறார்கள். ஒரு நாள் வருமானம் நூறு ரூபாய் வரைக்கும் கிடைக்கும். முந்திரி உடைக்கும் எந்திரம் இரண்டு வகைகளில் இருக்கிறது. ஐயாயிரத்து ஐநூறு ரூபாயில் கிடைக்கும் எந்திரத்தைப் பொறுத்த வைக்கும் கை, கால் இரண்டுக்கும் வேலை உண்டு. ஆனால் கொஞ்சம் ஏமாந்தால் கை கத்தரித்துவிடும் என்றார்கள். அடுத்த வகை ஏழாயிரத்து ஐநூறு ரூபாய். அவர் பத்தாயிரம் ரூபாய் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. பேரம் பேசி விலையைக் குறைத்திருக்கிறார்கள். இந்த எந்திரத்தில் ரிஸ்க் இல்லை. முந்திரியை அதுவே பிடித்துக் கொள்ளும். காலுக்கு வேலை இல்லை. கைக்கு மட்டும்தான். பத்து எந்திரங்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு வாரத்திற்குள் எந்திரங்கள் தயாராகிவிடும். இந்த குடியிருப்பின் இருபத்தாறு குடும்பங்களுக்கு பசுமாடுகளும் மீதமிருக்கும் கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்களுக்கு வெள்ளாடுகளும் வாங்கித் தருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மொத்தமாக ஆடு,மாடுகள் விற்பனை செய்யக் கூடிய பண்ணைகளை யாருக்கேனும் தெரிந்தால் தகவல் கொடுத்து உதவவும்.

முதல் வேலையாக பெரிய காட்டுப்பாளையத்திற்கான உதவிகளைச் செய்துவிடலாம். அதன் பிறகு மற்ற விண்ணப்பங்களைப் பரிசீலித்து பிற பொருட்களை வழங்கும் வேலைகளைச் செய்யலாம். கணிசமான தொகையை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் படிப்புக்காக ஒதுக்கி வைத்துவிடலாம். இதுதான் இப்போதைய திட்டம். எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. இத்தனை நண்பர்களின் உதவியில்லையென்றால் இதெல்லாம் சாத்தியமேயில்லை. அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.