Dec 14, 2015

முறுக்கிய ஓட்டம்

ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்க்கும் அளவுக்கு வயிற்றை நிரப்பிவிட்டு ஒரு தூக்கம் தூங்கினால் கிடைக்கக் கூடிய சுகம் அலாதியானது. மதியம் உறங்கினால் தொப்பை விழும் என்கிறார்கள். அப்படியாவது விழுந்து தொலையட்டும். புதியதாகப் பார்க்கிறவர்கள் எல்லாம் ‘சின்னப்பையன் மாதிரி இருக்கீங்க’ என்கிறார்கள். என்னதான் குரலைக் கனைத்துப் பேசினாலும் குழந்தைப் பையனைப் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள். ஒரு காலத்திலும் ரவுடியாகவே முடியாது போலிருக்கிறது. 

‘ஒருத்தரைப் பார்க்க போகணும்...வர்றீங்களா?’ என்று பிரபு கேட்ட போது மறுக்கத் தோன்றவில்லை. பிரபு கன்னடக்காரர். எப்பொழுதாவது தொடர்பில் வருவார். திடீரென்று வெகு நாட்களுக்குச் சத்தமே  இருக்காது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக பெங்களூரில் ஒரு போராட்டத்தின் போது அறிமுகமாகியிருந்தார். நான் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தேன். மொத்தமாகவே எட்டுப் பேர்தான் இருந்தார்கள். எட்டுப் பேரை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான் என்ற அதிர்ச்சியில் என்னுடைய கையிலும் ஒரு பதாகையைக் கொடுத்தார். அப்பொழுதிருந்து நண்பர்கள் ஆகியிருந்தோம். பிரபு வேலை எதுவும் செய்வதில்லை. திருமணமும் செய்து கொள்ளவில்லை. தன்னை ஃப்ரீலேன்ஸ் போராட்டக்காரன் என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார். 

அவருடைய நண்பரொருவர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. அவரைச் சந்தித்துப் பேசுவதற்காகச் செல்வதாகச் சொன்னார். பிரபு அருமையாகப் பேசக் கூடிய மனிதர். ஒரு வகையிலான முதிர்ச்சியான பேச்சு அவருடையது. நிறைய வாசிக்கிறார். தொடர்ச்சியாக விவாதிக்கிறார். அவரைப் பார்த்து இரண்டொரு முறை நானும் பேசுவதற்கு முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். முதிர்ச்சி என்பது அதுவாக வர வேண்டும். நாமாக முயற்சித்தால் செயற்கையாக இருக்கும். வரவில்லை. விட்டுவிட்டேன். அநேகமாக அந்த நண்பரைத் தேற்ற வேண்டும் என்பதுதான் பிரபுவின் நோக்கமாக இருக்க வேண்டும். நானும் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தேன்.

‘போன வாரம் முழுக்கவும் வீட்டில் இல்லை. ஞாயிறு ஒரேயொரு நாள்தான் இருக்கு. அப்பவும் வெளியே போகணும்ன்னா எப்படி?’ கேட்கத்தான் செய்வாள். சமாளித்துத்தான் ஆக வேண்டும்.

தற்கொலை முயற்சி செய்த நபரின் வீடு ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கிறது. நாங்கள் சென்ற போதுடிவி பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டில் சவக்களை சூழ்ந்திருந்தது. நாங்கள் நுழைந்தவுடன் அவருடைய அம்மா எங்களிடம் மென்மையான குரலில் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு மொட்டைமாடிக்குச் சென்றுவிட்டார். பிரபு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். மெலிதாக சிரித்துவிட்டு வாகாக அமர்ந்து கொண்டேன். இத்தகைய சூழல்களில் பேசாமல் இருந்துவிடுவதும் கூட ஒரு வகையில் நல்லது. தூக்கிலிடுவதற்கு முயன்ற சமயத்தில் எப்படியோ அவருடைய அம்மா கண்டுபிடித்துவிட்டார். கூச்சலிட்டு ஆட்களைத் திரட்டி இழுத்து அமர வைத்துவிட்டார்கள். இரண்டு நாட்களாக அழுது கொண்டிருந்தார்களாம். 

தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு காரணத்தை வைத்திருந்தார். அவருடைய பழைய காதலி அவரைப் பற்றி எல்லோரிடமும் தவறாகப் பேசுவதாகச் சொன்னார். லிவ்-இன்-ரிலேஷன்ஷிப். பிரிந்துவிட்டார்கள். ‘இதுக்கெல்லாமா செத்துப் போகணும்?’ என்று தொண்டை வரைக்கும் வந்த சொற்களை விழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். மனிதனிடமிருக்கும் மிகச் சிறந்த ஆயுதம் சொற்கள். சரியாக வீசத் தெரிந்தால் எதிராளியை கழுவில் ஏற்றிவிட முடியும். அப்படித்தான் அவள் தூக்கு மேடை வரைக்கும் இந்த மனிதரை ஏற்றியிருக்கிறாள். 

