காலையில் ஐந்து மணிக்கெல்லாம் சென்னையில் இறங்கிவிட்டேன். அதிஷா அழைத்து சென்னை வரச் சொல்லியிருந்தார். அவர் விகடன் குழுமத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒன்றிரண்டு மாதங்களாகிவிட்டன.
‘நீங்க சென்னை வந்தீங்கன்னா விருது கொடுத்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்குவாங்க’ என்றார். எனக்கு சனிக்கிழமையன்று சென்னை செல்லும் வேலை இருந்தது. ஆனால் இவர் வெள்ளிக்கிழமையே வரச் சொல்கிறார். ஃபோட்டோகிராபர் ஜி.வெங்கட்ராம்தான் படம் எடுக்கப் போகிறார். அவர் நிழற்படக் கலையில் பெருந்தலை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அஜீத், விஜய் மாதிரியான ஆட்களைத்தான் படம் எடுப்பார்.
அதிஷா உசுப்பேற்றினார். ‘அவர் ராசியான மனுஷர்...படம் எடுத்தாருன்னா அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்’ என்றார்.
‘சூப்பர் ஸ்டார் ஆகாட்டியும் போச்சாதுங்க நயன் தாரா கூட ஒரு டூயட் பாடியே ஆகோணும் பார்த்துக்குங்க’ என்றேன்.
‘அதெல்லாம் சர்வ நிச்சயமாக நடந்துவிடும்’ என்றார். ஒரு வேஷ்டியை எடுத்து பைக்குள் திணித்துக் கொண்டு பேருந்து ஏறினேன்.
ரகுராம் என்கிற சிறுவனுக்கு கல்லீரலில் திசு வளர்கிறது. ஏழு வயதுச் சிறுவன். இன்று அவனுக்கு ஆஞ்சியோ செய்கிறார்கள். அவனது சிகிச்சைக்கு உதவுவதற்காக அறக்கட்டளையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குவதாகச் சொல்லியிருந்த காரணத்தினால்தான் சனிக்கிழமை சென்னை வர வேண்டிய வேலை இருந்தது. பணத்தை தபாலில் அனுப்பினால் வேலை வெகு சுலபமாக முடிந்துவிடும்தான். ஆனால் நாம் நேரில் பார்த்துக் கொடுக்கும் போது ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வரலாம். இதுவரை பார்த்திராத ஒரு மனிதன் வந்து பணத்தைக் கொடுத்து நல்ல வார்த்தைகளைச் சொல்லும் போதும் அது ஒருவிதமான ஆன்ம பலத்தை அந்தக் குடும்பத்தினருக்குக் கொடுக்கிறது. அந்தக் காரணத்துக்காகத்தான் மருத்துவ உதவியை வழங்கும் போது முடிந்த வரைக்கும் நேரடியாகச் சென்று சந்தித்துவிடுகிறேன்.
விகடனில் ஒரு நாள் முன்னதாக வரச் சொல்கிறார்கள். அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன். சென்னை கிளம்புவதாக முடிவு செய்தவுடன் ‘ஃபங்ஷன் எதுவுமில்லையா?’ என்று அம்மா கேட்டார்.
‘ஃபோட்டோ மட்டும் எடுப்பாங்க போலிருக்கு’ என்றேன்.
‘அதுக்கு வேண்டி இங்கிருந்து செலவு பண்ணிட்டு போவோணுமா?’ என்றார்.
சரியான கேள்விதான். சென்னையில் இருப்பவர்களுக்கு பிரச்சினையில்லை. வெளியூரிலிருந்து இதற்காகச் சென்று வந்தால் எப்படியும் ஆயிரம் ரூபாயாவது கழண்டு விடும். ஆனால் இந்த மாதிரியான சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவதுதான் நல்லது. ஒவ்வொரு வருடமும் டாப் 10 மனிதர்கள், டாப் 10 நம்பிக்கைகள், விகடன் விருது வாங்கியவர்கள் ஆகியோரைப் படம் எடுத்து அதை ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். குறைவான பிரதிகள்தான் அச்சடிப்பார்கள் போலிருக்கிறது. அச்சடிக்கப்பட்ட பிரதிகளை ‘முக்கியமான மனிதர்கள்’ என்று அவர்கள் கருதுகிறவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த நிழற்படம் எடுக்கும் நிகழ்வு.
