Jan 14, 2016

எண்ணிக்கை

சில மாதங்களாக வலைப்பதிவு ஒன்றில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வாசகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. ஐம்பது பேர் வாசிப்பதே அதிசயமாக இருக்கிறது. இப்பொழுது வலைப்பதிவுகளை வாசிக்க ஆட்கள் இருக்கிறார்களா? தவறாக நினைத்துக் கொள்ளாவிட்டால் உங்கள் நிசப்தம் தளத்தை எவ்வளவு பேர் வாசிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இதில் எழுதி ஆற்றலை வீணடிப்பதற்கு பதிலாக ஃபேஸ்புக் மாதிரியான தளங்களுக்குச் சென்றுவிடலாமா என்று எண்ணம் வருகிறது? ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி கூட எழுகிறது.

- செந்தில்குமார்.

ஃபேஸ்புக், ட்விட்டர் வந்த பிறகு வலைப்பதிவை யாருமே வாசிப்பதில்லை என்று அவ்வப்போது யாராவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் ‘கலைடாஸ்கோப்’ சந்தோஷ் நாராயணனும் கூட அப்படி எழுதியிருந்தார். அந்த மாதிரியான இடங்களில் எதுவும் பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவதுண்டு. ‘இவன் வலைப்பதிவில் எழுதறானாமா...அதனால தூக்கிப் பிடிக்கிறான்’ என்று யார் வாயிலாவது விழ வேண்டியதாகப் போய்விடும். அப்படி நிரூபித்து என்னவாகப் போகிறது? 

நிசப்தம் தளத்தை எவ்வளவு பேர் வாசிக்கிறார்கள் என்பது அவ்வளவு முக்கியமானது இல்லை என்பதால் அதற்கு முன்பாக சில விஷயங்கள்-

வலைப்பதிவின் ஆரம்பகட்டத்தில் ஐம்பது பேர் என்பதே கூட மரியாதையான எண்ணிக்கைதான் என்றுதான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் ‘பேசலாம்’ என்ற பெயரில் வலைப்பதிவு எழுதிக் கொண்டிருந்த போது பத்து பேர்கள் கூட வருவதில்லை என்று தெரிந்தவர்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் எழுதி தாளித்திருக்கிறேன். ஒருவர் கூட பதில் அனுப்ப மாட்டார்கள். வெறும் அரைவேக்காட்டு கவிதைகளை எழுதி வைத்துவிட்டு- ‘படிச்சியா?’ ‘படிச்சியா?’ என்றால் எப்படிப் படிப்பார்கள்? பல நண்பர்கள் பேச்சு வார்த்தையைத் துண்டித்தது கூட அதனால்தான்.

வெளிப்படையாகப் பேசினால் வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை பற்றி கவலைப் பட வேண்டியதில்லை. சொல்வதற்கு எளிதுதான். ஆனால் யாருமே கவனிப்பதில்லை என்கிற ஏக்கம் மனதுக்குள் இருக்கத்தான் செய்யும். ’ஏன் எழுத ஆரம்பித்தாய்?’ என்று யாராவது கேட்டு ’ஆன்ம திருப்திக்காகத்தான் எழுத ஆரம்பித்தேன்’ என்றெல்லாம் நான் பதில் சொன்னால் அது புருடா என்று அர்த்தம். அப்படியெல்லாம் இல்லை, நான்கு பேருக்கு நம்மைத் தெரியும் என்று புகழ் மீது இருந்த ஆசைதான் காரணமாக இருக்க வேண்டும். அப்படியான காரணத்தை வைத்துக் கொண்டு எழுத ஆரம்பிக்கும் போது அடுத்தவர்கள் நம்மை கவனிக்கிறார்களா என்று நோட்டம் விடாமல் இருக்க முடியுமா?

