Jan 1, 2016

தினம்

பெங்களூரின் பிரிகேட் சாலையில் இரவு எட்டு மணிக்கே போக்குவரத்தை நிறுத்திவிடுவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். கடந்த வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இந்தச் சாலையில் சுற்ற வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். அலுவலகத்திலிருந்து எட்டிப் பிடித்த மாதிரிதான். பத்து நிமிட நடை தூரம். ஆனால் பொழுது சாய்வதற்குள்ளாகவே தடியடி நடத்தினார்கள். அவ்வளவு நெரிசல். நல்லி எலும்பை முறித்துக் கையில் கொடுத்துவிடுவார்கள் என்று பம்மிவிட்டேன். ‘சார் அடிக்காதீங்க’ என்று தமிழில் கத்தினால் இன்னும் இரண்டு அடி சேர்த்துப் போடுவார்கள். இப்பொழுதாவது பரவாயில்லை- அறுபது கிலோ. சதை கொஞ்சம் கைவசம் இருக்கிறது. கடந்த வருடத்தில் கீழே விழுந்திருந்தால் தெரு நாய் கவ்விக் கொண்டு போயிருக்கக் கூடும். வெறும் ஐம்பத்து மூன்று கிலோதான்.

பெங்களூரில் காலங்காலமாக புத்தாண்டு கொண்டாடப்படும் சாலை அது. இருக்கிற சதையை வைத்துக் கொண்டு இந்த வருடம் சுற்றி விடுவது என்று முடிவு செய்திருந்தேன். வண்டியை அலுவலகத்திலேயே நிறுத்திவிட்டு சாலையில் நடக்கும் போதே நகரம் களை கட்டியிருந்தது. வண்ண விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. திரும்பிய பக்கமெல்லாம் தடியை வைத்துக் கொண்டு காக்கிச்சட்டையினர் உலாத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை எவன் பார்ப்பான்? அத்தனை யுவன்கள். அத்தனை யுவதிகள்.  அரைக்கால் பாவாடையும் ஜீன்ஸூம் மூக்கைத் துளைக்கும் வாசனை திரவியங்களாகவும் இதுவரை பார்த்திராத பெங்களூரின் வேறொரு முகம் அது. அந்தச் சாலையில் எந்தக் கடையும் திறந்திருக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லாவற்றையும் மூடி வைத்திருந்தார்கள். இரவு முழுக்கவும் சாலையின் இந்த முனையிலிருந்து அந்த முனை வரைக்கும் நடந்து கொள்ளலாம். பெருங்கூட்டம். வேடிக்கை பார்க்கலாம். சைட் அடிக்கலாம். மெலிதாக உரசலாம். அவ்வப்போது கூச்சலிடலாம். யாரும் கேட்கப் போவதில்லை. கட்டடற்ற சுதந்திரத்தின் ஒரு கூறு அது.

இத்தகைய சமயங்களில் நாம் காணக் கூடிய நகரங்கள் புதிர் மிகுந்தவை. அவை பகலில் ஒரு முகமூடியையும் இரவில் இன்னொரு முகமூடியையும் அணிந்து கொள்கின்றன. பகலில் அவசர அவசரமாக வாகனங்களில் விரைந்து கொண்டிருந்தவர்கள் காணாமல் போய் இரவில் அரைக்கால் ட்ரவுசரும் டீசர்ட்டும் அணிந்தவர்கள் சாவகாசமாக அலையத் தொடங்குகிறார்கள். வாகனப் புகையின் நெடி குறைந்து ஆல்கஹால் வாசனை காற்று முழுவதும் விரவுகிறது. பகலின் வாகன இரைச்சல் இரவில் அதிர் இசையாக உருமாறுகின்றன. விதவிதமாக அரிதாரம் பூசிக் கொள்ளும் நகரத்தின் இரவில் நான் தனித்து அலைந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.

