Dec 22, 2015

ஏழு கடல்

பத்தாம் வகுப்பு படிக்கும் போது அமுல்ராஜ் வாத்தியாரிடம்தான் கணக்கு ட்யூஷன். ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஓலை வேய்ந்திருக்கும். பெஞ்ச் எதுவும் இல்லை. தரையில்தான் அமர்ந்து கொள்வோம். கணக்கு வாத்தியார் என்றாலும்  பெரும்பாலும் அடிக்க மாட்டார். ஆனால் எப்பொழுதாவது அவருக்கு கோபம் வரும். வந்துவிட்டால் அவ்வளவுதான். சிக்கியவர்களை சிணுக்கெடுத்துவிடுவார். அநேகமாக படிக்கவில்லை, வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றுதான் கும்மியடிப்பார். ஓரிருமுறை என்னிடம் கரையைக் கடக்க வந்த புயல் திசை மாறி மாறித் தப்பித்துக் கொண்டேயிருந்தேன். ஆனால் விதி வலியது அல்லவா? இசக்கி முத்துவின் வடிவத்தில் வந்து சேர்ந்தது. 

‘டேய் ஒரு புக் இருக்குது...ரெண்டு ரூபாய் கொடுத்தா படிக்கத் தருவேன்’ என்றான். அதுவொரு விவகாரமான புத்தகம். அதை வாடகைக்குவிட்டு ஒரு பிஸினஸை ஆரம்பித்திருந்தான். முதல் போனியாக என்னைத் தேர்ந்தெடுத்திருந்தான். திருட்டுப்பயல். அதுவரை கண்ணிலேயே பட்டிராத புத்தகம் என்பதால் ஆர்வம் தாங்கவில்லை. ஆனால் ஒரு ரூபாய்தான் தர முடியும் என்றேன். அவன் என்னுடைய பேரத்துக்கு ஒத்து வரவில்லை. வேறு வழி தெரியவில்லை. இரண்டு ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கணக்கு நோட்டுக்குள் வைத்துக் கொண்டேன். குறைந்த அவகாசம்தான். வகுப்பு முடிவதற்குள் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். நாற்பது பக்கங்களுக்குள்தான் இருக்கும் என்பதால் முடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. திருட்டுத்தனமாக படிக்க ஆரம்பித்திருந்தேன். முன்னப்பின்ன செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்? அரக்கப்பரக்க எதையோ செய்ய வாத்தியார் மோப்பம் பிடித்துவிட்டார். அவர் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டே அருகில் வந்துவிட்டார். இருக்கிற மும்முரத்தில் அவரை எங்கே பார்க்கப் போகிறேன்? வந்து அப்படியே நோட்டு மீது கை வைத்த போதுதான் அந்தரத்தில் இருந்து கால்களை நிலத்தில் வைக்கிறேன். அவர் கண்களுக்குள் யாரோ கொள்ளிக்கட்டையை வைத்துவிட்டார்கள் போலத் தெரிந்தது.  செக்கச் செவந்திருந்தது.

இன்றோடு கதை முடிந்தது என நினைத்துக் கொண்டேன். காதைத் திருகினார். திருகிய திருகில் கால்கள் மெல்ல உயரத்துக்கு எழும்பின. யாரே எதிர்பாராத நேரத்தில் ‘சப்’- இது அறை விழும் சத்தம். அவருடைய கண்களிலிருந்த கொள்ளிக்கட்டை என்னுடைய கன்னங்களுக்கு மாறியிருந்தது. எப்பொழுதுமே முதல் முறைதான் கஷ்டமாக இருக்கும். ஒரு முறை பழகிவிட்டால் அப்புறம் பழக்கமாகிவிடும். அப்படித்தான் ‘சப்’புக்குப் பிறகு தப், குப், டப் என்று விதவிதமான சப்தங்களாக மற்றவர்களின் காதுகளுக்குள் இன்னிசைகளாக பாய்ந்து கொண்டிருக்க ‘இந்தாளு நம்மை வெச்சு கபடி ஆடிட்டுத்தான் விடுவார் போலிருக்கிறது’ என்ற ரணகளத்திலும் இசக்கி முத்துவின் முகத்தைப் பார்த்தேன். அவனுக்கு முகம் முழுக்கவும் பயம் பரவியிருந்தது. ‘காட்டிக் கொடுத்துடாதடா செல்லக் குட்டி’ என்று கண்களிலேயே கெஞ்சினான். அவன் கெஞ்சுகிறான் என்பதற்காக விட்டுவிட முடியுமா? அடி, உதைகளில் பார்டனர் கிடைத்தால் நமக்கு விழும் அடிகளின் எண்ணிக்கை குறையும். அவனைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று எவ்வளவு குத்துக்களைத்தான் தாங்கிக் கொள்வது.