நிசப்தம் தளத்துக்காக ஸ்டாட்கவுண்ட்டர் நிறுவப்பட்டிருக்கிறது. எவ்வளவு வாசகர்கள் வாசிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை அது காட்டிவிடும். ஆனால் அதை அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்த காலத்தில் ‘ஏன் இன்னைக்கு இவ்வளவு பேர்தான் வந்திருக்காங்க’ ‘நாளைக்கு எவ்வளவு பேர் வருவாங்க?’ என்கிற கேள்விகள்தான் ஆட்டிப்படைக்கும் கேள்விகளாக இருந்தன. இந்த பதற்றம் தேவையற்றது என்பதைப் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டது.

வாசிக்கிறவர்கள் வாசிக்கட்டும் என்ற நினைப்பில் வாசிக்கிறவர்களின் எண்ணிக்கையை எப்பொழுதாவது கவனித்தால் போதுமானது. தினந்தோறும் கவனித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் முந்தின நாள் வாசித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இன்றைய வாசகர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ‘இன்னைக்கு சரியா எழுதவில்லையோ’ என்றெல்லாம் குழம்பி தளர்ந்து போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, எண்ணிக்கை குறித்தான கவலையை கிள்ளியெறிந்துவிடுவதுதான் நல்லது. 

இணையத்தைப் பொறுத்தவரை எந்த ஊடகத்தில் எழுதுகிறோம்- ஃபேஸ்புக், ட்விட்டர் அல்லது வலைப்பதிவு என்பதெல்லாம் அவரவர் நேரத்துக்கும் வசதிக்கும் ஏற்ப தனிப்பட்ட விருப்பங்கள்தான். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் மனதில் தோன்றுவதை உடனடியாக எழுதிவிட முடியும். வலைப்பதிவுகளில் எழுத அதைவிடவும் சற்றே `கூடுதலாக மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதுதான் நிஜம். உண்மையைச் சொன்னால், அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கு இன்னமும் கூடுதலாக மெனக்கெட வேண்டும். 

இந்த ஊடகங்களிடையே இருக்கும் வேறுபாடுகள் என்றால்-

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பிறருக்கு ஒவ்வாத கருத்துக்களை எழுதும் போது வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லித் திட்டுவார்கள். திட்டுகிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நம்மைப் பற்றிய எந்தவிதமான புரிதலும் இருக்காது. அந்தக் குறிப்பிட்ட நான்கு வரிகள் மட்டும்தான் கண்ணில்படும். அந்த வரிகளை வைத்துக் கொண்டு நம்மைப் பற்றிய அரைகுறையான ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.

வலைப்பதிவுகளில் அப்படியில்லை. தொடர்ந்து எழுதும் போது நம்மைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை வாசிக்கிறவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். ‘இதுதான் நான்’ என்று இயல்பாக எழுதிக் கொண்டிருந்தால் போதும். வாசிக்கிறவர்களுடன் அதுவொரு ஸ்நேகப்பூர்வமான பிணைப்பை உண்டாக்கிவிடும். என்னதான் பிணைப்பு இருந்தாலும் எல்லோருக்கும் ஒத்து வரக் கூடிய கருத்தை மட்டுமே நாம் எழுதப் போவதில்லை. கருத்தியல் மாறுபாடுகள் வரத்தான் செய்யும். உடன்பாடில்லாத கருத்து என்றாலும் கூட சற்று நாசூக்காகத்தான் திட்டுவார்கள். இதுதான் மிகப்பெரிய வித்தியாசம்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால் - நிசப்தம் என்பது வீடு மாதிரி. வீட்டுக்கு மற்றவர்களை அழைத்து வரும் விசிட்டிங் கார்டாக ஃபேஸ்புக் பயன்படுகிறது. அவ்வளவுதான்.

வலைப்பதிவில் இயங்குவது எழுதுவதற்கான மிகச் சிறந்த பயிற்சிக் களம். கருத்துக்களை கோர்வையாகச் சொல்வது, வாக்கியங்களை சரியாக அமைப்பது, சுவாரசியமாக்குதல் உள்ளிட்டவற்றை வலைப்பதிவுகளின் மூலமாக பயிற்சி செய்து கொள்ள முடியும். 