பிரபு பேச ஆரம்பித்தார். ‘அவ பேசறதை நீ கண்டுக்காம விட முடியாதா?’- பிரபுவின் இந்தக் கேள்விக்கு அந்த மனிதர் எந்த பதிலையும் சொல்லவில்லை. விரும்பவில்லை போலிருந்தது. அமைதியாக இருந்தார். 

நம்மைப் பற்றிய வாய்வழி விமர்சனங்களும் அடுத்தவர்களால் புழங்கவிடப்படும் எதிர்மறையான சொற்களும் நம்மை வெகுவாகச் சீண்டக் கூடியவை. அலைகழிக்கச் செய்யக் கூடியவை. உள்ளூரக் கொதிக்கச் செய்வன. அவற்றை எதிர்கொள்வதில்தான் நம்முடைய வெற்றியின் சூட்சமம் இருக்கிறது. பதில் சொல்ல வேண்டியதில்லை. உள்ளே புழுங்கத் தேவையில்லை. அவற்றை உதாசீனப்படுத்தியபடி தாண்டிச் செல்வதும் கூட உத்தமமான எதிர்கொள்ளல்தான். அடுத்தவன் நம்மைப் பற்றிப் பேசுகிறான்; நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான்; நம்மைப் பற்றி எழுதுகிறான் என்றெல்லாம் யோசித்தால் நாம் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். முதன் முறையாகக் கேள்விப்படும் போது எரிச்சலாகத்தான் இருக்கும். ‘அவன் ஏன் நம்மை நோண்டுகிறான்’ என்று குழப்பமாகத்தான் இருக்கும். விமரசனங்களுக்கு பதில் சொல்வது என்பது நம்மைச் சீண்டுபவர்களை நாம் சொறிந்துவிடுவது மாதிரிதான். அந்த சுகானுபவம் அவனை இன்னமும் உசுப்பேற்றும். மேலும் குத்துவான். இன்னமும் குடைவான். 

பிரபு ‘நீங்க என்ன சொல்லுறீங்க?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார். தலையை மட்டும் ஆட்டினேன். பிரபு தொடர்ந்தார். 

அடுத்தவர்கள் மட்டும்தான் நம்மை விமர்சிக்கிறார்களா என்ன? நாம் யாரைப் பற்றியும் எதுவுமே பேசுவதில்லையா? பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தவர்களைப் பற்றிய எதிர்மறையான சிந்தனை அல்லது பேச்சு என்பது ஒரு வித மனநோய். ஒருவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அது மனநோயின் கூறாக மாறிவிடுவதற்கு மட்டும் அனுமதிக்கவே கூடாது. கவனித்துப் பார்த்தால் தெரியும்- அந்த மனிதர் எதைச் செய்தாலும் நமக்கு எரிச்சல் வரும். அந்த மனிதரின் மீதான எரிச்சல் மனதின் இடுக்குகளில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும். அந்த மனிதர் செய்யும் எல்லாவற்றையும் குற்றம் சொல்வோம். அப்படியொரு மனநிலை உருவாகும் போதே அந்த மனிதரை விட்டு விலகிவிடுவதுதான் நல்லது. அவர் என்ன செய்கிறார் என்று ஒளிந்து நின்று பார்த்தபடியே மருகிக் கொண்டிருந்தால் அவரை மட்டுமே நினைத்து நினைத்தே நம் காலத்தை தொலைத்துக் கொண்டிருப்போம். அதிகபட்சம் எழுபது வயது வரை வாழ்வோமா? கோடிக்கணக்கான வருடங்களாகச் சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியில் எழுபது வருடம் என்பது சொற்பத்திலும் சொற்பம். அந்தச் சொற்பத்தில் பாதிக்காலத்தை அடுத்தவனை நினைத்தே கரைக்க வேண்டுமா என்ன?

பிரபு பேசிக் கொண்டிருந்த போது யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்.

பிரபு தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தார். அவனைக் கரைத்துவிடும் என்று தோன்றியது. 

