Dec 7, 2015

பொட்டலங்கள்

ஞாயிற்றுக்கிழமை மதியம் செங்கல்பட்டிலிருந்து திரும்பி வரும் போது மதுராந்தகம் ஏரிக்கு பக்கத்தில் படகுகளோடு போலீஸார் நின்றிருந்தார்கள். ஒரு தீயணைப்பு வண்டியையும் நிறுத்தி வைத்திருந்தார்கள். ‘என்ன பிரச்சினை’ என்று விசாரித்த போது ‘சும்மா அலர்ட்’ என்றார்கள். நெஞ்சுக்குள் திக்கென்றுதான் இருந்தது. புயல் மையம் கொண்டிருப்பதாகவும் மதுராந்தகம் அச்சிறுபாக்கம் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு இருக்கும் என்றார்கள். 

மழையைக் காணவில்லை. இரவு எட்டு மணிவாக்கில் நீர்பெயர் என்கிற இடத்துக்குச் சென்றிருந்தோம். அச்சிறுபாக்கத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டரில் உள்ளடங்கிய கிராமம் அது. கடைகளிலிருந்து வாங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை லாரிகளிலிருந்து இறக்கி வைப்பதற்காக பதினைந்து பேர்கள் சென்றிருந்தோம். பதினைந்து நிமிடங்களுக்கு மழை அடித்துப் பெய்தது. மின்சாரமும் இல்லை. அந்த இருட்டு கடுமையானதாகத் தெரிந்தது. சிறிய கடைக்கு முன்னால் இருந்த கூரைக்கு அடியில் நின்று ஈரத்தை சுவாசித்துக் கொண்டிருந்தோம்.

தெரியாத ஊரில் பெய்யும் பேய் மழையும் கடும் இருட்டும் பயமூட்டுகின்றன. மற்றவர்கள் இயல்பாக நின்று கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் பயம். புது மண் உருவாக்கியிருந்த பயம் அது. மழை சற்று ஓய்ந்ததும் நிம்மதியாக இருந்தது. பள்ளி வளாகத்திற்குள் ஓடினோம். பெரும் வளாகம். பாதிரியார் ஒதுக்கித் தந்திருந்தார். லாரியையும் டாட்டா ஏஸ் வண்டியையும் கொண்டு வந்து வாயிலில் நிறுத்தி அவற்றிலிருந்த பொருட்களை இறக்கி வைக்க ஆரம்பித்தோம். அந்த வேலையைச் செய்வதற்காக வந்திருந்த அத்தனை பேரும் அவ்வளவு உற்சாகமாக இருந்தார்கள். மழையில் நனைந்திருந்தார்கள். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. யாருமே இரவு உணவு உண்டிருக்கவில்லை. மின்சாரம் விட்டு விட்டு வந்தது. ஆனாலும் அவ்வளவு வேகம். ஐம்பது கிலோ மூட்டையைத் தூக்கியபடி சர்வ சாதாரணமாக ஓடினார்கள். ‘இவர்களையெல்லாம் எது இணைக்கிறது?’ என்று யோசனையாகவே இருந்தது. நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்படியானவர்கள் உடனிருந்தால் எவ்வளவு பெரிய பொறுப்பையும் துணிந்து செயல்படுத்தலாம்.


எல்லாவற்றையும் இறக்கி வைக்க நள்ளிரவு ஒரு மணியாகிவிட்டது. அதன் பிறகு சாலையோரக் கடையில் இரண்டு புரோட்டாவும் சால்னாவும் விழுங்கிவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அடித்து வீசியது போல இருந்தது. பெங்களூர் வந்த பிறகுதான் விழிப்பு வந்தது. அவ்வளவு களைப்பு. ஆனால் மற்றவர்கள் ஓய்ந்த மாதிரியே தெரியவில்லை. இன்று அதிகாலையிலேயே பொட்டலங்களைப் பிரித்துக் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டதாக ஜெயராஜ் சொன்னார். சென்னையிலிருந்து ரவிச்சந்திரன் இரண்டு பேர்களை அனுப்பி வைத்திருக்கிறார். மதுரையிலிருந்து மணிகண்டன் அச்சிறுபாக்கம் சென்றிருக்கிறார். மனோஜ் சென்னையிலிருந்து வந்து வேலை செய்திருக்கிறார். ‘முப்பது பேருக்கு மேல வேலை செய்யறோம்....முடிச்சுட்டு சொல்லுறேன்’ என்று ஜெயராஜ் சொன்னார். வேலையைப் பக்காவாக முடித்துவிடுவார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஐயாயிரம் கிலோ கிராம் அரிசியை ஐந்தந்து கிலோவாகப் பிரித்து பொட்டலம் கட்டும் வேலையை காலையிலேயே முடித்துவிட்டதாகச் சொன்னார்கள். அதுதான் பெரிய ஆச்சரியம். தனித்தனியாக எடை போட்டு பிரித்துக் கட்ட வேண்டும் . அது சிரமமான வேலையாக இருக்கும் என நினைத்திருந்தேன். அதன் பிறகு சாக்குப்பைகளை வரிசையாக அடுக்கி வைத்து ஒவ்வொரு ஆளும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வரிசையாக நிரப்பிக் கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு மூட்டையிலும் முப்பது பொருட்கள் இருக்கும். ஆயிரம் மூட்டைகள். இதுவரைக்கும் பதின்மூன்று பொருட்களை நிரப்பியிருக்கிறார்கள். இரவு எட்டு மணிக்கு அழைத்த போதும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ‘இன்னைக்கு இது போதும். சிரமப்படாதீங்க...தூங்குங்க..நாளைக்குப் பார்த்துக்கலாம்’ என்றால் கேட்பதாகத் தெரியவில்லை. 


கடலூரிலும் சென்னையிலும் இடங்களைக் கிட்டத்தட்ட முடிவு செய்தாகிவிட்டது. நாளைக்கு உறுதியாகத் தெரிந்துவிடும். பொருட்களை மூட்டை கட்டும் வேலையை அநேகமாக நாளைக்கு முடிக்கக் கூடும். ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு அநேகமாக வியாழக்கிழமையன்று கடலூரிலும் வெள்ளிக்கிழமையன்று சென்னையிலும் நிவாரணப் பொருட்களை வழங்கிவிடலாம். 

நள்ளிரவில் மேல்மருவத்தூர் இரவில் சாலையில் நின்று கொண்டிருந்த போது நிவாரண வண்டிகள் வரிசையாகச் சென்று கொண்டேயிருந்தன. நிவாரணப் பொருட்கள் பிரச்சினையில்லை. குவிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் மூலம் சென்னையில் நிரம்பப் போகும் குப்பையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. பெரும்பாலும் பாலித்தீன் பைகள்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான டன் பாலித்தீன் பைகளால் சென்னை நிரம்பவிருக்கிறது. அதன் சாக்கடைகள் அடைக்கப்படவிருக்கின்றன. நிலத்தில் ஒரு பாலித்தீன் பேய் ஒரு படலமாக படியவிருக்கிறது. இதை நாமும் யோசிக்கவேயில்லை. நான்கு நாட்களுக்கு முன்பாக நினைத்திருந்தாலும் கூட ஏதாவது யோசித்துச் செய்திருக்கலாம். இப்பொழுது வாய்ப்பில்லை.  வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தத் தவறு அடுத்த முறை நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம் என உறுதியெடுத்துக் கொள்ளலாம்.

வேலை செய்து கொண்டிருக்கும் அத்தனை ஆர்வலர்களுக்கும் நன்றி. தாள் வணங்குகிறேன்.