இன்னொரு முக்கியமான விஷயம்-  இணையத்தில் எதற்காக எழுத வேண்டும் என்ற தெளிவும் அவசியம்.

எழுதுவது தவம், புண்ணியம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். உரையாடுவதற்கான வழிமுறை இது. சக மனிதர்களுடன் பேசிக் கொள்ளாத இந்த உலகத்தில் பார்ப்பதை, கேட்பதை, அனுபவிப்பதை, கருதுவதை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகத்தான் எழுத்தைப் பார்க்கிறேன். அதனால் ‘இதைச் சொன்னால் அவர்கள் தவறாக புரிந்து கொள்வார்களோ’ என்கிற தயக்கம் எதுவுமில்லை. மனதில் பட்டதை எழுதலாம். எப்பொழுதாவது ஒரு சமயம் தவறு என்று புரியும் போது தயக்கமே இல்லாமல் திருத்திக் கொள்ளலாம். நண்பர்களிடம் பேசும் போது இதைத்தானே பின்பற்றுகிறோம்? அதேதான். எனவே சந்தோஷமாகச் செய்ய முடிகிறது. இப்பொழுதெல்லாம் அதுவொரு கூடுதலான வேலையாகவும் இல்லை. தினசரி செயல்பாடுகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது.

மற்றவர்கள் குறிப்பிடுவதைப் போல வலைப்பதிவுகளை வாசிக்க ஆட்களே இல்லை என்பதையெல்லாம் அப்படியே நம்ப வேண்டியதில்லை. பத்து வருடங்களுக்கு முன்பாக நிசப்தத்தின் ஹிட்ஸ் எவ்வளவு என்று பார்த்தால் நூறுக்குள் இருந்திருக்கிறது. இப்பொழுது பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. சீராக அதிகரித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடிகிறது. நூறிலிருந்து பத்தாயிரத்தை அடைய பத்து வருடங்கள் பிடித்திருக்கிறது. ஹிட்ஸ்தான் பத்தாயிரம். நபர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் ஏழாயிரத்து சொச்சம். ஒருவரே ஒன்றுக்கும் அதிகமான கட்டுரைகளை வாசிக்கும் காரணத்தினால் நபர்களின் எண்ணிக்கையைவிடவும் பக்கங்களுக்கான ஹிட்ஸ் அதிகமாக இருக்கிறது. கீழே இருக்கும் படத்தில் தெளிவாகப் புரியும். இன்றைய நிலவரம் இது. அடுத்த வாரம் ஏறக்குறைய இருக்கக் கூடும். எட்டு அல்லது ஒன்பதாயிரமாகவும் இருக்கலாம். பதின்மூன்றாயிரமாகவும் இருக்கலாம். சராசரியாக ஒரு எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளலாம்.



ஏற்கனவே சொன்னதுதான் - எண்ணிக்கை பற்றிய கவலை வேண்டியதில்லை. அது நிரந்தரமும் இல்லை. ஒரு மாதம் எழுதாவிட்டால் சீண்ட ஆள் இருக்காது. தொடர்ந்து இயங்குகிறோமோ? அது போதும். நம்முடைய திசை துலக்கமாகிக் கொண்டேதான் இருக்கும்.

தவறாக நினைப்பதற்கெல்லாம் எதுவுமேயில்லை. இதையெல்லாம் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்துதான் சொல்கிறேன். யாருக்கேனும் பயன்படுமெனில் விரிவாகவே பேசலாம். ரகசியம் காத்து என்ன பிரயோஜனம்? வெளிப்படையாகப் பேசுவதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. இவ்வளவுதான் சங்கதி.

