Dec 24, 2015

அமைச்சர்

ஒரு பேராசிரியர் வீட்டுக்கு வந்திருந்தார். பெங்களூர்வாசி. எங்களுக்கிடையே நல்ல பழக்கம் உண்டு. பேசிக் கொண்டிருந்த போது அலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து சென்று பேசிவிட்டு வந்தார். எதிர்முனையில் இருந்தவர் கர்நாடகாவின் ஐடி அமைச்சர் எஸ்.ஆர். பாட்டில். பேராசிரியர் கதை விடுகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அமைச்சர்தான். மாநில அமைச்சர் ஒருவர் சர்வ சாதாரணமாக பேராசிரியரை நேரடியாக அழைத்துப் பேசுவாரா என்று ஆச்சரியமாக இருந்தது. பேசுகிறார். எளிமையான மனிதர் போலிருக்கிறது. ஆனால் அமைச்சர் அவ்வப்போது காமெடி செய்வதும் உண்டு. ‘எங்கள் கிராமத்தை முழுமையாக வை-பை ஆக்குவேன்’ என்று அறிவித்திருக்கிறார். எத்தனை பேர் வை-பையைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது இரண்டாம்பட்சம். அதற்கு முன்னதாக கிராமங்களுக்கு செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அடிப்படையான கட்டமைப்பு, முழுமையான கல்வியறிவுக்குப் பிறகு மற்றதையெல்லாம் செய்யலாம்.

ஒரு நாள் அமைச்சரிடம் அழைத்துச் செல்லச் சொல்லியிருந்தேன். அடுத்த மாதத்தில் வரச் சொல்லியிருப்பதாக பேராசியர் சொன்னார். அமைச்சரிடம் கேட்பதற்கு என்னிடம் ஒரேயொரு கேள்விதான் இருக்கிறது. பெங்களூரில் குவிந்து கிடக்கும் நிறுவனங்களை மாநிலம் முழுவதும் பரவலாக்க முடியாதா என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த ஊரின் நெரிசல் சகிக்க முடியாததாக இருக்கிறது. மரங்களை வெட்டிவிட்டார்கள். புழுதி பறக்கிறது. வாகன ஒலி காதைப் பிளக்கிறது. புகை நெடி மூக்கிலேயே குடியிருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட எலெக்ட்ரானிக் சிட்டியில் உருளைக் கிழங்குத் தோட்டம் இருந்திருக்கிறது. மாரத்தஹள்ளியில் விவசாயம் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. இப்பொழுது கற்பனை கூட செய்ய முடியாது. இந்நகரத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டும் அறுபது லட்சம் ஓடுகின்றன. நாற்பது லட்சம் பைக்குகள். பனிரெண்டு லட்சம் கார்கள். அவை தவிர ஆட்டோ, பேருந்துகள் இன்னபிற. இவை தவிர வேறு ஊர்களில் பதிவு செய்யப்பட்டு இந்த ஊரில் ஓட்டப்படும் வாகனங்கள் பல லட்சங்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பதினைந்து கிலோமீட்டரைத் தாண்டுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது. மகிழ்வுந்து என்றால் இன்னமும் கூடுதல் நேரம் பிடிக்கும். மூச்சுத் திணறுகிறது.