‘சார் இசக்கிதான் வாடகைக்குக் கொடுத்தான்’ என்று சொல்லிவிட்டேன். அன்றைய தினத்தின் அவருடைய அதிர்ச்சி இன்னமும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. ‘என்னது வாடகைக்கா?’ என்றவர் இசக்கியின் பையை சோதனையிடத் துவங்கினார். அப்பொழுது இசக்கி என்னை முறைத்த முறைச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவழியாக வந்த கிரகத்தை திசை மாற்றிவிட்டேன். எனக்கு விழுந்த சப் ஐ விடவும் இருமடங்கு சப். தப், குப், டப் கூட இரண்டு மூன்று மடங்குதான்.  ‘உனக்கு எப்படிடா இதெல்லாம் கிடைக்குது?’ என்று அவர் கேட்டதற்கு ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் புத்தகங்களை சேகரித்த கதைகளைச் சொன்னான். அவ்வளவு த்ரில்கள் நிறைந்த கதை.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மேற்சொன்ன கதை நடந்து பதினெட்டு வருடங்கள் கூட முழுமையாக பூர்த்தியாகவில்லை. இப்பொழுதும் இத்தகைய சமாச்சாரங்களுக்கு ஏழு மலை ஏழு கடல் தாண்ட வேண்டிய சூழலா இருக்கிறது? டெக்னாலஜியின் வேகம் மிரள வைக்கிறது. ‘இதெல்லாம் சாத்தியமேயில்லை’ என்று எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது. சாத்தியமில்லாத ஒன்று என்று இந்தத் தொழில்நுட்பயுகத்தில் எதுவுமேயில்லை என்று தைரியமாகச் சொல்லலாம். 

பத்து நாட்கள் இருக்கும். ஒரு பள்ளியின் ஆசிரியர் அழைத்திருந்தார். தமிழ்நாட்டு ஆசிரியர்தான். ஏழாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து செல்ஃபோனை எடுத்து வந்து சக மாணவர்களுக்கு பிட்டு படம் காட்டியதாகச் சொன்னார். அவர் சொல்லும் போது எனக்கு அதிர்ச்சியாகவே இல்லை. மங்களூரில் நான்காம் வகுப்பு மாணவனே இதைச் செய்திருக்கிறான். என்ன இருந்தாலும் பிஞ்சுக் குழந்தை அல்லவா? அவ்வளவு சூதானம் போதவில்லை. பள்ளி நிர்வாகத்தினரிடம் சிக்கிக் கொண்டான். பெற்றவர்களை அழைத்து மாணவனை பள்ளியை விட்டு நீக்கம் செய்வதாக எச்சரித்திருக்கிறார்கள். பையனின் அப்பாவுக்கு கொஞ்சம் செல்வாக்கும் இருக்கும் போல. ‘இதுக்கெல்லாமா மாணவனை தண்டிப்பீர்கள்?’ என்று தடியெடுத்துச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த நிர்வாகம் ‘வேறு எதுக்கு தண்டிக்கணும்’ என்று மண்டை குழம்பியிருக்கிறது. மாணவனை தண்டிக்கக் கூடாதுதான். ஆனால் தடியைச் சுழற்றும் அப்பனைத்தான் அடித்து நொறுக்க வேண்டும். 

‘எதுக்குய்யா கண்ட கண்ட வீடியோவை செல்போனில் வெச்சிருக்க’ என்று கேட்டால் ‘ஃப்ரெண்ட்ஸ் அனுப்பி வைக்கிறாங்க சார்’ என்று சாக்கு போக்குச் சொல்கிறார்கள். இப்பொழுது பெரும்பாலான பெற்றவர்களின் பிரச்சினை இதுதான். ஒரு நாளைக்கு இரண்டு வீடியோக்களாவது வந்துவிடுகின்றன. கசமுசா வீடியோக்கள். அதில் நிச்சயமாக ஒன்றாவது நடிகை குளித்துக் கொண்டிருக்கும் வீடியோவாக இருந்து தொலைகிறது அல்லது அவளுடைய காதலுடன் இருக்கும் வீடியோவாக இருக்கிறது. நம்மவர்களின் கை சும்மா இருக்குமா? ‘இவ அவதானா?’ என்று சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இன்னமும் நான்கைந்து பேர்களுக்கு அனுப்புகிறார்கள். ‘மச்சி..இவளைப் பாரேன்’ என்று இன்னமும் சிலருக்கு அனுப்புகிறார்கள். நடிகையோ அல்லது அவளது முகச்சாயலில் இருக்கும் வேறு யாரோவோ தெரியாது- ஆனால் திரைக்குள் குளித்துக் கொண்டும் தவித்துக் கொண்டும் இருப்பவள் செல்போன் செல்போனாகத் தாவுகிறாள். இவர்கள் தாவும் செல்போன்களை வைத்திருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோடு இருப்பவர்கள்தான். பார்த்து தொலைத்துவிட்டு அழித்து வைத்தால் பிரச்சினையில்லை. அப்படியே விட்டு வைத்துவிடுகிறார்கள். ஆறாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கினால் ஆயிரத்தெட்டு ஆப்ஸ் நிரப்பித் தருகிறான். நமக்குத் தெரிவதைவிட அந்த ஆப்ஸ்களையெல்லாம் இயக்குவதற்கு குழந்தைகளுக்குத் தெரிகிறது. குழந்தைகள் விடுவார்களா?  ‘என்னமோ வித்தியாசமா இருக்கே’ என்று பார்க்கத் தொடங்குகிறார்கள்.