8 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

////வாசிக்கிறவர்கள் வாசிக்கட்டும் என்ற நினைப்பில் வாசிக்கிறவர்களின் எண்ணிக்கையை எப்பொழுதாவது கவனித்தால் போதுமானது. தினந்தோறும் கவனித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் முந்தின நாள் வாசித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இன்றைய வாசகர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ‘இன்னைக்கு சரியா எழுதவில்லையோ’ என்றெல்லாம் குழம்பி தளர்ந்து போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, எண்ணிக்கை குறித்தான கவலையை கிள்ளியெறிந்துவிடுவதுதான் நல்லது. ////

நல்லதொரு கருத்து.வலைப்பதிவு எழுதுபவர்களை கண்டிப்பாக இது ஊக்குவிக்கும். உங்களுடைய இந்த "வெளிப்படை"த்தன்மைதான் எங்களுக்கும் பிடித்திருக்கிறது. வாழ்த்துகள்!

Arul Manivannan said...

துலங்கியது, நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

புதிதாக எழுத ஆரம்பித்த போது நானும் செந்தில் போல குழம்பி தேவையற்ற சில வேலைகள் செய்து இப்போது வலைப்பூ பற்றி ஓரளவு புரிந்து கொண்டுள்ளேன். ஒரே மாதிரியான விஷயங்களை எழுதாமல் பல்சுவையுடன் எழுதினால் வாசகர்கள் கூடுவார்கள். கவிதை, கதையைவிட அரசியல், சினிமா, ஜோக்ஸ் போன்றவற்றிற்கு வாசகர் பரப்பு அதிகம். பொறுமையும் காத்திருப்பும் விடா முயற்சியும் இருப்பின் வலைப்பூவில் சாதிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. சிறப்பான தகவல்களை சொன்ன பதிவு. நன்றி!

V.Raghunathan (raghulallihari@gmail.com) said...

//வலைப்பதிவுகளில் அப்படியில்லை. தொடர்ந்து எழுதும் போது நம்மைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை வாசிக்கிறவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். ‘இதுதான் நான்’ என்று இயல்பாக எழுதிக் கொண்டிருந்தால் போதும். வாசிக்கிறவர்களுடன் அதுவொரு ஸ்நேகப்பூர்வமான பிணைப்பை உண்டாக்கிவிடும். என்னதான் பிணைப்பு இருந்தாலும் எல்லோருக்கும் ஒத்து வரக் கூடிய கருத்தை மட்டுமே நாம் எழுதப் போவதில்லை. கருத்தியல் மாறுபாடுகள் வரத்தான் செய்யும். உடன்பாடில்லாத கருத்து என்றாலும் கூட சற்று நாசூக்காகத்தான் திட்டுவார்கள். இதுதான் மிகப்பெரிய வித்தியாசம்.//

Well said. Sir!

சீனிவாசன் said...

வருடத்திற்கு ஒன்று என எப்போதாவது எழுதுவது என் வழக்கம். நேற்றும் இன்றும் தலா ஒரு பதிவு இட்டேன். ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நேற்று 128 பார்வைகளும் இன்று கிட்டத்தட்ட 300 ம் கிடைத்திருக்கிறது. ஆச்சரியம்தான் எனக்கே!:) தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன், அந்த எண்ணத்திற்கு உங்கள் பதிவு ஊக்கமளிக்கிறது. நன்றி :)

Prabhu Jayaprakasan said...

Posts in FB reaches your Newsfeed automatically, but blogs like Nisaptham are being read manually (yes, email notification helps.. I agree)

But, when i don't get time to read Nisaptham for few days, When i come back, I make it a point to read everything since where i left off... It gives a feel that you are up-to-date, and connected with the author.

The same cannot be said with FB posts. Even after one day delay, It is almost impossible to scroll-and-scroll to read everything.. Definitely there will be a lot that is left out.

So, blogs for readers, FB only for scrollers.. :-)

ஆரூர் பாஸ்கர் said...

உங்கள் வெளிப்படைத்தன்மையை பாராட்ட வேண்டும். இதே கருத்தில் நான் எழுதிய பதிவு இதோ..

http://aarurbass.blogspot.com/2016/01/blog-post_7.html

Vinoth Subramanian said...

Blogs for readers, face book for scrollers. Well said Prabhu sir. To mani sir: Good writing. "Keep writing" is your only slogan. You've mailed me once and said this. I follow. I keep following.