Jan 13, 2016

சிறகு

கங்காதரனுக்கும் ரூபிக்கும் திருமணம் நடந்து ஐந்தாறு வருடங்கள் ஆகின்றன. ஒரு குழந்தை இருக்கிறது. ஐந்து வயது ஆண் குழந்தை. குழந்தைக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை- பூ விழுந்த கண். ‘இந்தக் குடும்பத்தை வந்து பார்க்க முடியுமா?’ என்று கேட்டிருந்தார்கள். கங்காதரனின் குடும்பம் கோவை கணபதியில் வசிக்கிறது. கோவையில் ஏதாவது காரியமென்றால் சுந்தரும், சபரியும் பார்த்துக் கொள்கிறார்கள். சுந்தரிடம் விவரங்களைச் சொல்லியிருந்தேன். பார்த்துவிட்டு வந்து நேற்று அழைத்திருந்தார்.

‘கங்காதரன் செத்து அஞ்சு நாள்தான் ஆகுது சார்...அந்தப் பொண்ணும் குழந்தையும் மட்டும்தான் வீட்டில் இருக்காங்க..ஆறுதல் சொல்லக் கூட பக்கத்தில் யாருமில்லை...ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்றார். கங்காதரன் இறந்துவிட்டார். எலெக்ட்ரீஷியன் வேலையைச் செய்து வந்தவர். நிரந்தரமான ஒப்பந்ததாரர் யாரிடமும் வேலை செய்யவில்லை. யாராவது வேலை இருப்பதாக அழைத்தால் சென்று செய்துவிட்டு காசு வாங்கி வருவார். கடந்த வாரம் வேலைக்குச் சென்றிருந்த போது மின் தாக்குதலில் இறந்துவிட்டார். ரூபி இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்.

ரூபி பற்றிய தகவல்களைச் சொல்லியிருந்த கனகமணியிடம் பேசும் போது கிட்டத்தட்ட உடைந்து போய்விட்டார் ‘எங்க பக்கத்து வீடுதாங்க..அந்தப் பொண்ணு அப்பாவி..சத்தம் போட்டுக் கூட பேசத் தெரியாது’ என்றார். இவற்றையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். அந்தப் பெண் ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறார். ‘கலைக்க முடியுமான்னு கூட விசாரிச்சு பார்த்துட்டோம்...ஆறாவது மாசத்துல கலைக்கிறது ரொம்ப ரிஸ்க்குன்னு சொல்லுறாங்க’ என்றார். மனம் கலங்கிவிட்டது. 

கங்காதரனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் இல்லை போலிருக்கிறது. அக்கா மட்டும் வேறு ஏதோவொரு ஊரில் வசிக்கிறார். ரூபிக்கும் அப்பா இல்லை. அம்மா மட்டும் வீட்டு வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது ரூபி திக் பிரமை பிடித்தது போல இருப்பதாக சுந்தர் சொன்னார். அப்படித்தானே இருக்கும்? வாடகை வீடு, ஒரு கண்ணில் பார்வையில்லாத குழந்தை. வயிற்றில் ஆறு மாத கர்ப்பம். கை கொடுக்கக் கூட வழியில்லாத குடும்ப உறவுகள். தன்னந்தனியாக அமர்ந்திருக்கிறார். கணவன் அலைந்து திரிந்த சிறு வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. அவனது உடமைகளும் அவன் விட்டுச் சென்ற குழந்தையும் வயிற்றில் வளரும் கர்ப்பமும் கடந்த காலத்தின் நினைவுகளைக் கிளறிக் கொட்டுகின்றன. எதிர்காலம் திசையற்ற காடாக முன்னே விரிந்து கிடக்கிறது. நினைத்துப் பார்க்கவே திகிலாக இருக்கிறது.

‘இந்தப் பொண்ணுக்கு வெளியுலகமே தெரியாது. அந்தப் பையன் நல்லா வெச்சிருந்தான். சம்பாதிச்சுட்டு வருவான். நல்ல சாப்பாடு வாங்கித் தருவான். சந்தோஷமா இருந்தாங்க’ என்று கனகமணி சொன்னார். இப்பொழுது வீட்டில் எதுவுமேயில்லை. அக்கம்பக்கத்தினர் கொஞ்சம் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். கங்காதரன் இறந்த தினத்திலிருந்து ரூபிக்கும், குழந்தைக்கும் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஒன்றிரண்டு மாதங்கள் பார்ப்பார்கள். அதன் பிறகு? யாரிடமும் பதில் இல்லை. 

‘அறக்கட்டளை வழியாக ஏதாவது செய்ய முடியுமா?’ என்றார்கள். அதற்காகத்தான் இந்தக் குடும்பத்தை வந்து பார்க்கச் சொல்லியிருந்தார்கள். நிச்சயமாக ஏதாவது செய்ய முடியும்தான். ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. குடும்பங்களை பாதியில் தவிக்க விட்டுச் செல்லும் மனிதர்களின் கதைகளைக் கேள்விப்படும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் மட்டும் நான்கைந்து சம்பவங்களைக் கேள்விப்பட வேண்டியிருந்தது. இத்தகைய குடும்பங்களுக்கு என்ன உதவியைச் செய்ய முடியும் என்பது குறித்தான எந்தவிதமான திட்டவட்ட முடிவுக்கும் வர முடிவதில்லை.  காலகாலத்திற்கும் ஒரு குடும்பத்தைத் தாங்கிப் பிடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத காரியம். அது சரியானதும் இல்லை. நம்மால் எத்தனை குடும்பங்களைக் காப்பாற்றிவிட முடியும்? இன்றைக்கு நம்மால் செய்ய முடிகிறது. செய்கிறோம். நாளைக்கு செய்ய முடியவில்லை என்றால்? 

