Dec 21, 2015

பொக்கிஷம்

சென்னையை சுத்தம் செய்யலாம் என்று எழுதிய போது இருபது பேராவது கலந்து கொள்வதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆனால் ஆழ்மனதில் முழுமையான நம்பிக்கை வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. இது சாதாரணக் காரியமில்லை. உண்மையிலேயே மனப்பூர்வமான ஆர்வம் இருக்க வேண்டும். அந்தச் சகதிக்குள் நாற்றத்திற்குள்ளும் புழங்குவதற்கு ஏற்ற ஒரு மனநிலை வேண்டும். உணர்ச்சிவசத்தில் வருவதாகச் சொன்னவர்கள் வராமல் போய்விட்டால் நான்கைந்து பேர்களை வைத்துக் கொண்டு இரண்டு கூடை குப்பையைக் கூட அள்ள முடியாது. அதனால்தான் புதைகுழிக்குள் காலைவிடுவதாக இருந்தால் ஏற்கனவே அனுபவமிருக்கும் ஒருவரோடு சேர்ந்து காலைவிடலாம் என்று பீட்டருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்க வைத்தது.

மழைக்குப் பிறகு தொடர்ச்சியாக வார இறுதி நாட்களில் சென்னை சென்று கொண்டிருக்கிறேன். சென்னை இப்பொழுது புழுதி படிந்த நகரமாக உருவெடுத்திருக்கிறது. அனகாப்புத்தூர், பம்மல், பல்லவபுரம் போன்ற பகுதிகள் எல்லாம் கொடுமையிலும் கொடுமை. நண்பர் கண்ணதாசனின் வீடு அந்தப் பகுதிதான். சனிக்கிழமை இரவில் பூவிருந்தவல்லியிலிருந்து பல்லவபுரம் செல்வதற்குள் சலித்துப் போய்விட்டது. அவ்வளவு தும்மல்கள், அவ்வளவு கண் உறுத்தல். நல்லவேளையாக மடிக்கணினியை எடுத்துச் செல்லவில்லை. காலை ஐந்து மணிக்கு எழ வேண்டும். காலை ஆறு மணிக்கு கோட்டூர்புரம் சித்ரா நகருக்கு பீட்டரின் குழுவினர் வரச் சொல்லியிருந்தார்கள். அலாரம் வைத்துவிட்டுத் தூங்கிய பொழுது தூக்கமே வரவில்லை. மூக்கு அடைத்துக் கொண்டது. அதனால் மூன்று மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்ணதாசனிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகத் துழாவிக் கொண்டிருந்தேன்.

ஐந்தே முக்காலுக்கு கோட்டூர்புரத்தை அடைந்திருந்தோம். அந்தச் சமயத்திலேயே நாற்பது பேர்கள் வந்திருந்தார்கள். படித்த இளைஞர்கள். பீட்டர் ஆறு மணிக்கு வந்தார். கையுறையிலிருந்து குப்பைகளைச் சேகரிக்கும் சாக்குப் பை வரை அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்கள். வண்டிகள், ஜேசிபி என சகலமும் தயாராக இருந்தன. குழுவினரை சித்ராநகரின் அடையாறு கரைக்கு அழைத்துச் சென்றார்கள். குடிசைவாசிகள் வரிசையாக அமர்ந்து மலம் கழித்துக் கொண்டிருந்தார்கள். கீழே முழுவதும் சகதி. குப்பை. பாலித்தீன் பைகள். நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது. காலையில் காபி கூட குடித்திருக்கவில்லை. ‘இந்தக் குடிசைப்பகுதியை முதலில் சுத்தம் செய்யலாம்’ என்று பீட்டர் அறிவித்தார். குப்பைகளை வழித்து அவரவர் சாக்குப்பைகளில் நிரப்பத் தொடங்கினர். குடிசைவாசிகளில் பத்துப் பேர்கள் வேடிக்கை பார்த்தால் ஒருவர் மட்டும் சலனமுறுகிறார். அந்த ஒருவர் மட்டும் கீழே கிடக்கும் இரண்டு பாலித்தீன் பைகளை எடுத்து ஆர்வலர்களின் பைகளில் போட்டார். மற்றவர்கள் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. வேறு சில குடிசைவாசிகள் சுத்தம் செய்து கொண்டிருப்பவர்களை அழைத்து ‘அந்த இடத்தில் குப்பை இருக்கிறது. இந்த இடத்தில் குப்பை இருக்கிறது’ கையை நீட்டினார்கள். சுத்தம் செய்து கொடுக்க வேண்டுமாம்.

எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. வீட்டில் ஒரு நாள் கூட சமையலறை அடைப்பைக் கூட சரி செய்து கொடுத்தது இல்லை. எதற்காக இந்த மனிதர்களின் குப்பைகளை நாம் வழித்துக் கொட்ட வேண்டும் என்று கடுப்பாக இருந்தது. ‘முதலில் அப்படித்தான் இருப்பார்கள். நாட்கள் நகர நகர மக்களும் நம்மோடு சேர்ந்து கொள்வார்கள்’என்பது பீட்டரின் எண்ணம். அவர் அனுபவஸ்தர். சொல்வது சரியாகக் கூட இருக்கலாம். ஆனாலும் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. குடிசைவாசிகளில் வீட்டுக்கு ஒருவர் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வந்தாலும் கூட பத்து நிமிடங்களில் ஒரு வீதி சுத்தமாகிவிடும். ‘அவன்தான் குப்பை போடுறான். இவன்தான் குப்பை போடுறான்’ என்று அடுத்த வீட்டுக்காரர்களை நோக்கி விரல் நீட்டுவதோடு அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இத்தகைய மெத்தனத்தோடு இருக்கும் இவர்களுக்கு எவ்வளவுதான் சுத்தம் செய்து கொடுத்தாலும் அடுத்த வாரமே குப்பையை நிரப்பி வைத்துக் கொள்வார்கள் என்றுதான் நம்புகிறேன். விழிப்புணர்வு வந்திருக்கும் என்றெல்லாம் தோன்றவில்லை.

வேலையைச் செய்கிறோம் என்கிற திருப்தியே இல்லாமல் செய்து கொண்டிருந்தேன். கிளம்பிவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் கிளம்பவில்லை. நிசப்தத்தில் எழுதியதற்காக கீதா, கோவையிலிருந்து சுந்தர், திருமாறன் போன்றவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்காகவாவது வேலை செய்ய வேண்டும் என்றிருந்தது. அதே சமயத்தில் பீட்டரின் இன்னொரு குழு அங்கேயிருந்த சிறுவர் பூங்காவைச் சுத்தம் செய்தார்கள். அப்படியான இடமென்றால் சரி. பொது இடம். தாராளமாகச் செய்யலாம். குடிசைப் பகுதியிலிருந்து வெளியேறி அந்தக் குழுவினருடன் சேர்ந்து கொண்டேன். அந்தப் பூங்கா சேறும் சகதியுமாக கறுப்பு நிறத்தில் இருந்தது. சில சிறுவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சுத்திகரிப்பு வேலை படு வேகமாக நடந்தது. அந்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் வெகு உற்சாகமாக வேலை செய்தார்கள். அந்த உற்சாகம் ஒட்டிக் கொண்டது. பூங்கா வேகமாகச் சுத்தமாகிக் கொண்டிருந்தது.

பீட்டர் மற்றும் குழுவினரின் அர்பணிப்பு உணர்வு அசாத்தியமானது. ஆர்வலர்களாக பணி செய்யும் இளைஞர்களும் இளைஞிகளும் எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் வேலை செய்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். இத்தகையை இளைஞர்கள்தான் ஏதோவொருவிதத்தில் நம்பியூட்டுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து மணிக்கு எழுந்து வந்து சகதியில் இறங்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. இறங்குகிறார்கள். இவர்கள் சாம்பிள்தான். இப்படி லட்சக்கணக்கான இளைஞர்களைத் திரட்ட முடியும். ஆனால் திரட்டுகிற திராணி உள்ள தன்னலமற்ற தலைவர்கள்தான் நம்மிடையே இல்லை. 

சுத்திகரிப்பு பணிகளுக்கு வருவதாகச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தவர்களுக்கு சனிக்கிழமை காலையில் பதில் அனுப்பிவிட்டு சென்னைக்குக் கிளம்பியிருந்தேன். இரண்டு நாட்கள் கழித்து இன்றுதான் மின்னஞ்சல்களைப் பார்க்க முடிந்தது. வருவதாகச் சொல்லியிருந்தவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகானவர்கள் தங்களால் வர முடியாது என்று அனுப்பியிருக்கிறார்கள். யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால் நாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. குடும்பச் சூழல், அலுவல் என்று ஆயிரம் காரணங்கள் நம்மைத் தடுக்கக் கூடும் என்கிற நிலைமையில் அவசரப்பட்டு உறுதியளிக்க வேண்டியதில்லை. பொறுமையாக நிதானித்து முடிவெடுத்து உறுதிப் படுத்தலாம். இந்த நிகழ்விற்காக இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே நம்மில் பெரும்பாலானவர்கள் அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொடுத்துவிடுகிறோம் என்று நினைக்கிறேன். ஒருவேளை இருபது பேரையும் நம்பி சட்டியைத் தூக்கியிருந்தால் நிலைமை சொதப்பியிருக்கும்.

பீட்டர் மாதிரியானவர்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். அவரோடு சேர்ந்து களத்தில் நிற்கும் இளைஞர்கள் பெருஞ்செல்வம். பூங்காவில் வேலை செய்யச் செய்ய ஆரம்பத்தில் இருந்த சலிப்பு மொத்தமாக நீங்கிவிட்டது. இத்தகைய ஒரு அணியோடு வேலை செய்வது என்பது முக்கியமான அனுபவம். இத்தகைய அனுபவங்களின் வழியாகக் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன.

பீட்டர் மாதிரியானவர்களின் ஒருங்கிணைப்பையும், இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்பையும் எவ்வளவு போற்றினாலும் தகும். இத்தகைய மனிதர்கள்தான் Truly Inspirations!