Dec 16, 2015

பீப்

ஒரு வாத்தியார் முதன் முறையாக வேலைக்குச் செல்கிறார். கரும்பலகையைச் சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் போது ஒரு சில்லிப் பயல் பின்னாலிருந்து சாண்ட்விச் வைத்து அடித்திருக்கிறான். நானாக இருந்திருந்தால் இழுத்துப் போட்டு கும்மியிருப்பேன். அது அமெரிக்கா. கும்மியிருக்க முடியாது. ஆனால் குறைந்தபட்சம் பீப் வார்த்தைகளையாவது பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா? ம்ஹூம். அவர் பயன்படுத்தவில்லை.

வாத்தியார் மேட்டரைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அந்த பீப் பாட்டைக் கேட்டீர்களா? கேட்டுவிட்டேன். சிம்புவை எனக்குப் பிடிக்கும். ஆனால் இதைக் கேட்டுவிட்டு அயோக்கியப்பயல் என்று ஒரு முறை மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

நான் அப்படியொன்றும் உத்தமனில்லைதான். இரண்டு மாதங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அழைத்திருந்தார். வண்டி ஓட்டியபடியே அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். கூட்லு கேட் சிக்னலில் எவனோ ஒருவன் குறுக்கே வந்ததுமில்லாமல் கெட்ட வார்த்தைகளினாலும் திட்டினான். உச்சந்தலையில் சுள்ளென்றாகிவிட்டது. வேடியப்பனுடன் பேசிக் கொண்டிருப்பதை மறந்து இரண்டு மூன்று பீப்பில்லாத வார்த்தைகளைக் கத்திவிட்டேன். நான் சாலையில் சென்று கொண்டிருப்பதும் எவனுடனோ சண்டையிடுவதும் வேடியப்பனுக்குத் தெரியாதல்லவா? பாவப்பட்ட மனுஷன். நம்மைத்தான் திட்டுகிறான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இணைப்பைத் துண்டித்துவிட்டார். சொன்னால் நம்புவீர்களா என்று தெரியாது- இரண்டாவது மூன்றாவது படிக்கும் போதிருந்தே கெட்டவார்த்தைகளைச் சரளமாகப் பேசுவேன். எனக்கும் சரவணனுக்கும் படு போட்டி நடக்கும். கடைசியில் எப்படியும் சரவணனிடம் தோற்றுவிடுவேன் என்றாலும் நான் எல்லாம் அப்பொழுதே பெரிய ரவுடி - இதை அவ்வப்போது சொல்லித்தான் உங்களிடம் என்னை ரெவிடியாக மெய்ண்டெய்ன் செய்ய வேண்டியிருக்கிறது. 

போகட்டும். 

அன்றிரவு மன்னிப்புக் கோரி வேடியப்பனுக்கு நீண்ட குறுஞ்செய்தியை அனுப்பினேன். ஒற்றைவரியில் ‘இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை’ என்று பதில் அனுப்பினார். எதிர்பார்க்கிறாரா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். ‘உங்களைத் திட்டவில்லை’ என்று அவருக்கு புரிய வைப்பதும் கூட பெரிய சிரமமான காரியமில்லை. ஆனால் நமக்கென்று சில வரையறைகள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நமக்கு அறிமுகமான மனிதர்கள் அல்லது நம்மைத் தெரிந்து வைத்திருக்கும் மனிதர்களுக்கு நாம் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை அது. இப்படிச் சொல்வதால் ‘நல்லவன்’ என்கிற பிம்பத்தை உருவாக்குவதாகப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. 

சிம்புவும் அனிரூத்தும்தான் அப்படியென்றால் இங்கே இருக்கிற பெண்ணியவாதிகள் இருக்கிறார்களே. வரிக்கு மூன்று முறை பீப் இல்லாமலே எழுதுகிறார்கள். சிம்புவுக்கு எதிர்வினைகளைப் பாதி படிக்கும் போதே மூச்சு முட்டியது. கட்டுடைத்தல் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அடிப்படையான இங்கிதம் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? எவ்வளவு பெரிய விஷயத்தையும் நாசூக்காகச் சொல்ல முடியும். அவனைத் திட்டுகிறேன் பேர்வழி என்று வாயில் வசம்பைத் தேய்த்துவிட்டுத்தான் நாமும் பேச வேண்டுமா என்ன? எல்லாமே கவன ஈர்ப்பில்தான் வந்து நிற்கிறது. இல்லையா? எதைப் பாடினால் லட்சம் பேர்கள் திரும்பிப் பார்ப்பார்கள் என்று அவன் பாடுகிறான். எதை எழுதினால் பத்து பேர்கள் திரும்பிப் பார்ப்பார்கள் என்று இவர்கள் எழுதுகிறார்கள். 

இதைப் பற்றி வாயைத் திறக்கவே கூடாது என்று நினைத்திருந்தேன். பயம் எதுவுமில்லை. வெள்ளம் நம்மை ஏன் இவ்வளவு அலைக்கழித்திருக்கிறது என்பதை இப்பொழுதுதான் மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏரிகளை வளைத்துவிட்டார்கள் என்று மேலோட்டமாகச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சென்னையின் ஏரிகளைப் பற்றியும் கூவம் நதி, அடையாறு அவற்றின் போக்கும் அந்த நதிகளுக்கான நீர் வரத்து பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறார்கள். பாலித்தீன் பைகள் சென்னை நகரம் முழுக்கவும் மலை போல குவிந்து கிடக்கின்றன. வெள்ளம் பெருக்கெடுத்திருந்த சமயத்தில் ஒரு இடத்தில் எவ்வளவு உயரத்திற்கு நீர்மட்டம் நின்றிருந்தது என்பதை அந்த இடத்தில் இருக்கும் மரங்களை வைத்துக் கணிக்க முடிகிறது. மழை நீர் தேங்கியிருந்த மட்டம் வரைக்கும் மரங்களில் பாலீத்தின் பைகள் ஒட்டியிருக்கின்றன. அதற்கு மேற்புறமாக மரம் எப்பொழுதும் போல இருக்கிறது. இவ்வளவு பாலித்தீன் இந்த நகரத்தில் இருந்ததா என்று மலைக்க வைக்கிறது. பாலித்தீன் அரக்கன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க முடியும். மழை தட்டியெழுப்பியிருக்கும் மனிதநேயம் பற்றி அன்பொழுகப் பேச முடியும். ‘இங்க எல்லோரும் சுயநலவாதிங்க சார்’ என்கிற தட்டையான வாக்கியத்தை அடித்து நொறுக்க முடியும். எல்லாவற்றையும் ஒரே நாளில் மூடிப் புதைத்து மேலே இரண்டு சில்வண்டுகள் ஏறி அமரும் போது அதைப் பற்றியே நாமும் பேச வேண்டியதில்லை என்பதுதான் காரணம்.

ஆனால் அரிப்பெடுத்தவன் கை சும்மா இருக்காது. தட்டச்சுப் பலகையில் தட்டிக் கொண்டிருக்கிறது.

காமத்தைப் பற்றியும் காதலைப் பற்றியும் பெண்ணுடலைப் பற்றியும் விவாதிப்பது என்பது வேறு. அதை பச்சை பச்சையாகத் தெருவில் தோரணம் கட்டுவது என்பது வேறு. தோரணம் கட்டுவதன் வழியாக எந்தக் காலத்திலும் இவற்றையெல்லாம் திறந்த மனதுடன் பேசுகிற பக்குவத்தை அடையப் போவதில்லை. சில கணங்கள் நம் மீது விழும் வெளிச்சத்தில் உச்சி குளிர்ந்து கொள்ளலாமே தவிர வேறு எந்தப் பலனுமில்லை. இதைச் சொன்னால் நம்மை அடிக்கப் பாய்வார்கள். ஆயிரம்தான் ரவுடியாக இருந்தாலும் ஒற்றைக்கு ஒற்றையெல்லாம் சண்டைப் போடுவதில்லை என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். அதனால் இவர்கள் சங்காத்தமே வேண்டாம்.

முதல் பத்தியில் குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர் ப்ராங்க் மெக்கோர்ட். அவரை நோக்கி வந்த சாண்ட்விச்சை என்ன செய்வதென்று அவருக்கு கடும் குழப்பம். அதுதான் அவருடைய முதல் வகுப்பு. பதற்றத்தில் இருந்தவர் எடுத்துத் தின்றுவிட்டார். அதை அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை. ஆனால் அவர் அப்பொழுது எடுத்த முடிவு மிக முக்கியமானது. குறும்புக்கார அமெரிக்க ஆப்பிரிக்க மாணவர்கள் நிரம்பியிருந்த வகுப்பறை அந்தக் கணத்திலிருந்து ஆசிரியருடன் நட்பு பாராட்டத் தொடங்கியது. மாணவர்களுடன் நட்போடு இருக்க வேண்டியதில்லை என்று சக ஆசிரியர்களின் கூமுட்டைத்தனமான அறிவுரைகளைக் கடாசிவிட்டு வகுப்பறைகளில் புதிய சூழலை உருவாக்கினார் ப்ராங்க். அந்த ப்ராங்க் எழுதிய புத்தகம் Teacher Man. தமிழில் ச.மாடசாமி இந்தப் புத்தகம் பற்றி விரிவான அறிமுகத்தை எழுதியிருக்கிறார். அந்த அறிமுகமே புத்தக வடிவில் வந்திருக்கிறது. அவ்வளவு பெரிய அறிமுகம். அறுபது வயதுக்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்தார். ஆனால் அவரது புத்தகங்கள் கொடிகட்டின. அவரது புகழ்பெற்ற ஒரு வாக்கியத்தை என் அலமாரியில் ஒட்டி வைத்திருக்கிறேன்.

பீப் சத்தம் பெரிதாக அலட்டத் தொடங்கியபோது ப்ராங்க் மெக்கோர்ட் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “You might be poor, your shoes might be broken, but your mind is a palace”. அவ்வளவுதான். நம் ஒவ்வொருவரிடமும் மிகப்பெரிய மாளிகை இருக்கிறது. அதை விதவிதமாக அலங்கரிக்க முடியும். அதில் நிறைய புத்தகங்களை நிரப்ப முடியும். வெளிச்சம் பரவ விட முடியும். எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு அதில் ஏன் நாற்றமடிக்க விட வேண்டும்?