நுங்கம்பாக்கம் ஹாரிங்கடன் சாலையில்தான் வெங்கட்ராமின் ஸ்டுடியோ இருக்கிறது. படு பாந்தமான ஏரியா அது. நுழைந்தவுடன் வேஷ்டியை கட்டிக் கொண்டு வந்து அமர்ந்தேன். அழகூட்டுவதற்காக ஒரு மனிதர் இருந்தார். முகத்தில் வியர்வையைத் துடைத்து கொஞ்சம் பளிச்சென்று மாற்றினார். ‘இந்த தலை முடியை ஒண்ணும் பண்ண முடியாதுங்களா சார்?’ என்றேன். ‘இன்னும் கொஞ்சம் விழுந்துச்சுன்னா விக் வெச்சுக்கலாம்’ என்றார். இதற்கு நான் கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
வெங்கட்ராம் படம் எடுத்தார். இப்படியும் அப்படியும் திரும்பச் சொல்லி நான்கைந்து படங்கள். ஒவ்வொரு முறையும் ‘இன்னும் சிரிக்கலாம்’ என்றார். சிரிப்பு வந்தால்தானே சிரிக்க முடியும்? அவரே கடுப்பாகியிருக்கக் கூடும். எதுவும் சொல்லாமல் ‘முடிந்தது’ என்கிற விதத்தில் தலையை ஆட்டினார். அதன் பிறகு சலனப்படக் கருவிக்கு முன்பாக அமர வைத்து அதிஷா சில கேள்விகளைக் கேட்டார். பதில்களை பதிவு செய்து கொண்டார்கள்.
அதோடு வேலை முடிந்தது. மதியம் மூன்றரை மணிக்கு இன்னொருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதுவரைக்கும் எங்கே போவது என்று தெரியவில்லை. ஸ்டுடியோவுக்கு வெளியில் வந்து நின்று கொண்டேன். பணக்கார மனிதர்கள் வாழும் இந்த மாதிரியான பகுதிகளில் வேலை செய்யும் வீட்டுக்காவலர்கள், இஸ்திரி தேய்ப்பவர்கள் போன்றவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் சுவாரசியமான செய்திகள் கிடைக்கும் என்பது பழைய அனுபவம். ஒரே பிரச்னை- அவர்கள் அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டார்கள். மெல்ல மெல்லத்தான் பேச வைக்க வேண்டும். ‘சாப்டீங்களா?’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு அவர்களைப் பேச வைத்துவிட முடியும். அதே சாலையில்தான் சோ.ராமசாமியின் அபார்ட்மெண்ட் இருக்கிறது. வாடகைக்கு விட்டிருக்கிறார். ரகுவரனின் வீடு இருக்கிறது. பழைய நடிகர் ஸ்ரீகாந்த்த் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் இருக்கிறது. இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
ஒரு வீட்டின் காவலர் நட்பாகிவிட்டார்.
‘என்ன சார் நிறையப் பேர் வந்துட்டு போயிட்டு இருக்காங்க?’ என்றார்.
‘எனக்கும் தெரியலைங்கண்ணா...ஃப்ரெண்ட் ஒருத்தர் வேலை செய்யறாரு...பார்க்கலாம்ன்னு வந்தேன்’என்றேன்.
‘பெரிய கை சார் இவுரு....இங்க வராத நடிகருங்களே இல்லை’ என்று அவர் சொன்ன போது அதிஷா சொன்னது நடந்துவிடும் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.
வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஸ்ரீகாந்த் வந்தார். அந்தத் தெருவில் ஒரு சிறிய விநாயகர் கோவில் இருக்கிறது. அதற்கு காலை மாலை என இருவேளையும் சென்று வருவாராம். அரை ட்ரவுசரும் டீஷர்ட்டும் அணிந்திருந்தார்.முதுமையும் நோய்மையும் அவரைத் தளரச் செய்திருந்தது.
