Dec 30, 2015

திண்ணை

அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பெயரில் காபிக்கடையைத் திறந்து வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் முந்நூறு கிலோமீட்டருக்குள் ஏழெட்டுக்கடைகளாவது இந்தப் பெயரிலேயே இருக்கின்றன. இருபது ரூபாய்க்கும் குறைவில்லாமல் காபி விற்கிறார்கள். முக்கால்வாசி கடைகளில் பாடாவதியான காபியைத் தலையில் கட்டி ரசீதை சட்டைப்பைக்குள் செருகி அனுப்பிவிடுகிறார்கள்,  எம்.ஜி.ரோட்டில் இருக்கும் இந்தக் கடை வெகு சுமாராக இருக்கும் என்றாலும் தமிழ்நாட்டு காபி என்பதால் எட்டிப் பார்த்துவிடுகிறேன். ஆனால் ஒரு காபி முப்பது ரூபாய். தினமும் குடித்தால் கட்டுபடியாகாது என்பதால் எப்பொழுதாவது செல்வதுண்டு. 

திரும்ப வரும் வழியில் அல்சூருக்குள் நுழைந்து பெட்டிக்கடையில் சில பத்திரிக்கைகளை வாங்கி வருவது வழக்கம். அல்சூர் தமிழர்களின் பேட்டை. வெற்றிலை பாக்கிலிருந்து வாழை இலை வரை அனைத்தும் கிடைக்கும். வழக்கமாகச் செல்லும் பெட்டிக்கடைக்காரர் அத்தனை இதழ்களையும் வரி விடாமல் வாசித்துவிடுகிறார். அதோடு நிற்பதில்லை.

‘என்ன சார் இந்த தடவை ஜெயலலிதா வந்துடுவாங்களா?’ என்கிற மாதிரியான கேள்விகளைக் கேட்பார். இப்படி யாராவது உசுப்பேற்றும் போது நம் அரை மண்டைக்குள் இருக்கும் அரசியல் ஞானத்தையெல்லாம் அவிழ்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவேன். பக்கம் பக்கமாகப் பேசி ‘அதெல்லாம் கஷ்டம்’ என்று சொன்னால் அவருக்கு ஏற்றுக் கொள்ளும் மனநிலையே இல்லை. ‘கடைசியில் பாருங்க...அந்தம்மாதான் வரும்’ என்று ஒரு குப்பி ஆசிட்டை ஊற்றி அனுப்பி வைக்கிறார். யார் வென்றால் என்ன? தோற்றால் என்ன? இருப்பதில் ஒரு சுமாரான கழிசடையைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம். நம் தலையெழுத்து - அதுக்கு இது பரவாயில்லை என்று தேர்ந்தெடுத்தால் மூன்றாம் வருடம் முடிவதற்குள் இது படா மோசமானதாகிவிடுகிறது. ஐந்தாம் வருடத்தில் இதுக்கு அதுவே பரவாயில்லை போலத் தெரிகிறது. மீண்டும் அதைத் தேர்ந்தெடுக்கிறோம். இப்படியே கடந்த முப்பது வருடங்களை ஓட்டிவிட்டோம். எல்லாம் மாயை. இடமாறு தோற்றப் பிழை. மூன்றாவதாக ஒன்று கண்ணில் தெரிந்தால் அது பாட்டுக்கு காறித் துப்பி உளறிக் கொட்டுகிறது.

நமக்கு கொஞ்சம் நாவடக்கம் வேண்டும் போலிருக்கிறது. ‘அவன் சரியில்லை இவன் சரியில்லைன்னு எழுதிட்டு இருந்தீன்னா ஏதாச்சும் மோசடி கேஸில் உள்ளே கொண்டு போய் உட்கார வெச்சுடுவாங்க’ என்று ஒரு நண்பர் சொன்னார். வைத்தாலும் வைப்பார்கள். அடுத்தவர்களின் காசை வாங்கி பரோடா வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன். அது ஒன்று போதும். வெளியில் வருவது இரண்டாம் பட்சம். தூக்கிச் செல்லும் போகும் போது தப்பிக்கவா முடியும்? ஊமைக் குத்தாக குத்துவார்கள். அடங்கி இருப்பது உத்தமம்தான். ஆனால் அடங்கியிருந்தால் மட்டும் அமைச்சர் பதவியா தரப் போகிறார்கள்? அமைச்சர் என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பெங்காலி இருக்கிறான். சக்ரவர்த்தி என்ற பெயரைக் கூட சக்ரபொர்த்தி என்று வைத்திருக்கிறான். ‘உங்களுக்கெல்லாம் வ வரிசை வரவே வராதா?’ என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். கேள்வியை முடிப்பதற்குள் ‘உங்கள் ஊர் அமைச்சர்களுக்கு நிமிரவே முடியாதா?’ என்கிறான். மடக்குகிறானாம். எப்படி ஓட்டினாலும் இந்தக் கேள்விக்கே வந்து நிற்கிறான். இந்த லட்சணத்தில் நமக்கெல்லாம் அரசியல் பேச்சே ஒத்து வராது என்று நினைத்துக் கொள்வேன். 2016க்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அந்தப் பெட்டிக்கடைக்காரர் இருக்கிறார் அல்லவா? நாம் அவரைப் பற்றியே பேசலாம். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பெங்களூர் வந்துவிட்டாராம். இப்பொழுது ஐம்பது வயது இருக்கும். நன்றாகப் படிக்கச் சொல்லி வீட்டில் அடித்திருக்கிறார்கள். ‘மனுஷன் படிப்பானா?’ என்ற கேள்வி எழ யாருக்கும் தெரியாமல் காசைத் திருடிக் கொண்டு வந்துவிட்டார். அல்சூரில் ஒரு பேக்கரியில் வேலை கிடைத்திருக்கிறது. அதன் பிறகு பல தொழில்களைச் செய்தவருக்கு இப்பொழுது பெட்டிக்கடைதான் ஜீவாதாரம். பெரிய வசதி இல்லை. ஆள் நிற்கும் அளவுக்கான பெட்டி அது. சுற்றிலும் இதழ்களையும் செய்தித்தாள்களையும் மாட்டி வைத்திருப்பார். குடும்பம் இருக்கிறது. பிள்ளை குட்டிகள் இருக்கிறார்கள். ‘அப்போவெல்லாம் பெங்களூர் இப்படியில்லை’ என்று ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசுகிறார்.

