Dec 7, 2015

கணக்கு முக்கியமப்பா..

நேற்று பாங்க் ஆஃப் பரோடாவின் கடவுச் சொல்லை மறந்துவிட்டேன். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? மண்டைக்குள்ளேயே இருக்கிறது ஆனால் தட்டச்சு செய்தால் தவறாகப் போய் நிற்கிறது. வங்கியில் அழைத்துக் கேட்டேன். ‘மூணு தடவை தப்பா அடிச்சீங்கன்னா புட்டுக்கும்’ என்றார்கள். இது என்ன வம்பாகப் போய்விட்டது என்று கமுக்கமாக விட்டுவிட்டேன். நல்லவேளையாக இன்று காலையில் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. 

மூன்றாம் தேதி மீட்புப் பணியில் ஈடுபடப் போவதாக எழுதிய போது வங்கிக் கணக்கில் எட்டு லட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாய் இருந்தது. இப்பொழுது இருபத்து மூன்று லட்சத்து எட்டாயிரம் ரூபாய் இருக்கிறது. துல்லியமாகச் சொன்னால் பதினான்கு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணத்தை கடந்த நான்கு நாட்களில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

நேற்று திண்டிவனம், மதுராந்தகம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் ஆகிய ஊர்களில் நிவாரணப் பொருட்களை வாங்கியதற்கு பதினாறு காசோலைகளைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். ஒரு கடையில் மட்டும் பணமாகத்தான் வேண்டும் என்று கேட்டார்கள். அப்படித் தர முடியாது என்று சொல்லிவிட்டு கடையை மாற்றிக் கொண்டோம். அவசரத்துக்காக வங்கியிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் வெளிப்படையான பணப்பரிமாற்ற விவரங்களைப் பராமரிக்க காசாக எடுத்துப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான அணுகுமுறை. அதே போல முடிந்தவரைக்கும் தனிப்பட்ட நபர்களின் பெயரில் காசோலைகளை வழங்குவதேயில்லை. ஆனால் சில சமயங்களில் அதைத் தவிர்க்க முடிவதில்லை.

நேற்று மூன்று பேருக்கு தனிமனிதர்களின் பெயர்களில் காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பொருட்களை மூட்டை கட்டுவதற்காக ஆயிரம் சாக்குப் பைகளை திண்டிவனத்திலிருந்து வாங்கியிருக்கிறோம். ஒரு சாக்குப் பை ஆறு ரூபாய் என்று விலை சொல்லியிருந்தார். சாக்குப்பைக்காரருக்கு கடைப்பெயரில் கணக்கு இல்லை என்பதால் மாணிக்கம் என்ற அவருடைய பெயரில் ஐயாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. அதேபோல கோதுமை மாவு மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்து தருபவருக்கும் கடையின் பெயரில் வங்கிக் கணக்கு இல்லை என்பதனால் குணசீலன் என்ற பெயரில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கியிருக்கிறோம். ஒரு கிலோ கோதுமை மாவு நாற்பது ரூபாய். ஆயிரம் கிலோ கோதுமை மாவு- ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ.

இவை இரண்டும் தவிர, இந்த வேலையை அச்சிறுபாக்கத்தில் ஒருங்கிணைக்கும் ஜெயராஜுக்கு(வங்கிக் கணக்கு: ராஜா) தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கு இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வேலை செய்யும் ஆட்களுக்கு உணவு, சரக்குகளை இறக்கி ஏற்றுபவர்களுக்கான டிப்ஸ் என்று அவருக்கு நிறைய செலவுகள் இருக்கின்றன. பணம் வேண்டாம் என்றுதான் சொன்னார். ஆனால் இத்தனை பேருக்கு அவர் தனது கைக்காசை செலவு செய்வது முறையாக இருக்காது என்பதால்தான் இந்த ஏற்பாடு. இவ்வளவு மனிதர்களைத் திரட்டி இவ்வளவு பெரிய வேலையைச் செய்வதோடுமில்லாமல் அவரே செலவும் செய்யட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. 

நேற்று எட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து எந்நூற்று முப்பத்தியிரண்டு ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.  ஆயிரம் குடும்பங்களுக்கு பத்து நாள் சமையல் செலவுக்கு எட்டு லட்ச ரூபாய் போதுமானதாக இருக்கிறது. நம் நாட்டில் திருடப்படும் கோடிகள் கிடைத்தால் மொத்த இந்தியாவுக்கும் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுக்கும் விருந்து வைக்கலாம் போலிருக்கிறது. திருட்டுப்பயல்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

Ch.No
பெயர்
தொகை(ரூ)
69
Royal Agency
21054.00
70
Manickam
5900.00
71
Sree Murugan Traders
13600.00
72
Rose Agencies
47750.00
73
Uma Provision Stores
215962.00
74
Sri Senthil Andawar Oil Mills
71100.00
75
V.Gunaseelan
40000.00
76
Yesde Agency
8200.00
77
Padma Enterprises
46900.00
78
Sun Traders
34535.00
79
Prema Enterprises
28115.00
80
Padma Agencies
31193.00
81
Gopalakrishnan Agencies
79523.00
82
Sri Jothi Ramalingam Modern Rice Mill
165000.00
83
A.Raja
5000.00
84
A.Raja
5000.00

MRP விலையிலிருந்து அனைத்துப் பொருட்களுமே விலை குறைக்கப்பட்டுத்தான் வாங்கப்பட்டிருக்கின்றன. நாங்களாக பேரம் நடத்த வேண்டிய வேலை எதுவும் இருக்கவில்லை. நல்ல காரியத்துக்காக எங்களின் பங்களிப்பாக இருக்கட்டும் என்றுதான் பெரும்பாலான வியாபாரிகள் சொன்னார்கள். ‘இங்க யாருமே யாருக்கும் உதவ மாட்டாங்க’ என்பதெல்லாம் ஸ்டீரியோடைப்பான வாதம். அவசியமான நேரத்தில் உதவுததற்கு அத்தனை மனிதர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கக் கூடும். ஆனால் நாம் விதிவிலக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

எந்தெந்தப் பொருட்களுக்காக இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது  என்கிற விவரங்களை அனைத்து ரசீதுகளையும் ஒரு சேர பதிவிடும் போது தெரிந்து கொள்ள முடியும். இப்பொழுது அனைத்து ரசீதுகளும் அச்சிறுபாக்கத்தைச் சார்ந்த அன்பு என்கிற தன்னார்வலரிடம் இருக்கிறது. எல்லாவற்றையும் தொகுத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். 

நிவாரண நிதிக்காக வந்திருக்கும் தொகையில் இன்னமும் ஆறு லட்சத்து ஐம்பத்தியிரண்டாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது. இன்னமும் பணம் அனுப்பவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பணமும் வந்து கொண்டேயிருக்கிறது. அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகிக் கொண்டேயிருக்கலாம்.

நிவாரணப் பணிகளுக்கான முந்தய பண வரவு விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்.

கடலூர் மற்றும் சென்னையில் முதற்கட்ட நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு அடுத்தடுத்த கட்டப் பணிகளை திட்டமிட்டு பொறுமையாகவும் அதே சமயம் சரியான வகையிலும் செய்யலாம். பணம் இருக்கிறது என்பதற்காகத் தாறுமாறாக அள்ளி வீசினால் கண்டவர்கள் வயிறு வளர்க்க நாம் உதவியது போலாகிவிடும். ஒவ்வொரு ரூபாயும் தகுதியுள்ள பயனாளிகளை மட்டுமே சேர வேண்டும். இல்லையென்றால் நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை.

நிதி விவகாரம் சம்பந்தமாக எந்தச் சிறு சந்தேகமும் யாருக்கும் இருக்கக் கூடாது என்பது அறக்கட்டளை ஆரம்பித்த தருணத்திலிருந்தே அடிப்படையான கொள்கை. அஃது எல்லாக் காலத்திலும் தொடரும். துளி சந்தேகம் என்றாலும் கூட கேட்டுவிடலாம். தவறே இல்லை. வெளிப்படைத்தன்மைதான் இந்த அறக்கட்டளையின் மிக முக்கியமான பலம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.  தெரிந்தோ தெரியாமலோ கூட ஒற்றை ரூபாய் கூட தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது. அதனால் சந்தேமிருப்பின் தயங்கவே வேண்டியதில்லை. vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். சந்தேகத்தைப் பொதுவெளியில் தீர்க்க வேண்டியது என்னுடைய கடமை. அதை எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் செய்வேன்.

நன்றி.