சிலவற்றை நம்மால் சமாளிக்கவே முடியாது. ‘எனக்கு வீடியோ அனுப்பாதீங்க’ என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியாதுதான். ஆனால் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. ‘என்ன வீடியோ வந்தாலும் எனக்கு அனுப்பி வைங்க’ என்று உசுப்பேற்றாமலாவது இருக்கலாம். வீடியோ பார்க்காமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அத்தனை ஆசையாக இருந்தால் வந்தவுடன் கமுக்கமாக பார்த்துவிட்டு சுத்த பத்தமாக ஆக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனில் நமக்கே தெரியாமல் கண்ட கருமாந்திரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் செய்யாமல் விட்டுவிட்டு இந்த சமூகம் கெட்டுக் குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் புலம்பக் கூடாது. 

எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்கும் வரைக்கும்தான் மரியாதை. கையில் கிடைத்தவுடன் ‘இது பார்த்தாச்சு இதுக்கு மேல என்ன?’ என்றுதான் மனம் தேடும். அப்பா தலைமுறையில் முப்பது வயதுகளில் கிடைத்த சமாச்சாரம் எங்கள் தலைமுறையில் பதினாறு பதினேழு வயதில் கிடைத்தது. இப்போதைய தலைமுறையில் முளைத்து மூன்று இலை விடுவதற்குள் கிடைத்துவிடுகிறது. நான்கு வயதுக் குழந்தை  ‘அடுத்தது என்ன?’ என்று தேடத் தொடங்குவது நல்லதுக்கு இல்லை. அதனால் சற்றேனும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். குழந்தை கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறது என்றுதான் நம்புகிறோம். ஆனால் அது என்ன கேம்ஸ் விளையாடுகிறது என்று குழந்தைக்கும் செல்போன் ஆண்டவருக்கும்தான் வெளிச்சம் என்று விட்டுவிடாமல் ஆண்டவரை அவ்வப்போது மிரட்டி வைக்கலாம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)

4 எதிர் சப்தங்கள்:

சீனிவாசன் said...

//வீடியோ பார்க்காமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அத்தனை ஆசையாக இருந்தால் வந்தவுடன் கமுக்கமாக பார்த்துவிட்டு சுத்த பத்தமாக ஆக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.//- ஐயா இப்படியா சொல்றது? முதலில் ஒழுக்கமோ மாற்றமோ நம்மிடமிருந்தே துவங்க வேண்டும். இல்லாத பட்சத்தில் குழந்தைகள் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டுமென நினைப்பது எப்படி சரியாகும்.

சேக்காளி said...

//திருட்டுத்தனமாக படிக்க ஆரம்பித்திருந்தேன்//
(கிசுகிசுப்பான குரலில் வாசிக்கவும்)என்ன படிச்சீங்க கறத பீப் வார்த்தைகளை பயன் படுத்தி எழுதுனா கொறஞ்சா போயிருவீங்க?.

சேக்காளி said...

//முதல் போனியாக என்னைத் தேர்ந்தெடுத்திருந்தான்//
செமையான ராசி போல.

ADMIN said...

டெக்னாலஜி வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் எதுவெல்லாம் குழந்தைகளுக்கு தெரியக்கூடாது என நினைக்கிறோமே...அதுவெல்லாம் தானாகவோ, நண்பர்கள் மூலமாகவோ தெரிந்துவிடுகிறது. செல்போனில் இதுபோன்ற சமாச்சாரங்களை வைக்காமல் இருப்பது நல்லது. தவறானவைகளைப் பற்றி சிறிது சிறிதாக அவர்கள் புரிந்துகொள்ளும் பக்குவத்தில் சொல்லி வைக்க வேண்டும். தவறால் வரும் விளைவுகளை எடுத்துரைக்க வேண்டும். இது நல்லது..இது கெட்டது என புரியும்படி பேச வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர்களாக இல்லாமல், சக நண்பர்களாக பழக வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோர்-குழந்தை இடைவெளி இல்லாமல் இருக்கும். இடைவெளி குறைந்து, நண்பர்களாக பழகும் பெற்றோர் - குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அவர்களுடன் நட்பு ரீதியாக எடுத்துரைக்கும் அறிவுரைகள் மிக விரைவில் மனதில் பதிந்துவிடும். வெளிப்படையாக குழந்தைகளிடத்தில் பேசி பழகுவது என்பது அவர்களின் மனதில் எந்த ஒரு திருட்டுதனமோ, ஒளிவு மறைவோ இல்லாமல் இருக்கச் செய்யும்....