அவருடன் பழகிய தோஷம். திண்ணையில் அமர்ந்து பேசுகிற மாதிரி எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கே ஆரம்பித்து எங்கே வந்திருக்கிறேன் பாருங்கள்.

பெங்களூர் மட்டுமில்லை- எந்த ஊர்தான் அப்படியே இருக்கிறது? பள்ளிக் கூடம் போகும் காலத்தில் கரட்டடிபாளையத்தில் சைக்கிள் ஏறினால் இரண்டு கிலோமீட்டருக்கு சாலையின் இருமருங்கிலும் வயலாகத்தான் இருக்கும். இருபது வருடங்களில் தலைகீழாகிவிட்டது. இப்பொழுது வெறும் வீடுகள்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊருமே அப்படித்தான். இருபது வருடங்கள் என்பது ஒரு ஊருக்கு பெரிய விஷயம். புரட்டிப் போட்டு விடுகிறார்கள். ஐந்து கோடி ரூபாய் கையில் இருந்தால் அதை வெள்ளையாக மாற்றுவதற்கு நிலத்தைத்தான் நாடுகிறார்கள். ஏக்கர் முப்பது லட்சத்துக்கு வாங்குகிறார்கள். பத்திரத்தில் ஐந்து லட்சம்தான் இருக்கும். ஆக ஒரு ஏக்கர் வாங்கினால் இருபத்தைந்து லட்ச ரூபாய் வெள்ளையாக மாறிவிடுகிறது. இப்படி கறுப்பை வெள்ளையாக மாற்றுகிறவன் குறுக்கும் நெடுக்குமாக கற்களை நடுகிறான். வண்ணக் கொடிகளை நட்டு வைக்கிறான். மாடல் வீடு கட்டுகிறான். கொழுத்த இலாபம். 

அத்தனை ஊர்களும் மாறிவிட்டன. ரியல் எஸ்டேட்காரர்கள் மேல் உலகம் சென்றால் கொதிக்கிற எண்ணெய் சட்டி தயாராக இருக்குமாம். பெரிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் பெரிய எண்ணெய் சட்டி. சிறிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் சிறிய எண்ணெய் சட்டி. ஆனால் சட்டி மட்டும் உறுதி.

பெட்டிக்கடைக்காரரின் மகளுக்கு இருபத்தியொரு வயதாகிறது. வேறு சாதியில் ஒரு பையனுடன் காதலில் இருக்கிறாள். ‘எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்லை..பையன் வீட்டில்தான் விட மாட்டேங்குறாங்க’ என்றார். கூலிக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி ஆனால் நம் சாதியில்தான் இருக்க வேண்டும் என்று பையன் வீட்டில் சொல்லியிருக்கிறார்களாம். இருபது வருடங்களில் ஊர்கள்தான் வேகமாக மாறுகின்றன. மனிதர்கள் மாறுவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் தேவையாக இருக்கிறது. ‘நாங்களும் கிட்டத்தட்ட கூலிக்காரங்கதான்..ஆனா வேற சாதி’ என்று சிரிக்கிறார். ‘என்ன செய்யப் போறீங்க?’ என்றால் ‘நடக்கும் போது பார்த்துக்கலாம்’ என்று மிக சாதாரணமாகச் சொல்கிற மனிதர் அவர். பெரிய திட்டமிடல் இல்லாமல் அவையவை நிகழும் போது பார்த்துக் கொள்கிற டைப். அலட்டல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் பெட்டிக்கடைக்காரர் மாதிரியான மனிதர்களை பார்க்கும் போது ஒரு வாக்கியம் ஞாபகத்திற்கு வரும்.

'Some people are so poor; all they have is money'. பணம் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் பரம ஏழைகள். பெட்டிக்கடைக்காரரிடம் பணம் மட்டும்தான் இல்லை. ஆனால் வசதியானவர்.