Jan 10, 2016

மாசிலாமணி

நேற்று காலையில் பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு. ‘மாசிலாமணி பேசறேன்..கூட்லு கேட்டில் காத்திருக்கிறேன்’ என்றார். திருப்பூரில் இருந்து கிளம்பி வந்திருப்பதாகச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. வெளியூரிலிருந்து ஒரு மனிதர் உதவி கேட்டு பெங்களூருக்கு நேரடியாக வருவது இதுதான் முதல் முறை. ஒரு முறை கூட தொலைபேசியில் பேசாமல் இப்படி திடுதிப்பென்று யாராவது வருவார்களா? உண்மையைச் சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதும் குழப்பமாக இருந்தது. அவர் அழைத்த போது பெங்களூரில் நடைபெறும் கல்லூரி ஒன்றில் பொங்கல் விழாவுக்காகச் சென்று கொண்டிருந்தேன். விழா முடிவதற்கு எப்படியும் மதியத்திற்கு மேலாகிவிடும். அந்த மனிதரிடம் சாயந்திரம் வந்துவிடுவதாகச் சொன்னேன். பெங்களூர் வரைக்கும் வந்திருக்கிறார் என்றால் அவருடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது வீட்டில் தங்கிக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அப்படிச் சொன்னேன். அவர் எந்த பதிலும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்தார். நானும் மறந்திருந்தேன்.

மாலை நான்கு மணிக்கு வேறொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதே மனிதர். அப்பொழுதும் கூட்லு கேட்டிலேயே இருப்பதாகச் சொன்னார். அவசர அவசரமாக சட்டையை அணிந்து கொண்டு கூட்லு கேட் சிக்னலுக்கு விரைந்தேன். அங்கே நிறையப் பேர் நின்றிருந்தார்கள். அழைப்பு வந்த எண்ணுக்குத் திரும்ப அழைத்த போது அது வேறொருவருடைய எண். ‘ஒரு வயசானவர் என் ஃபோனை வாங்கிப் பேசினார்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார். அடையாளம் கேட்டேன். பழுப்பு நிறச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்ததாகச் சொன்னார். அப்படியொரு மனிதர் நிழற்குடையில் அமர்ந்திருந்தார். அவர்தான் மாசிலாமணி. நரைத்த தலைமுடி. பழைய சட்டை. கசங்கி பழுப்பேறிய வெள்ளை வேட்டி. ஒரு கிழிசலான பழைய பை. 

‘இவ்வளவு நேரம் இங்கேயே இருந்தீங்களா?’ என்றேன்.

‘நான் ஒரு அனாதை சார். எங்கே போறது?’ என்றார். எனக்கு பேச்சு வரவில்லை. தேவையில்லாமல் காக்க வைத்துவிட்டதாகத் தோன்றியது. தினகரனில் வந்த நேர்காணலைப் பார்த்துவிட்டு அதை ஜெராக்ஸ் எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டு கரட்டடிபாளையம் சென்றிருக்கிறார். அங்கே என்னுடைய அலைபேசி எண்ணை வாங்கியிருக்கிறார். ‘பெங்களூர்ல கூட்லு கேட்ன்னு ஒரு இடத்துல இருக்கிறதா சொன்னாங்க..ஆனா அட்ரஸ் தெரியாது’ என்று அங்கிருந்தவர்கள் சொன்ன ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ரயிலேறி பெங்களூர் வந்துவிட்டார். 

கந்தல் துணியாகக் காத்திருந்த அவருக்கு எழுபத்து ஒன்பது வயதாகிறது. சின்னாளப்பட்டி சொந்த ஊர். அந்தக் காலத்தில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார். ஒரு கல்லூரியில் பணி புரிந்தாராம். திருப்பூரில் ஏதோ பிஸினஸ் ஆரம்பித்து அது முடங்கிப் போயிருக்கிறது. சொத்து முழுவதும் காலி. மனைவி இறந்து இருபத்தைந்து வருடம் ஆகிறது. ஒரு மகன் இருக்கிறான். அவன் இவரைக் கண்டு கொள்வதில்லை. ஒரு முறை அவன் அடித்து துரத்தியபிறகு ‘அவன் முகத்துல எப்படி சார் முழிக்கிறது?’ என்று கேட்ட போது அவருக்கு கண்கலங்கிப் போனது. இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தையில்லை.

