Dec 18, 2015

சென்னை

சென்னையில் சுத்திகரிப்பு வேலையைச் செய்வது குறித்து சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்த போது நிறைய ஆர்வலர்கள் மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தனர். தனித்தனியான பதில் அனுப்பவில்லை. அதற்காக மன்னிக்கவும். இடையில் பீட்டர் வான் கெய்ட் அவர்களுடனும் பேச முடிந்தது. மென்பொருள் துறையில்தான் வேலையில் இருக்கிறார் போலிருக்கிறது. இந்தியாவுக்கு வரும் மென்பொருள் துறையைச் சார்ந்த வெளிநாட்டினர் மகாபலிபுரம் செல்வார்கள். கேரளாவில் மசாஜ் செய்து கொள்வார்கள். ஜெய்ப்பூரில் யானை மீது சவாரி செய்வார்கள் என்று நினைக்கும் அரை மண்டையனாகவே இருந்துவிட்டேன்.

பீட்டர் பதினேழு வருடங்களாகச் சென்னையில் இருக்கிறார். பீட்டர் சென்னையைச் சுத்தம் செய்கிறார். சாக்கடையில் இறங்குகிறார். கழிவுகளைப் பொறுக்கி மூட்டை கட்டுகிறார். முக்கியமாக எல்லாவற்றையும் கமுக்கமாகச் செய்கிறார். இத்தகைய மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ‘உங்க கூட சேர்ந்துக்கலாமா?’ என்றேன். ‘தாராளமா வாங்க’ என்றார். அவரோடு ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் அவருடன் சேர்ந்து பணி புரிகிறார்கள். . 


அவரிடம் அலைபேசியில் பேசிய சமயத்தில் அவர்கள் இடத்தை முடிவு செய்திருக்கவில்லை. பிறகு முடிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். இந்த வாரம் ஞாயிற்றுகிழமையன்று (டிசம்பர் 20) கோட்டூர்புரம் சித்ராநகரில் சுத்திகரிப்பு பணியைச் செய்கிறார்கள். சென்னை ட்ரக்கிங் க்ளப் என்ற இந்த அமைப்பினர் இத்தகைய வேலைகளை வெகு காலமாக செய்து கொண்டிருக்கிறார்களாம். ஞாயிறன்று நான்கு மணி நேர வேலைதான். காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து பத்து மணிக்குள் முடிந்துவிடும். 

ஒரு முறையேனும் இந்த அமைப்பினரோடு இணைந்து பணி புரிய வேண்டும் என ஆசையாக இருக்கிறது. திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். எந்த விளம்பரமும் இல்லாமல் செய்கிறார்கள். சென்னையில் வசிப்பவர்கள் சென்னை ட்ரக்கிங் க்ளப்புடன் தொடர்ந்து செயல்படலாம். வார நாட்களிலும் கூட காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மூன்று நான்கு மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு வழக்கம் போல வேலைக்குச் செல்கிறார்கள். வெளியூர்வாசிகள் எல்லா சமயங்களிலும் அவர்க்ளோடு சேர்ந்து பணியாற்ற முடியாது என்றாலும் இந்த முறை அவர்களுடன் இணைந்து கொள்ளலாம்.

ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பில் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை ஆறு மணிக்கு கோட்டூர்புரம் பிள்ளையார் கோவிலில் இணைகிறார்கள்.


வேறு ஏதேனும் விவரங்கள் தேவைப்படுகிறவர்கள் திரு.நம்பியைத் தொடர்பு கொள்ளலாம்- +91 9962929127

தேவையான உபகரணங்களை அவர்களே கொண்டு வந்துவிடுகிறார்கள். பழைய ஷூ, பூச்சிக்கடிக்காமல் இருப்பதற்கான களிம்பைப் பூசிக் கொண்டு வர பரிந்துரைத்திருக்கிறார்கள். எனக்கு பூச்சி பிரச்சினையில்லை. கடித்தால் அது செத்துவிடும். உடம்பு பூராவும் அத்தனை விஷம். விஷம்.

1 எதிர் சப்தங்கள்:

தங்கம் பழனி said...

நல்லதொரு பணி செய்ய போகிறீர்கள்...வாழ்த்துகள்..!
உடம்பு பூராவும் விஷம் இருந்தாலும் மனசு பூராவும் விஷம் முறிக்கும் சக்தி இருக்கிறது உங்களிடத்தில்... வாழ்த்துகள்!