Dec 9, 2015

தயார்

ஆயிரம் மூட்டைகளும் தயாராகிவிட்டன. ஒவ்வொரு மூட்டையிலும் அரிசி, பருப்பு, புளி, எண்ணெய்யில் ஆரம்பித்து சானிடரி நாப்கின், பற்பசை, ப்ரஷ் வரையிலும் இருபத்தேழு பொருட்கள் இருக்கின்றன.  ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரத்திலிருந்து பத்து நாள் வரை வரும். நேற்றிரவு இந்த வேலை முடிந்திருக்கிறது. கடலூருக்கும் சென்னைக்கும் பொதுவான ஊராக அச்சிறுபாக்கத்தைத் தேர்ந்தெடுத்ததும் ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டதும் சரியாக அமைந்துவிட்டன. ஜெயராஜ் தன்னம்பிக்கை பயிற்சியாளர். லைப் ஷைன் பவுண்டேசன் என்கிற அமைப்பை நடத்துகிறார். பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். தனது அத்தனை வேலைகளையும் இந்தப் பணிக்காக ஒரு வாரம் ஒதுக்கி வைத்திருக்கிறார். அவர் மட்டுமில்லை- அவருடன் பணியாற்றும் எல்லோருமே ஏதேனும் வேலையில் இருப்பவர்கள். வழக்கறிஞர், ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், விற்பனைப் பிரதிநிதி என்று சகலரும் இணைந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இரவு பகலாக வேலை செய்திருக்கிறார்கள்.

நேற்று நாகப்பிரகாஷ் சேலத்திலிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார். மனோஜ் சென்னையிலிருந்து சென்றிருக்கிறார். அனந்த பத்மநாபன் சென்னயிலிருந்து சென்று வேலை செய்கிறவர்களுக்கான மதிய உணவை வாங்கித் தந்திருக்கிறார். இது மிகச் சிறந்த Team work. சந்தோஷமாக இருக்கிறது. நினைத்ததைவிடச் சிறப்பாகவும் திட்டமிடலில் துளி பிசாகமலும் செய்திருக்கிறார்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இனி பெரிய பொறுப்பு காத்திருக்கிறது - விநியோகம்.

நாளை கடலூருக்குச் செல்லவிருக்கிறோம். இப்போதைக்கு மஞ்சக்குழி கிராமம்தான் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஊருக்குச் செல்வதற்கான குறுக்குவழிகளை நண்பர்கள் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். கடலூரைத் தாண்டிச் செல்வது சாமானியமான வேலை இல்லை என்கிறார்கள். ஒருவேளை அந்த ஊருக்குச் செல்ல முடியாத பட்சத்தில் வேறு சில கிராமங்களும் பட்டியலில் இருக்கின்றன. அனைத்துமே மழையினால் பாதிக்கப்பட்டு கண்டு கொள்ளப்படாத கிராமங்கள்தான். ஆயிரம் மூட்டைகளில் முதல் ஐநூறு மூட்டைகளை கடலூருக்கு எடுத்துச் செல்கிறோம். முதல் நூறு மூட்டைகள் மரக்காணத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட இரண்டு கிராமங்களுக்கு தலா ஐம்பது மூட்டைகள் வழங்கப்படவிருக்கிறது. மீதமிருக்கும் நானூறு மூட்டைகள் கடைசி நேர முடிவின் படி விநியோகிக்கப்படும். எஸ்.என்.சாவடி உள்ளிட்ட ஊர்களும் பரிசீலனையில் இருந்தன. நண்பர் குழலி அந்த ஊரில் இருக்கும் நூறு குடும்பங்களை பரிசீலிக்கச் சொல்லியிருந்தார். தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பிலிருந்தும் அந்த ஊருக்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார்கள். ஆனால் ஊருக்குச் செல்லும் வழியில் வழிமறிக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. பேரிடர் மேலாண்மைக் குழுவினரிடம் ‘நீங்க பாதுகாப்பு தந்தா எடுத்துட்டு போகிறோம்’ என்று சொல்லியிருக்கிறேன். இன்று சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

விநியோகத்தின் போது பத்திரிக்கை நண்பர்களையும் அழைத்துச் செல்லும் திட்டமிருக்கிறது. இந்தக் கணம் வரை சரியாகத்தான் திட்டமிட்டிருக்கிறோம். செயல்படுத்திவிட்டு பிறகு விரிவாகப் பேசலாம்.

வெள்ளிக்கிழமையன்று சென்னை வியாசர்பாடியில் விநியோகம் செய்யவிருக்கிறோம். வியாழனன்று கடலூரிலிருந்து திரும்பி வந்து அச்சிறுபாக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் அதிகாலையில் கிளம்புகிறோம். சென்னையில் பிரச்சினை இருக்காது என்கிற நம்பிக்கையிருக்கிறது. சுந்தர், இளங்கோ கிருஷ்ணன், வெற்றி உள்ளிட்டவர்கள் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள். தொழிலாளர் நலத்துறை ஆணையர் மாதவன் முடிந்த அளவிலான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார். 

தயங்கி நின்றால் கயிறு கூட பாம்பாகத்தான் தெரியும். 

எவ்வளவோ தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பணியுடன் ஒப்பிடும் போது இது சாதாரணச் செயல்தான். ஆனால் நாம் செய்கிற வேலையை பொறுப்பாகச் செய்வோம் என்றுதான் விரிவாகத் திட்டமிட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறோம் என்பதை நிசப்தத்தில் எழுதுவதன் வழியாக பல நூறு விதமான தகவல்கள் வந்து சேர்கின்றன. அவற்றில் முப்பது சதவீதமான தகவல்கள் நமக்கு மிகப் பயனுள்ளவையாக இருக்கின்றன. 

நிறைய நண்பர்கள் கடலூருக்கும் சென்னைக்கும் ஆர்வலர்களாக வருவதாகக் கேட்டிருக்கிறார்கள். கடலூர் குறித்து சரியாகச் சொல்ல முடியவில்லை. மேலே சொன்னது போல கடைசி நேர மாறுதல்கள் ஏதேனும் இருக்கக் கூடும். ஆனால் சென்னை பிரச்சினையில்லை. வியாசர்பாடி. ஆர்வலர்கள் வந்தால் சரி.

இன்று மாலை கிட்டத்தட்ட அத்தனையும் முடிவாகிவிடும். மதியத்திற்கு மேலாக நண்பர் ஜெயராஜிடம் +91 97881 35011 தொடர்பு கொண்டு விசாரித்தால் தகவலைச் சொல்லிவிடுவார் என நினைக்கிறேன். இந்தப் பணியைப் பாராட்டுவதாக இருந்தாலும் கூட அவருக்கும் அவருடன் பணியாற்றிய நண்பர்களுக்கும்தான் பெரும்பங்கு இருக்கிறது.  

நன்றி.