‘நான்கு மாசம் முன்னாடி வரைக்கும் செக்யூரிட்டியா வேலை பார்த்தேன்...அதுக்கு முன்னாடி அக்கவுண்டண்ட் வேலை....கண் பார்வை போயிடுச்சுங்க...வலது கண் சுத்தமா பார்வையில்லை...இடது கண்ணும் கொஞ்சம் கொஞ்சமா மங்கிட்டு வருது. சாப்பிடவே வழியில்லை...ஆபரேஷன் செய்ய எப்படி முடியும்? இலவசமா யாராச்சும் ஆபரேஷன் செய்யறாங்களான்னு தேடிட்டு இருக்கேன்..யாரும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க...சர்க்கரை அளவு தாறுமாறா இருக்கு...அரவிந்த் மருத்துவமனையில் பண்ணுறாங்க...நீங்க உதவி செஞ்சா இன்னும் ஏழெட்டு வருஷம் எப்படியாச்சும் வாழ்ந்துடுவேன்’ என்றார். அவருடைய நண்பர்கள் சிலரின் எண்களைக் கொடுத்தார். முதல் நண்பர் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பேசுவதாகச் சொன்னார். திரும்ப அழைக்கவே இல்லை. நான் அழைத்தாலும் எடுக்கவில்லை. அவரிடம் நான் பணம் கேட்பதாக நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது. மற்றொரு நண்பர் பேசினார். பெரியவர் சொன்ன விஷயங்களை இம்மி பிசகாமல் சொன்னார்.

திருப்பூரிலும் கூட மாசிலாமணி தங்குவதற்கு வீடு எதுவுமில்லை. ஏதாவது நிறுவனங்களின் வாசலில் படுத்துக் கொள்கிறார். யாராவது பழைய நண்பர்கள் நூறு இருநூறு என்று கொடுப்பதை வைத்துக் கொண்டு சாப்பிடுகிறார். கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் வாழ்க்கை. பெரியவருக்கு உதவுவதில் தவறு எதுவுமில்லை. முதலில் கண் அறுவை சிகிச்சை அதன் பிறகு தேவைப்பட்டால் முதியோர் இல்லம் ஏதாவதொன்றில் சேர்த்துவிடலாம் என்று தோன்றியது. பிடித்துக் கொள்ள எந்தப் பற்றுக் கோலும் இல்லாத இத்தகைய மனிதர்களுக்கு உதவுவதுதான் நம் அடிப்படையான நோக்கம். இதுதானே உண்மையான உதவியாக இருக்க முடியும்?

மதியம் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. சாப்பாடு வாங்கித் தருவதாகச் சொன்னபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் காபி கூட குடிக்கவில்லை. ஐநூறு ரூபாயைக் கொடுத்து ‘நீங்க கிளம்புங்க..திருப்பூர்ல எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் விசாரித்து வைங்க...ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவு ஆகும்ன்னு சொல்லுங்க...திருப்பூர் நண்பர்கள் வழியா செக் அந்த மருத்துவமனைக்கு போயிடும்’ என்றேன். அவருக்கு சந்தோஷம். அவரிடம் செல்போன் இல்லை. அவரைத் தேடிப் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. அவருடைய நண்பர்களின் வழியாக மட்டுமே தேடிப் பிடிக்க முடியும். நாளை அல்லது நாளை மறுநாள் விசாரித்துச் சொல்லிவிடுவார். ‘இனி தயவு செஞ்சு தேடி வர வேண்டாம். எப்படியாச்சும் ஃபோன் செய்யுங்க..நாங்க வந்துடுறோம்’ என்றேன். ஒரு முதியவரை இந்த வாழ்க்கை நாய் மாதிரி அலைய விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. படிப்பு, வசதி என எல்லாம் இருந்திருந்தாலும் வாழ்க்கை நினைத்தால் மனிதனைக் கிழித்து வீசிவிடுகிறது. சில ஆயிரங்களுக்காக முகம் தெரியாத மனிதர்களை நோக்கி தன்னந்தனியாக பயணிப்பது எவ்வளவு கொடூரமானது? இவரைப் போன்ற நிலைமை எந்த மனிதருக்கும் வந்துவிடக் கூடாது.

பேருந்தில் ஏற்றிவிடுவதாகச் சொன்னேன். தான் தொடரூர்தியில் செல்வதாகச் சொன்னார். அதில் நூறு ரூபாய்க்குள்தான் டிக்கெட் விலை. மெஜஸ்டிக் பேருந்துக்காக பேருந்து நிறுத்தம் வரைக்கும் நடந்தேன். ‘you please dont take trouble. I will manage’ என்றார். அவருடைய உருவத்துக்கும் உடைக்கும் சம்பந்தமேயில்லாத ஆங்கிலப் பேச்சு. பேருந்து வரும் வரைக்கும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேருந்தில் ஏறிய பிறகு ஜன்னல் வழியாக சப்தமாக அழைத்து ‘நல்லா இருங்க’ என்றார். சிரித்துக் கொண்டேன். திரும்ப வீடு வரும் வரும் வரைக்கும் அழுகை கண்களுக்குள்ளேயே பொத்துக் கொண்டு நின்றது.