Dec 8, 2015

அடுத்தது என்ன?

வங்கிக் கணக்கு விவரங்களை ஒரு நாள் விட்டு நாளை எழுதலாம் என்று யோசித்திருந்தேன். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஒரு நாள் விட்டாலும் கூட திரைச்சொட்டு (Screenshot) எடுபதற்கே நிறைய நேரம் தேவைப்படும். ஐந்து நாட்களில் இருபத்து ஐந்து லட்ச ரூபாய். குருவி தலையில் பலாப்பழத்தை வைத்த மாதிரிதான். இன்று காலையில் ஒரு நண்பர் அழைத்திருந்தார். ‘அறக்கட்டளைன்னு ஆரம்பிச்சு சின்ன சின்ன வேலையா செஞ்சுட்டு இருக்கிற வரைக்கும் பிரச்சினையில்லை...இதெல்லாம் பார்த்தா கொஞ்சமில்லை நிறையவே பயமா இருக்கு’ என்றேன். பயம் இருக்கத்தானே செய்யும்? 

இந்த மாதிரியான செயல்களின் போது பணம் சேர்ப்பதுதான் கஷ்டமான வேலை என்று நினைத்தால் அது தவறான எண்ணம். எந்தவிதமான பின்னணியும் இல்லாத நம்முடைய வங்கிக் கணக்குக்கு இவ்வளவு பணம் வருகிறது என்றால் ஊடக ஆதரவு பெற்றவர்களின் கணக்குகளில் எவ்வளவு கோடி திரண்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். களத்தில் வேலை வேலை செய்வதற்குத் தயாராக இருந்தால் பணம் கொடுப்பதற்கு மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். பணத்தைத் திரட்டிய பிறகு பொருட்களை வாங்குவதும் அவற்றைப் பொட்டலம் கட்டுவதையும் கூட ஓரளவுக்கு சிரமமில்லாமல் முடித்துவிடலாம். ஆனால் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் பெரும் காரியம். அதற்காகத்தான் பல்வேறு வழிவகைகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. கடந்த ஓரிரண்டு நாட்களாக அதிகளவில் மிரட்டிப் பறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டுவதாகச் சொல்கிறார்கள். ஸ்டிக்கர் ஒட்டுவது கூடப் பிரச்சினையில்லை. யார் கொடுத்ததாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் சரியான மனிதர்களுக்குச் செல்ல வேண்டும். நாம் ஒரு ஊரைத் தேர்வு செய்த பிறகு அந்த ஊருக்குள் அனுமதிக்காமல் அழிச்சாட்டியம் செய்துவிடுவார்கள் என்பதுதான் கவலையைத் தருகிறது.

பார்த்துக் கொள்ளலாம். 


 முந்தைய பணப்பரிமாற்ற விவரங்களை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பதிவை வங்கியின் கணக்கு வழக்கை வெளியிடுவதற்காக மட்டும் எழுதவில்லை. கைவசம் இருக்கிற பணத்தை வைத்து அடுத்த கட்டப் பணிகளுக்கான வேலையை ஆரம்பிக்கலாம். மருத்துவ உதவிகளை இப்போதைக்கு நிறையப் பேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் கல்வி உதவிப் பணிகளைத் தொடங்கலாம். மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்காக அடுத்த கட்டத் தொகையைச் செலவிடலாம். 

அவசர அவசரமாகச் செய்ய வேண்டியதில்லை. யாருக்கெல்லாம் தேவை என்பது குறித்தும் என்னவிதமான உதவிகள் தேவை என்பதைக் குறித்தும் ஒரு பரவலான சர்வே நடத்துவோம். அந்த சர்வேயின் முடிவிலிருந்து என்னவிதமான பொருட்களை வழங்கப் போகிறோம் என்பதையும், அவற்றை எந்த ஊர்களுக்கு வழங்கப் போகிறோம் என்பது குறித்தும் முழுமையாகத் திட்டமிட்டு பிறகு பணிகளைத் தொடங்கலாம். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு மனிதர்கள் பரபரப்பாக இருப்பார்கள். அதன் பிறகு இப்பொழுது பரவியிருக்கும் எமோஷனல் மெல்ல வடியும். அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்குவார்கள். அப்பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்வதற்கான மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கும். அந்தச் சமயத்தில் இந்த உதவிகளைச் செய்வோம். அப்பொழுது பரபரப்பும் இருக்காது. விளம்பரமும் இருக்காது. அது சரியான சூழலாக இருக்கும்.

நம்மைப் புரிந்தவர்கள் மட்டும் நம்மோடு நிற்பார்கள். அப்பொழுது மன அழுத்தம் இல்லாமல் நமக்குத் திருப்தி ஏற்படும் வகையில் செய்ய முடியும்.

கல்விக் கூடங்கள் இடிந்து கிடக்கின்றன. புத்தகங்கள் நனைந்து போயிருக்கின்றன. ஏடுகள் தொலைந்திருக்கின்றன. செருப்புகள், சீருடைகள் என மாணவர்களுக்கான தேவை வெகுவாக பெருகி இருக்கும். அவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்கலாம். அரசாங்கமும் இந்த உதவிகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அரசு என்ன மாதிரியான உதவிகளைச் செய்யவிருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு அவர்கள் செய்யாத உதவிகளை நாம் செய்யலாம். 

மருத்துவ முகாம், தமது தொழிலுக்கான உபகரணங்களை இழந்தவர்களுக்கான உதவிகள் என அடுத்தடுத்து செய்வதற்கான காரியங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அகலக்கால் வைக்க வேண்டியதில்லை. அதற்கான அவசியமும் நமக்கு இல்லை. ஒரே நாளில் எல்லாவற்றையும் நாம் புரட்டிப் போட்டுவிட முடியும் என்று நம்புவது முறையில்லை. மெதுவாகவும் அதே சமயம் சீராகவும் அடுத்தடுத்த வேலைகளைச் செய்யலாம். இவற்றைச் செயல்படுத்துவதற்காக சிறு குழுவொன்றை அமைக்க வேண்டியிருக்கிறது. இணைந்து வேலை செய்ய விரும்புகிற நண்பர்கள் மேற்சொன்ன பணிகள் குறித்தான விவரங்களைச் சேர்க்கத் தொடங்குங்கள். முதற்கட்ட நிவாரணப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பிக்கலாம்.

மெதுவாகவும் அதே சமயம் முழுமையாகவும் செயல்படலாம்.