Dec 3, 2015

சென்னைக்கு - பெங்களூரிலிருந்து

நேற்றிலிருந்து இரண்டு மூன்று பேர் ‘சென்னைக்கு ஏதாவது செய்யலாமா?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். என்ன செய்வது எப்படிச் செய்வது என்றெல்லாம் யாருக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை. ஆனால் ஏதாவதொருவிதத்தில் உதவ வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. விடிந்த போது நிசப்தம் வங்கிக் கணக்குக்கு ஆனந்த் பாபு முப்பதாயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார். அதை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொல்லியிருந்தார். அவருடன் பேசுகிற வரைக்கும் கூட இந்தப் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இந்த மாதிரியான செயல்களில் எந்த அனுபவமும் இல்லை. தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. அதனால் என்ன? இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கும் போது செய்துவிடலாம். 

எந்த மாதிரியான உதவிகளைச் செய்வது? 

பெங்களூரிலிருந்து  இந்த வார இறுதியிலேயே ஒரு லாரி செல்வதாகச் சொன்னார்கள். அவர்களோடு இணைந்து இவ்வளவு சீக்கிரமாக அனுப்புவது சாத்தியமில்லை. ஒரு வாரம் அவகாசம் எடுத்துக் கொண்டு அடுத்த வார இறுதியில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம் என்று தோன்றியது. சென்னையில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்த போது உணவுப் பொருட்கள் நிறைய வருவதாகவும் அவை நிறைய வீணாகிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். அதனால் உணவுப் பொருள் எதுவும் அனுப்பப் போவதில்லை. அதுவுமில்லாமல் உணவுப் பொருட்கள் என்பவை உடனடித் தேவை. இன்னமும் ஒரு வாரம் கழித்து அனுப்பும் போது உணவுப் பொருட்களைவிடவும் குடும்பம் நடத்துவதற்குத் அத்தியாவசியமான பொருட்களை அனுப்புவதுதான் சரியாக இருக்கும்.

ஒரு அட்டைப் பெட்டியில் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை நிரப்ப வேண்டும். உதாரணமாக குளியல் சோப், துவைப்பதற்கான சோப், சாம்பார் பொடி, ரசப் பொடி உள்ளிட்ட மசாலாப் பொடிகள், கடலை எண்ணெய், கடுகு, சீரகம், பருப்பு, உப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும், அரிசி ஐந்து கிலோ, பருப்பு ஒரு கிலோ உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்- இந்தப் பட்டியல் உத்தேசமானது. என்னென்ன பொருட்கள் அவசியமானவை என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். அதற்கேற்ப பட்டியலை இறுதி செய்து கொள்ளலாம். இப்படித் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பெட்டியும் ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும். இவை தவிர இருநூறு நோட்டுப் புத்தகங்கள், நூறு சோடி ரப்பர் செருப்புகளைத் தனியாக வாங்கிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், பெரியவர்களுக்கு ரப்பர் செருப்புகளையும் சென்னையில் நேரில் பார்க்கும் போது வழங்கிவிடலாம்.


யாருக்கு வழங்குவது?

சென்னை முழுவதும் விநியோகம் செய்வது சாத்தியமில்லாத காரியம். ஏதேனும் ஒரு குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இன்னும் இரண்டொரு நாட்களில் சென்னை நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அவர்கள் வழியாக எந்தக் குடிசைப் பகுதிக்கு இந்த உதவியைச் செய்யவிருக்கிறோம் என்பதை முடிவு செய்துவிடலாம்.

ஒவ்வொரு பெட்டிக்கும் எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு வைத்துக் கொள்ளலாம். அடுத்த வியாழக்கிழமைக்குள் (டிசம்பர் 10)க்குள் வரக் கூடிய தொகையை வைத்து நம்மால் எவ்வளவு பெட்டிகளைத் தயாரிக்க இயலுமோ அவ்வளவு குடும்பங்களுக்கு வழங்குவதுதான் திட்டம். இப்போதைக்கு ஆனந்த் பாபு வழங்கிய முப்பதாயிரம் ரூபாய் தவிர, முத்து இன்னொரு இருபத்து நான்காயிரம் வழங்கியிருக்கிறார். பிரபு, மாரிமுத்து உள்ளிட்ட நண்பர்கள் தமது அலுவலக நண்பர்கள் வழியாக தொகையை வசூலிக்கவிருக்கிறார்கள். நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து எவ்வளவு தொகையை ஒதுக்குவது என்பதை அடுத்த வாரத்தில் யோசித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். இப்போதைக்கு என்ன பொருட்கள் அந்தப் பெட்டியில் இருக்க வேண்டும், அவற்றை எப்படி வாங்குவது, எப்படி பெட்டியில் அடுக்குவது, சென்னை அனுப்புவதற்கான வாகனம், சென்னையில் எந்தப் பகுதியில் வழங்கவிருக்கிறோம், சென்னையில் ஒருங்கிணைப்பு செய்வதற்கான நண்பர்கள் ஆகியவற்றைக் குறித்துத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

நேரடியாகப் பணமாகக் கொடுக்க விரும்பாதவர்களும் இருக்கக் கூடும். அவர்கள் இந்தப் பொருட்களில் ஏதேனுமொன்றை நூறு அல்லது இருநூறு பொட்டலங்களாக வழங்கலாம். அதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை.

அதிக நேரமில்லை. உடனடியாக வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த வாரம் முழுவதும் விடுப்பு வேண்டும் என்று மேலாளரிடம் கேட்டேன். அவர் நல்ல மனுஷன். அனுமதியளித்துவிட்டு ‘நானும் லாரியில் வரலாமா?’ என்று கேட்டார். அனுமதியே போதும் என்று சொல்லிவிட்டு இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். நல்ல காரியத்தைச் செய்வது என முடிவெடுத்துவிட்டால் ஏகப்பட்ட பேர்கள் சேர்ந்துவிடுகிறார்கள்.

விவரங்களுக்கு vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அலைபேசி எண்கள்:
Prabhu- +91 9731736363
Marimuthu - +91 8105775599
Ramachandran - +91 9483823898
Jayaprakash- +91 9886647409

தமிழ் பேசாத பலரும் உதவ விரும்புகிறார்கள். இதை ஆங்கிலத்திலும் எழுத விரும்பினேன். ஆனால் மனதில் இருப்பனவற்றையெல்லாம் தமிழில் எழுதும் போதுதான் தங்குதடையில்லாமல் சொல்ல முடிகிறது. யாரேனும் விரும்பினால் இந்த விவரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பகிர்ந்து கொள்ளவும்.

இந்தச் செயல்பாட்டில் ஒரு பொருள் கூட வீணாகக் கூடாது என்பதும் ஒவ்வொரு பொருளும் தகுதியான நபர்களை மட்டுமே சேர வேண்டும் என்பதுதான் நோக்கம். செய்துவிடலாம். நம்பிக்கை இருக்கிறது.

Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur