Dec 31, 2015

விகடன் நம்பிக்கை

விளம்பரத்துக்கும்(Advertisement) அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் (Branding) இடையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. எம்.பி.ஏ ஒழுங்காகப் படித்த மாணவர்களைக் கேட்டால் தெரியும். ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒருவர் தொடர்பு கொண்டார். சுமாரான நிறுவனத்தில் உள்ளிருப்பு பயிற்சியில்(Intern)ஆக இருக்கிறார். சமூக வலைத்தளங்களின் வழியாக தமது நிறுவனத்தின் பொருட்களை எப்படி பரவலாக்க முடியும் என்கிற வேலையைச் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். நிசப்தம் தளத்தில் அவ்வப்பொழுது அவரது நிறுவனத்தின் பொருள் குறித்து போகிற போக்கில் எழுத முடியுமா என்பதுதான் அந்தக் கோரிக்கை. விளம்பரமாகச் செய்யாமல் கட்டுரைகளுக்குள் அந்தப் பெயரை நுழைக்க வேண்டும். அதுவும் அடிக்கடி. 

‘நான் ஏன் தேவையில்லாமல் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும்? அதுவும் அடிக்கடி?’ என்பதை நாசூக்காகக் கேட்க வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் மாணவர். பாவம். இப்படி எழுதுவதற்கு ஒரு தொகையைத் தந்துவிடுவார்களாம். பேரம் பேசலாம் என்றார். அடுத்தவன் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு தங்களின் பொருட்களை மற்றவர்களிடம் எடுத்துச் செல்லும் தில்லாலங்கடித்தனத்தைச் செய்கிறார்கள். இதற்கு சந்தை ஆய்வு, களப்பணி என்று எதையாவது செய்திருப்பார்கள். இவர்களின் பொங்கச் சோறும் வேண்டியதில்லை. பூசாரித்தனமும் வேண்டியதில்லை. முடியாது என்று சொன்ன போது வற்புறுத்தவெல்லாம் இல்லை. நாம் இல்லையென்றால் அவர்களுக்கு ஆயிரம் பேர். வேறு யாரையாவது அணுகியிருப்பார்கள். 

எல்லாவற்றையும் விளம்பரமாக்குவதிலேயே குறியாக இருக்கிற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லையா? விளம்பரம் என்பது மூன்று நிமிட கவனம். ‘எங்கள் பொருட்களை வாங்குங்கள்’ என்று பிரபுவையோ அமலாபாலையோ வைத்து விளம்பரப்படம் எடுப்பது அல்லது காஜல் அகர்வாலை வைத்து பேனர் அடிப்பது என்பதோடு விளம்பரம் முடிந்துவிடுகிறது. இந்தச் சமூகத்தைத் தங்களின் பொருட்களை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துவிடலாம். இது பெரிய காரியமேயில்லை. ஆனால் ப்ராண்டிங் அடுத்த படி. கரீனா கபூரையும் விஜய்யையும் நம்பி கடைக்குள் வருகிறவர்களைத் திரும்பத் திரும்பத் வர வைப்பது. தங்களைத் திரும்பிப் பார்த்தவர்களுக்கு உருவாக்குகிற நம்பிக்கை. அது அவ்வளவு சாதாரணமாக வந்துவிடுவதில்லை.

ப்ராண்டிங் செய்வதற்கான வியூகங்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள்.  ‘காலங்காலமாக இந்தக் கடை இயங்குகிறது’ என்று பெருமையாகச் சொல்வது ஒரு வியூகம்தான். ‘எங்களை நீங்கள் முழுமையாக நம்பலாம்’ என்பது இன்னொரு யுக்தி. ‘திருப்தியில்லையென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் பொருளை நீங்கள் கொண்டு வந்து கொடுத்துவிடலாம்’ என்பது மற்றொரு வியூகம். இப்படியான வியூகங்களின் வழியாக வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்குமான அடிப்படையான உறவை உருவாக்குவதையும், வாடிக்கையாளர் நிறுவனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வைப்பதையும், அவரை நிறுவனத்தின் மீது விசுவாசமிக்கவராக மாற்றுவதையும் Branding strategies என்று சொல்லலாம். 

ஒரே வீதியில் நான்கு சூப்பர் மார்கெட் இருந்தாலும் அண்ணாச்சி கடை தம் கட்டுவது ப்ராண்டிங்க்தான். ‘அவர்கிட்ட தரமா இருக்கும்’ என்கிற நம்பிக்கை அது.

நிறுவனங்களுக்கு விளம்பரங்களும் தேவை; ப்ராண்டிங்கும் தேவை. ஆனால் தனிமனிதர்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ப்ராண்டிங் அவசியமானது. ஆனால் விளம்பரத்துக்கும் ப்ராண்டிங்குக்குமான வித்தியாசத்தை நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. அவசர உலகத்தில் நாம் விளம்பரப்படுத்துதலுடன் திருப்தி பட்டுக் கொள்கிறோம். நான்கு பேர் நம்மைத் திரும்பிப் பார்த்து ‘நீங்க சூப்பர் சார்’ என்று சொல்வதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புகிறோம். அப்படியில்லை. அது அவசியமும் இல்லை. அடுத்த கட்டம் இருக்கிறது. ப்ராண்டிங். ப்ராண்டிங் என்பதைக் கொச்சையான சொல்லாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ‘அவர் நம்பிக்கையான மனுஷன்’ ‘அவரை நம்பி காரியத்தில் இறங்கலாம்’ ‘அந்தம்மா சொன்னா சரியா இருக்கும்’ என்பதெல்லாம் கூட ஒரு தனிமனிதன் ப்ராண்டாக மாறியிருக்கிறான் என்பதுதான் அடையாளம்தான். ‘நான் இதையெல்லாம் செய்யறேன் பாரு’ என்று விளம்பரப் படுத்திக் கொள்வதால் மட்டும் நம்மைப் பற்றிய இத்தகைய வாக்கியங்களை உருவாக்கிவிட முடியாது. தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகவே இதெல்லாம் சாத்தியம்.

ஏன் நம்மைப் பற்றிய நல்லதொரு கருத்தாக்கம் அவசியமானது என்கிற கேள்வி எழலாம். ப்ராண்டிங் என்றால் இந்த ஒட்டு மொத்த நாட்டையும் கொண்டாடச் செய்வதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் நான்கு பேர் நம்மைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவது கூட ப்ராண்டிங்தான். நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் என்று வேறு எதை விட்டுச் செல்ல முடியும்?

விளம்பரம் செய்து கொள்வதன் வழியாக முக தாட்சண்யத்துக்காக நம்மைப் பார்த்து ‘நீங்க சூப்பர்’ என்று நான்கு பேர் சொல்லக் கூடும். ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புவது மாயை. நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதுதான் ப்ராண்ட். அதை மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் செய்துவிட மாட்டார்கள்.  ‘இவன் நடிக்கிறான்’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். செய்கைக்கும் நம்முடைய எண்ணங்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் வழியாகவே நம்முடைய நடிப்பை, அற்பத்தனத்தை, புகழ் மோகத்தையெல்லாம் தாண்டி வர முடியும். வருகிற வருடத்தில் இந்த இடைவெளியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட வேண்டும் என விரும்புகிறேன். 


விகடனில் டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நேற்று கேள்விப்பட்ட போது சந்தோஷமாகத்தான் இருந்தது. நேற்றிலிருந்தே மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. வேணியிடம் சொன்னேன். அப்படியொன்றும் சந்தோஷத்தைக் காட்டவில்லை. 

‘போன வருஷம் இதே மாதிரி பத்து பேரைத் தேர்ந்தெடுத்தாங்களா?’- என்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. 

‘ஆமாம்’ சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.

‘நாலு பேரைச் சொல்லுங்க பார்க்கலாம்’ என்றாள். நியூரான்களைக் கசக்கினாலும் இரண்டு பேரைக் கூட ஞாபகப்படுத்த முடியவில்லை. 

‘உங்களை உற்சாகப்படுத்தறாங்க. அதுக்கு மேல ஒண்ணுமில்லை’

இந்த வரி அவ்வளவு அர்த்தம் பொதிந்ததாகத் தெரிந்தது என்றாலும் அவள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது திரும்பிப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது இன்னமும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை அதிகரிக்கிறது. இதுதான் தொடக்கம். சரியாகச் செயல்படாவிட்டால் வெறும் விளம்பரமாகச் சுருங்கிவிடும்.

விகடன் குழுவினருக்கு நன்றி. உடனிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் என்னுடைய அன்பும் நன்றியும். தொடர்ந்து செல்ல வேண்டிய வெகுதூரம் இருக்கிறது. அனைவருடைய அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் இன்னமும் வேகமாகச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நன்றி.