‘நல்லா இருக்கீங்களா சார்?’ என்றேன்.
‘ஹஹஹா...நல்லா இருக்கேன்...நீங்க?’ என்றார்.
‘ஜெகன் கேரக்டருக்காகவே தங்கப்பதக்கம் பார்த்தேன்’ என்றேன். அது உண்மை இல்லைதான். ஆனால் அவருக்கு அது சந்தோஷத்தைத் தந்தது. பெரிதாக கவனிக்கப்படாத தனது முதுமைக் காலத்தில் யாரோ ஒருவன் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டு பேசுகிறான் என்பது அவருக்கு மகிழ்வைத் தந்திருக்கக் கூடும்.
சிரித்தபடியே ‘இங்க எதுக்கு வந்தீங்க?’ என்றார்.
‘ஒரு ப்ரெண்டை பார்க்க வந்தேன். நீங்க இருக்கீங்கன்னு சொன்னாங்க....பார்த்துட்டு போலாம்ன்னு நின்னேன் சார்’
மீண்டும் சிரித்தார். நிறையக் கதைகளைப் பேசினார். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். ஆனால் அவரிடம் இன்னமும் மிச்சமிருந்தது.
‘ஒரு சனி, ஞாயிறு உங்களைப் பார்க்கிறதுக்குன்னே தனியா வர்றேன் சார்’ என்றேன்.
‘தாராளமா வாங்கோ...நாம பேசலாம்’ என்றார்.
அவரது அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியில் வந்தேன். ஸ்டுடியோவுக்குள் அடுத்தடுத்து இரு நடிகைகள் நுழைந்திருந்தார்கள். இரண்டு பி.எம்.டபிள்யூ கார்கள். அழகு ராணிகள். கொஞ்ச நேரம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் சகட்டுமேனிக்கு சினிமா படப்பிடிப்புகள் நடக்கும். ஏழாம் வகுப்பிலிருந்தே நடிகைகளை மிக அருகாமையில் பார்த்திருக்கிறேன். அதனால் நடிகைகளைப் பார்ப்பது பெரிய விஷயமாகவே தெரியவில்லை. விகடன் ஆட்கள் வந்து ‘எல்லாத்தையும் எழுதிடாதீங்க’ என்றார்கள். அவர்களின் பதற்றம் அவர்களுக்கு. என்னைப் பொறுத்தவரையிலும் நடிகைகளைப் பார்த்ததைவிடவும் ஸ்ரீகாந்த்துடன் பேசியதுதான் சுவாரசியம். ‘எதுவும் எழுதமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
விகடன் விருதை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டுக் கொடுத்திருந்தார்கள். சற்றே பெரிய பெட்டி அது. தூக்கிக் கொண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தேன். எதிரில் வந்த ஒரு மனிதர் ‘உள்ள மைக் இருக்கா?’ என்றார். எந்த அடிப்படையில் அப்படியொரு கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஆமாம்’ என்றேன். சிரித்துக் கொண்டே தாண்டிச் சென்றார்.
3 எதிர் சப்தங்கள்:
விகடன் ஆட்கள் வந்து ‘எல்லாத்தையும் எழுதிடாதீங்க’ என்றார்கள். அவர்களின் பதற்றம் அவர்களுக்கு.///
hahaha innum obama kkuthaan thaan theriyala ninga ottavaayinu.
summa joke:)
பதிவை படித்த முடித்தவுடன் பத்திய சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருந்தது. முந்தைய பதிவுகளின் சுவை (சுவராஷ்யம், விறுவிறுப்பு) தூக்கலாக இருந்ததால் இந்த எண்ணம் வந்திருக்குமோ..!?
// நயன் தாரா கூட ஒரு டூயட் பாடியே ஆகோணும் பார்த்துக்குங்க’//
எங்க தலையெழுத்து. வேற என்னத்த சொல்ல.
Post a Comment