இப்படித் தவிக்கும் பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏதாவதொரு விதத்தில் பற்றுக்கோல் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கணவனை இழந்த அந்தப் பெண்மணியால் ஏதேனும் வேலைக்குச் செல்ல முடியும். குறைந்தபட்சம் பெற்றவர்கள் துணையாக நிற்பார்கள். ஆனால் ரூபியின் நிலைமை வெகு பரிதாபமாக இருக்கிறது. என்றாலும் கூட அவரது விஷயத்திலும் என்ன செய்வது என்ற முடிவுக்கு உடனடியாக வர இயலவில்லை. அவரை அதிர்ச்சியிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான வழிவகைகளைச் செய்யலாம். பிரசவச் செலவு முழுவதையும் பார்த்துக் கொள்ளலாம். இன்னொரு குழந்தையின் உடனடியான படிப்புச் செலவைப் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இதைத்தான் முடிவு செய்து வைத்திருக்கிறோம். குழந்தை பிறந்து ரூபி உடலளவிலும் மனதளவிலும் தயாரானவுடன் ஏதாவதொரு வேலைக்கு ஏற்பாடு செய்து தரலாம். கோயமுத்தூரில் வேலை வாங்கித் தருவது சிரமமான காரியமாக இருக்காது என்கிற நம்பிக்கையிருக்கிறது. இதுதான் அந்தக் குடும்பத்திற்கான நிரந்தர உதவியாக இருக்க முடியும். இன்குபேட்டர் மாதிரி. அவர் ஓரளவு தம் கட்டியவுடன் விலகிக் கொள்ளலாம். கனகமணியிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கச் சொல்லியிருக்கிறேன். சுந்தரும் அவ்வப்போது தொடர்பு கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். 

இந்தக் குடும்பத்தைப் பற்றி உடனடியாக எழுத வேண்டியதில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் இதைக் கேள்விப்பட்டதிலிருந்து மனம் கனத்துக் கொண்டேயிருக்கிறது. வாழ்க்கை நமக்கு எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. காற்றில் சுழற்றி வீசப்படுகிற சிறகைப் போல மனிதனை திக்குத் தெரியாமல் அலைய விட்டு வேடிக்கை காட்டுகிறது. அவர்கள் நிற்கும் இடத்தில் உன்னைக் கொண்டு வந்து நிறுத்த வெகு நேரம் ஆகாது என்பதைக் குத்திக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். நமக்கு வராத வரைக்கும் அடுத்தவர்களின் கண்ணீரைத் துடைக்க விரல்களை நீட்டிக் கொண்டிருப்போம். வாழ்க்கையை எதிர்கொள்ளும் பாஸிட்டிவிட்டியும் அடுத்தவன் அழும் போது கை கொடுக்கும் மனிதமும் மட்டுமே நாம் வாழ்வதற்கும் வாழ்ந்து முடித்த பிறகு நாம் வாழ்ந்ததற்குமான அடையாளங்கள். 

குறிப்பு:
பெரியவர் மாசிலாமணி குறித்து கடந்த ஒன்றிரண்டு நாட்களாக நிறையப் பேர் விசாரித்திருக்கிறார்கள். அவரது கண் அறுவை சிகிச்சைக்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இன்று திருப்பூர் அரவிந்த் மருத்துவமனையில் காசோலை ஒப்படைக்கப்பட்டுவிடும். ரத்தத்தின் சர்க்கரை அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும் என நம்புகிறேன். அடுத்த வாரத்தில் அவரது நிலைமை குறித்து ஒரு முறை எழுதுகிறேன்.

8 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Mani - Any support required regarding job for that girl, please let me know. Any time we can accommodate. I will keep a slot for her either in my org or in my friend's org

Suresh kumar P

சேக்காளி said...

//என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை//
யோசிங்க மணி.
(முன்பு சில முறை எழுதிய வரிகளை திரும்பவும் எழுத விரும்பவில்லை)

சேக்காளி said...

sureshkumar integra தற்போதைக்கு ஒரு தீர்வை சொல்லியிருக்கிறார். போகப் போகப் பாதை புலப்படும்.

Siva said...

Heart pains mani...

ADMIN said...

பரிதாபம்.ரூபிக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.
தொடர்க...தங்களது அளப்பரிய பணியை..!

BalajiMurugan said...

Very Sad. Life has its own twists and tricks.. whoever reading this should take TERM INSURANCE... Mani Anna, you can also write about this... Our chellamuthu Kuppusamy can give more details if you need.
- Balaji Murugan

Unknown said...

"வாழ்க்கை நமக்கு எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. காற்றில் சுழற்றி வீசப்படுகிற சிறகைப் போல மனிதனை திக்குத் தெரியாமல் அலைய விட்டு வேடிக்கை காட்டுகிறது. அவர்கள் நிற்கும் இடத்தில் உன்னைக் கொண்டு வந்து நிறுத்த வெகு நேரம் ஆகாது என்பதைக் குத்திக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. "

உண்மைதான் இது சுடதான் செய்கிரது. கடந்துதான் போக வேண்டி இருக்கிறது. ஆனாலும் ”sureshkumar integra ” போன்றொர் இருப்பதனால் சற்று நிம்மதியாக இருக்காளாம் என எண்ண தோண்றுகிறது.

Vinoth Subramanian said...

The condition is tricky. Helping Mrs. Roobi getting job will ease the pressure. The pain? Only time can be the medicine.