ஏரிகளில் கழிவுநீர்களைக் கலக்கவிடுகிறார்கள். குப்பைகளை ஆங்காங்கே மூட்டை மூட்டையாகக் குவித்து வைக்கிறார்கள். கண்ட இடங்களில் நெருப்பை மூட்டி எரிக்கிறார்கள். ஏன் இப்படி நெரிசல் என்று கேட்டால் சர்வசாதாரணமாக ‘ஐடிக்கம்பெனிக்காரங்கதான் காரணம்....ஆளுக்கு ஒரு காரும் பைக்கும் வெச்சிருக்கான்’ என்று சொல்லிவிடலாம். ஐடி நிறுவனங்கள்தான் அடிப்படையான காரணம். ஆனால் அவர்கள் மட்டுமே காரணமில்லை. அவர்களைச் சார்ந்து பல நூறு தொழில்கள் இருக்கின்றன. மார்வாடிகள், மலையாளிகள் கடைகள் நடத்துகிறார்கள். தமிழர்கள் கட்டிட வேலை, ப்ளம்பர் வேலைகளைச் செய்கிறார்கள். வடக்கத்திக் காரர்கள் ஹோட்டல்கள் நடத்துகிறார்கள். வாடகைக்கார் ஓட்டுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தும் குடியேறுகிறார்கள். குடியேறுகிறார்கள் என்று சொல்வதைவிட குவிகிறார்கள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும். மக்கள் நெரிசல் கூடிக் கொண்டே போகிறது. 

பெங்களூர் மட்டுமில்லை. சென்னை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கும் இதே பிரச்சினைதான். அரசாங்கங்கள் குறைந்தபட்ச தொலை நோக்குப் பார்வையோடு செயல்பட்டிருக்கலாம். ‘இருபது வருஷத்துக்கு அப்புறம் நிலைமையைச் சமாளிக்க முடியுமா?’ என்று யோசித்திருக்கலாம். அத்தனை நிறுவனங்களையும் பெங்களூரிலேயே குவித்திருக்கிறார்கள். இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் வரிச்சலுகைகளை அறிவித்து அங்கே நகர்த்தியிருக்கலாம். ஈரோட்டில் நிறுவனங்கள் இருந்திருந்தால் பெங்களூர் ஏன் வந்திருக்கப் போகிறேன்? மதுரையில் நிறுவனங்களைத் திறந்திருந்தால் அந்த ஊர்க்காரன் சென்னைக்கு ஏன் பெட்டி கட்டப் போகிறான்? எல்லோரையும் நிறுத்தி வைத்திருக்க முடியாதுதான். ஆனால் இவ்வளவு நெரிசல் இருந்திருக்காது. 

சொந்த ஊரில் வேலை இருந்தால் சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் அனுபவத்துக்கும் படிப்புக்கும் ஏற்ற வேலையைத் தரக் கூடிய நிறுவனங்கள் சொந்த ஊர்களில் இல்லை. 

எந்த அரசியல்வாதி இதையெல்லாம் யோசிக்கிறான்? ஒருவேளை அவர்களிடம் சொல்வதற்கு ஏதாவது காரணமிருக்கும். அதைக் கேட்பதற்காகவாவது அமைச்சரைச் சந்திக்க வேண்டும்.

பெருநகரங்களில் வாடகை எகிறியது. இடமிருப்பவர்கள் நான்கைந்து வீடுகளைக் கட்டி வாடகையைக் கொழித்தார்கள். வாடகை கொடுப்பதற்கு பதிலாக சொந்தமாக ஒரு ப்ளாட் வாங்கிவிடலாம் என்று வங்கியில் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இப்பொழுது வாடகைக்காக கட்டப்பட்ட வீடுகள் காலியாகக் கிடக்கின்றன. ‘வட்டி கட்டக் கூட வாடகை வருவதில்லை’ என்று புலம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. மாறாக வீடு வாங்கியவர்கள் ‘வீட்டுக்கடனை வாழ்நாள் முழுவதும் கட்டப் போகிறேன்’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

நகரங்கள் கச்சடாவாக மாறியிருக்கின்றன. ஏற்கனவே பெங்களூரிலும் சென்னையிலும் செயல்படுகிற நிறுவனங்கள் வேறு இடங்களைக் குறி வைக்க ஆரம்பித்திருக்கின்றன. இனி இங்கே சமாளிக்க முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள். கட்டட வாடகையிலிருந்து ஆட்களின் சம்பளம் வரைக்கும் பன்மடங்கு பெருகியிருக்கிறது. பெங்களூரின் நெரிசல், சென்னையின் வெள்ளம், புழுதி போன்றவை நிறுவனங்களை சாக்காக எடுத்துக் கொள்வார்கள்.  ஆந்திர அரசாங்கம் அமராவதிக்கு வரச் சொல்லி முதலமைச்சர் படம் போடாமல் விளம்பரம் கொடுத்து அழைப்பு விடுத்திருக்கிறது. இனி அந்த ஊரில் மெல்ல கிளைகள் தொடங்கப்படும். 

இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. முப்பது வருடங்கள் உறிஞ்சித் தள்ளிவிட்டு அடுத்த ஊருக்குச் செல்கிற மனநிலை இது. 

ஐடி அமைச்சர்கள் முயற்சித்தால் ஒரே ஊர் பாழடைவதைத் தடுக்க முடியும். மாநிலத்தின் இன்னபிற ஊர்களிலும் நிறுவனங்களின் சில பிரிவுகளை ஆரம்பிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். ஒரு ஊரில் இவ்வளவு நிறுவனங்கள்தான் இருக்க வேண்டும் என்கிற வரையறையை அமைத்து அதற்கு மேலாக வரக் கூடிய நிறுவனங்களை அடுத்த ஊருக்கு அனுப்பி வைக்கலாம். நிறுவனங்கள் வசதிகளைக் கேட்பார்கள். சாலை வசதிகள், இணைய வசதிகள் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அமைச்சர்கள் இதையெல்லாம் செய்யவா போகிறார்கள்? யாரும் செய்ய மாட்டார்கள்.

கர்நாடகாவிலாவது ஐடி அமைச்சரின் பெயர் தெரியும். தமிழகத்தின் ஐடி அமைச்சரின் பெயர் தெரியுமா? என்ன படித்திருக்கிறார்? இந்தக் கேள்வியைக் கேட்டால் காமராஜர் படித்திருந்தாரா என்று பாடாவதியான கேள்வியை யாராவது கேட்கக் கூடும். காமராஜரின் காலம் வேறு. பள்ளிகளே கூட இல்லை. இப்பொழுதும் நிலைமை அப்படியா இருக்கிறது. ஒரு துறையில் அமைச்சராக இருக்கிறவர் அந்தத் துறை குறித்தான குறைந்தபட்ச அறிவையாவது வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? வாயைக் கூட திறக்காதவர்கள் அமைச்சர்களாகி என்ன பலன்?

சேலத்தில் ஐடி பார்க் கொண்டுவருவதாகச் சொன்னார்கள். மதுரையிலும் இதே பல்லவியைப் பாடினார்கள். திருநெல்வேலியை திருப்பிப் போடுவதாகச் சொன்னார்கள். துரும்பையாவது தூகிப் போட்டார்களா? எல்காட் நிறுவனம் ஐடி அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது என நினைக்கிறேன். இலவச கம்யூட்டரையும் இலவச டிவியையும் அந்த நிறுவனம்தான் வாங்கிக் கொடுத்தது.  இந்த ஒரு வேலை போதாதா? 

2 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ஒரு அமைச்சர் அவரது துறை சம்பந்தமாக ஒரு பட்ட படிப்பு படித்தவராக இருந்தால் நல்லதுதான். இதை சொன்னால் நீங்கள் சொல்வது போல காமராஜ் படித்தவரா என்பார்கள். முதல்வர், பிரதமர் எல்லாம் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்து தலைமை பண்பு உடையவர்களாக இருந்தால் போதும். ஆனால் அமைச்சர்கள் படித்தவர்களாக இருப்பய்ஹு முக்கியம். மத்திய மனிதவள துறை அமைச்சர் ஐ ஐ டி உட்பட எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் வழி நடத்துபவரின் கல்வி தகுதி +2.

சேக்காளி said...

//திருநெல்வேலியை திருப்பிப் போடுவதாகச் சொன்னார்கள்//
யோவ் சும்மாருக்க மாட்டீரா.
சொன்னதை செய்யுறோம் னு
"லிவேல்நெருதி" மாத்திர போறாங்கய்யா.