பிரிகேட் சாலை உற்சாகம் மிகுந்ததாக இருந்தது. கூச்சலிடத் தொடங்கியிருந்தார்கள். அந்த இளைஞர்களுக்குள்ளாகத்தான் வெடிகுண்டு நிபுணர்கள் திரிந்தார்கள். அவர்களோடு சேர்த்து மோப்ப நாய்களும் சுற்றிக் கொண்டிருந்தன. செய்தியாளர்கள் வீடியோ கேமிராவுடன் அலைந்து கொண்டிருந்தார்கள். வறுத்த கடலைகளை விற்பவர்களும், தலையில் மாட்டிக் கொள்ளும்படியான ஒளிரும் கொம்புகளை விற்பவர்களும் தங்களின் வியாபாரத்திற்கான முஸ்தீபுகளில் இருந்தார்கள். சிறுவர்கள் சிவப்பு ரோஜாக்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள். உதட்டுச் சாயம் அணிந்த பெண்களும் திருநங்கைகளும் இருளுக்குள் நின்றிருந்தார்கள். 

இப்படியான வித்தியாசமான சூழலில் புத்தாண்டை வரவேற்றதில்லை. பள்ளியில் படிக்கும் போது சாலையில் சுண்ணாம்பை வைத்து ஹேப்பி நியூ இயர் என்று எழுதி அவரவர் பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்துத் தயாராக இருப்போம். பனிரெண்டு மணிக்கு எல்லோருமாகச் சேர்ந்து சப்தம் போட்டு ஊரை எழுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்று பூனைக்குட்டி மாதிரி கதவைத் திறந்தாலும் கூட ‘பொறுக்கிகளோட சேர்ந்து சுத்திட்டு வர்றான்’ என்று அரைத் தூக்கத்தில் அப்பா முனகாத வருஷமே இல்லை. அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும். இல்லையென்றால் அம்மா தாளித்து விடுவார்.

இப்படித்தான் என்னுடைய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இருந்திருக்கின்றன. பிரிகேட் சாலையில் பப்புகள் நிறைந்திருக்கும் ஒரு சந்தில் கூட்டம் நிரம்பிக் கிடந்தது. உள்ளேயே நுழைய முடியவில்லை. திணறி நுழைவாயிலை அடைந்த போது தனியாக உள்ளே அனுமதிக்க முடியாது என்றான். கருஞ்சட்டை அணிந்த கருணையில்லா பேருருவம் அது. கெஞ்சுவது போன்ற பாவனையில் முகத்தை வைத்து நின்றாலும் விறைப்பாக முறைத்தான். நிறைய பெண்கள் இருந்தார்கள்தான். அவர்களிடம் பேசி உள்ளே அழைத்துச் செல்வதெல்லாம் நடக்கிற காரியமா? ‘இட்ஸ் ஓகே’ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். வேறு என்ன செய்வது?

மணி பத்தைக் கடந்திருந்தது. மூன்று முறை அந்தச் சாலையில் நடந்து முடித்திருந்தேன். அதற்கு மேல் சலிப்பாக இருந்தது. அந்தச் சாலைக்குள் அப்பொழுதும் திரள் திரளாகக் கூட்டம் வந்து கொண்டேயிருந்தது. வீட்டில் எங்கே செல்கிறேன் என்று சொல்லியிருக்கவில்லை. இந்த மாதிரியான சமயங்களில் வெடிகுண்டு வெடித்துவிடுமோ என்று பயம் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. ‘இங்கேதான் இருக்கிறேன்’ என்று சொல்லி வைத்திருந்தால் எசகுபிசகாக ஏதாவது நடந்தால் அடையாளம் காட்டுவதற்கு அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். புது வருஷம் தொடங்குகிற சமயத்தில் இப்படியெல்லாம் நினைக்கக் கூடாது என்று உதட்டு மீது ஒரு சுண்டு விட்டு கடவுளை வேண்டிக் கொண்டேன். இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்தால் அந்த பயம் வந்து கழுத்து மீது அமர்ந்து கொள்கிறது. மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் என்று இவர்கள் வேறு பயமூட்டுகிறார்கள். உளவுத்துறையினர் ஏதாவது தகவல் கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பர். கிராதகர்கள். நம்மிடம் சொல்லாமல் மறைத்து வைக்க வாய்ப்பிருக்கிறது. ‘தம்பி உன்னைப் பார்த்தா கல்யாணம் ஆனவன் மாதிரி இருக்கு..நீ கிளம்பு’ என்று என்னைப் பார்த்தாவது சொல்லலாம். சொல்லவில்லை. வேக வேகமாக அலுவலகத்துக்கு வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

சாலைகள் எங்கும் விடலைகள். பைக்குகள் பறந்து கொண்டிருந்தன. எவனாவது கொண்டு வந்து சாத்திவிடுவானோ என்று என்னுடைய வண்டியின் வேகம் முப்பதைத் தாண்டவில்லை. பெங்களூரின் குளிர் சில்லிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்திற்கு இந்தக் குளிர் குறைவுதான். காற்று முகத்தில் அறைந்தது.  மங்கமன்பாளையா அப்படியேதான் இருந்தது. புத்தாண்டிற்கான எந்த அறிகுறியும் இல்லை. சாலை கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. அந்தச் சாலையில்தான் ப்ளாஸம் மருத்துவமனை இருக்கிறது. 108 ஒன்றை அப்பொழுதுதான் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். பைக்கை நிறுத்திவிட்டு அடிப்பட்டிருப்பவரின் முகத்தைப் பார்க்க விரும்பினேன். அந்த இடத்தில் கூட்டம் அதிகம் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் தூக்குப்படுக்கை ஒன்றைத் தூக்கி வந்து அந்த மனிதரைப் படுக்க வைத்தார்கள். முப்பத்தைந்து வயது இருக்கும். காது வெட்டுப்பட்டிருந்தது. வெள்ளைப் பஞ்சை வைத்து ஒட்டியிருந்தார்கள். விபத்து என்றார்கள். அவர் அதீதமான குளிரில் நடுங்குபவரைப் போல ‘ஆஓஆஒஆஓஆ’ என்று நடுங்கிக் கொண்டேயிருந்தார். அரைகுறை நினைவுகளுடன் பயத்தில் நடுங்கும் நடுக்கம் அது. ஒரு நிமிடத்திற்குள் அவரை மருத்துவமனைக்குள் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

பைக்கைக் கிளப்பினேன். வீடு வரும் வரைக்கும் அவர் நடுங்கியதுதான் நினைவில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த மனிதரின் வீட்டில் இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்வார்கள்? வருடத்தின் முதல் செய்தி கொடுக்கப் போகும் பேரதிர்ச்சியை எப்படித் தாங்குவார்கள்? அவருக்குக் குழந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தைகள் கடவுளிடம் என்ன வேண்டுவார்கள்? - ஏதேதோ சிந்தனைகள் அலைந்து கொண்டிருந்தன. இந்த நகரத்தில் அவசர ஊர்திகளின் சப்தம் இயல்பான ஒன்று. மனிதர்களில் சலனத்தை உண்டாக்கும் வீரியத்தை அந்த வண்டிகள் இழந்து வெகு காலம் ஆகிவிட்டன. அவரவருக்கு அவரவர் வேலைகள் கிடக்கின்றன. 

சாலையில் பைக்குகளின் வேகம் குறைந்தபாடில்லை. தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. நான் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். சிக்கன் கபாப் கடையொன்றைக் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். தெருவில் சிறுவர்கள் புத்தாண்டின் வருகைக்காக காத்திருந்தார்கள். எங்கேயோ ஆர்கெஸ்ட்ரா ஒலித்துக் கொண்டிருந்தது. சன் மியூஸிக்கில் கடந்த வருடத்தின் பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருக்கும் எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? அதே சமயம் யாருக்காகவும் எந்த தினமும் காத்திருப்பதில்லை. கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும் அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.