அவளுக்கு மனநோய். அவள் பேசட்டும். விட்டுத் தொலைக்கலாம். என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். அடுத்தவர்கள் நம்மைச் சீண்டும் போது கண்களையும் காதுகளையும் குறிப்பாக வாயையும் நாம் மூடிக் கொள்வதுதான் நல்லது. நமக்கு வேலை இல்லையா என்ன? ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கிறது. பெரும் லட்சியம் இருக்கிறது. குறிக்கோள்கள் இருக்கின்றன. அவற்றை மட்டும் நினைத்தால் போதும். வேறு எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை. அடுத்தவர்களின் குறைகளைப் பேசி புளகாங்கிதம் அடைபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டி தங்களைச் சந்தோஷப்படுத்திக் கொள்ளும் மனநிலையுடையவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்றைக்கு இவன் கலாய்த்தால் நாளைக்கு இன்னொருவன் கலாய்ப்பான். யார் வேண்டுமானாலும் நம்மை விமர்சிக்கட்டும். எத்தனை நாட்களுக்கு கலாய்ப்பார்கள்? நம்முடைய பயமெல்லாம் ‘நம்முடைய பிம்பத்தை அவன் உடைக்கிறான்’ என்பதுதானே? ‘இவன் நம்மைப் பற்றி இப்படிப் பேசுவதை அடுத்தவர்கள் கேட்டால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்பதுதானே?

அதெல்லாம் நாம் விசுவரூபம் எடுக்கும் வரையிலும்தான். வெற்றியின் வெளிச்சத்தின் முன்பாக எதுவும் தோற்றுப் போகும். நேற்றுவரை நம்மோடு இருந்தவன் இன்று மேலே செல்கிறான் என்று புலம்புகிறவர்களின் வார்த்தைகளை நாம் எழுப்பும் முரசுச் சத்தம் விழுங்கிவிடும். அந்தச் சப்தத்திலும் வெளிச்சத்திலும் தானாக அடங்கிப் போவார்கள். அவ்வளவுதான். யாரைப் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை மட்டும் முடிவு செய்து கொண்டபிறகு ஓட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டும். வெறியெடுத்த ஓட்டம். ஓடுகிற ஓட்டத்துக்குப் பின்னால் அத்தனை சொற்களும் துவண்டு விழும். ஒவ்வொரு சொற்களையும் மிதித்து நசுக்கும் போதுதான் நம் கழுத்தில் மாலைகள் விழுந்து கொண்டேயிருக்கும்.

பிரபு பேசப் பேச புல்லரித்துக் கொண்டிருந்தது. பேசிவிட்டுக் கிளம்பினோம். 

‘எப்படிப் பேசினேன்?’ என்றார். 

மூன்று பாட்டில் மல்ட்டி விட்டமின் டானிக்கை சேர்த்துக் குடித்தது போல இருந்தது. அவரிடம் ‘நல்லா இருந்துச்சு’ என்று மட்டும் சொன்னேன். 

‘இவனைப் போய் கூட்டிட்டு வந்தேன் பாரு’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். வண்டியை முறுக்கினேன். குழிக்குள் வண்டியை விட்டுக் குப்புற விழுந்துவிடத் திரிந்தேன். அவர் ஓடச் சொன்னது பெங்களூர் சாலையில் இல்லை என்று அசிரீரி ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

6 எதிர் சப்தங்கள்:

www.rasanai.blogspot.com said...

I will not reach my destination ( achieving goal ) if i throw stones at every barking dog --- winston churchill

seendapatta pin innum veriyodu velai seithu munneri thirumbi paarthaen, ennai seendiya kootam, angeye irunthu kondu adutha vetriyalanukkaga kaathukondirunthathu ---- yaaro in Tamil

hats off to prabhu the energetic orator. to you mani too for sharing the tonic

anbudan
sundar g chennai

Vinoth Subramanian said...

//யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்.// List peruse? nanum yosichukittu irukken.



திருப்புகழ் said...

நல்லதொரு பதிவு. ஒவ்வொரு மனிதனும் இந்த தொடரின் அறிவுரைக்கு உரியவர்களே! தாண்டிப்போகனும் அதுதான் வாழ்க்கை. பயணத்தின் பாதையை தெரிந்துக்கொண்டு சென்றால் போதும். நன்றி

சேக்காளி said...

//யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்//
மொத பேரு எம் பேரு தான?

சேக்காளி said...

//சமாளித்துத்தான் ஆக வேண்டும்//
தனிப் பட்ட முறையில் செல்லும் போது அவர்களையும் உடனழைத்து சென்றால் என்ன?

Senthil said...

"பிரபு பேசிக் கொண்டிருந்த போது யாரையெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். பட்டியலில் நிறையப் பேர் இருந்தார்கள்."

இதையே சமீபத்தில் உங்களை ஒரு பெரியவர் யார் மீதெல்லாம் காரணமில்லால் வெறுப்பு வருகிறது என்று கேட்டு நீங்கள் பட்டியல் போட்டது போல் ஒரு பதிவு வாசித்தேன்.

தஞ்சாவூர் காரர் பற்றிய பதிவில் எல்லோரும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை தேர்வு செய்வது குறிப்பாக இருந்தது, இன்னொரு சமீபத்திய பதிவில் விலாவரியாக விவரித்திருந்தீர்கள்.

புனைவல்லவே?